வருமான வரியை சேமிக்கும் வழிமுறைகள் என்னென்ன?

செழியன் ஜானகிராமன்

நடுத்தர வர்க்க மாதாந்திர சம்பளக்காரர்களுக்கு கிடைக்கும் சம்பளமே போதுமானதில்லை. அதே சமயம், ஆண்டுக்காண்டு கணிசமான தொகை வருமான வரிக்கு போய்விடுகிறது. சட்ட பூர்வமாக வருமான வரியில் இருந்து விலக்கு பெற செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன?

வருமான வரி கட்டுபவர்கள் மார்ச் மாதம் வந்தால் எப்படி வரி சேமிக்கலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலானோர் சொல்லும் யோசனை இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள் போதும். வரிப் பணத்தை சேமிக்கலாம் என்பது தான்!

வரி சேமிப்பிற்கு என்று சில திட்டங்கள் உண்டு. அந்த திட்டத்தில் சேர்ந்தால் கொஞ்சம் வரியைச் சேமிக்க முடியும். இன்சூரன்ஸ் திட்டமும் அதில் ஒன்று. ஆனால்,  இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்த பட்சம் 5 வருடம் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும், மணிபேக் போன்ற திட்டங்களில் சேர்ந்தால் குறைந்தது 15 வருடம் பணம் செலுத்த வேண்டும்.

வங்கி வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்தால் 5 வருடம் பணம் வெளியே எடுக்க முடியாது. என்ன வட்டி வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்களோ அதை 5வது வருட முடிவில் கொடுத்து விடுவார்கள்.

அரசு வரி சேமிப்பு திட்டமான PPF-Public Provident Fund  திட்டத்தில் சேர்ந்தால் 15 வருடம் Lock in Period ஆகும்.  குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தலாம்.அதிகபட்சம் ஒரு வருடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தலாம்.

அரசின் மற்றொரு வரி சேமிப்பு திட்டம் NSC -National Savings Certificate இந்த திட்டம் 5 வருடம் திட்டம் ஆகும்.  குறைந்தபட்சம் 1000 ரூபாய் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், வருமான வரி 80C பிரிவில் 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் காண்பிக்க முடியும்.

வங்கி வரி சேமிப்பு வைப்பு  திட்டத்தில்(Tax Savings Fixed Deposit) சேர்ந்தால் முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி திட்டத்தில் சேரலாம். . அதிகபட்சம் உங்கள் விருப்பம் போல் செலுத்தலாம்.

கிசான் விகாஸ் பத்திரம்(KVP) திட்டத்தில் சேர்ந்து வரி சேமிக்கலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்தலாம் அதிகபட்சம் நம் விருப்பம் போல் செலுத்த முடியும்.  முதிர்வு காலம் 10 வருடம் 4 மாதங்கள் ஆகும்.

வரி சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 5 வருடம் Lock in Period அதிகபட்சம் 20 வருடம் Lock in Period ஆகும். அதுவரை பணம் நம் தேவைக்கு எடுக்க முடியாது. இதில் இருந்து மாறுபடுகிறது மியூசுவல் ஃபண்ட் வரி சேமிப்பு திட்டம் ஆகும்.

ELSS (Equity Linked Savings Scheme)

மியூசுவல் ஃபண்டில் ELSS என்ற ஒரு முதலீடு திட்டம் உண்டு. வருமான வரி சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். மற்ற வரி சேமிப்பு திட்டங்கள் போல் இல்லாமல் 3 வருடம் மட்டுமே பணத்தை வெளியே எடுக்க முடியாது. பிறகு நாம் விரும்பினால் அதில் இருக்கலாம் வேண்டாம் என்றால் வெளியே வந்துவிடலாம். இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருமான வரி பிரிவு 80Cக்கு கீழ் காண்பித்து வரி சேமிக்கலாம்.

இந்த திட்டத்தில் திரட்டப்படும் பணத்தை பங்குச்சந்தை சார்ந்த நிறுவனங்களில்  முதலீடு செய்யப்படுகிறது. குறைந்தது 3 வருடம் நம் பணம் மியூசுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருப்பதால் லாபம் வர அதிக வாய்ப்பு உண்டு. மற்றும் இந்த திட்டத்தின்  Fund Manager  மக்கள் முதலீட்டை பொறுமையாக நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வார்

இன்சூரன்ஸால் பயனில்லை

உங்கள் முதலீட்டை இன்சூரன்ஸ் போன்ற திட்டத்தில் அதிகம் செய்யாதீர்கள். அதிலிருந்து வரும் வருமானம் குறைவாகவே இருக்கும். ஒரு திட்டத்தை நிர்வகிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு பணத்தை நம்மிடம் இருந்து எடுக்கிறது  என்பதைத்  திட்டத்தில் சேர்வதற்கு முன்பு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம்,  இவை தான் நம் வருமானத்தைக் குறைக்கும்.

அதே போல் மியூசுவல் ஃபண்ட் ELSS திட்டத்தில் எவ்வளவு Expenses Ratio என்று பாருங்கள். 0.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை வசூலிப்பார்கள். குறைவான Expenses Ratio உள்ள திட்டத்தில் சேர்ந்தால் நமக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும்.

PPF, NSC, KVP போன்ற திட்டத்தில் வட்டி வழங்கப்படுவதால் எவ்வளவு வட்டி என்றும் சொல்லப்படுவதால் முதிர்வு தொகையில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று நமக்கு தெரிந்து விடும். இங்கு Expenses Ratio கிடையாது.

இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினால் ஒரு இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மேல் எடுக்காதீர்கள். ஆனால் பல வீடுகளில் 10 இன்ஸ்சுரன்ஸ் எடுக்கும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கு மற்ற முதலீட்டு முறைகள் பற்றி தெரியாதது தான் காரணம்!

வருமான வரி சேமிக்க விரும்புபவர்கள் மியூசுவல் ஃபண்ட் ELSS திட்டத்தில் 500 ரூபாய் செலுத்தி அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயம் மற்ற வரி சேமிப்பு திட்டங்களுக்குப் பதில் ELSS வருமானம் அதிகம் வர வாய்ப்பு உண்டு. தேவை பொறுமை மட்டுமே.

மாதாமாதம் பணம் செலுத்தலாம் அல்லது ஒரே முறை பணம் செலுத்தியும் திட்டத்தில் சேரலாம். மாதாமாதம் செலுத்தும் முறைக்கு SIP என்று பெயர் அதாவது Systematic Investment Plan.

இன்று மியூசுவல் ஃபண்ட் திட்டத்தில் புதியதாகச் சேருபவர்கள் பெரும்பாலானோர் SIP முறையில் மாதாமாதம் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்து எடுக்கிறார்கள். சிறிய தொகையை மாதாமாதம் செலுத்துவதன் வழியாகப் பெரிய தொகையை நாம் சேமிக்க முடியும். நல்ல வருமானம் கிடைக்கும்.

வருமான வரிக்காக ELSS திட்டத்தில் சேருபவர்கள் மாதம் மாதம் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்து எடுக்கலாம் அல்லது ஒரே முறை 5 ஆயிரம் அல்லது எவ்வளவு வேண்டுமென்றாலும் செலுத்திச் சேரலாம்.

ஒவ்வொரு  மியூசுவல் ஃபண்ட் நிறுவனமும் ELSS திட்டத்தை வெளியிட்டு உள்ளது.. கடந்த 5 வருட அந்த திட்டத்தின் செயல்பாடுகளைக் கவனித்து, Expenses Ratio பார்த்துச் சேரலாம்.

Quant Tax Scheme, Bank of india Tax advantage, IDFC Tax Advantage போன்ற திட்டங்களின் 5 வருடச் செயல்பாடுகளை இணையத்தில் தேடிப் பாருங்கள். மற்றும் இந்த நிறுவனங்களின் Expenses Ratio எவ்வளவு என்றும் பாருங்கள்.

வரி சேமிக்க Mutual Fund -ELSS திட்டம் சிறந்த திட்டம் ஆகும். இன்சூரன்ஸ் எடுங்கள், வங்கி வைப்பு நிதி திட்டத்தில் சேருங்கள் ஆனால், நிச்சயம் ELSS திட்டத்தில் சேர்ந்து முதலீட்டு வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் சில லட்சம்  வருமான வரி சேமிப்பு திட்டத்தில் செலுத்தினாலும் வருமான வரி சேமிப்பு பிரிவு 80Cகீழ் 1 லட்சத்து 50 ரூபாய் மட்டுமே காண்பித்து வரியைச் சேமிக்க முடியும். மீதி  தொகையை வருமான வரி பிரிவில் காண்பிக்க முடியாது. ஆனால், அதில் வருமானம் வரும்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time