பீகார் கூட்டணி முறிந்ததன் பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

எதிர்பார்க்கப்பட்டது தான்!  கூடா நட்பு கேடாய் ஆனது. ஓடாய் தேய்ந்தது நிதிஸ் கட்சி! ஜனதா தளத்தின் அடையாளத்தையே அழித்து , பாஜக செய்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் தொடர்ந்தால், ‘இருப்பதையும் இழப்போம்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் நிதீஸ்.  என்னவெல்லாம் நடந்தன பீகாரில்?

உரிமையை இழந்தவராய், மெள்ள,மெள்ள ஒடுக்கப்பட்டவராய் பெயருக்கு முதல்வர் பதவி வகித்தார் நிதீஸ். பீகாரில் நடந்தவை என்ன? பாஜக நிதிஸூக்கு தந்த தொல்லைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பாஜகவை விட்டு விலகி வந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம்,  காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளன. இடதுசாரி கட்சிகள் மகாபந்தன் கூட்டணியில் 19 இடங்களை வென்றுள்ளன! சி.பி.ஐ-6, சி.பி.எம்-4, சி.பி.எம்(எம்.எல்)- 12 என்ற எண்ணிக்கையில் வென்றுள்ளனர். அவர்களும் நிதிஸுக்கு ஆதரவு அளித்துள்ளர். பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும், மாநில முதல்வராகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் ஆளுநரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் நிதிஷ்குமார் ஆளுநரிடம் வழங்கினார். இதன்படி மீண்டும் பீகார் முதல்வராக நிதிஸ்குமார் பதவி ஏற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இது தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்.

இந்தியாவிலேயே தலை சிறந்த நிர்வாகியாகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற காந்தியத் தலைவரிடம் பயிற்சி பெற்றவருமாக உள்ள ஒரே அரசியல் தலைவர் நிதீஸ்குமார். இவர் ஆறுமுறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் ரயில்வே அமைச்சர், வேளாண் அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். சரத் யாதவ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டசின் நெருங்கிய நண்பர்!

2005 ஆம் ஆண்டு முதல்வரான போது பீகாரில் பிரமிக்கதக்க வளர்ச்சியை சாத்தியப்படுத்தினார். லாலுபிரசாத் ஆட்சியில் படுமோசமாக பின் தங்கி இருந்த பீகாரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். புதிய பள்ளிக் கூடங்களை நிறுவியதோடு, பள்ளியில் ஆசிரியர் பற்றாகுறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளித்தார். பெண் கல்வியில் பெரிதும் அக்கறை காட்டினார். குண்டும், குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்தார். பொருளாதாரம் வளர்ந்தது.

பாஜகவுடன் கூட்டணி கண்டது தொடங்கி அவரது சரிவு ஆரம்பித்தது. முதல் பீகாரில் பாஜகவிற்கு 1995ல் மிகச் சிறிய  வாக்கு வங்கி தான் இருந்தது. அது, ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியால்  2010 16.5% மாகவும், 2015 ல் 24% மாகவும் வளர்ந்தது. ஆனால், அவர்களுடன் கூட்டணி கண்ட நிதீஸின் ஐக்கிய ஜனதாதளமோ 1995ல் 28% வாக்குவங்கியாக இருந்து, 2020ல் 16 சதமாகிவிட்டது.

அனுகூல சத்ருவாக நிதிஸை அழித்து வளரும் பாஜக என்று அறத்தில் ஏற்கனவே எழுதினோம்.

காரணம், பாஜகவின் நெருங்கிய கூட்டாளியான லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வானின் வேட்பாளர்களை ஜனதா தளம் நிற்கும் தொகுதிகளில் நிற்க வைத்து 30 தொகுதிகளில் ஜனதா தளத்தை தோற்க வைத்தது பாஜக. அதையும் சகித்துக் கொண்டார் நிதிஸ்!

ஏன் நிதிஸ் இந்த முடிவை எடுத்தார்? நிதீஸ்குமார் முதல்வராக இருந்தார். பாஜக சார்பில் 16 அமைச்சர் இருந்தனர். அவர்கள் யாரும் முதல்வருக்கு கட்டுப்படவில்லை. முதல்வர் கவனத்திற்கு வராமலே தன்னிச்சையாக செயல்பட்டனர். அரசு நிர்வாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். மத நல்லிணகத்திற்கு கேடு விளைவிக்கும் சம்பவங்களில் துணிந்து ஈடுபட்டனர்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், லவ்ஜிகாத் சட்டத்தை உத்திரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் அமல்படுத்த வேண்டும் என்று பாஜக கூறியது. நிதிஸ் அதை உறுதியாக மறுத்துவிட்டார்!  ”லவ்ஜிகாத் சட்டம் தேவையற்றது. மனித உரிமை’’ மீறல் எனக் கூறிவிட்டார்!  அக்னிபாத்தை எதிர்த்தார்.  பாஜக எதிர்ப்பையும் மீறி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிந்தார்.

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக – ஜனதாதளம் கூட்டணி கண்டுள்ள நிலையில், அதில் அதிகாரத்தில் பங்கு கேட்ட ஜனதாதள எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி என ஆசை காட்டி கட்சி மாற வைத்தது பாஜக! இது தேசிய அளவில் ஜனதா தளத்தை கொந்தளிப்பின் எல்லைக்கு கொண்டு சென்றது! இதையும் நிதிஸ் பொறுத்துக் கொண்டார்.

நிதிஸ்குமார், சபாநாயகர் விஜயகுமார் சின்ஹா

பீகார் சட்டமன்றத்தில் பாஜக சார்பில் சபாநாயகராக இருந்த விஜயகுமார் சின்ஹா தான் நிதிஸ் குமாருக்கு மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்தார். இவர் நிதிஸ்குமாருக்கு இணையாக ஒரு அரசாங்கத்தை நடத்தினார் என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்டார். முதல்வரை மீறி தன்னிச்சையாக சட்டமன்றத்தை நடத்தினார். படுமோசமான சங்கியாக செயல்பட்டார். இதனால், நிதீஸ்குமார் கதிகலங்கிப் போனார். ”என் வாழ்நாளில் இவ்வளவு மோசமாக சட்டமன்றத்தை நடத்தும் ஒரு சபாநாயகரை நான் பார்த்ததே இல்லை” என நிதிஸ்குமார் கொந்தளிக்கும் நிலை உருவானது.

இதைவிட முக்கியமாக குர்மி சமூகத்தை சேர்ந்த ஆர்.சி.பி.சிங் என்பவரை அழைத்து அவருக்கு தனக்கு அடுத்த வாரிசுவாக அடையாளம் காட்டி, அவருக்கு ராஜ்யசபா எம்.பியாக்கினார். அவரை பாஜக வளைத்து போட்டது. மோடி மந்திரி சபையில் தங்கள் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளை கேட்டார் நிதிஸ்குமார். ஆனால், ”ஒரே அமைச்சர் பதவி தான். அதுவும் ராமச்சந்திர பிரசாத் சிங் எனப்படும் ஆர்.சி.பி.சிங்கிற்கு தான்” என்றது பாஜக.

ஏக்நாத் சிண்டேவான ஆர்.சி.பி.சிங்

தன் கட்சியில் யாருக்கு அமைச்சர் பதவி என்பதை நிதிஸால் முடிவு செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த ஆர்.சி.பி.சிங் நிதிஸிடம் தகவல் தெரிவிக்காமலே மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்கும் வகையில் பாஜகவிற்கு நெருக்கமானார். இதனால், அவருக்கு மீண்டும் எம்.பி வாய்ப்பு தராமல் தவிர்த்துவிட்டார் நிதிஸ். அதனால், அவர் கோபப்பட்டு நிதிஸை கண்டபடி திட்டி, ”அடுத்த பீகார் முதல்வர் நான் தான்” என சவால்விட்டார். ”நிதிஸ்குமார் ஏழெழு ஜென்மம் ஆனாலும் பிரதமராக முடியாது. ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல்” என முழங்கினார். அத்துடன் ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏக்கள் 25 பேரை வளைத்து போட்டு பேரம் பேசினார்!

இது தெரிய வந்தவுடன் தான் நிதிஸ் விழித்துக் கொண்டார். நிதிஸின் அரசியல் அனுவத்திற்கு முன்பு மோடியெல்லாம் ஒன்றுமேயில்லை.

‘பாம்புக்கு பால் வார்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும். பாஜகவுடன் நட்பு என்பது சிறுகச் சிறுகச் செய்து கொள்ளும் தற்கொலையைத் தவிர வேறில்லை’ என முடிவுக்கு வந்தார். சமீபத்தில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்ணித்தார்! ”வரலாற்றை மாற்றி எழுத முடியுமா என்ன? வரலாறு வரலாறு தான். அதை மாற்ற முடியாது” என அமித்ஷாவிற்கு பதிலடி தந்தார்.

ஏற்கனவே ஆர்.ஜே.டி தலைவர்கள்  ”நிதிஸ்குமார் அவர்கள் தேஜஸ்வியை முதல்வராக்க உடன்பட்டால், அவரை இந்திய பிரதமருக்கு நாங்கள் முன்மொழியத் தயார்! இன்றிருக்கும் அரசியல்வாதிகளில் அதற்கான ஒரே தகுதி அவருக்குத் தான் உள்ளது. ஆகவே நிதிஸ் பாஜக கூட்டணியை தைரியமாக உதறித் தள்ள வேண்டும்’’ என பேசி வந்தது கவனத்திற்கு உரியது.

ஆகவே 2024 தேர்தல் வரை நிதிஸ்குமார் முதல்வராக தொடர்ந்துவிட்டு, அடுத்த பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவை அமர்த்திவிட்டு, பிரதமர் பதவிக்கான கேண்டிடேட்டாக எதிர்கட்சிகளால் நிதிஸ்குமார் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. நிதிஸ்குமார் பாஜகவிடம் இருந்து விலகியது இந்திய அளவில் மதச் சார்பற்ற சக்திகளுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time