8 மணி நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி! சுக்கு நூறாக்கப்படும் தொழிலாளர்  நலச்சட்டங்கள்…

பீட்டர் துரைராஜ்

மத்திய பாஜக அரசு இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, புதிய தொழிலார் சட்ட மசோதாவை விவாதமின்றி, அவசர,அவசரமாக கொண்டு வந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் நிறைவேற்றியுள்ளது.இதனால் இது நாள் வரை தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளும்,பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

1880 களில் அமெரிக்கா தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் நாளொன்றுக்கு 12 மணி நேரம், அல்லது 10 மணி நேரம் பணியாற்ற முடியாது என்று ரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து,போராடிப் பெற்றதே எட்டு மணி நேர வேலை என்பதாகும்! இதே போல நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலை வேண்டும் என்று புதுச்சேரியில் இருந்த டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள் 1936-ல் போராடினார்கள். அப்போது இருந்த பிரஞ்சு அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பனிரெண்டு  தொழிலாளர்கள் மரித்தார்கள். முடிவில் ஆசியாக் கண்டத்திலேயே புதுச்சேரியில்தான் முதலில் எட்டு மணிநேர வேலை அமலானது.குறைந்த பட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம், போனஸ், பணிக்கொடை (Gratuity) போன்ற  பல உரிமைகளுக்கு, பாராளுமன்றம் கடந்த செப்டம்பரில் இயற்றியுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால்  ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த 12 மணி நேர வேலை போன்ற தொழிலாளர் விரோத சட்டங்கள் ஏற்கனவே பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம்,குஜராத்,உ.பி ஆகியவற்றில் மே மாதம் முதல் அமலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

இது குறித்து தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளரான டி.எம்.மூர்த்தியிடம் பேசிய போது,

’’இந்த சட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் எதிர்த்து உள்ளன. ஆர்எஸ்எஸ்ஸின் தொழிலாளர் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம் கூட இதனை எதிர்த்து உள்ளது.”கடந்த ஆண்டு அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்துவது சம்மந்தமாக தொழிற்சங்கங்களை அரசு அழைத்துப் பேசியது. ஆனால் நாங்கள் முன்மொழிந்த எந்த திருத்தங்களையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதை திரும்பப் பெற்றுக்கொண்டு, அதைவிட மோசமான சட்டத்தை, செப்டம்பர் மாதம் 23 ம்  நாள் பாராளுமன்றம் 44 வினாடிகளில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் குறித்து தொழிலாளர் துறை அமைச்சர் மூன்று நிமிடங்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. சட்டத்தின் முக்கியமான அம்சங்கள் பல, பின்னர் விதிகளின் நிர்ணயிக்கும் வகையில் உள்ளன. எனவே இந்த சட்டங்கள் எவ்வளவு மோசமானவை என்பது அந்த விதிகளையும் சேர்த்து பார்த்தால் தான் தெரியும் ” என்று கூறினார்

இந்தியாவில் ஓட்டலில் வேலை செய்பவருக்கோ, ஆட்டோ ஓட்டுநருக்கோ, விவசாயத் தொழிலாளருக்கோ, சாலை ஓரமாக காய்கறி வியாபாரம் செய்பவருக்கோ  சட்டப் பூர்வ பாதுகாப்பு கிடைப்பது இல்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவல  நிலையை கொரோனா வெளிச்சம் போட்டு காண்பித்தது. இதை மாற்றும் விதமாக  சட்டம் கொண்டுவரப்படவில்லை.

ஒரு நிறுவனம் உற்பத்தித் துறையிலோ, சேவைத்துறையிலோ தொடர்ந்து இயங்கினால், அங்கு முதலாளி-தொழிலாளி உறவு நிலவினால், அது ”தொழில்” என்ற வரையறையில் கீழ்வரும்; அத்தொழிலுக்கு தொழிலாளர் சட்டங்கள்   பொருந்தும் என்று வி.ஆர்.கிருஷ்ண ஐயர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு இப்போதும் அமுலில் உள்ளது. ஆனால் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழில் உறவுச் சட்டத் தொகுப்பின்படி ( Industrial Relation Code) ஒரு ஆலை தரும காரியங்களிலோ, சமூகப் பணியிலோ ஈடுபட்டால் அந்த ஆலை  தொழில் அல்ல, அவற்றுக்கு  இந்தச் சட்டங்கள் பொருந்தாது. அதாவது, தருமகாரியம் செய்வதாகச் சொல்லி தொழிற்சாலைகளை  சட்ட வரையறையில்  இருந்து விலக்கி விடலாம். மத்திய அரசு விரும்பினால் ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது ஒரு தொழிலுக்கோ கூட இந்தச் சட்டங்கள் பொருந்தாது என்று கூறிவிடலாம். இப்படிச் செய்தால்  சம்பளக் குறைப்பு,ஆலைமூடல், வேலைநீக்கம்,லே ஆஃப்,ஊதியம், பணிநிலைமை(service conditions), வேலைநிறுத்தம், லாக் அவுட்  போன்றவை பற்றி நிர்வாகம் என்ன முடிவு எடுத்தாலும் தொழிலாளர்களால்  எந்த கேள்வியும் கேட்க முடியாது.

பெரும் போராட்டங்களால் அமுலுக்கு வந்த எட்டு மணி வேலை நேரம் என்பது மாற்றப்படுகிறது. வேலைநேரத்தை அவ்வப்போது அரசாங்கம் நிர்ணயம் செய்யும் என்று சட்டம் கூறுகிறது. மேலைநாடுகளில் உள்ளது போல வேலைநேரத்தை ஆறுமணி நேரமாக இன்றைய இந்திய அரசு குறைக்கப் போவதில்லை.ஆனால், இருக்கிற எட்டுமணி நேரவேலை என்பதைத் தளர்த்தி, கம்பெனி விருப்பட்டால் கூடுதல் நேரம் தொழிலாளர்களை வேலை வாங்கத் தடையில்லை என்ற ஆபத்து தோற்றுவிக்கப்படுகிறது. குஜராத்தில் இருப்பது போல எவ்வளவு நேரம் கூட்டப் போகிறதோ தெரியாது.

“கூட்டுப்பேர உரிமை, தொழிற்சங்க உரிமை, தொழிற்சங்க பதிவு, மகப்பேறு காலவிடுமுறை மற்றும் சலுகை, வேலைநிறுத்த உரிமை போன்றவற்றுக்கு ஆபத்து  ஏற்பட்டுள்ளன. வங்கிகளில் பணிபுரியும் ஒப்பந்தகூலி, தினக்கூலி, சேவைத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்கள் குறைந்த பட்ச ஊதியம், பணி நிரந்தரத்தை இனி கோர முடியாது. ஏனெனில் அவர்களை தனிப்பட்ட நிறுவனங்கள்தான் இனி பணியமர்த்தும். அவர்களுக்கு வழங்கப்படும் பிற சலுகைகளும் கிடைக்காது” என்கிறார் வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம்.

” சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு ( Social Security Code ) 116 பக்கங்கள் உள்ளது. இதில் 317 இடங்களில் மத்திய அரசு என்கிற வார்த்தை வருகிறது. அப்படியென்றால் இந்த சட்டங்கள் எவ்வளவு அதிகாரத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது(Centralise) என்று பாருங்கள். அனைவருக்கும் (Universal) ஓய்வூதியம், மகப்பேறு வசதி, பணிக்கொடை, மருத்துவ வசதி போன்ற சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் எதுவும் இதில் இல்லை. நிறையப் பேசுகிறது இந்தச் சட்டம் ஆனால் குறிப்பாக என்ன செய்வோம் என்பவை சொல்லவில்லை.கானல் நீராகத்தான் இதில் உள்ள திட்டங்கள் உள்ளன.மாநில அரசு ஏற்கெனவே செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களைக் கூட இந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டங்கள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும் ” என்கிறார் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரியும் பெண் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுஜாதா மோடி.

மத்திய அரசு கடந்த ஆண்டு சம்பளம்  குறித்த சட்டத்தை (Code on wages)  நிறைவேற்றியுள்ளது. அதன்படி புதிதாக நிறுவப்படும் ஆலைகள் ஏழு ஆண்டுகளுக்கு போனஸ் தர வேண்டியதில்லை. போனஸ் குறித்து கணக்கிடுவதற்காக சங்கத்திற்கு வரவு செலவு அறிக்கையை ( Balance Sheet)  தர வேண்டியதில்லை .ஒரு குடும்பம் என்று சொன்னால் தாய், தந்தை, அவரது இரண்டு குழந்தைகள் உள்ளடக்கியது. அவர்கள் உயிர்வாழ,  உணவு,கல்வி,மருத்துவம் போன்ற தேவைகளை உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியம் தர வேண்டும் என்று ரப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் அரசால்  வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி நிர்ணயிக்கப்பட்டு வந்தது. புதிய திருத்தப்படி  குறைந்த பட்ச ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும் என்று சொல்லுகிறது. இதனால் ஆலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக, தினக்கூலி தொழிலாளர்களாக பணி புரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

பணிசார்ந்த பாதுகாப்பு, உடல்நலன்,மற்றும் பணிநிலைமைகள் தொகுப்பில் (Occupational safety, Health and Working Conditions Code) பல விதிவிலக்குகள் (exemptions) கொடுக்கப்பட்டுள்ளன. நிலையாணை (Standing order)  300 தொழிலாளர்களுக்கு அதிகமாக உள்ள ஆலைகளுக்குத்தான் பொருந்தும் என்கிறது.எனவே நிர்வாகம் எந்தவிதமான ஒழுங்கு விதிகளையும் விதித்துக் கொள்ள முடியும். 300 பேர் வரை தொழிலாளிகள் உள்ள ஆலைகளை மூடுவதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. நமது நாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆலைகளில் முன்னூறு பேருக்கும் குறைவாகவே பணிபுகின்றனர். குறித்த கால பணி (Fixed Term Employment) என்ற பெயரில் ஒப்பந்த முறை தொடர்கிறது.

அரசு நினைத்தால் ஒரு சங்கத்தின்  பதிவை இரத்து செய்ய முடியும். தொழிற்சங்க தலைவர்களை பொறுப்பில் இருந்து நீக்கி வைக்க முடியும், தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கூட நிறுத்தி்வைக்க முடியும்.

“இந்தப் புதிய சட்டத்தில்  51 சதம்  உள்ள சங்கத்திற்கு அங்கீகாரம் தர  வேண்டும் என்று உள்ளது. 20 சதம் உறுப்பினர்கள் உள்ள  சங்கங்களுக்கு பேச்சுவார்த்தை குழுவில் பிரதிநிதித்துவம் என்று புதிய சட்டம் கூறுகிறது.இதனால் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அத்தியாவசியப் பணிகளில்  வேலை நிறுத்தம் செய்வதற்கு14 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கை  கொடுக்க வேண்டும் என்ற பிரிவு, இப்போது  60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது”.என்கிறார் சிஐடியு – வின் மாநில துணைத் தலைவரான ஏ.கிருஷ்ணமூர்த்தி.

” 44  சட்டங்களை நான்காக சுருக்கி இருக்கிறோம் என்கிறது அரசு. ஆனால் அதுவே 300 பக்கங்களுக்கு மேலாக உள்ளது.பழைய சட்டங்களில் உள்ள சாற்றை பிழிந்து விட்டு வெறும் சக்கையாக புதிய சட்டங்களை அரசு தந்து இருக்கிறது. இந்த தொழிலாளர் சட்டங்களையும், வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற கோரி வருகிற நவம்பர் 26 ம் நாள் வேலைநிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன “என்றார் டி.எம்.மூர்த்தி.

தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிரான இந்தச் சட்டங்கள் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள், என்ன நிலை எடுக்கப் போகின்றன என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time