தனியார் நிறுவனங்கள் கொழுக்க மக்களை வதைக்கிறார்கள்!

-செழியன் ஜானகிராமன்

தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது! மின்வாரியத்திற்கு நாளுக்கு நாள் கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. மின் உற்பத்தி மின் விநியோகம் மேன்மேலும் தனியார்மயமாகிறது.  இவை குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தியிடம் ஒரு நேர்காணல்;

சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தியது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது அது மட்டும் இல்லாமல்  பலருக்கு வைப்புத் தொகை கட்டணமும் வசூலித்து உள்ளனர். உண்மையில் என்ன நடக்கிறது மின்சார துறையில் ?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் சிலர் மின் கட்டணம் கட்டாமல் போகலாம். அதனால் ஒருவரின் கடந்த 2 வருட மின்சார பயன் அளவை கொண்டு இரண்டு மாத பில் தொகையை வைப்புத் தொகையாக அரசு வசூலிக்கும்.

வைப்புத் தொகையை எப்பொழுது திருப்பி தருவார்கள்?

ஒருவர் வாங்கப்பட்ட மின்சார இணைப்பை வேண்டாம் என்று திருப்பி கொடுத்தால் அவரின் வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படும்.

யாராவது அப்படித் திருப்பி கொடுப்பார்களா? மின்சாரம் என்பது கடைசி வரை அத்தியாவசியமானதே

மூடப்படும் நிறுவனங்கள், இடிக்கப்பட்ட வீடுகள், மின்சார கட்டணம் 6 மாதம் செலுத்தாமல் இருப்பவரின் மின் இணைப்பை முற்றிலும் துண்டித்துக் கட்டவேண்டிய மின் கட்டணத்தை அவரின் வைப்புத் தொகையில் கழித்து மீதி தொகையைத் திருப்பி அளிக்கப்படும். இப்படி நிறைய நடந்து உள்ளது.

வைப்பு நிதியால் அரசுக்குத்தான் நன்மை அதனால் மக்களுக்கு என்ன நன்மை?

மக்கள் செலுத்தும் வைப்பு நிதிக்கு அரசு வட்டி கொடுக்கும். இது பலருக்கும் தெரியாது. வட்டி தொகையை மக்களின் மின்சார கட்டணத்தில் கழித்து விடுவார்கள். இதைக் கணக்கு எடுக்க வரும் நபர்கள் செய்வார்கள். அவர்கள் மக்களுக்குக் கழிக்கப்பட்ட வட்டி தொகையைச்  சொல்ல வேண்டும். ஆனால், அப்படிச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

எஸ். காந்தி

100 யூனிட் இலவச மின்சாரம் ஏன் வழங்குகிறீர்கள் என்று நீதிமன்றம் முதல் மத்திய அரசு வரை  கேட்கிறார்களே ?

தமிழகத்தில் 2 கோடி 34 லட்சத்திற்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 83 லட்சம் குடும்பங்களின் மின்சார பயன்பாடு 50 யூனிட்டுக்கும்  குறைவாக உள்ளது. மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இவர்கள். இந்த திட்டத்தின் கீழ் மிகப் பெரிய பயன் அடைகிறார்கள்.

இதற்கு அடுத்து 64 லட்சம் குடும்பங்கள் 150 யூனிட்க்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். 100 யூனிட் கழித்தால் மீதி 50 யூனிட்டுக்கு பணம் கட்டினால் போதும். இவர்கள் பெரும் பயனடைவது 100 யூனிட் இலவச மின்சாரத்தால் தான்.

தமிழகத்தில் 20 லட்சம் குடிசைகள் உண்டு. இதில் பெரும்பாலும் 1 விளக்கு மட்டுமே உண்டு. இவர்கள் 100 யூனிட் மின்சாரத்திலேயே பயன்பாடு அடங்கிவிடுகிறது.

இத்தகையைத் திட்டத்தை ஏன் என்று கேள்வி நீதிமான்கள் மாதம் சம்பளம் மட்டும் இல்லாமல் கார், பெட்ரோல், ஓட்டுநர், நாளிதழ் வாங்கப் பணம், தங்க வீடு, பணியாளர் என்று சம்பளம் தாண்டி நிறையப் பயன் அடைகிறார்கள். ஏன் அவர்கள் அவர்களின் சம்பளத்திலிருந்து இதையெல்லாம் செய்து கொள்ளாமல் இவ்வளவு சலுகைகள்?

ஆனால், அதானிக்கு சோலார் பேணல் இறக்குமதி செய்வதற்கு 30 சதவிகிதம் கஸ்டம் டியூட்டி தள்ளுபடி செய்கிறார்களே அது இலவசம் இல்லையா?

ஒவ்வொரு ஆண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கடன் கொடுக்கும் அமைப்புகளால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதே?

மத்திய அரசு மின்சாரத்தைச் சந்தை பொருளாகப் பார்க்கிறது. எவ்வளவு லாபம் வரும் என்று கணக்குப் போடுகிறார்கள். மின்சாரம் என்பது முதலில் Affortability பிறகுதான் Availability.

Affordable என்றால் மின்சாரம் மக்களுக்கு எட்டக் கூடிய விலையில்  இருக்க வேண்டும். இதில் லாப கணக்குப் போடக்கூடாது.  இந்தியாவில் இன்னும் 2 கோடி மக்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. அரசு மக்களுக்கு மின்சாரம் கொடுப்பது முக்கியம் இல்லை அவர்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும்.

குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்பொழுது அரசு ஏன் பல முறை அதிக விலைக்கு வாங்குகிறது ?

ஏற்கனவே சொல்லியது போல் மத்திய அரசு மின்சாரத்தைச் சந்தையாகப் பார்க்கிறது. உண்மையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்தி  விலை 4 ருபாய் 50 காசு.  இதை பல முறை அதிக விலை கொடுத்து 24 ரூபாய்க்குக் கூட அரசு வாங்கி உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைகிறார்கள்.

இன்று இந்தியாவில் மிகப் பெரிய தனியார் மின்சார உற்பத்தியாளராக அதானி திகழ்கிறார்.

முன்பெல்லாம் அதாவது, மின்சாரத்தை வணிகமாகப் பார்ப்பதற்கு முன்பு எப்படி மின்சாரத்தை கையாண்டார்கள் என்றால், விலைக்குத் தகுந்தாற்போல் வாங்குவார்கள். அதாவது விலை அதிகமாக இருக்கிறதா மின்சார தேவையைக் குறைத்துச் செயல்பட்டார்கள்.

மின்சார விலை அதிகமாக உள்ளது அதனால் வாங்க முடியாது. தேவையென்றால், அரை மணிநேரம் மின் வெட்டு செய்யலாம் சென்று முடிவு எடுப்பார்கள். மின்சார துறை நஷ்டத்தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்று சொல்லுவார்கள். இன்று தேவை அதிகம் உள்ளது என்று சொல்லி எந்த விலைக்கும் அரசு வாங்குவதால் தமிழ்நாட்டு மின்சார துறைக்கு 1, 59,000 கோடி ரூபாய் கடன் ஆகியுள்ளது. இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16,511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது.

தனியார் நிறுவனங்களை மின் உற்பத்திக்கு அனுமதித்தது போல, மின் விநியோகத்திலும் நுழைக்க பார்க்கிறதே மத்திய அரசு?

மின் உற்பத்தி செய்வது போல மின் வி நியோகத்தை தனியாரால் செய்ய முடியாது. அதற்கான அடிப்படை கட்டுமானங்களும், பனியாளர்களும்,அனுபங்களும் அரசிடம் தான் உள்ளது. தனியாரை அனுமதித்தால், அவர்கள் அரசின் கட்டுமானத்தை தான் பயன்படுத்துவார்கள். இதில் மகக்ளுக்கு சிரமமங்கள் தான் ஏற்படும். மும்பையில் இப்படி செயல்படுத்தியதில் குழப்பங்கள்,பிரச்சினைகள் தான் ஏற்ப்பட்டது. எப்படியாவது அம்பானியும், அதானியும் லாபம் பார்த்தால் போதும் என்ற நோக்கத்தில் கொண்டு வருவதே இந்த திட்டமாகும். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள், சட்டங்கள் அனைத்தும் நியாயமற்ற வழிமுறைகளில் தனியார் வளம் பெறவும், மக்கள் வதைப்படவுமாகத் தான் உள்ளன! அதனால் தான் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன.

இப்படியே சென்றால் எதிர்காலம் என்ன ஆகும்?

இனி எதிர்காலத்தில் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நிலை வராது. அப்படிப் பயன்படுத்தத் தொடங்கினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கும்.

இன்று சுற்றுச்சூழலின் முதல் எதிரி மின்சாரமாகும்.

மின்சாரம் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுத்தால் சுற்றுச்சூழல் அனுமதிக்காது. நிலக்கரி எரிக்கா வேண்டும், சோலார் பேனல் போட வேண்டும் இப்படி கார்பன் அதிகமாகிக் கொண்டே செல்லும் அது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. சமீபத்தில் கார்பன் சேமிப்பு குறித்து சட்ட திருத்தம்  வந்துள்ளது.

மின்சாரம் என்பது தேவை, ஆனால் அது ஒழுங்குபடுத்தப் பட வேண்டும். பணம் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால், அது ஆபத்து.  மின்சார பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டால் அரசின் கடன் சுமை உயராது.

அரசு அதிகம் மின்சாரம் உற்பத்தி செய்கிறதா? தனியார் செய்கிறதா?

இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அரசுதான் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்து வந்தது. ஆனால் இன்று தனியார் முந்தி உள்ளனர். காற்றாலை மின்சாரம், சோலார் மின்சாரம் முழுக்க முழுக்க தனியார் வசம் உள்ளது.

அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், எரிக்கற்று இந்த மூன்று வகையில் அரசு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். இதில் தற்பொழுது புனல், எரி கற்று மின்சார உற்பத்தியை கூட தனியாரை அனுமதித்து உள்ளனர்.

காற்றாலை மின்சாரம் தொடர்பாக தனியாருக்கும், அரசுக்கும் உள்ள ஒப்பந்தம் என்ன?

காற்றாலை மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு அரசுக்குக் கொடுப்பது, அதை 12 மாதங்களுக்குள் மீண்டும் அரசு அவர்களுக்குக் மின்சாரத்தை கொடுத்து விட வேண்டும். இதை Banking என்று சொல்லுவோம்.

உதாரணமாகச் சாதாரண நாட்களில் காற்றாலைகள் மின்சாரத்தை அரசுக்குக் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் அதைக் கோடைக் காலத்தில் திரும்பக் கேட்கும். கோடையில் காற்றாலை இயங்காது. மின்சார தேவையும் அதிகமாக இருக்கும். அந்த நேரம் மின்சார விற்பனை விலையும் அதிகமாக இருக்கும்.

3 அல்லது 4 ரூபாய்க்கு அரசுக்குக் கொடுத்தது கோடைக் காலத்தில் அரசிடம் இருந்து கொடுத்த மின்சாரத்தை வாங்கி அதிகமான விலைக்கு 24 ரூபாய்க்குத் தனியார் நிறுவனங்கள் விற்கிறார்கள். இது ஒரு முட்டாள்தனமான திட்டம் ஆகும். இதனால் அரசுக்கு கடன் சுமை தான் அதிகமாகும்.தனியார் நிறுவனங்களை கொழுக்க வைக்க மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்! இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.

இப்படி முறையில்லாமல் மின்சாரம் வாங்குவது, தனியாருக்கு தருவது என்று இருந்தால் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும்.

நேர்காணல்; செழியன் ஜானகிராமன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time