2 ஜி பேசு பொருளானதும்! 5 ஜி பேசப்படாதிருப்பதுவும்!

-த.செல்வராஜ்

2 ஜியில் நடந்தது என்ன? 5 ஜியில் நடக்காமல் போனது என்ன? 2 ஜியைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த 5 ஜி மிகக் குறைவான விலைக்கே ஏலம் போயுள்ளது. 2 ஜியில் 1,76,000 கோடி நஷ்டம் என்பது உண்மையா?  5 ஜியின் மொத்த ஏலத் தொகை 1,53,173 கோடி  என்றால், 5 ஜி ஏலத்தில் எத்தனை லட்சம் கோடி இழப்பு?

72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டது.  ஆகவே ஐந்து லட்சம் கோடிக்கு மேல் ஏலம் போகலாம் என நம்பப்பட்டது. ஆனால், ஏலம் போனதோ ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே!  இது தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதனால் தான் இந்திய அளவில் டிவிட்டரில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக  இதுவரை தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், இந்த ஏலத்தில் கலந்து கொண்டு அலைக்கற்றையைப் அள்ளிச் சென்றுவிட்டது. பாஜக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகப் பார்க்கப்படும் அதானி நிறுவனம் மிக குறைந்த விலைக்கு இந்த ஏலத்தில் 5ஜியை எடுப்பதற்கான சதி இதில் ஏதேனும் நடந்துள்ளதா…?  என்பது அனைத்து தரப்பிலுமான சந்தேகமாக உள்ளது.

ஏனென்றால்,‘5ஜி அலைக்கற்றை ஏலம், முதல் நாளிலேயே ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியைத் தொட்டது. ஆனால், அடுத்த ஆறு நாள்களில் கூடுதலாக 5 ஆயிரத்து 173 கோடி ரூபாய் அளவுக்கே ஏலத்தொகை உயர முடிந்திருக்கிறது. இதன் ரகசிய பின்னணி என்ன? திரைமறைவில் நடந்த தில்லு முல்லுகள் என்ன..? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆகவே, அலைக்கற்றை ஏலத்தில் மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டை அலட்சியப்படுத்த முடியவில்லை.

2008 அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு என்ற இந்திய தணிக்கை துறை அறிக்கை ஏற்படுத்திய பரபரப்பை, அரசியல் தாக்கத்தை வேறு ஏதாவது ஒரு செய்தி ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே.

அதை பற்றிய அரசியல் பேச்சுகள் இன்று வரை தொடர்கிற நிலையில், 5ஜி ஒதுகீட்டிலும் அதை விட மிக பெரிய ஊழல் நடந்ததாக பேசப்படுகிறது குறித்து இங்கு விவாதிப்போம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பா?

இந்தியாவில் அலைபேசி சேலையை தனியார் மூலம் நடைமுறைப்படுத்த 1994 முடிவு எடுக்கப்பட்டது.  தகவல் தொடர்புத் துறையில் எதிர் பார்த்த வளர்ச்சி இல்லை என்று, அரசு 1999ல் ஒரு புதிய கொள்கையை கொண்டுவந்தது. நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் தொலை தொடர்பின் முக்கியத்துவம் கருதி, குடிமக்கள் அனைவருக்கும் அவ் வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்குவதே அதன் அடிப்படை  நோக்கமாக அறிவித்தது.  Level playing field நெறியை  கடைபிடிக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனையாகும்.

இந்நிலையில், 2003 ஆண்டில் ஒழுங்கு முறை ஆணையம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில், சாதாரண கம்பி வழி தொலை பேசி மற்றும் அலைபேசி சேவை வழங்க ஒரே உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டது.  அதேபோல முதலில் வருவோருக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில் உரிமமும் அலைக்கற்றையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் படி 2004ல் இருந்து மார்ச் 2006 வரை 51 ஒன்றுபட்ட உரிமங்கள் வழங்கப்பட்டன.

மார்ச் 2006க்கு பிறகு  உரிமங்கள் ஏதும் வழங்காததாலும், புதிய மனுக்கள் பெற்ற வகையிலும் ஏராளமான மனுக்கள் நிலுவையில் இருந்தன.  2008ல் ஒரே நேரத்தில் 120 உரிமங்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து மிக குறைந்த விலையில் அலைக்கற்றைகளை கொடுத்து விட்டதாகவும்,  உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல முறை கேடுகள் நடந்ததாகவும் ஊடகங்களும் மற்ற சிலரும் சந்தேகங்களை எழுப்பினார்கள்.

இந்திய தணிக்கை துறை ஆய்வு செய்து அதன் அறிக்கையை 2010ம் ஆண்டு சமர்பித்தது.  அவ்வறிக்கையில், மிக முக்கியமானது அலைக்கற்றைகளை சந்தை மதிப்பில் விற்காததால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பதாகும்.  மற்ற இரண்டு முக்கிய குறைபாடுகளில் ஒன்று 13 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது. மற்றொன்று முதலில் வந்தோர்க்கு முதல் உரிமை என்ற நெறியை கடைபிடிக்காமல் சிலருக்கு மட்டும் சாதகமாக முன்னுரிமை அளித்தது.

தணிக்கைபடி, அரசு தொலை தொடர்பு துறையில் ஏற்பட்டிருந்த  வளர்ச்சியையும்,  அரிதான அலைக்கற்றைகளின் பொருளாதார மதிப்பையும் கருத்தில் கொண்டு 2ஜிஅலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டிருக்க வேண்டும்.  அப்படி செய்யாததால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு விட்டது.

அதே சமயம், இந்த இழப்பை கணக்கிட தணிக்கை கையாண்ட மூன்று அளவீடுகளும் சரியானவை அல்ல என்பது வேறு விஷயம்.  அதை விளக்குவது இக்கட்டுரையின் அளவை கூட்டிவிடும் எனபதைத்தவிர அது இங்கே தேவையுமில்லை. மிக முக்கியமான கேள்வி அவற்றை ஏலம் விடத்தான் வேண்டுமா என்பது தான்.

முதலாவதாக, தேர்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில், இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இல்லாதவரை, தலையிட தணிக்கைக்கோ, நீதிமன்றங்களுக்கோ உரிமையில்லை.  அவ்வாறு இல்லையானால்,  அரசின் பல மக்கள் நலத் திட்டங்கள்  கேள்விக்குள்ளாகும்.

அடுத்து ஒழுங்கு ஆணையம் அதன் 2007 பரிந்துரைகளில் கூட 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடவோ, நுழைவு கட்டணத்தை அதிகரிக்கவோ உடன்படவில்லை. அதே நேரத்தில் ஒழுங்கு முறை ஆணையம் 2ஜி தவிர்த்து அனைத்து அலைக்கற்றைகளையும் ஏலம் விட பரிந்துரை செய்திருந்தது. உரிமங்களையும் அலைக்கற்றைகளையும் அதிக விலைக்கு கொடுத்தால் எவ்வாறு அந்நிறுவனங்கள்  அடிப்படை சேவைகளை அரசின் 1999 மற்றும்   2003 கொள்கைப்படி மிக குறைந்த வழங்க முடியும். இந்நிலையில் அலைக்கற்றைகளை ஏலம் விட்டிருக்க வேண்டும் என்ற தணிக்கையின் நிலைப்பாடு சரியானதாக இருக்கமுடியாது.  விளைவாக, அதனடிப்படையில் அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்பது தெளிவு. இப்படி சொல்வதால் ஊழலே நடக்கவில்லை என்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது :

உரிமம் வழங்கும் நெறிமுறைகளின் படி,  ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களின் உரிம நிறுவனங்களில் 10 சதவிகிதத்திற்கு மேல் பங்கு வைத்திருக்ககூடாது.  விளைவாக புதுப் புது நிறுவனங்கள் மட்டுமே ஒவ்வொரு வட்டத்திலும் உரிமம் பெற முடியும்.  இதன் நோக்கமே ஏகபோகத்தை தவிர்த்தலாகும். ஒழுங்கு முறை ஆணையத்தின் வட்டத்திற்கான உரிமங்கள் எண்ணிக்கையில் கட்டுபாடு கூடாது என்ற பரிந்துரையும், தகுதியிருப்பின் வருவோர்க்கெல்லாம் உரிமம் என்ற அரசின் அணுகுமுறையும், ஒவ்வொரு வட்டத்திலும் அதிக அளவில் உரிமங்களை வழங்கி ஒரு போட்டி நிலையை உருவாக்கி சேவை கட்டணத்திலும் சேவைத் தரத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதே ஆகும். ஆக, இந்த நோக்கத்தில் பழுதில்லை.

தணிக்கையில் குறிப்பிட்ட 13 நிறுவனங்களும், புதிய  நிறுவனங்கள். அவை மனுசெய்த நாளில், நெறிமுறையின் படி குறைந்த பட்ச  பங்கு மூலதனத்தை  கொண்டிருக்கவில்லை என்பதும் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைதொடர்பு உரிம ஒப்பந்தத்தை அந்நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) இல்லை என்பதுமேயாகும். அந்நிறுவனங்கள் இது பற்றி தவறான தகவல் அளித்ததையும், அதன் பின் நாட்களில்தான் அந்நிறுவனங்கள் அதை சரி செய்ததையும் தணிக்கை நிறுவியிருந்தது. ஆக, இவையாவும் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதிபடுத்தி உள்ளன! ஆனால், சொல்லப்பட்ட நஷ்டக் கணக்கு மிகவும் மிகையானது தான்!

தணிக்கை அறிக்கையை தொடர்ந்து,  உச்ச நீதிமன்றம் இவ்வுரிமங்களை ரத்து செய்தது.

இச்செயல்கள் விதிகளின்படி சரியானது தான் என வாதிட முடியும்.  ஆனால், விளைவு என்னவென்றால், ஆரம்ப நிலையிலேயே அலைபேசி சேவையில் நிறைய நிறுவனங்களை புகுத்தி ஒரு நியாயமான போட்டியை உருவாக்க நினைத்த காரியம் ஈடேறவில்லை. இப்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் எதிர் பார்த்த போட்டியும், விலையும் கிடைக்காமல் போனதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எப்படி தவிர்க்க முடியம்?

தணிக்கை அறிக்கைக்கையில் சிலருக்கு முன்னுரிமை வழங்கியது பற்றி இதில் பேசுவது சரியாக இருக்காது. ஏனெனில், அதன் பலனை சிலர் பெற்றனர் என்ற வழக்கில் அனைவரும் விடுதலை பெற்ற நிலையில், நாம் பேசித் தான் என்ன?

முன்புள்ள தகவல்கள் அடிப்படையில், 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டையும், 5ஜி அலைக் கற்றையின் ஏலமுறை ஒதுக்கீட்டையும் ஒரே பார்வையில் அணுக முடியாது.  2ஜி சேவை ( mainly voice and data) அடிப்படை தொலைத் தொடர்பு வசதிக்காக. அதை குறைந்த விலையில் அனைவரும் கிராமங்களில் உள்ளவர்கள் உட்பட பெறவேண்டும் என்பது அரசின் கொள்கை. 3ஜி, 4ஜி,  5 ஜி என்பதெல்லாம், ஒன்றை விட ஒன்று என மேம்படுத்தப்பட்ட சிறப்பு சேவை. ஆகவே, இவற்றை யெல்லாம் சந்தை மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என 2007 லேயே ஏற்று நடைமுறையில் உள்ள திட்டம்.

பொது வெளியில் உள்ள தரவுகளின் படி,  அரசு 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகபடுத்த  அதற்கான அலைக்கற்றைகளை (72.098 GHz) ஜூலை 26  முதல் 7 நாட்களுக்கு ஏலத்தில் விட்டிருந்தது.   எதிர்பார்க்கப்பட்ட வருவாய் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்.  ஆனால் ஏலம் போனது வெறும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி மட்டும். அரசு எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நடக்கவில்லை .

ஒன்று ஏலத்தில் விட்ட அனைத்து அலைக்கற்றைகளும் ஏலம் போகவில்லை.

இரண்டாவதாக எதிர்பார்த்த தொகையை விட சில வட்டங்களுக்கு அதிகம் கிடைத்திருந்தாலும் மற்ற சில வட்டங்களுக்கு குறைந்த தொகைக்கே ஏலம் போயிருப்பதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக சில விஷயங்களை கருத்தில் கொள்வது   வேண்டும். ஏலத்திற்கு வந்த பெருங்கற்றை தொகுப்புகள் 600 MHz,  700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2500 MHz,  3300 MHz,  26 GHz. ஆகிய 22 வட்டங்களுக்கான ஏலம்!

அலைக்கற்றைகளின் பொருளாதார மதிப்பு அவ்வட்டத்திற்குள் உள்ள மக்களின் வாழ்க்கைதரம், தேவை, எதிர்பார்ப்பு என்ற பல காரணிகளைச் சார்ந்தது.

மதிப்பீட்டிற்கும் ஏலத்தொகைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசமும்,  2ஜியிலிருந்து கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு நடந்த ஏலத்தில், அதைவிட மிக அதிக பயன் திறன் கொண்ட 5ஜிக்கு, அதைவிட மிக அதிக அளவிலான அலைக் கற்றைகளுக்கு (51,098 மெகா ஹெர்ட்ஸ்க்கு) வெறும் 1லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி என்பது மிகப்பெரிய சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

ஒரு சுதந்திரமான திறமையான தணிக்கையால் மட்டுமே உண்மையை  தெளிவாக சொல்ல முடியும்.

இன்றைய நிலையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

கட்டுரையாளர் ; த.செல்வராஜ்

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை (ஓய்வு)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time