உடல் எடையைக் குறைக்க நடையாய் நடக்கிறார்கள். விளம்பரப்படுத்தப்படும் விதவிதமான டயட்டுகளை வாங்கி உட் கொள்கிறார்கள்! இவ்வளவு மெனக்கிடாமல் சுலபமாக எடையை குறைக்க முடியும். தேவையில்லாத தீய உணவு பழக்கத்தை கை விடுங்க, இந்த பாரம்பரிய உணவு பழக்கத்தை கை கொள்ளுங்க!
”ஒரே வாரத்தில் நீங்கள் ஸ்லிம் ஆகலாம், நாங்க சொல்ற டயட்டை ஃபாலோ பண்ணா, ஈஸியா எடை குறைக்கலாம் வாங்க, ஆடு மாடு கோழி என அனைத்தையும் சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்…” என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களும் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று மக்களும் யார் யாரெல்லாமோ சொல்வதை நம்பி மோசம் போய்க் கொண்டிருக்கிறார்கள். தவறான உணவுப் பழக்கமே உடல் எடை அதிகரிப்பிற்கு மட்டுமல்ல, பல்வேறு நோய்களின் பெருக்கத்துக்கும் மூல காரணம் என்பதே உண்மை! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; நீங்கள் மனது வைத்தால் நிச்சயம் எடை குறைக்கலாம்.
காலையில் தொடங்கி இரவு தூங்கச் செல்லும் வரை நாம் உண்ணக்கூடிய உணவுகளை முதலில் வகைப்படுத்த வேண்டும். அவற்றில் மேற்கத்திய உணவுகளை முதலில் ஒதுக்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் உணவுகள் அல்லது மருந்துகளை உட் கொள்வதற்கு முன் எடையை அதிகரிக்கும் உணவுகள் உண்பதை நிறுத்த வேண்டும். இன்றைக்கு எண்ணெயில் பொரித்த, மீண்டும், மீண்டும் சூடாக்கிய மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் உண்பது அதிகரித்திருக்கிறது. டால்டாவில் தயாரிக்கப்பட்ட இனிப்பு பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
ஊட்ட உணவுகளால் வளர்க்கப்படும் கோழிகளையும், ஹைபிரிட் தீவனங்களை தின்னும் விலங்குகளையும் உணவாக உட்கொள்வது பரவலாகக் காணப்படுகிறது. அதிலும் இரவு நேரங்களில் இறைச்சி உணவுகள் உண்பது, பரோட்டா போன்ற மைதா உணவுகள் மற்றும் ஃபிரைடு ரைஸ், பாஸ்தா, சமோசா, பீஸா உணவுகளை உண்பது அதிகரித்துக் காணப்படுகிறது. பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் இயல்பு நிலைக்கு மாறும்.
மிகச் சாதாரணமாக காலையில் இருந்தே உங்களது எடை குறைக்கும் முயற்சியை தொடங்கலாம். காபி, டீ குடிப்பதற்குப் பதில் 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றை கலந்து தேன் சேர்த்து உமிழ்நீர் சுரக்குமளவு மிடறு மிடறாக குடிக்க வேண்டும். தொடர்ந்து இதே போன்று குடிக்க விரும்பாவிட்டால் இஞ்சிச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். இவற்றில் எதையாவது ஒன்றைச் செய்தால் போதும்.
ஆனால், காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடுத்ததாக காலை உணவாக பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது. பப்பாளி, அன்னாசி, கொய்யா மற்றும் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். அன்னாசிப்பழத்தை முன்கூட்டியே வெட்டி வைத்து அதன்மீது ஓமத்தை பொடியாக்கி தூவி வைத்து சாப்பிடலாம்.
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கியதும் கைப்பிடி அளவு பெருஞ்சீரகத்தை நீரில் போட வேண்டும். சூடு ஆறியதும் வடிகட்டி அன்றைய தினம் முழுவதும் அந்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் புதிதாக தயாரித்து அருந்த வேண்டும். காலை உணவாக பழமாக சாப்பிட பிடிக்கவில்லையென்றால் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது. மதிய உணவாக சிறுதானியத்தில் தயாரானவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
இடைப்பட்ட நேரத்தில் சுரைக்காய், வாழைத்தண்டு அல்லது அறுகம்புல் சாறு எடுத்து குடிப்பது நல்லது. சுரைக்காய், வாழைத்தண்டினை வாரத்தில் ஒருநாள் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். மதிய உணவில் அடிக்கடி வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்க்க வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்துக்கொள்வது நல்லது.

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்கள். ஆம்… கொள்ளுப் பயறை துவையலாக செய்தோ ரசமாக்கியோ சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கரைந்து எடை குறையும். கொள்ளுப் பயறை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து இந்துப்பு சேர்த்துக் கொள்ளவும். அதில் தினம் மூன்று டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆறியதும் மோர் சேர்த்துக் குடிக்கலாம். இதை முற்பகல் வேளையிலோ அல்லது மதிய வேளையிலோ குடிக்கலாம். காலை அல்லது பகல் வேளையில் வெள்ளைப் பூசணிக்காயுடன் சிறிது ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைத்து வடிகட்டிச் சாறாகக் குடிக்கலாம்.வெறுமனே வெள்ளைப் பூசணிச் சாற்றைக் கூட குடிக்கலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றும்.
ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க உதவும் என்பதால் மதிய வேளைகளில் சாப்பிடலாம். ஆனால், சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. கேரட் ஜூஸ் அவ்வப்போது அருந்தி வந்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் கரையும். முள்ளங்கி சூப் செய்து குடிப்பதும் பலன் தரும். அன்னாசி பழச்சாற்றை மிளகு, பூண்டு ரசத்துடன் சேர்த்து அருந்தினாலும் எடை குறையும். மாலை வேளையில் பார்லி அரிசி கஞ்சி குடிக்கலாம். வாரத்தில் மூன்று நாட்கள் கேரட் ஜூஸ் செய்து அதில் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் வெந்தயப்பொடி கலந்து பருகி வருவதும் எடை குறைக்க உதவும்.
Also read
இதுபோன்ற எளிய உணவுகளை உட்கொண்டே மிக எளிதாக உடல் எடையைக் குறைக்கலாம். ஆனால், பலர் எடை குறைக்கிறேன் பேர் வழி என்று சொல்லிக்கொண்டு ஆயிரக்கணக்கில் தேவையில்லாமல் செலவு செய்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தினமும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்வது, அளவாக உணவு உண்பது மட்டுமல்லாமல் உணவே மருந்து மருந்தே உணவு அடிப்படையில் சில எளிய உணவுகளை உண்பதன்மூலம் மிக எளிதாக எடை குறைக்கலாம். இது பேரிக்காய் சீசன். ஆடி, ஆவணி மாதங்களில் அதிகமாக விளையக்கூடிய பேரிக்காயை அவ்வப்போது சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவதுடன் உடல் எடை குறையும். அதிக விலை கொடுத்து ஏதேதோ பழங்களை வாங்கிச் சாப்பிடுவதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் இதுபோன்ற பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு பலன் பெறலாம்.
கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்
மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.
வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.
Leave a Reply