சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஊராட்சித் தலைவர்கள்!

-செழியன் ஜானகிராமன்

சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் இன்னும் ஊராட்சிகளில் ஓங்கி நிற்கும் சாதி ஆதிக்க மனோபாவத்தை தகர்க்க முடியவில்லை. தலித்துகள் ஒப்புக்கு தான் தலைவர்கள்! ஆனால், உரிமை மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களாக எப்படியெல்லாம் நடத்தப்படுகின்றனர்..! திராவிட மாடல் ஆட்சியில் தீண்டாமை தொடர்வதா..?

சமூக நீதி, மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்று ஓயாமல் பேசிக் கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில்தான் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான பழங்குடி, தலித்  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஏற்படும் புறக்கணிப்பு, அநீதிகள் தொடர்கதையாக உள்ளது.

ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு, தலைவர் பெயர் பலகை அகற்றம், நாற்காலியில் அமர முடியாத  நிலை, அலுவலகத்தில் அனைவருடன் ஒன்றாக அமர அனுமதி இல்லாமல் தனியாக அமரும் நிலை, அலுவலக சாவி தலைவருக்குக் கிடைக்காமல் செய்வது, தாக்குதல், மிரட்டப்படும் பல ஊராட்சி தலைவர்கள் இப்படிப் பல கொடுமைகள் இன்னும், இன்றும் பெரும்பாலான ஊராட்சிகளில் பட்டியல் இன தலைவர்களுக்கு நடைபெற்று வருகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து அவமதித்த சம்பவம் நடந்தது. தரையில் அமர்ந்த புகைப்படம் பரவலாக வெளியே வந்து அதற்குக் காரணமான ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை நான் சங்கடங்களையே சந்தித்து வருகிறேன். ஊராட்சி தலைவர் ‌என்ற அடிப்படையில் தேசியக் கொடி ஏற்ற சென்றபோது, என்னைக் கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை.

சிந்துஜா கைது ஒன்றும் இந்த ஆதிக்க உணர்வாளர்களை ஒன்றும் செய்யவில்லை என்பதை இன்றும் பட்டியல் இன ஊராட்சி தலைவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து அப்படி நடைபெறும் ஊராட்சிகள் எவை எவை என்று துல்லியமாகக் கணக்கெடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாகும்.

இந்த அமைப்பின் தலைவர், த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், துணை பொதுச் செயலாளர்கள் மகேந்திரன், சுவாமிநாதன், பொருளாளர் மோகனா மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி  ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  வெளியிட்டு பேசினர்.  தமிழகத்தில் உள்ள 1,200 க்கு மேல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஊராட்சிகளில் 386 ஊராட்சிகளில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 400 தன்னார்வலர்கள் கொண்டு கள ஆய்வு மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான – கசப்பான உண்மைகள் – தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

தேசிய கொடி  ஏற்ற அனுமதி மறுப்பு 

இந்த ஆய்வில் 20 ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்ற ஊராட்சி தலைவரை அனுமதிக்காமல் தடுக்கின்றனர். குறிப்பாகத் திண்டுக்கல், கோவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை  மாவட்டங்களில் இந்த நிலை அதிகமாக உள்ளது.

75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அனைவரும் தங்கள் சமூக வலைத்தளத்தில் தேசிய கொடியை Profile படமாக வைக்க வேண்டும் என்று சொன்னார்கள் ஆட்சியாளர்கள்! ஆனால், சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆனாலும் பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவருக்கு தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பத்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் போட்டோ; வினவு

நாட்டை ஆளும் தலைவர்களுக்கு ஊராட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?  தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் உள்ளார்களா? என்ற  சந்தேகம் வருகிறது.

தேசிய கொடி ஏற்ற அனுமதிக்க மறுப்பதற்கு பின்னணியில் முன்னாள் தலைவர், தற்போதைய துணைத் தலைவர், அரசு அதிகாரிகள் காரணமாக உள்ளனர். அப்படியும் கடந்த முறை செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்  நரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால், அந்த நிகழ்வில் யாரும் கலந்து கொள்ளாமல் அவரை புறக்கணிப்பு செய்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுதா வரதராஜி. அந்த மாவட்டத்தின் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீண்டாமை காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்றக் கூடாது என்று தடுப்பதாகக் கடிதத்தில் குறிப்பிட்டு 75வது சுதந்திர தினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பளித்து தக்க பாதுகாப்பு வழங்கிய பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் முடித்து உள்ளார். ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கு இயல்பாக உள்ள உரிமையை கூட  கேட்கும் நிலைதான் உள்ளது.

தமிழக அரசு உடனடியாக எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத்தில் மட்டும் இல்லாமல் ஆய்வு செய்து உள்ள 20 ஊராட்சி மன்றங்களிலும் அந்த தலைவரைக் கொடி ஏற்ற அவர்களுக்குப் பாதுகாப்பும் எதிர்பவர்களின் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதுதான் உண்மையான 75வது சுதந்திர தினமாகும்.

பெயர் பலகை அகற்றம்

ஆய்வில் 42 ஊராட்சி மன்றத்தில் தலைவர் பெயர்ப் பலகை நீக்கி உள்ளனர். பதவி ஒன்றே உனக்கு போதும் எதற்குப் பெயர்ப் பலகை என்ற ரீதியில் இவர்களை நடத்துவதாகத் தமிழ்நாடு தீண்டாமை முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளர் சாமுவேல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம்‌ ஊராட்சி மன்றத்‌ தலைவராக சரிதா உள்ளார். தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் அலுவலக பலகைகளில் தனது பெயரை எழுதவிடாமல் தடுப்பதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளார்.

ஒரு ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் தாங்கிய பெயர்ப் பலகை கூட அனுமதிக்க மாட்டோம் என்று செயல்படும் இத்தகைய மனிதர்கள்தான் மக்களுக்கு நன்மை செய்யப் புறப்பட்டவர்கள். இதில் முன்னாள் தலைவர் முதல் வட்டாட்சியர் வரை அடக்கமாகும்

நாற்காலியில் அமர முடியாத நிலை 

22 ஊராட்சிகளில் அதன் தலைவர்கள், தங்களுக்கான நாற்காலியில் அமர அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் அதிகமாக இந்த செயல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகிறது. அழகுசேனை, பாளைய ஏகாம்பர நல்லூர், கோவூர், சதுப்பேரிபாளையம், அய்யம்பாளையம்,நமண்டி ஊராட்சிகளில் தலைவர்களை அவர்களின் நாற்காலியில் அமர விடுவதில்லை.

இதற்கு அடுத்ததாக மதுரை, ராமநாதபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர், புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்டங்களில் இன்றும் உள்ளது.

அலுவலகத்தில் அமர அனுமதி இல்லாமல் தனித்து அமர வைக்கப்படுத்தல்!

33 ஊராட்சிகளில் அதன் தலைவர்கள் அலுவலகத்தில் அமர விடாமல் தனியாக அமர வைக்கப்படும் கொடுமை நடைபெறுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் தீண்டாமையின் உச்சமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

விருதுநகர், திருவாரூர், கோவை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மிக அதிகமாகவும், சிவகங்கை, சேலம், திண்டுக்கல், கடலூர், திருவண்ணாமலை உள்ள ஊராட்சியில் ஒரு சில இடங்களிலும் இந்த நிலை உள்ளது.

அலுவலக சாவி தலைவருக்குக் கிடைக்காமல் செய்யும் நிலையும் தமிழக ஊராட்சியில் உண்டு. 14 ஊராட்சியில் சாவியைத் தலைவருக்குக் கொடுப்பதில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமிஞ்சிக்கரை, கொத்தமங்கலம், மைலை, நரப்பாக்கம் ஊராட்சியிலும், விழுப்புரம் மாவட்டத்தில் சிறுநாம்பூண்டி,  அவ்வையார் குப்பம், பெரமண்டூர், வெங்காந்தூர், வாடா குச்சி பாளையம் ஊராட்சியில் இந்த நிலை உள்ளது.

மன்றத்தின் தலைவருக்கு அதன் சாவியைக் கொடுக்காமல் செய்யும் இந்த ஆதிக்க சக்திகளை அரசு வேடிக்கை பார்த்தது கொண்டு உள்ளது.

இவை தவிர இவர்களின் ஆய்வில் தலைவருக்கு ஆவணம்/வரைபடம் ஒப்படைக்காத ஊராட்சிகள், துணைத் தலைவர் கையெழுத்துப் போட ஒத்துழைக்க மறுக்கும் ஊராட்சிகள், ஊராட்சி தலைவர்களைத் தாக்குதல், மிரட்டுதல், தலைவர் மீது தீண்டாமை எதிர்கொள்ளும் ஊராட்சிகள், பெண் தலைவர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஊராட்சிகள்,தலைவரால் நிர்வாகம் செய்ய முடியாத ஊராட்சிகள் என்று நிறைய ஏமாற்றங்களும், தீண்டாமையும் நடந்து கொண்டு இருப்பது தெரிய வருகிறது.

உடனடியாக இந்த பிரச்சினைகள் செய்பவர்கள் முன்னாள் தலைவர், தற்போதைய துணைத் தலைவர், அந்த பகுதி அரசு அதிகாரிகள் தான் முக்கிய காரணமாக உள்ளனர்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு வரும் 75 வது சுதந்திர தினத்தில் இவர்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல்  கொடி ஏற்றும் வகையில் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

பெயர்ப் பலகை வைப்பது முதல், நாற்காலியில் அமர்வது  வரை இந்த பிரச்சினையில் நுணுக்கமாக தலையிட்டு இந்த  சமூக மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்.

தீண்டாமை என்பது பாடத்தில் படித்துதாதாகவே இருக்க வேண்டும். நிஜத்தில் அனுமதிப்பது இன்னும் இருப்பது முற்றிலும் கலையை வேண்டும்.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டினை உள்ளாட்சியில் உள்ள அனைத்து நிலை பதவிகளுக்கும் உறுதி செய்திட வேண்டும்.

மூச்சுக்கு மூச்சு திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தன் ஆட்சி காலத்தில் இந்த அநீதிகளை முடிவுக்கு கொண்டுவர பரந்துபட்ட செயல் திட்டங்களை வகுத்திட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

செழியன் ஜானகிராமன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time