காந்திய இந்தியாவை கார்ப்பரேட் தேசமாக்கும் பாஜக!

-மு.வேதரெத்தினம்

ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு ஊடகங்கள், அவர்களின் சமூக வலைத்தளங்கள்..ஆகியவற்றில் மகாத்மா காந்தியின் தியாக போராட்ட மரபு ஊனமாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி மீது பொய், அவதூறு, விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். காந்தி கோழையாம்! கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதே சேவையாம்!

காலனி ஆட்சி காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக அகிம்சை போராட்ட முறைகளில் இந்திய மக்களை வழி நடத்தியதன் மூலம் மக்களை கோழையாக்கி விட்டார் என்று கூசாமல் சொல்கிறார்கள், இந்துத்துவவாதிகள்!

தனி மனிதனது உயர்வுக்கு சொன்னதே மகாத்மா காந்தி அகிம்சை. அது அவரது அரசியல் போராட்ட வழிகள் அல்ல.

அவரது அரசியல் போராட்ட வழிகள் (1893-1947)

(1) சட்ட மறுப்பு இயக்கம் – (CIVIL DISSOBIDENCE)

(2) ஒத்துழையாமை இயக்கம் – (NON – CO-OPERATION)

(3) சத்தியாகிரகம் (SATHYA GRAHAM)

(4) உண்ணா நோன்பு

இவைகளே தென் ஆப்பிராக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்கும் இந்திய விடுதலைக்கும் பின்னர் மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்திய போராட்ட வழிகளாகும்.

பொதுமக்கள்:

# அரசு பட்டம், பதவிகளை, துறப்பது

# கல்வி கூடங்களை விட்டு வெளியேறுவது

# அரசு பணிகளை துறப்பது.

# வரி கட்ட மறுப்பது.

# அந்நிய பொருட்களை – புறக்கணிப்பது.

# வன்முறையற்ற வழிகளில் கூடி நின்று முழக்கம் எழுப்புவது, மறியல் செய்வது

# அரசு நீதிமன்றங்கள், காவல் துறைகளை புறக்கணிப்பது, அரசு அலுவலகங்களை புறக்கணிப்பது.

# பொதுப் பிரச்சனைகளுக்காக உடலை வருத்தி உண்ணா நோன்பு இருப்பது.

இவைகளே மகாத்மா காந்தியின் போராட்ட நடவடிக்கைகளாகும். இலட்சக்கணக்கான மக்களை ஈடுபடுத்திய அரசியல் போராட்டங்களாகும்.

இதில் கோழைத்தனம் எங்கிருந்து வந்தது? இவற்றை எல்லாம் எந்த ஒரு கோழையாலும் செய்ய முடியாது. உண்மையில் இவற்றை செய்வதற்கு அளப்பரிய துணிச்சல் வேண்டும்.

அவரது அகிம்சை போதனை, தனி மனிதர்களுக்கானது.

எண்ணம், சொல், செயல், இவற்றால் ஒவ்வொரு மனிதனும் மற்ற  மனிதர்களை துன்புறுத்த கூடாது, இம்சை செய்யக் கூடாது என்பதே மகாத்மா காந்தியின் அகிம்சை போதனைகளின் சாரமாகும். இது ஆன்ம மேம்பாட்டுக்கு உதவுவது தான்.

மிகப்பெரிய அரசு இயந்திரத்துக்கு எதிரான சத்தியாகிரக சட்டமறுப்பு போராட்டங்களை சாதாரண மக்களைக் கொண்டு செய்யும் வழிமுறைகளை 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ஹென்றி தோரா (HENRY TOHRA) என்பவரின் CIVIL DISSOBIDIENCE என்ற நூலையே வழி காட்டியாக கொண்டார், காந்தி.

இதை காந்தியே பல இடங்களில் தம் நூல்களில், சொற்பொழிவுகளில் சொல்லி உள்ளார்.

இத்தகைய சத்தியாகராக / ஒத்துழையாமை போராட்டங்களின் மூலமாகத்தான், 20 ஆண்டுகள் போராடி தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் உரிமைகளை 1913-1914 இல் மகாத்மா காந்தி வென்றெடுத்தார்.

1920-1922 ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் மூலம் விடுதலை போராட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக கட்டமைத்த பின் வெள்ளை ஏகாதிபத்தியம் முதல் முறையாக நிலைகுலைந்து பின்னர் ஒவ்வொரு போராட்டத்துக்கு பின்னும் மகாத்மா காந்தியை பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் நிலைக்கு வந்தது மிக வெளிப்படையான உண்மையாகும்.

காந்தி, தலைமையேற்று வழி நடத்திய ஒவ்வொரு போராட்டமும் பல இலட்சம் இந்தியர்களை அஞ்சாமல் சிறைக்கு அனுப்பியது. கோடிக் கணக்கான இந்திய மக்களின் ஆதரவை பெற்றது.

மிகப் பிரம்மாண்டமான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவர்களுடைய அரசு இயந்திரம், அவர்களுடைய மிருகத்தனமான காவல் துறை இராணுவம், இதற்கு எதிராக அஞ்சாமல் தேசத்தொண்டர்களை சிறைச் சாலைகளுக்கு அனுப்பி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிலைகுலையச் செய்தவர் மகாத்மா காந்தி.

1930-1931 உப்பு சத்தியாகிரத்தில் சிறை சென்ற காந்திய காங்கிரஸ் பெண் தொண்டர்கள் மட்டுமே பத்தாயிரத்திற்கும் அதிகம்.பல இலட்சம் காந்திய வழி காங்கிரஸ் தேசத் தொண்டர்கள் சிறை செல்வதும் போலீஸ் தடி அடிகளை தாங்குவதும், துப்பாக்கி சூட்டுக்கு உயிர் பலி ஆவதும் எப்படி கோழைத்தனம் ஆகும்?

ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பொய்களை பரப்பி கொண்டு உள்ளார்கள். புதிய பொய் மொழி அகராதிகள் (NEW LYING DICTIONARIES) தயாரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காந்தியின் மீது கொண்டு உள்ள வன்மத்துக்கு காரணம், இவர்களது இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் இடம் இல்லாமல் செய்து விட்டார் என்பதே சத்தியமான உண்மை. அன்பு தான் வலிமையானது. கோபமும், வன்மமும் கோழைத்தனமானது…என்பதை காந்தி நிருபித்து காட்டினார்.

 

இந்திய விடுதலை போராட்டத்திற்கு 1925 துவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், 1923 ஆம் ஆண்டு முதல் இந்துத்துவாவை முன்னெடுத்த வீர சாவார்க்கார் எல்லோரும் விரோதமாக இருந்தது மிக, மிக வெளிப்படை உண்மை.

1940-1945 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்தியும் இலட்சக்கனக்கான காங்கிரஸ் தொண்டர்களும் தனி நபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறைகள், தடியடிகள், துப்பாக்கி சூடுகள், என்று துன்பப்பட்டு கொண்டிருந்த போது இரண்டாம் உலக போரில் வெள்ளை ஆட்சியாளருக்கு ராணுவத்திற்கு ஆட்கள் பிடித்து கொடுத்தவர் வீர சாவார்க்கர். மறுக்க முடியுமா?

1980 களில் சுதேசி பொருளாதாரம், காந்திய சோஷலிசம் பேசியவர்கள் அந்த கொள்கைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளி களிடம் இந்திய ஒன்றியத்தை பிளாட் போட்டு விற்று கொண்டு முதலாளிகளிடம் பெரும் கருப்பு பணத்தை பெற்று கொண்டு இந்துத்துவாவாதிகள் சுகபோக அரசியல் நடத்திக் கொண்டு உள்ளார்கள்.

காந்தியின் புகைப்படங்களை எரிக்கிறீர்கள். காந்தியின் பேனரை துப்பாகியால் துளைக்கிறீர்கள்! காந்தியின் பேச்சை எடுத்தாலே பதைபதைக்கிறீர்கள்! இறந்து போன காந்தியின் மீது ஏன் இத்தனை வன்மம், கோபம்? ஆம், காந்தி இறக்கவில்லை. மக்கள் உள்ளங்களில் உயிர்ப்புடன் இருந்து இயக்கி வருகிறார் என்பதை புரிந்து வைத்துள்ளீர்கள்! இது தான் உங்கள் பிரச்சினை! ஆகவே, காந்தியை புகழ்வது போலவும் கூட நாடகமாடுகிறீர்கள்!

சோசலிஷம் கூடாது. சமதர்மம் கூடாது. மொழி வழி மாநிலங்கள் கூடாது, மொழி வழி தேசியம் கூடாது. அவரவர்கள் தாய் மொழிகள் கூடாது. இந்தி, சமஸ்கிருதம் போதும். இசுலாம் கூடாது, கிறிஸ்தவம் கூடாது, ஒரே மொழி, ஒரே நாடு என்பதாக பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சிறுகச் சிறுக சிதைத்து வருகிறார்கள். இந்தப்  பாசிச நிலைப்பாடுகள் எங்கு கொண்டு போய் விடும்?

நிச்சயமாக ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் பாசிசம், ஜப்பான் டோஜோவின் டோஜோயிசம் இதற்கெல்லாம் 1945-1950 ஆம் ஆண்டுகளில் என்ன தோல்வி முடிவு ஏற்பட்டதோ அதே முடிவுதான் இந்துத்துவாவுக்கும் இந்தியாவில் நிச்சயம் ஏற்படும்.

பொய்கள் அதிக நாட்கள் நிலைக்காது. களங்கமற்றவரான காந்தியை ஒரு போதும் களங்கப்படுத்த முடியாது. காந்தியை மக்களின் இதயத்தில் இருந்து அகற்ற முடியாது. காந்தி மக்கள் இதயங்களில் இருக்கும் வரை இஸ்லாமிய வெறுப்போ, அடக்குமுறை அரசியலோ, ஆதிக்க அரசியலோ இங்கு சாத்தியப்படாது.

பொதுத் துறை நிறுவனங்களை அழிப்பது, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது, உழைக்கும் மக்களை உரிமையற்றவர்களாக்கி கார்ப்பரேட்டுகள் காலடியில் கிடத்துவது அகியவையே பாஜகவின் கொள்கை, லட்சியமாக உள்ளது. ஆனால், கடைக்கோடியில் இருக்கும் ஏழைகளையும் வாழ வைப்பது தான் காந்தியின் கொள்கை. கார்ப்பரேட்டுகளை மட்டும் வாழ வைத்து, எளியோர் தலையில் ஏறி மிதிப்பது ஏற்புடையதல்ல!

எதிரிகளையும் கூட வெறுக்காமல் அரவணைத்து நல் வழிப்படுத்துவது காந்தியக் கொள்கை. எதிரிகளை தேடிக் கண்டடைந்து அல்லது கற்பிதம் செய்து கொண்டு வன்மத்தையும், துவேஷத்தையும் வளர்ப்பதன் வழி அரசியல் அதிகாரத்தை அடைவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த வழி வந்த பாஜகவின் கொள்கை!

அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் எல்லாம் பொய் கனவுகளாகவே முடியும் என்பதை காலம் தெளிவு படுத்தவே போகிறது. காந்தியின் இந்தியாவை ஆர்.எஸ்.எஸ்சால் ஒரு போதும் களவாட முடியாது.

கட்டுரையாளர் : மு.வேதரெத்தினம்

பட்டுக்கோட்டை

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time