மனித நேயத்திற்கு மகுடம் சூட்டும் படம்!

-காயத்ரி மஹதி

அபாயகரமான இருண்ட குகைக்குள் மாட்டிக் கொண்ட 13 மாணவர்களை உயிருடன் மீட்கப் போராடும் மீட்பு வீரர்கள் சந்திக்கும் சவால்களை ரத்தமும், சதையுமாக காட்சிபடுத்தி உள்ளனர்!  நிஜ சம்பவத்தின் அடிப்படையில் டைரக்டர் ரான் ஹ்வார்டு நமக்கு ஒரு சிறந்த மனித நேய போராட்டத்தை காண்பித்து உள்ளார்.

ஆரம்பம் முதல் மொத்த படத்தின் நேரமான 147 நிமிடங்கள் வரை நம்மை எங்கேயும் அசையாது, நகராமல் பதைபதைப்புடன் இருக்க வைக்கும் படமாக உள்ளது. அமேசான் பிரைம் ஒடிடி யில் Thirteen lives என்ற படம் வெளியிடப்பட்டு உள்ளது.

2018ம் ஆண்டு தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகையில் கால் பந்தாட்ட குழுவினர் பதின்மூன்று பேர் சிக்கி, பதினெட்டு நாட்களுக்கு பின்பு மீட்கப் பட்டனர். அவர்களை மீட்க பதினேழு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் அரும்பாடுபட்டனர்  என்பதெல்லாம் செய்திகள் வழி நாம் அறிந்தது.  அந்தச் சம்பவத்தை தான் நமக்கு முழு நீளப்படமாக கொடுத்து இருக்கிறார் டைரக்டர் ரான் ஹாவார்டு!

பயிற்சியாளர் புத்த மதத்தின் மீதும்,  மீட்பவர்கள் அறிவியலின் மீதும் முழு நம்பிக்கை வைத்து மகத்தான, கற்பனை செய்ய முடியாத வெற்றியை சாதிக்கிறார்கள்.

குகையின் நுழைவு வாயிலில் புத்தர் நீள் துயிலில் ஆழ்ந்து இருப்பதை காண்பித்து இருப்பார்கள். அவரை வணங்கி விட்டுத் தான் விளையாட்டு குழுவினர் குகைக்குள் செல்வார்கள்.

அதன் பின் அவர்கள் யாரும் வீட்டுக்கு வரவில்லை என்று பெற்றோர்கள் தேடும் போது தான் புத்தர் நீள் துயிலில் இருப்பதை நமக்கு விஷுவலாக ஒரு மேஜிக் திரில்லோடு காண்பிக்கிறார்கள். அந்த சலனமற்ற நிலையில் இருக்கும் புத்தரை பார்க்கும் போது மனம் கொந்தளித்து அடங்குவதை நம்மால் நிறுத்த முடியாது.

குகை என்றதும் அது ஒரு வட்டமாக, நீளமாக இருக்கும் என்று நம்பி இருப்போம். ஆனால் வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பாறைகள் ஊசி போன்று கூர்மையாக மாறி தொங்கிக் கொண்டு இருக்கும். அதில் சாதாரணமாக இடித்துக் கொண்டாலே போதும்  நமக்கு ரத்தம் வந்து விடும்! அப்படிப்பட்ட குகைக்குள் மாட்டிக் கொண்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் மீட்பு பணியில் இருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் அசாதாரணமானது.

மீட்பவர்கள் யாரும் வராத நாட்களில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் அந்த மாணவர்களை மனதளவில் தைரியமாக இருக்கத் தயார்ப் படுத்துவார். பத்து நாட்கள் வரை மாணவர்கள் யாரும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது, மனமும், உடலும் சோர்வடையாமல் எப்படி இருக்க முடியும் என்பதற்கு பதிலாக விளையாட்டு வித்தை உள்ளது விளையாட்டெனும் மாயம் தன் வித்தையை நிகழ்த்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மனக் கட்டுப்பாடுடன், உடலின் எனர்ஜியை எப்படி எல்லாம்  பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தெளிவாக சிந்தித்து பத்து நாட்கள் வரை ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர்.

வீரர்கள் ஒரு பக்கம் தங்களைப் பார்த்துக் கொண்டாலும், இயற்கை அதன் பங்குக்கு தன் வீரியத்தை காண்பித்துக் கொண்டிருந்தது. மழை, புயலால் குகைக்குள் தண்ணீர் அதிகமாவதும், அதனால் யாரும் வேலை செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும் அவலமும் நடக்கும்.

இந்தச் சம்பவங்களின் போது, இதனைப் பொறுப்பேற்று நடத்தியவர் தாய்லாந்து நாட்டின் கவர்னராவார். குகையின் இடுக்குகளில் டைர்வ் அடிக்கும் நீச்சல் வீரர் இருவரை பிரிட்டிஷ் அரசாங்கம் அனுப்பி இருந்தது. அவர்கள் தான் குகையின் வடிவமைப்பு முழுவதையும் பார்த்து, என்ன மாதிரி உபகரணங்கள் கொண்டு போக முடியும் என்று கவர்னருக்கு விவரித்தார்கள்.

கடலில் நேரடியாக நீந்துபவர்களுக்கும், குகையின் இடுக்குகளில் நீந்துபவர்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இடுக்குகள் நிறைந்த குகை, கூர்மையாகத் தொங்கும் கம்பிகள் போல் இருக்கும் பாறைகள்..இவற்றை மீறிப் போவது எப்படி என்றும், கற்கள் எங்கு எப்படி தடம் மாறி உடைந்து விழும் என்பதையும், இதில் அவர்கள் கொண்டு செல்லும் ஆக்சிஜன் சிலிண்டர் இந்த இடர்பாடுகளால் தீர்ந்து போவதை எல்லாம் கணிக்க முடியாது. ஆனால் எந்தச் சூழல்லிலும் எப்படி எல்லாம் நீந்தி வெளியே வர முடியும் என்பதை இந்த நீச்சல் வீரர்கள் தெரிந்து வைத்து இருந்தனர்.

அப்படிப்பட்ட சாகச குகை நீச்சல் டைவர்களை இந்தப் படத்தில் நாம் பார்க்க முடியும். அவர்களின் மனநிலை என்றுமே இயற்கையோடு மோதி இயற்கையை வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் இயற்கையோடு மொத்தமாக கலந்து விட வேண்டும். இந்த மனநிலை எல்லாம் அவருக்கு மட்டுமில்லாது அவர்களது குடும்ப  உறுப்பினர்களுக்கும் வேண்டும் என்பதை படத்தில் சொல்லி இருப்பார்கள்.

தேடிப் போகிறவர்கள் உயிருடன் கிடைப்பர்களா அல்லது பிணமாக கிடைப்பார்களா என எதுவும் தெரியாமல், அம்மாதிரி பெரிய குகைக்குள், அதுவும் வெள்ளக்காடாக இருக்கும் இடத்தில் நீந்தி, ஒவ்வொரு இடத்தையும் அடையாளம் வைத்து கண்டுபிடிக்க வேண்டும். அப்படி  நீச்சல் வீரர்களும் நீந்தி, ஒரு வழியாக அந்தக் கால்பந்தாட்ட குழுவினரை கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், அவர்களையும் இது போல் குகைக்குள் நீந்தி வெளியே கொண்டு வருவது என்பது சாத்தியமற்றதாக இருக்கும் என்பது அவர்களுக்கு முகத்தில் அறையும் உண்மையாக உறைக்கும்.

இதற்கிடையில் அந்த ஊரின் விவசாயிகள் மேலும் தண்ணீர் குகைக்குள் செல்லாமல் இருக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் வெளியேற்றும் அத்தனை நீரும், அவர்கள் பயிரிட்ட நிலத்தில் சென்று பயிர்களை சேதப் படுத்தி விடும். நிஜத்தில் இந்தச் சம்பவத்தில் தாய்லாந்து அரசாங்கம் அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி இருக்கிறது.

விவசாயிகள் செய்வது போல் நீரை வெளியேற்ற குகையின் நுழைவாயிலில் மெஷின் வைத்து வெளியேற்றுவார்கள். ஆனால் எப்படி நீரை வெளியேற்றினாலும், மாணவர்களை கொண்டு வருவது சிரமம் என்று நீச்சல் வீரர்கள் கவர்னருக்கு சொன்னதும், அவர் என்ன செய்வது என்று புரியாமல் பெற்றோருக்கும், மக்களுக்கும் என்ன பதில் சொல்வது என்றும் தெரியாமல் முழு பொறுப்புடன் இருக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இருந்தார்.

இதற்கிடையில் நீச்சல் வீரர்கள் தங்களுக்கு தெரிந்த மயக்கவியல் மருத்துவரை அழைத்து உதவி கேட்டனர். அதாவது, நீரில் அவர்களை உயிருடன் அழைத்து வர முடியாது எனவும், அதற்கு பதிலாக அனெஸ்தீசியா கொடுத்து மயக்க நிலையில் கூட்டி வருவோம் என்று கூறுகின்றனர். ஆனால் மருத்துவரோ இது எல்லாம் தியரி ரீதியாக படித்து இருக்கிறேன், ஆனால் யாருக்கும் செயல்படுத்தியதில்லை என்று சொல்கிறார்.

ஏனென்றால், அனேஸ்தீசியா கொடுக்கும் போது சிலருக்கு மருந்து அதிகமாகி விட்டாலும் சரி, சிலருக்கு குறைவாக கொடுத்து அவர்கள் நீந்தும் போது கண் முழித்து விட்டாலும் சரி மரணம் நிச்சயம் என்கிறார். ஆனால், அதைத் தவிர்த்து அந்த வெள்ளத்தில், குகையின் இடுக்குகளில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேறு வாய்ப்பு இல்லை என்றதும், கவர்னர் முழு பொறுப்பும் தான் ஏற்றுக் கொள்கிறேன், மருந்தின் மூலம் அவர்களை வெளியேற்றுங்கள் என முடிவாகச் சொல்லி விட்டார்.

மயக்கவியில் மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, குகை நீச்சல் தெரிந்தவராக இருக்கிறார் என்றதும், எப்படிப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தப் போகிறார் எனப் பார்க்க தயாராகிறோம்.  ஏட்டுப் படிப்போடு, வேறு துறைகளையும் கற்று இருக்கும் போது, என்றுமே அது நமக்கு மட்டுமில்லாது, நாம் வாழும் சமூகத்துக்கும், மக்களுக்கும் பயன்படத்தான் செய்கிறது.

மயக்க மருந்து மூலம் விளையாட்டு குழுவினரை நீச்சல் வீரர்கள் மீட்டுக் கொண்டு வர முடிந்ததா,,? என்பதை ரொம்ப திர்ல்லிங்காக காட்சிப்படுத்துகிறது படம்.

படத்தின் டைரக்டர் ரான் ஹாவர்டு மனித நேயத்தின் உன்னதத்தை வெகு உயிர்ப்புடன் நிகழ்த்தி உள்ளார். நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே பாரட்டுக்குரியவர்கள்!

பட விமர்சனம்; காயத்ரி மஹதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time