‘பகுத்தறிவு’ பேசும் அருகதை ரஞ்சித்திற்கு உண்டா?

- சாவித்திரி கண்ணன்

பகுத்தறிவு என்பது வெற்று ஜம்பமா? அது சின்னஞ் சிறுசுகளின் பிள்ளை விளையாட்டா? பொறுப்பாக விவாதிக்க வேண்டிய ஒன்றல்லவா? பா.ரஞ்சித் கல்லா கட்டுவதற்கு பகுத்தறிவையே பலிகடா ஆக்குவாரா..? அம்பேத்காரால் வணங்கப்பட்டவர் புத்தர். அம்பேத்காரை விட பா.ரஞ்சித் அறிவாளியா? ஒரு காரசார அலசல்!

விக்டிம் என்ற ஒரு நான்கு கதைகள் கொண்ட அந்தாலஜி படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். அதில் இரண்டாவது கதையாக இடம் பெற்றுள்ள தம்மம் என்ற குறும்படத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் உட்கார்ந்து இருக்கும் ஒரு புத்தர் சிலை மீது பத்து அல்லது பனிரெண்டு வயது மதிக்கதக்க சிறுமி ஏறி விளையாடுகிறாள். அதைப் பார்த்த அவளது தந்தை, ”உனக்கு அறிவிருக்கா? சாமி சிலை மீது ஏறி நிற்கிறாயே” என்கிறார்.

அதற்கு அந்த சிறுமி, ”புத்தரே கடவுள் இல்லை என்று சொன்னவர் தான். நீ அவரையே கடவுளாக்குகிறாயே” என பதில் கேள்வி கேட்கிறாள். இதன் மூலம் அந்த சிறுமி புத்தரை கடவுள் நம்பிக்கை மறுத்த பகுத்தறிவாளராக புரிந்து இருக்கிறாள் என்பதை அந்த காட்சி உணர்த்துகிறது.

இந்தக் காட்சிக்கு தமிழ்நாடு பெளத்தர் சங்க பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை தந்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

“அண்மையில் தம்மா என்கின்ற பெயரில் ஒரு படம் வந்திருப்பதை பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் புத்தரின் தலைமீது ஒரு குழந்தை ஏறி நின்று கொண்டு புத்தர் ஒரு கடவுள் அல்ல அவர் மனிதர் தானே என்பதைப் போல வசனம் வருகிறது. புத்தர் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவரது தலை மீது ஏறி நின்று சொல்வதைப் போல வக்கிரத்தை இந்த உலகம் இதுவரை கண்டிருக்காது.

பௌத்தம் வலுவாக உள்ள நாடுகளில் இது போன்ற காட்சி வெளியே வந்திருக்குமானால் அந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் சிறுபான்மை பௌத்த மதத்தினருக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் இல்லாத காரணத்தினால் இதுபோன்ற புரிதல் குறைவான புத்தரை அவமதிக்கும் வீடியோக்கள் வருகின்றன.

இக்காட்சி பொது வெளியில் பகவன் புத்தரின் மீது உருவாக்கும் பார்வையினால் தமிழகத்தின் பௌத்தர்கள் மனம் புண்பட்டுள்ளது. இந்த காட்சி உலக நாடுகளுக்கு போகுமானால் உலகில் உள்ள பௌத்தர்களின் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

எனவே அந்த படத்தின் இயக்குனர் திரு பா.ரஞ்சித் அவர்கள் அந்த காட்சிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்த காட்சிகளுக்கு தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கெளதம சன்னா கூறுவதாவது; ”புத்தரை எப்படி  வேண்டுமானாலும் அணுகலாம், அது தான் பகுத்தறிவு என்பது ஒரு வகை மூட நம்பிக்கை. புத்தரையும், அம்பேத்கரையும் உச்சசரித்துவிட்டாலே அவர்கள் இருவரை பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது என நம்புவது அந்த மூட நம்பிக்கையின் அடுத்த பரிணாமம்.

கெளதம சன்னா

புத்தரை அப்படி சித்தரித்தால் என்ன தவறு? புத்தர் கடவுள் மறுப்பாளர் தானே எகத்தாளம் பேசுவது தற்குறி பகுத்தறிவு. புத்தர் பகுத்தறிவாளரா? என்றால் பகுத்தறிவாளர் தான். ஆனால், நெறிபடுத்தப்பட்ட பகுத்தறிவின் மாபெரும் ஆசான் அவர். கட்டற்ற பகுத்தறிவு என்பது ஒரு முட்டு சந்து. அது அறிவை குருடாக்கி மனித சமூகத்திற்கு பெரும் ஆபத்தினை தந்துவிடும். கட்டற்ற பகுத்தறிவிற்கு படைப்பூக்கம் தேவையில்லை. அது அறியாமையோடு நிழல் யுத்தம் புரிந்தபடி காலத்தில் கரைந்துவிடும். ஆனால், அதனால் ஏற்படும் சமூக இழப்பு என்பது சரி செய்யவே முடியாது என்பதினால் தான் நெறிப்படுத்தப்பட்ட பகுத்தறிவினை தனது போதனையாகவும், அதற்கான பல பயிற்சிகளையும் கற்றுத் தந்தார். கடவுள் மறுப்பாளனாக இருப்பது எளிது. ஆனால், முறைப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளனாக இருப்பது கடினம். அம்பேத்கார் கூட புத்தரை வணங்குவார். ஆனால், நாங்கள் அவர் தலை மீது ஏறுவோம் என்று நம்புவது உச்சபட்ச அறியாமையின் வெளிப்பாடு” எனக் கூறியுள்ளார் கெளதம சன்னா.

இந்த சம்பவம் பற்றி ஒரு ஊடகத் துறை நண்பர் கூறும் போது, எழுத்தாளர் வசுமித்திரன் என்பவர் புத்தரை கடவுளாக வணங்குவதை விமர்சித்து ஒரு நூல் எழுதியுள்ளார். அப்படி ஒரு கருத்து விவாதத்திற்கு உரியது தானே. அது குறித்து அவரை அழைத்து விவாதித்து இருக்கலாம். ஆனால், அதற்கு அவர் மீது வழக்கு போட தீண்டாமை ஒழிப்பு முன்னணியை தூண்டிவிட்டவர் பா.ரஞ்சித். தற்போதும் அந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆனால், தற்போது ரஞ்சித்தே ‘புத்தரை கடவுள் அம்சமில்லை’ என வலிந்து கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு காட்சியையும், வசனத்தையும் திணிக்கிறார். இது இப்படி ஒரு சர்சையை விரும்பி, அதன் மூலம் கிடைக்கிற விளம்பரத்தை எண்ணி எடுத்துள்ளதாகவே தெரிகிறது’’ என்றார்.

இந்தக் காட்சியை பார்க்கும் போது, அது வெட்ட வெளியில் பராமரிப்பின்றி இருக்கும் ஒரு புத்தர் சிலை என்பதையும், அது கோவிலுக்குள் வழிபாட்டில் உள்ள புத்தர் சிலையல்ல என்பதும் நன்கு விளங்கும்.

புத்தர் சிலையில் காக்கையின் எச்சம் கூட வழிந்து கொண்டுள்ளது. வெட்ட வெளியில் இருக்கும் ஒரு கற்சிலை மீது சிறுவர், சிறுமியர் ஏறி விளையாடுவது நடக்காத ஒன்று இல்லை. மிகவும் சகஜமானது தான். இன்னொரு காட்சியில் கூட புத்தர் சிலையின் மடியில் சிறுவர்கள் இருப்பது போல எடுக்கப்பட்டு உள்ளது. அதை யாரும் விமர்சிக்கவில்லை. மேலும் இந்த காட்சியுமே கூட தலையில் ஏறி மிதிப்பதாக இல்லை. தோளில் ஏறி விளையாடுவதாகவே உள்ளது. அதாவது, தகப்பன் தோளில் ஏறி விளையாடும் சிறுமகள் போல என்றும் நாம் இயல்பாக கடந்து போயிருக்க வேண்டிய ஒரு காட்சியாகத் தான் உள்ளது.

ஆனால், ஏடாகூடமான கடவுள் மறுப்பு வசனங்களை வைத்ததன் மூலம் மதவாதிகள் கொந்தளிக்கும் வகையிலான வாய்ப்பை தந்து சர்ச்சையாக்கி விட்டார் ரஞ்சித் என்று தான் தோன்றுகிறது. சிறுவயது பிள்ளை அப்படி யோசித்து இருக்குமா? என்பது கேள்விக்குறியே!

இந்தியச் சிந்தனை மரபில் பிரகஸ்பதி, அஜித கேச கம்பளன், உத்தாலகர், விருஷப தேவர்.. போன்றோர் மரியாதைகுரிய நாத்திகர்களாக அறியப்பட்டவர்கள்! இவர்களிடம் வாதிட வந்த ஆத்திகர்களுக்கு தோல்வியை பரிசாக்கியவர்கள்!

பகுத்தறிவு என்பது விளையாட்டாக வீசி எறியக் கூடிய ஒன்றல்ல. அது ஆழமான புரிதலோடு அணுக வேண்டிய ஒன்றாகும். அப்படி அணுகும் பக்குவம் இல்லாதவர்கள் அதைப் பேசாது இருப்பதே பகுத்தறிவுக்கு செய்யும் மரியாதையாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time