மென்மையான காதல் கதையை ராணுவப் பின்னணியில் அழகாகவும், இதமாகவும் தந்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி. துல்கர், மிருணால் நடிப்பில் இளமையும், இனிமையும் பொங்கி வழிகிறது! இந்தியா- பாகிஸ்தான், காஷ்மீர் சிக்கலை பின்னணியாகக் கொண்ட, மிக அற்புதமான காதல் காவியம்!
சண்டைக்காட்சிகள், பிரம்மாண்டம், டூயட், அடிதடி என்பதான தெலுங்கு இண்டஸ்டிரியில் இருந்து மாறுப்பட்ட இனிமையான, இதமான படமாக வந்துள்ள சீதாராமம், தமிழ் உள்ளிட்ட அனைத்து தென் இந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. எளிய காதல் கதையை பரபரப்பான விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தொடக்கக் காட்சிகளில் முஸ்லீம் தீவிரவாதிகள், இந்திய ராணுவம், தேச பக்தி என்று தொடங்கும் போது இன்னொரு முஸ்லீம் வெறுப்பை மூலதனமாகக் கொண்ட போலி தேசப் பெருமித படமோ என்று எண்ண வைக்கிறது. ஆனால், கதை நகரத் தொடங்கியதும் ஒரு காவிய காதலை உணர்ச்சி கொந்தளிப்பாக்கி மனதை ஈரமாக்கி விடுகிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள ஒரு ராணுவ உயர் அதிகாரி உயிரிழக்கும் தருவாயில், தனது பேத்திக்கு ஒரு கடமையை செய்யச் சொல்லி எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார். இருபது வருடங்களுக்கு முன்பு சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டிய கடிதத்தைக் குறிப்பிட்டு எப்படியாவது அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எழுதி வைக்கிறார். அந்த கடிதத்தை எழுதியது யார்? யார் அந்த சீதா மகாலட்சுமி? அவருக்கும் அந்த ராணுவ ஜெனரலுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை 1964 ஆண்டு வாக்கில் நடந்த ஒரு காதல் கதையை விவரிக்கிறது படம்.
மிகச் சாதாரணமான கரு. ஆனால் திரைக்கதையாக சொல்வதில் பரபரப்பான திருப்பங்களும், எதிர்பார்க்கவே முடியாத முடிச்சுகளும் நம்மை கட்டிப் போட்டு விடுகின்றன. ஹைதராபாத்தில் இருப்பதாக சொல்லப்படும் சீதாவை 1984 வாக்கில் சந்திக்க கிளம்பியதில் பல அரிய உண்மைகளை உணர்கிறார் அந்த பாகிஸ்தானிய பெண் அப்ரீன். எதிர்பாராத கிளைமாக்ஸில் பார்வையாளர்களை அதிர வைத்து திகைக்க வைக்கிறது திரைக்கதை.
கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ஹனுவும், ராஜ்குமார் கண்ட முடியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நுணுக்கமான விவரணைகளையும், காட்சிக் கோர்வைகளையும் கால வரிசையில் முன்னும் பின்னுமாக இழையோடும் காட்சிக் கோர்வைகளும் அற்புதமாக இருக்கிறது. தமிழில் மதன் கார்க்கியின் வசனம், படத்துக்கு பலம். பாடல்களும் இனிமை!
1964க்கும், 1984க்கும் இடையே கதை மாறி மாறி நான் லீனியராக சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது. கதையில் நிகழும் அதிரடி திருப்பங்களை நம்மால் யூகிக்கவே முடியாத அளவுக்கு துல்லியமாக திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது. ஒரு காதல் கதைக்குள் இவ்வளவு முடிச்சுகளா? என்று திகைப்பு நமக்குள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. வெறும் திரைக்கதை நுட்பம் மட்டுமல்ல, படத்தின் உணர்வுப்பூர்வமான அனுபவமும் நம்மை கதைக்குள் இழுத்துக் கொண்டு போய்விடுகிறது.
தனக்கென்று உறவுகள் எதுவும் இல்லாத ராணுவ வீரனுக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு காதல் கடிதமும் உண்டு. அந்த கடிதத்தை அவன் படித்த பிறகு அவனுக்குள் ஏற்படும் காதல் உணர்வு பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. ராணுவ வீரனாகவும், களங்கமில்லாத காதலனாகவும் துல்கர் அட்டகாசமாக பொருந்துகிறார். காதல் காட்சிகளில் உருகுகிறார். நம்மை உருக வைக்கிறார். முகம் தெரியாத காதலியை தேடி அவரின் கண்கள் அலைபாய்வதில் கைதேர்ந்த நடிகராக மிளிர்கிறார்.
காதலியாக இல்லை இல்லை, காதல் மனைவியாக கடிதம் எழுதி நடித்திருக்கும் மிருணாளின் மிரட்சியான நடிப்பு அசத்தல்! முடிவு எடுக்க முடியாமல் அலைபாயும் மன நிலையை நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார். மிருணால் படம் முழுக்க வியாபித்திருக்கிறார். காதலை அதன் வலியை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்திருக்கிறார்.
படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் அப்ரீன். இந்தியாவை வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய பெண்ணாக வரும் அப்ரீன் பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா தான் வெறும் கவர்ச்சிப் பொம்மை அல்ல என்பதை நிருபித்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் அவரிடம் இருக்கும் அலட்சியம் மெதுவாக மாற்றமடைந்து பல உண்மைகளை தெரிந்த பிறகு பண்பட்ட நடிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். இந்திய சினிமாவில் ராஷ்மிகா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் சாயல் கூட வேறு எந்தப் படத்திலும் வந்திருக்குமா? என்பது சந்தேகமே. படம் முழுக்க வரும் ஏராளமான கதாபாத்திரங்கள், கதைக்கு வலு சேர்க்கின்றன.
படத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் கதையின் அழகியலுக்காக மெனக்கிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக பீரியட் படம் என்றாலும் பெரும்பாலும் செட்களை அமைக்காமல், உண்மையான இடங்களிலேயே படமெடுத்து இருக்கிறார்கள். பிரம்மாண்டமான அரண்மனை, காஷ்மீர், லண்டன் என்று பெரும்பாலும் அந்தந்த கதைக் களத்தில் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார்கள். டெலிபோன், ரயில்கள், கார்கள், உடைகள் என்று எல்லாமும் நுட்பமாக வரலாற்று உணர்வுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன. படம் முழுக்க வரும் வண்ணம் அது செதுக்கப்படு இருக்கும் விதம் ஆகியவை பிரமிக்க வைக்கிறது. தேசிய விருதுகள் காத்திருக்கின்றன.
Also read
மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் இசை. பாடல்கள் எல்லாமே அந்த காலத்தை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக ஏ.. சீதா பாடலும் அதை எஸ்.பி.பி சரண் பாடியிருக்கும் விதமும் அலாதியாக இருக்கிறது. அந்த காலத்தின் மெலடி பாடல்களைப் போலவே மீட்டெடுத்து இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். தேசிய விருது விஷாலுக்கு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. படத்தின் எடிட்டிங் இருபது ஆண்டுகால கதையை முன்னும் பின்னுமாக கச்சிதமாக தொகுத்திருக்கிறது.
எப்போதுமே காதல் கதைகள் இந்திய சினிமா வரலாற்றில் சாகா வரம் பெற்றவை. தேவதாஸ் தொடங்கி 96 வரைக்கும் ஏராளமான படங்களை சொல்ல முடியும். அந்த வரிசையில் சீதாராமம் மிக முக்கியமான படமாக இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
திரை விமர்சனம்; தயாளன்
அறிமுகம் மற்றும் அசலான அலசல்