தீஸ்தா! அச்சமில்லாதவர்! மோடியை அஞ்ச வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமைப் போராளி! குஜராத் படுகொலையையும், அதில் மோடியின் தொடர்பையும் உலகறியச் செய்தவர். ஜெயமோகனின் அறம் மகத்தான மானுட நேயப் படைப்பு! இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உண்மைக் கதையும் நம் உள்ளத்தை உலுக்குபவை.
குஜராத் கலவர்ம் மற்றும் படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு இடையறாத சட்ட போராட்டதை நடத்திய தீஸ்தாவை தற்போது ஒன்றிய அரசு கைது செய்துள்ள நிலையில் இந்த நூல் முக்கியத்துவமாகிறது.
பத்திரிகையாளரான தீஸ்தா செதல்வாட் எழுதிய ‘ தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் ‘ என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இவரையும், குஜராத் மாநில மேனாள் காவல் அதிகாரியுமான ஸ்ரீ குமாரையும் குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை , சமீபத்தில் ஜூன் 28 ம் நாள் கைது செய்தது. 2002ல் நடந்த குஜராத்தில் நடந்த மனிதப் படுகொலைகளுக்கு நீதிகோரி நெடிய போராட்டத்தை நடத்தி வந்த தீஸ்தா செதல்வாட் எழுதியது இந்த நூல்.
தீஸ்தா செதல்வாட், ‘டெய்லி’ நாளிதழில் களத்தில் செய்தி சேகரிப்பவராக, பம்பாயில் தன் வாழ்வைத் தொடங்கியவர். இப்போது Sabrangindia.in என்ற இணைய இதழை, அவரது இணையர் ஜாவேத் ஆனந்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்த இணைய இதழில்தான், ‘அரசு விரும்பாத பட்சத்தில் எந்த ஒரு கலவரமும் 24 மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது’ என, காவல் அதிகாரி, விபூதி நாராயண் ராய் கொடுத்த புகழ்பெற்ற நேர்காணல் வெளியானது.
இவருடைய கொள்ளுதாத்தாவான, சிமன்லால் செதால்வாட், பஞ்சாப் படுகொலையை விசாரணை செய்த ஹண்டர் ஆணையத்தில், இந்தியர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட மூன்று வழக்கறிஞர்களில் ஒருவர். இவர் எழுதி இந்திய வழக்கறிஞர்கள் சார்பாக வெளிவந்த மாறுபட்ட அறிக்கைதான் (dissent note) ஜெனரல் டையர் செய்த கொடுமைகளை உலகுக்கு காட்டியது. இவருடைய தாத்தா எம்.சி. செதால்வாட் சுதந்திர இந்தியாவின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தவர். முந்த்ரா ஆணையத்தில் இவர் எடுத்த நிலைபாடுதான், நிதி அமைச்சராக இருந்த டிடிகே கிருஷ்ணமாச்சாரியை பதவி விலகச் செய்தது.
‘வங்கதேசத்தில் எல்லைகளைத் தாண்டி அச்சமின்றிப் பாயும் ஓர் ஆற்றின் பெயர் ‘ தீஸ்தா. அந்த நதியின் பெயரே, இவருக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த நூலை ச.வீரமணி – தஞ்சை ரமேஷ் ஆகிய இருவரும் அற்புதமாக மொழிபெயர்த்துள்ளனர். இந்த நூலை வெளியிட்டதன் மூலம், வகுப்புவாதத்தை எதிர்கொள்ளும் ஓர் ஆயுதத்தை, பாரதி புத்தகாலயம், தமிழர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த நூல் ஒரு போராட்ட ஆவணமாகும். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற கருதுகோள்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நூலைக் கொண்டாடுவார்கள்.
ஆ.கே.ராகவன் உச்ச நீதி மன்றத்தால் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இலட்சக்கணக்கான ரூபாய்களை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குஜராத் அரசிடமிருந்தே சம்பளமாகவும், படிகளாகவும் பெற்ற இவர் குஜராத் அரசின் அங்கமாகி மோடியை காப்பாற்றியதை விவரித்துள்ளார். கலவரத்தை அடக்க மாநில அரசின் அழுத்தத்தை மீறி உறுதியாக செயல்பட்ட ஸ்ரீ குமார், சஞ்சீவ் பட், ராகுல் சர்மா போன்ற அதிகாரிகளை ஆர்.கே.ராகவன் விசாரிக்கவே இல்லை.என்பதைச் சொல்கிறார்.
கலவரங்களின் போது மாநில அரசு ஒரு நிவாரண முகாம் கூட அமைக்கவில்லை. தனி நபர்கள்தான் முகாம்கள் நடத்தினர். நிவாரண முகாம் அமைத்து சிறப்பாக செயல்பட்ட உமர் ஜி, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என்று விடுதலை ஆனார். நில நடுக்கம், மதக் கலவரங்களில் நிவாரணம் வழங்குவதில் சாதி, மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டன என்கிறார், தீஸ்தா!
பத்து சதவீதம் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் வளர்ச்சி மீதான பொறாமை, கலவரங்களுக்கு, ஒருவகையில் காரணம் என்று சொல்லும் தீஸ்தா, படுகொலைகளுக்கு முன்பே அதற்கான களம் தயாரிக்கப்பட்டதை தெளிவாக விளக்கி உள்ளார்.
பெயரில்லாத பல துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. வெறுப்பை உமிழும் காசெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. கலவரம் நடப்பதற்கு முன்பு அங்கு எரிவாயு தட்டுப்பாடு நிலவியது. ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து பயங்கரமான ஆயுதங்கள் குஜராத்திற்கு கடத்தி வரப்பட்டன. முஸ்லிம்கள் இருக்கும் பகுதி தனியாக அடையாளப் படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட திட்டமிடல் முடிந்த பிறகுதான், கலவரத்தை தொடங்கினார்கள் என்கிறார் தீஸ்தா செதல்வாட்.
குஜராத் படுகொலை தொடர்பாக, வி.ஆர்.கிருஷ்ண அய்யர், எச்.சுரேஷ் ஆகியோரைக் கொண்ட குடிமக்கள் தீர்ப்பாயம் குறித்து இந்த நூலில் பேசுகிறது. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த ஜே.எஸ்.வர்மாவின் பங்கு குறித்து சிறப்பாக குறிப்பிடுகிறார்.
வாஜ்பாயி அரசாங்கம் போன பிறகு வந்த, ஐக்கிய முன்னணி அரசு கூட (2004) குஜராத் படுகொலை வழக்குகளில் நியாயத்தைப் பெற போதுமான முனைப்பு காட்டவில்லை என்கிறார், தீஸ்தா. குஜராத் படுகொலை குறித்து விசாரிக்காமல் விட்ட ஆவணங்கள், அரசின் நுண்ணறிவுப் பதிவுகள், காவல் கட்டுப்பாட்டு அறைப்பதிவுகள், மனித உரிமை ஆணைய அறிக்கை, தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பு போன்றவைகளின் அடிப்படையில், மத்திய புலனாய்வுத்துறையின் மறு விசாரணைக்கு, ஐக்கிய முன்னணி அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தவறிவிட்டது’’ என்கிறார்.
சொல்லப்படும் யதார்த்தங்கள் நமது மனசாட்சியை உலுக்குகின்றன. ‘இந்தியாவின் இதயத்துக்கான, ஆன்மாவிற்கான போர் வீறு கொண்டு நடைபெறுகிறது’ என்று கூறி நூலை முடிக்கிறார், தீஸ்தா!
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
தீஸ்தா செதல்வாட் நினைவோடை
ஆசிரியர்; தீஸ்தா செதல்வாட்
தமிழில்: ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018,
பக்:232, விலை ரூ.200,
தொலைபேசி: 044 – 24332424
ஜெயமோகனின் ‘அறம்’
ஒரு புத்தகம், படித்து முடித்தப் பின் சில நாட்களேனும் நம் நினைவிற்குள் ஆழமாக பதிந்து நம்மை சிந்திக்க வைக்குமானால், கட்டாயம் அந்தப் புத்தகம் சிறந்ததாக தான் இருக்க முடியும். அவ்வகையில் ஜெயமோகன் எழுதிய ‘அறம்’ கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
“Stories Of The True’ என்னும் தலைப்பில் புத்தகமாக கடந்த ஜீலை மாதம் 27ம் தேதி அறம் ஆங்கிலத்தில் வெளி வந்தது. அறம் என்னும் உயரிய விழுமியத்தை மையமாகக் கொண்டு சுழலும் 12 கதைகளும் நம்மிடையே வாழ்ந்த மனிதர்களின் உண்மை கதைகளே.
வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு எழுத்தாளர் ஒரு வருடத்தில் 100 புத்தகம் எழுதுகிறார். 3 நாட்களுக்கு ஒரு கதை புத்தகம். ஒரு புத்தகத்திற்கு 50 ரூபாய் வீதம் 100 புத்தகத்திற்கு 5,000 ரூபாய் பேசப்படுகிறது. பெரும்பாடுபட்டு அவர் இரவும் பகலும் உழைத்து எழுதி முடிக்கிறார். அவ்வப்போது அவருக்கு சில்லறை சில்லறையாக பத்து, இருபது என்று சில நூறுகளே வழங்கப்பட்டிருக்கிறது. அவருடைய பெண்ணின் திருமணத்திற்காக அவர் பெரிதும் நம்பியிருந்தது அந்த பணத்தை தான். திருமண பத்திரிகையோடு அவர் பதிப்பகம் சென்று அழைப்பு விடுத்து, பணம் கேட்டகிறார்.
செட்டியார் கேவலமாக திட்டி வசை பாடிய போது தான் எழுத்தாளருக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பதே புரிந்திருக்கிறது. எவ்வளவு மன்றாடியும் அவமானங்களை மட்டுமே சந்தித்ததால் திடீரென்று ஏதோ தோன்ற செட்டியாரம்மாவை போய் பார்த்துவிட்டு, உணர்ச்சி பொங்க நடந்தவைகளை கூறி ‘நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன். என் வயத்திலே அடிச்சா நீயும் உன் பிள்ளைக்குட்டிகளும் வாழ்ந்திடுமா?….வாழ்ந்தா சரஸ்வதி தேவடியான்னு அர்த்தம்’ என்று சன்னதம் வந்தவர் போல உரக்கச் சொல்லி விட்டு செல்கிறார்.
எழுத்தாளருடைய சக்தி வாய்ந்த சொற்கள், செட்டியாரம்மாவை அசைத்து விட்டது. போட்டது போட்ட படி அப்படியே, செட்டியாரை பார்த்து தலை விரி கோலமாக ‘ உடனே புலவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்கவில்லை என்றால் தான் சாலையில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அந்த அம்மா கொளுத்தும் சித்திரை வெயிலில் அமர்கிறார். செட்டியார் உடனெ பணம் செட்டில் செய்கிறார். ஒரு இல்லத்தரசி பழி சொல்லிற்கு அஞ்சி புரட்சி பெண்ணாக மாறிய நிகழ்வை அழகாக விவரித்திருப்பார் ஆசிரியர். இதுவே அறம் என்னும் புத்தக தலைப்பைக் கொண்டுள்ள முதல் சிறு கதை.
நூறு நாற்காலிகள் என்னும் கதையில் நாயாடி சமூகத்தில் பிறந்த ஒருவன் அரும்பாடு பட்டு முன்னேறி IAS அதிகாரியாக ஆன பின்பும் இந்த சமூகம் சாதியை காட்டி அவனை விடாது துரத்தும் நிகழ்வுகளை எழுதியிருப்பார். நாயாடி சமூகத்தினர் பிறர் முன் வந்தாலே அவர்களை கல்லெறிந்து அடித்து கொன்று விடும் வழக்கம் இங்கு இருந்தது என்பதை ஜீரணிக்க முடியாமல் வயற்றை ஏதோ வலி பிசைந்தெடுக்கிறது. அவன் பெரிய அதிகாரி ஆன நிலையிலும் கூட அவனுக்கு இந்த சமூகம் உரிய மரியாத தர மறுக்கும் சபவங்கள் பலவற்றை விவரித்திருப்பார்.
கடையரிலும் கடையருக்காக சிந்தியுங்கள் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். சாதிய கொடுமைகளின் உச்சத்தை மிக அழகாக நூறு நாற்காலிகள், கோட்டி, வணங்கான் என்னும் மூன்று கதைகள் மூலம் விவரித்திருப்பார் ஆசிரியர்.
சோற்றுக் கணக்கு என்னும் கதையில் வரும் கெத்தேல் சாகிப் அற்புதமான மனிதர். தன்னுடைய ஹோட்டலில் பரிமாறப்படும் உணவுக்கு அவர் விலை வைப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை. அங்கு ஒரு டப்பாவை வைத்து விடுகிறார். அதில் விருப்பப் பட்டவர்கள் பணம் போடலாம். இல்லை என்றாலும் அவர் பொருட்படுத்துவதில்லை.ஏழை,பணக்காரன், இன்ன சாதிக்காரன் என எந்தப் பாகுபாடும் அற்றவர். பசி அனைவருக்கும் பொதுவானது என்பதை மட்டுமே உணர்ந்துள்லவர். மற்றவர்களை பசி தீர்த்து உபசரிப்பதிலேயே அவர் உள்ளம் நிறைகிறது. கெத்தேல் சாகிபின் இந்த அற வாழ்க்கை நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது.
படுத்த படுக்கையாக இருக்கும் தன் தந்தையின் மலத்தை சுத்தம் செய்யவில்லை என,, சமையல் கட்டில் வேலையாக இருந்த தன் மனைவியை அழைத்து அந்த மலத்தை அப்படியே அவள் தலையில் கொட்டும் அளவிற்கு பாதகர்களாக கணவன்மார்கள் இருந்திருக்கிறார்கள் என்ற பதிவு நம்மை திடுக்கிடச் செய்கிறது. அந்த கொடுமையின் விளைவாக தான் அந்த மனைவி வயதான் பின்பு OCD என்று சொல்லப்படுகிற Obsessive cleaning disorder என்னும் வியாதியால் அவதியுறுகிறாள். பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டிருப்பதை அதிரும்படி சொல்கிறது தாயார் பாதம் சிறுகதை.
கதைகளுக்கெல்லாம் மகுடம் சேர்ப்பது போல் யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தி பற்றிய கதை உள்ளது. இது, ஆன்ம தெளிவடைய செய்யும் ஒரு உண்மை கதை. காட்டுக்குள் மது அருந்தி விட்டு கண்ணாடி பாட்டில்களை எதிர் விளைவுகளைப்பற்றி சற்றும் யோசிக்காமல் தூக்கி எறிந்து விட்டு வருகிறார்கள் பலர். அந்த கண்ணாடி பாட்டில்கள் யானைகளின் கால்களை துளைத்ததில் பல யானைகள் இறந்திருக்கின்றன என்பது பெரும் துயரம். ‘காட்டுல பெரிய மிருகங்கள் சாகறதிலே மூனுல ஒரு பங்கு கொலை’தான்னு யானை டாக்டர் சொல்றார்.
பூமேடை இராமையா, தன்னலமின்றி பல பொது கூட்டங்கள் போட்டு பல முறை கேடுகளை அம்பலத்திற்கு கொண்டு வந்தவர். தன் சொத்துக்கள் அனைத்தையும் சமுதாய பயன்பாட்டிற்காக தாரை வார்த்தவர். அவரை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அவரை கேலி செய்து கடைசி வரை உதாசீன படுத்தியவர்கள் தான் அதிகம். நகைச்சுவை ததும்ப இந்த கதையினை அளித்திருக்கிறார் ஆசிரியர்.
ஜெயமோகன் ஒரு வெளிநாட்டவரிடம் நீங்கள் எந்த நாடு எனக் கேட்க, காரி டேவிஸ் என்பவர் தான் எந்த நாட்டையும் சேர்ந்தவன் அல்ல என்றும் தான் அமெரிக்க குடியுரிமையை துறந்து ‘உலகக்குடிமகன்’ என்கிறார். இது, ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்னும் வாசகத்தை நினைபடுத்துகிறது. அமெரிக்காவில் வான் படையில் விமானியாகப் பணிபுரிந்து, ஜெர்மனியின் மீது குண்டு வீசிய படங்களைப் பார்த்து ஆழமான மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தேசிய வாதம் என்பதில் உள்ள தீமைகளை உணர்ந்ததாக கூறுகிறார். தேசிய வாதத்தை காட்டிலும் சக மனிதர்களை நேசிப்பதே சிறந்த அறம் என்னும் கருத்தினை வலியுறுத்தி இறுதியாக ‘உலகம் யாவையும்’ என்னும் கதையினை முடித்திருப்பார்.
அறம் உண்மைக் கதைகள் நம் அகத்தில் ஆழமாக பதியம் போடுகின்றன.
நூல் விமர்சனம்; நா.ரதி சித்ரா
நூல்; அறம்
ஆசிரியர்; ஜெயமோகன்
வெளியீடு; வம்சி,
19 , டி.எம்.சாரொன்,
திருவண்ணாமல
விலை; ரூ400
Leave a Reply