சமகால அரசியலை சமரசமின்றி பேசும் மலையாளப் படம்!

-தயாளன்

கெளரி லங்கேஷ் படு கொலையை மையமாக்கி ஒரு அரசியல் படத்தை புதிய கோணத்தில், புதிய தளத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் இந்து! இவர் மலையாள சினிமாவின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். ஒரு மக்களுக்கான படைப்பாளி இறந்த பிறகு தன் படைப்பால் வாழுவதை உயிர்ப்போடு சொல்கிறது படம்!

மலையாளத்தில் வெளியாகி இருக்கும் 19(1)(A) திரைப்படம் வலுவான திரைமொழியோடும் தீவிரமான அரசியல் படமாகவும் வந்திருக்கிறது. விஜய்சேதுபதி, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வி. எஸ். இந்து.

எளிய நீரோடையைப் போன்ற கதை.  முக்கிய கதாபாத்திரமான “பெண்குட்டி”யாக நடித்திருக்கும் நித்யாமேனனின் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான சம்பவம் ஒன்று அவரது எதிர்காலத்தை புரட்டிப் போடுகிறது. இந்த ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு நேர்த்தியான படத்தை இயக்கி இருக்கிறார் இந்து.

கவுரி சங்கர் என்ற எழுத்தாளர் ஒரு நாள் அதிகாலையில் மோட்டார் பைக்கில் வரும் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  கவுரி என்ற பெயரும் அந்த சம்பவமும், கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஷையும், அவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வையும் நினைவூட்டுகின்றன.

ஒரு ஜெராக்ஸ் கடையை நடத்தி வரும் நித்யாமேனனை சந்தித்து தனது கடைசி படைப்பை நகலெடுக்க சொல்லிவிட்டு செல்கிறார் விஜய் சேதுபதி. முழுமையாக நகலெடுத்து பைண்டிங் செய்து வைத்து காத்திருக்கிறார் நித்யா மேனன். ஆனால், அதை வாங்குவதற்கு அவர் திரும்ப வரவேவில்லை. பின்புதான் எழுத்தாளர் கவுரி சங்கர் கொல்லப்பட்டதாக அறிகிறார். அந்த கையெழுத்து பிரதியை என்ன செய்வது என்று தெரியாமல் அலைபாய்கிறார்.  இறுதியில் தீர்க்கமாக முடிவெடுக்கிறார்.


தெளிந்த நீரோடை போன்ற எளிமையான திரைக்கதை.  எழுத்தாளராக விஜய் சேதுபதி சிறிதும் அலட்டல் ஏதுமின்றி இயல்பாக, நச்சென்று பொருந்துகிறார். பெரும்பாலும் தீவிரமான அரசியல் கட்டுரைகள் எழுதும் அவர் நாவல் எழுதுகிறார். அந்த நாவல் எதைக் குறித்தது என்பது தான் படத்தின் செய்தி. அந்த நாவலின் கதையை நகலெடுக்க நித்யா மேனனை சந்திக்கும் அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் அற்புதம். அந்தக் காட்சியின் இறுதியில் நகலெடுத்தால் மட்டும் போதுமா? பைண்டிங்கும் செய்யலாமா? என்று நித்யாமேனன் கேட்கும் போது, “உங்க இஷ்டம் போல செய்யுங்கள்” என்று விஜய் சேதுபதி சொல்கிறார்.  அந்தக் காட்சி படத்தின் இறுதியில் நித்யா மேனனுக்கு வழிகாட்டுகிறது.

இறந்து போன எழுத்தாளர் ஒருவருடைய படைப்பை படித்த பிறகு அந்த எழுத்தாளரின் மீது பெரும் மதிப்பு கொண்டு அவரின் கனவை சுமக்கிறார் நித்யா மேனன்.  படத்தின் தூண் என்றால் அது நித்யா மேனனே.  மிக சிறிய டிடிபி கடை, அதை இயந்திர கதியில் நிர்வகித்துக் கொண்டிருக்கும் அவரிடம் நிகழும் மாற்றத்தை இயக்குனர் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.  நித்யா மேனனின் பண்பட்ட நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது.


நித்யாமேனனின் அப்பாவாக வரும் ஶ்ரீரீகாந்த் முரளியின் கதாபாத்திரமும், நடிப்பும் இயக்குனரின் கைவண்ணத்திற்கு கட்டியம் கூறுகின்றன. நித்யா மேனனுக்கும் அவரது அப்பாவுக்கும் இடையே நிகழும் முரணும் அன்பும் சிலாகிக்க வைக்கிறது. சில காட்சிகளே வரும் இந்திரன்ஸ் கதாபாத்திரமும், முஸ்லிம் நண்பி கதாபாத்திரமும் மிக நன்றாக செதுக்கப்பட்டுள்ளது.

திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கும் இந்துவின் முதல் படம் இது. ஆனால் மிக முதிர்ச்சியான காட்சியமைப்புகளும் சொல்லவரும் அரசியல் செய்திகளும் அவரின் முதல்படம் என்பதை நம்ப மறுக்கிறது.  ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் சந்திக்கிறார்கள்.  ஆனால் படம் முழுக்க நித்யா மேனனை ஒரு படைப்பாளியாக விஜய் சேதுபதி எப்படி பாதிக்கிறார் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.

கேமரா கோணங்களும் நகர்வுகளும், மிக நிதானமாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.  போலீஸ்காரர் ஒருவருடன் பைக்கில் விஜய் சேதுபதி செல்லும் காட்சி நுட்பமானது. பரபரப்பான காட்சி என்று எதுவும் இல்லை. ஆனால் படமாக்கத்தில் இருக்கு அழுத்தம் நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறது.  எடிட்டிங் சீர்மையாகவும் கோர்வையாகவும் இருக்கிறது. உறுத்தலான ஒரு கட் கூட இல்லை.

படத்தின் இசை மட்டுமே உறுத்துகிறது.  தேவையற்ற இடங்களில் இசை அதீதமாக ஒலிக்கிறது.  கோவிந்த் வசந்தாவுக்கு எங்கே இசையமைக்க வேண்டும் என்பதை விட எங்கே மவுனமாக இருக்க வேண்டும் என்று புரியவில்லை.  இந்தப் படத்துக்கு இசையே தேவையில்லை என்று முடிவெடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்,  அரசியல் படம் என்பதால் கொந்தளிப்பான வசனங்களோ, பரபரப்பான காட்சிகளோ இல்லாமல் எளிய சம்பவம் ஒன்றின் வழியாக நாட்டில் நடக்கும் பேச்சுரிமைக்கு எதிரான சூழலை ஆர்ப்பாட்டம் இல்லாமல் உணர வைக்கிறார். நாம் எப்படிப்பட்ட கால சூழலில் வாழ்கிறோம் என்பதை இப்படம் நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் சொல்கிறது.

படம் பார்த்து முடித்தவுடன் ஆர்ட்டிகிள் 19(1)(a) என்பது எதைக் குறிக்கிறது என்பதை தேடிப்பார்த்தேன்.   ஒவ்வொரு இந்தியனுக்கும் பேசுவதற்கும் அதை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது.  இந்த படம் 19(1)(a)க்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை விளக்குகிறது.

திரை விமர்சனம்; தயாளன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time