மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்?

-ச.அருணாசலம்

சுதந்திரத்திலே பங்கெடுக்காத கட்சி இன்று இந்தியாவை ஆள்கிறது. விடுதலை வீரர்களை காட்டித் கொடுத்த இயக்கம் இன்று தேசபக்தி குறித்து மக்களுக்கு வகுப்பு எடுக்கிறது. சுதந்திர இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்தி, அடிமை இந்தியாவாக்க துடிப்பவர்களிடம் இருந்து நாடு தன்னை விடுவிக்க போராடுகிறது!

நாடு அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து விடுதலை பெற்ற ஆண்டு 1947. சுதந்திரம் அடைந்து தற்போது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சி கட்டிலில் இன்று இருப்பவர்கள் இதை ‘ஆசாதி  கா அமிர்த மகாத்சோவ்’ என்று கொண்டாட அழைப்பு விடுக்கின்றனர் . சுதந்திரத்திற்காக போராடிய வீர்ர்களின் தியாகங்களை போற்றி, இந்த மிகப் பெரிய சுதந்திர விழாவை இந்த முறை 75 வாரங்கள் கொண்டாடுவோம் என்று பிரதமர் மோடி அழைத்துள்ளார் .

சுதந்திர போராட்டத்தில் மோடி சார்ந்த கட்சி கலந்து கொள்ளாவிட்டாலும், இன்று ஆட்சிப் பொறுப்பிலிருப்பதால் அந்நிகழ்வை போற்றி கொண்டாட உரிமையுள்ளது!

ஆனால் அமிர்த காலம் இப்பொழுதுதான் நடக்கிறது என்று கூறுவதில் ஏதாவது சாராம்சம் உள்ளதா?

பல்வேறு மொழி பேசும் மக்களையும், வகுப்பினரையும் ஒன்று திரட்டி , பிரிட்டிஷ்  ஆட்சிக்கு எதிராக இந்நாட்டு மக்களை ஓரணியில் திரட்டியது இந்திய தேச விடுதலை இயக்கம்.

வேறுபாடுகள் பல இருப்பினும் விடுதலை என்ற பொது நோக்கத்திற்காக  ‘வெள்ளையனே வெளியேறு ‘ என்ற போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தது காங்கிரசு பேரியக்கம்.

சுதந்திரத்தில் பங்கெடுக்காத இந்த மதவாதிகளுக்கு அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து தேச விடுதலைக்கு போராடுபவர்களே (காந்தியும் , நேருவும்) எதிரிகளாக தோன்றினர். ஆர்.எஸ்.எஸ் தேச விடுதலை போராட்டத்திற்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.

தேச விடுதலைக்காக சர்வ பரித்தியாகங்களையும் செய்த மக்கள் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை (Parliamentary Democracy ) யைக் கொண்ட குடியரசு ஒன்றே இந்திய மக்களின் வாழ்விற்கு உகந்தது என முடிவெடுத்தனர் . இதில் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களின் பங்களிப்பு தலையாயது.

எது சுதந்திரம்?

“தவறுகள் செய்ய உரிமையும் அதை திருத்திக்கொள்ள அதிகாரமும் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம் ” என்று காந்தியடிகள் எழுதினார்.

அரசியல் நிர்ணய சபையில் புகழ் பெற்ற ‘குறிக்கோள்கள் ‘ பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்த ஜவகர்லால் நேரு ” பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைக்கு பல தகுதிகள் தேவைப்படுகின்றன. அத்தகுதிகள் – திறமை, நாட்டுப் பணி மீதான அக்கறை, கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு, சுய ஒழுக்கம் அதற்கும் மேலாக கட்டுப்பாடு போன்ற தகுதிகள்- இந்திய மக்களிடமிருந்து பொது வாழ்விற்கு வருவோர் கற்றுக் கொள்ள வேண்டும் ,கற்றுக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

அம்பேத்கரோ, பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிநாதமே “ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் (Executive)  பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டவர்களாக, அதற்கு பதில் சொல்ல கடமை பட்டவர்களாக இருப்பதுதான்” என்று அறுதியிட்டு கூறினார்.

விடுதலை அடைந்த இந்தியா தன்னை வழி நடத்த தேவையான வழிமுறையை “இந்திய அரசியல் நிர்ணய அவை”(Constituent Assembly of India) மூலம் நமக்கு வழங்கியது. இந்திய சமூகத்தில் பரவிக் கிடக்கும் பல்வேறு கூறுகளே நமக்கு பாராளுமன்ற ஜனநாயக முறையை தேர்வு செய்ய தலைவர்களை தூண்டியது, பல்வேறு மொழி இனங்களை கொண்ட பரந்து விரிந்த இந்த நாடு – ஒற்றை அடையாளத்திற்குள் ஒடுக்க முடியாத பன்முகத்தன்மை கொண்ட இந்த நாடு – பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையின் அவசியத்தை உணர்த்தியது என்பது மிகையல்ல.

அரசியல் சாசனமும் அதன் தொலை நோக்கும் இன்று -இந்த அமிர்த காலத்தில்- படும் பாடு சொல்லி மாளாது. பாராளு மன்றமும் ஜனநாயகமும் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் சிக்கி சிறுமைப்படுவதை கண்டு மௌனமாக கடந்து செல்ல முடியுமா?

பாராளுமன்றத்தில் எந்த வித விவாதங்களும் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

முக்கியமான, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் மசோதாக்கள் , சட்ட திருத்தங்கள்  எந்த விவாதமும் இன்றி எதிர்கட்சிகள் ஓட்டெடுப்பை வலியுறுத்திய பின்னும் அதை நிராகரித்து  மசோதாக்கள் நிறைவேற்றப் படுகின்றன.  மூன்று வேளாண் மசோதாக்கள் இந்த அராஜகத்திற்கு ஒரு உதாரணமாகும்.

நிதி சம்பந்தமில்லாத சட்ட சீர்திருத்தங்கள் நிதி மசோதா Money Bill  என்ற போர்வையில் நிறைவேற்றப்படுகின்றன. பணமோசடி எதிர்ப்பு சட்ட மசோதா சட்டமாக PMLA Prevention of Money Laundering Act  உருவானது  இந்த வழியில் தான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

மசோதாக்கள் தீரமாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற பால பாடத்தை காற்றில் பறக்க விட்ட இன்றைய அரசு பெருபாலும் மசோதாக்களை விவாதிக்க பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புவது இல்லை!

பாராளுமன்றம் கூடும் நாட்களே இன்று அரிதாகிவிட்டது. கடந்த பத்து ஆண்டுகள் அளிக்கும் புள்ளி விவரங்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் பாராளுமன்ற கூட்டம் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் கூடும் நாட்கள் குறைந்துள்ளதை காட்டும்.

கடந்த 2021 ம் ஆண்டில் 12 மேலவை எதிர்கட்சி உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர் , தொடர் முழுவதும் அவர்களால் அவை நடவடிக்கைகளில் பங்கு பெற இயலவில்லை! இந்த ஆண்டு 2022ல் 20 எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர், அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டனர். விலை உயர்வு, வேலையின்மை, பணவீக்கம், ஜி எஸ் டி வரிக்கொடுமை அக்னி பாத் போன்ற எந்த பிரச்சினை பற்றியும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை; விவாதம் தடுக்கப்படும். ஆள்பவர்களோ பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கின்றனர்.

இத்தகைய அரசின் நடவடிக்கைகள் சபையின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தின் மாண்பையும் சீர் குலைக்கிறது. உறுப்பினர்களின்  உரிமைகளை பறிக்கிறது. இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயலன்றி வேறல்ல.நாடாளுமன்றம் ‘கண்காணிப்பு’ என்ற உயிரனைய அதிகாரத்தை இழந்து வெறும் அலங்கார அவையாக மாற்றப்பட்டுள்ளது!

பாராளுமன்றமும் ஜனநாயக நடைமுறையும் படும் பாடு இப்படியென்றால் , சுயாதீனமுள்ள அரசியல் அமைப்புகளின்  நிலை மிக கேவலமாக உள்ளது. லோக் ஆயக்தா , மத்திய  கண்காணிப்பு ஆணையம், தேர்தல் ஆணையம், தேசிய மனித  உரிமைகள் ஆணையம் ஆகியவை இன்று பல் பிடுங்கப்பட்ட பாம்புகளாக வித்தை காட்டுவதை இந்த நாடு கண்ணுற்று வருகிறது, உண்மையில் இது அமிர்த காலம்தான் , ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி இங்கே!

அன்னா ஹசாரே , அரவிந்த கெஜ்ரிவால் போன்றவர்கள் 2013ல் முழங்கிய முழக்கமும் அதற்கு பாஜகவின் ஜால்ராவும் நம் செவிகளில் இன்னும் ஒலிக்கிறது, ஆனால், இன்றைய நிலை பற்றி ஆள்பவர்களின் மௌனமும் பத்திரிகைகளின் கள்ள மெளனமும் நாட்டில் அமிர்த காலம்   பொங்குவதை குறிக்கிறதல்லவா?

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக தன்னை பாவித்துக்கொள்ளும் ஊடகங்களின் இன்றைய நிலை என்ன? இடித்துரைக்கும் வேலையை என்றோ மறந்து போன பிரதான ஊடகங்கள்- அச்சு ஊடகங்கள், காணொலி ஊடகங்கள் , டிஜிட்டல் ஊடகங்கள் – இன்று தங்களது கடமையை மறந்து ஆளும் கட்சிக்கு விலை போய் ஆள்பவர்களின் துதி பாடுவதை நாடு பார்த்துக் கொண்டுள்ளது.  அதற்கு மேலும் ஒரு படி சென்று ஆட்சியாளர்களின் கண்ணசைவிற்கேற்ப மத வெறுப்பை பரப்புவதும், மத வெறி பேச்சுகளை தூக்கி பிடித்து அவர்களின் ‘பேச்சுரிமை’ யை நிலைநாட்ட முயல்வதும், உண்மை பிரச்சினைகளையும் நடப்புகளையும் இருட்டடிப்பு செய்வதும் தங்களின் மேலான கடமை என சோரம் போய்விட்டது பத்திரிக்கை துறை!

உண்மையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு சில ஊடக்கங்களின் குரல்வளைகள் அரசு எந்திரத்தால் நெறிக்கப்படுகின்றன. அவர்கள் மீது பொய் வழக்குகளும் பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் வழக்குகளும் (பத்திரிக்கையாளர்கள் மேல் )பாய்கின்றன.உலக அளவில் பத்திரிக்கை சுதந்திரம் என்ற தர வரிசையில் கடைசி மூன்று இடங்களில் ஒன்றை இந்தியா பிடித்துள்ளது “பெருமைக்குரிய” விஷயமில்லையா?

அடுத்து பாமரனின் கடைசி புகலிடமாக கருதப்படும் நீதித்துறையின் செயல்பாடு பற்றி பேசவே நா கூசுகிறது. நீதித்துறையின் தன்னெழுச்சியான செயல்பாடு என்பதெல்லாம் மலையேறி இன்று அரசு நிர்வாகத்தின் கேவலமான ஒட்டுண்ணிகளாக நீதித்துறை விளங்குவது வேதனையான விஷயம். பழைய பெருங்காய டப்பாக்கள் மக்களை காப்பாற்ற போவதில்லை!

இவ்விதமான அரசியல் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க  ஆட்சியாளர்கள்  இருக்கின்ற சட்டங்களை பாரபட்சமாக selective application of laws against opponents அமல்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதை தினமும்  பார்க்கிறோம்.

தேர்தல் நிதி சீர்திருத்த  மசோதா  Electoral Bonds

ஆதார் சட்ட திருத்தம்

தொண்டு நிறுவன உதவி சட்டம் FCRA

தீவிரவாத தடுப்பு சட்டம்  UAPA

பண மோசடி தடுப்பு சட்டம்  PMLA

இச்சட்டங்கள் எல்லாம் விவாதம் ஏதுமின்றி அரசியல் சட்டத்திற்கு முரணாக திருத்தப்பட்டதோடு அல்லாமல் அரசியல் எதிரிகளை, அரசை கேள்வி கேட்பவர்களை எல்லாம் இச்சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் அன்றாடம் நடக்கும் செயல்களாக இன்றைய இந்தியாவில்- நயா இந்தியாவில் – நடப்பதை மறுக்க இயலுமா?

உபாவில் கைதான உரிமை போராளிகள்

சமூக ஆர்வலர்கள், முன்கையெடுக்கும் போராளிகளில் தொடங்கி இன்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கும் அரசியல் தலைவர்கள், ஒத்து வராத அரசியல் பிரமுகர்கள் வரை அனைவரின் மீதும் ஒரு தலைபட்சமாக பாயும் மேற்கூறிய சட்டங்கள் உண்மை குற்றவாளிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? இதுதான் ஆசாத் கா அம்ரித் காலத்தின் இயல்பா?  கேள்வி கேட்போருக்கு சிறைவாசமும் ஒத்தூதுபவர்களுக்கு வெகுமதியும் தான் இன்றைய இந்தியாவின்- நயா இந்தியாவின் – எழுதப்படாத சட்டம்?

இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கத் துடிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது.

இப்படித்தானே குஜராத் மாடல் அனைத்து அதிகார மட்டத்திலும் செயல்படுத்தப்படுகிறது!

அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தாலும் அடிப்படை பொருளாதார அறிவு இல்லையெனில் அதன் விளைவு அதல பாதாளந்தான் . யாருக்கு என்று கேட்பீர்களேயானால்,

மக்களுக்கு தான் ஆளும் முட்டாள்களுக்கில்லை என்பதே பதிலாகும் .

ஆம், பண மதிப்பிழப்பு தொடங்கி ஜி எஸ் டி , மற்றும் நிதி பங்கீடு வரி விதிப்பு வரை எடுக்கப்பட்ட முடிவுகளும் அதன் தொடர்ச்சியான எண்ணற்ற மாற்றங்களும் மத்தியில் அதீத அதிகார குவிப்பிற்கு வழிவிட்டது, மாநில மத்திய கூட்டுறவுகளை சிதைத்தது என்பதை தவிர நாட்டு பொருளாதாரத்திற்கு எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. இந்த முட்டாள் தனத்தை தூக்கிப்பிடிக்க நிர்மலாவை விட்டால் வேறு ஆளில்லை!

இதையடுத்து அரசியல் நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு இந்திய அரசியல் களம் மாற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை அதிகாரத்தின் மூலமோ பண பலத்தின் மூலமோ சட்டத்தையும், நீதியையும் வளைத்து அன்று கோவாவில் தொடங்கி இன்று மகாராஷ்டிரா வரை பார்த்து சலித்துவிட்டது.

ஜனநாயக உலகமே இதுவரை கண்டிராத வகையில் வெளிநாட்டு உளவு -பெகாசஸ்-சாதனத்தை கொண்டு உள் நாட்டு குடி மக்களை- அரசியல் தலைவர்களை, பத்திரிக்கையாளர்களை, நீதிபதிகளை, அதிகாரிகளை, சமூக ஆர்வலர்களை வேவு பாரத்த கொடுமை யும் அதை மூடி மறைக்க முயன்ற மோசடியும் அம்பலமான பின் இவர்கள் எங்கு போய் ஒளிய முடியும்?

ஒரு கட்சி ஆட்சி அல்ல, ஒரு கட்சி எதேச்சதிகாரத்தை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் சுதந்திர அமுதம் நாட்டு மக்களுக்கல்ல,  நால்வருக்கு மட்டுமே கிடைக்கிறது என்றால், அது மிகையல்ல.

நாட்டு மக்களுக்கு கிடைப்பதெல்லாம் அமுதல்ல, ஆலகால விஷம்தான் !!

இவை அனைத்தையும் புறந்தள்ளி, கேள்வி ஏதும் கேட்காமல் நாடும் நாட்டு மக்களும் மூவர்ண கொடியை வாங்கி வீடு தோறும் ஏற்றி கொண்டாட மோடி அரசு அழைக்கிறது! 52 வருட காலம் கொடியேற்ற மறந்து விட்டு, இன்று புதிதாக கொடியேற்ற வந்தவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால்,

நாமும் சுதந்நிர நாளை நினைந்து கொடியேற்றுவோம்,

இன்றடைந்துள்ள நிலையை மாற்ற கொடியேற்றுவோம்

இனி ஏமாறாமல் இருக்க , புதிய விதி செய்ய கொடியேற்றுவோம்

இழந்த உரிமைகளை மீட்டெடுக்க சூளுரைத்து, ஏற்றுவோம் சுதந்திரக் கொடியை!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time