கலவரத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அப்பாவிகள் கண்மூடித்தனமாக கைதாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் சென்னை வந்து டிஜிபி அலுவலக வாசலில் கதறி அழுததை பார்த்துக் கொண்டே காரில் சென்றார் முதல்- அமைச்சர் ஸ்டாலின். அப்பாவி இளைஞர்கள் கைதில் அரசின் நிலை என்ன?
கள்ளக்குறிச்சி, சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணச் சம்பவமும் அதைத்தொடர்ந்து பள்ளி மீதான தாக்குதல் சம்பவமும் இவற்றின் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகளும் தமிழக அரசின் காவல்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தத் தவறுகளில் இருந்து தங்களை திருத்திக்கொள்ள காவல்துறையோ தமிழக அரசோ முயற்சி எடுக்காதது தான் வேதனையிலும் வேதனை.!
வன்முறை சம்பவம் தொடர்பாக கண்மூடித்தனமானகைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.
# சம்பவம் நடைபெற்ற அன்று மாலையில் , வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பல அப்பாவி இளைஞர்கள்
# விவசாய வேலைக்கு சென்றவர்கள்,
# டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக தயார் ஆகிக் கொண்டு இருந்தவர்கள்,
# காலை, மதியம் வீட்டில் இருந்துவிட்டு மாலை நேரத்திற்கு வெளியே வந்து நடமாடியவர்கள்,
# பெட்ரோல் போடுவதற்காக டூவிலரை எடுத்து எதேச்சையாக வெளியில் வந்தவர்கள்
# மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து வாங்க வந்தவர்
# 15 வயதேயான சிறுவன்!
# கர்ப்பிணி மனைவியை ஸ்கேன் செண்டருக்கு அழைத்துச் சென்றவர்
இது போல கலவரம் குறித்த பிரஜ்ஞையே இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்தவர்கள் ஏராளமான அளவில் கண்மூடித்தனமாக கைதாகி உள்ளதாக கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவித்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தற்போது வரை சிறையில் உள்ளார்கள்.
கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது.
அப்பாவி பிள்ளைகள் சிறையில் இருப்பதால் உண்ணாமலும் உறங்காமலும் நீதிமன்றத்திற்கும் வீட்டுக்கும் சிறைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள், பெற்றோர்கள்.
சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில்,சிறையில் உள்ள அப்பாவி இளைஞர்கள் 12 பேரின் பெற்றோர்கள் நேற்று சென்னை வந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் உதவியுடன் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து முறையிட, கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை.
கோரிக்கை மனுவை அங்கிருந்த அலுவலரிடம் சமர்ப்பித்துவிட்டு வெளியில் வந்த பெற்றோர்கள், டிஜிபி அலுவலக வாசலில் திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் சு. ஜிம்ராஜ் மில்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:
” சக்தி இன்டர்நேஷனல் பள்ளி தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கைகள் மூன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் இச் சம்பவத்திற்கு தொடர்பு இல்லாத அப்பாவிகள் ஆவர். வன்முறை சம்பவத்தை தொலைக்காட்சி வாயிலாக அனைவரும் பார்த்தார்கள். அந்தப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 38 சிசிடிவி கேமராக்களில் அனைவருடைய முகங்களும் பதிவாகியுள்ளன.
இந்த பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் , சாலைகளில் சென்றவர்கள், வந்தவர்கள் என்று அனைவரையும் பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த வன்முறை பிற்பகல் 1:30க்கு முடிந்து விட்டது. அதே நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த புவியரசு என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் காலையில் தேர்வு மையத்தின் நுழைவாயிலில் இருந்ததற்கான சிசிடிவி பதிவு, தேர்வு முடித்து பிற்பகல் 2 மணியளவில் தேர்வு மையத்தை விட்டு வெளியில் வரும்போது சிசிடிவியில் பதிவான காட்சி மற்றும் அவருடைய ஹால் டிக்கெட் ஆகிய சான்றுகளுடன் டிஜிபி இடம் நேரில் முறையிட அவருடைய பெற்றோர் வந்துள்ளனர்.
இந்த இளைஞர் போல, அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள், மருந்து கடைக்கு சென்றவர்கள், விவசாயத்துக்கு விதை வாங்க சென்றவர்கள், டோல்கேட் டில் நின்று கொண்டிருந்தவர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் தற்போது ஜெயிலில் உள்ளார்கள்.
இப்படி கைதாகி சிறையில் இருக்கும் ஒரு இளைஞரின் தந்தையார் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தாயாருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்துக் கொண்டு போய் ஜெயில் போட்டுள்ளனர்.
இதை எல்லாம் எடுத்துச் சொல்ல முயற்சிக்கும் போது, அதை கேட்டு நீதி வழங்கும் நிலையில் மாவட்ட நிர்வாகமோ காவல்துறையோ இல்லை. எனவேதான் இன்று டிஜிபி அலுவலகம் வந்தோம்.
அவர் வெளியில் சென்று இருந்தார். அவருடைய அலுவலகத்தில் எங்கள் கோரிக்கை மனுவை கொடுக்கும்படி சொன்னார்கள். பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். கோரிக்கை மனுவை டிஜிபி அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்திருக்கிறோம்.
தமிழக முதல்வரின் கவனத்திற்கு இன்னொரு விஷயத்தையும் கொண்டு வர விரும்புகிறோம்.
போலிசார் கைது நடவடிக்கை எடுத்த போது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்களையை குறி வைத்து எடுத்துள்ளனர். ஆதிதிராவிடர், குறும்பர் , வன்னியர் போன்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் என்றால் போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர். பிடிக்கும் போது முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் சிக்கியுள்ளார். அவரை விடுவித்து அனுப்பி உள்ளார்கள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் க்கு படித்துக் கொண்டிருப்பவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் கைதானவர்களில் இருக்கிறார்கள்.
சாதியின் அடிப்படையில் கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது யார்? என்று முதலமைச்சர் விசாரிக்க வேண்டும்.
நிலமற்ற ஏழை எளிய பாட்டாளி மக்களை தாக்குவதற்கு பீகாரில் பெரும் பண்ணையார்கள் தங்களுக்கு என்றுஒரு குண்டர்படையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது போன்ற நிலைமை இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் எடப்பாடியின் நெருங்கிய நண்பரும், தீரன் சின்னமலை பேரவை தளபதியுமான ராஜசேகர் என்பவர் தலைமையில் அத்தகைய படை செயல்படுகிறது. பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக, தாழ்த்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படும் அவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து முளையிலேயே அதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏராளமான பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் அங்கு திரண்டு பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் பேட்டி எடுத்தனர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். நண்பகல் நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள இராதாகிருஷ்ணன் சாலையில் சுமார் 15 அடி இடைவெளி தூரத்தில் இவர்களை பார்த்தபடி கடந்ததை நாம் பார்த்தோம்.
சுமதி : நான் காட்டு வேலைக்குச் செல்கிறேன். என் கணவர் கல் சுமக்கும் கூலி தொழிலாளி. எங்கள் மகன் சிவாவை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். பிஎஸ்சி முடித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றான். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியுள்ளான்.
விரைவில் எனக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு விடிவு காலம் வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருப்பான். இந்த சம்பவத்துக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
பிரச்சனை நடந்த இடத்துக்கு ஏழு கிலோமீட்டர் தொலைவில் பெரியஏரி என்ற இடத்தில் வைத்து அவனை பிடித்துச் சென்று விட்டனர். யாருக்காக இத்தனை காலமும் நாங்கள் உழைத்து பாடுபட்டமோ, அவனுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.(கதறி அழுதது கொண்டிருந்தார்)
சின்னப்பிள்ளை( வயது 47);
நானும் என் கணவரும் கூலித் தொழிலாளிகள். எங்களுடைய ஒரே மகன் பிரகாஷ் (22). ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறான்.
இந்த பிரச்சனைக்கும் அவனுக்கும் தொடர்பே கிடையாது. வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவனை டோல்கேட்டில் மடக்கிப் பிடித்து, அவன் வைத்திருந்த செல்போனை வாங்கி உடைத்துப் போட்டு விட்டு கைது செய்துள்ளனர்.
ராணி(வயது42); நானும் என் கணவர் பிச்சையும் கூலித் தொழிலாளிகள். எங்கள் மகன் நவீன் குமார் (21) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான்.
40 ஆயிரத்துக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கி தவணை முறையில் அடைத்துக் கொண்டிருந்தான். இந்த மாதம் கடைசி தவணை. டோல்கேட்டில் நின்றிருந்தபோது அவன் செல்போனை போலீசார் பிடுங்கி உள்ளனர். நான் என்ன தப்பு செய்தேன்? எதற்காக செல்போனை பிடுங்கினீர்கள் என்று கேட்ட குற்றத்துக்காக, அவனை அடித்து ஜெயிலில் அடைத்துவிட்டனர்.
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கும், அவனுக்கும் தொடர்பு கிடையாது. மோட்டார் சைக்கிளில் அவனுடன் இருந்த அகில் ராஜ் என்ற பட்டதாரி இளைஞரையும் சேர்த்து கைது செய்து விட்டனர். இருவருமே அப்பாவிகள் என்று கண்ணீர் சிந்தினார்.
கவிதா (வயது 35); என் கணவர் மணிகண்டன் (38) சின்னசேலம் அருகே ரோட்டில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்கிறார். நான் கூலித் தொழிலாளி. நேரம் கிடைக்கும் போது நானும் சென்று அவருக்கு உதவி செய்வேன். இவ்வளவு பேரை பிடித்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ அப்பாவியான என் கணவரையும் பிடித்து சென்று விட்டார்கள். ரொம்ப அநியாயம் இது. என்றார், வேதனையுடன்.!
பிற்பகலில் இவர்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது, சுமார் 10 அடி இடைவெளியில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வாகனம் இவர்களை கடந்து சென்றது. கோட்டையில் இருந்து புறப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.கார் கண்ணாடி வழியாக இவர்களை பார்த்துக் கொண்டே சென்றார். பெண்கள் பலர் கதறி அழுது கொண்டிருக்க, மீடியாக்கள் அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்க…என்ன தான் நடந்துள்ளது? என காரை நிறுத்தி அவர் விசாரிக்கவில்லை. தன் ஆட்சியின் கீழ் வாழும் இந்த மக்களுக்கு என்ன பிரச்சினை? டி.ஜி.பி அலுவலக வாயிலில் இவ்வளவு பேர் கூடி கதறுகின்றனரே என அவர் சிந்தித்தாரா என்றும் தெரியவில்லை.
Also read
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆட்சியாளர் ஏழைகளின் துயர் துடைப்பவராக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உருவானது தந்தை பெரியாரின் திராவிட இயக்கம். அதன் வழியில் வந்த திமுக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையாளும் விதம் வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.!
“அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை” (குறள் 555)
பொருள்:
மன்னன் நீதியாக அரசு செலுத்தாமையால் வருத்தம் தாங்காத குடிகளின் கண்ணீரே அவனது ஆட்சியை அழிக்கும் படை.
கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை
கள்ளகுறிச்சி சம்பவத்தில் அரசின் தொடர் கள்ள மொளனம் தான் இந்த நிலைக்கு காரணம்.
இனியாவது அரசு செயல்படுமா???