அராஜக பாஜகவும், அடங்கிப் போகும் திமுகவும்!

-சாவித்திரி கண்ணன்

பொய், வன்முறை, அத்துமீறல், அராஜகம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்றி விடலாம் என நினைப்பதாகத் தெரிகிறது. நான்கு நாட்களில் ஐந்து சம்பவங்களை தமிழகத்தில் அரங்கேற்றியுள்ளது பாஜக! அண்ணாமலையின் அராஜக அரசியலுக்கு திமுக ஏன் இவ்வளவு பலவீனமாக எதிர்வினையாற்றுகிறது..?

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றது முதல் திமுகவிற்கு எதிரான ஒரு போர் அரசியலை முன்னெடுத்து வருகிறார். ஒருவித வன்ம அரசியலை வளர்ப்பதிலும், வெறுப்பு அரசியலை வேகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெளிவாக உணர முடிகிறது. இதற்காகவே தமிழகத்தில் பல கொலை,கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகளை, தாதாக்களை பாஜகவில் சேர்த்து அவர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முக்கிய பொறுப்புகளையும் கொடுத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

தங்கள் கட்சி இந்தியாவையே ஆட்சி செய்கிறது. இந்திய அரசாங்கத்துடன் ஒப்பிட்டால் தமிழக அரசு ஒரு அதிகாரம் குறைந்த சிறிய மாநில அரசு தான்! ஆகவே, இந்திய அரசே நம்முடையதாக இருக்கும் போது இங்கே நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பாஜககாரன் என்றால், திமுக போலீஸ் சல்யூட் அடிக்கும். நம்மை சுலபத்தில் தண்டிக்க முடியாது. பாஜக பாதுகாப்பு தரும் என்ற துணிச்சலில் இவர்கள் ஆடுகின்ற ஆட்டம் கொஞ்ச, நஞ்சமல்ல என்பதற்கு ஒரு சில சம்பவங்களை இங்கே தருகிறேன்.

தருமபுரி, பாப்பாரப்பட்டியில்  சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் ஒரு பாரத அன்னை சிலை உள்ளது. இங்கே மாலை, மரியாதை செலுத்த விரும்புபவர்கள் அதற்கான முன் அனுமதி கடிதம் கொடுத்து நேரம் வாங்கி சிறப்பாக செய்யலாம். ஆனால், தன்னிச்சையாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி, பாஜக சார்பில் பாரதமாதா நினைவாலயத்திற்கு மாலை அணிவிக்க பேரணியாக சென்ற பாஜகவினர், நினைவாலயத்தின் முன்புறக் கதவு பூட்டி இருந்த நிலையில், அந்த பூட்டை திறக்க சொல்லி அங்கே வேலை செய்யும் கடை நிலைப் பணியாளரிடம் கட்டளையிட்டு உள்ளனர்.

அதிகாரிகளின் உத்தரவு இல்லாத நிலையில் பணியாளர் பூட்டை திறக்க மறுத்ததால், அராஜகமாக பூட்டை உடைத்து பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் திமுககாரரும், இன்றைய பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட  இந்த அத்துமீறல் செய்த 50 பேர் மீது சும்மா பெயரளவுக்கு வழக்குப் பதிவு செய்து விடுவித்து விட்டனர்.

ஆகஸ்ட் 13 ந்தேதி உயிரிழந்த ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையம் எடுத்து வரப்படுகிறது. அரசு சார்பிலான ஒரு சிறிய அஞ்சலி நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. அதில்  ப்ரோட்டோகால்படி அமைச்சர், கலெக்டர், மேயர், எம்.எல்.ஏ-க்கள், எஸ்.பி, ராணுவ அதிகாரிகள் என அஞ்சலி செலுத்த மட்டுமே திட்டமிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவர் வீட்டில் விருப்பப்படும் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஏன் அங்கு அனுமதி தரப்பட்டது? அண்ணாமலை வர உள்ளதை முன்னிட்டு தான் அங்கு பாஜகவினர் கூட்டமாக நின்று கோஷ்மிட்டனர். ”அஞ்சலி செலுத்தும் இடத்தில் கோஷங்கள் ஏன்? கூச்சல் ஏன்?”  இதைத் தானே பி.டி.ஆர் கேட்டார்.

இதற்காக அவர் மீது அவ்வளவு ஆவேஷமாக பாய்வது ஏன்? காரை மறித்து தாக்குதல் தொடுத்துள்ளனர். தேசியக் கொடி பறக்கும் கார் மீது செருப்பை வீசுகின்றனர். போலீசார் படாதபாடுபட்டு அவர்களை விலக்கி விட்டனர். நியாயப்படி வன்முறையில் ஈடுபட்டவர்களை களத்திலேயே வைத்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது? திமுகவினர் ரயில் மறியலும், சாலை மறியலும் செய்த பிறகு தான் பாஜகவினர் 6 பேர் தேடி கைது செய்யப்பட்டனர். ஆனால், இவர்களை கைது செய்ய தங்கள் அரசை நிர்பந்திக்க திமுகவினர் போராட்டங்கள் நடத்தி 100 பேர் கைதாக வேண்டியதாகிவிட்டது. இத்தனைக்கு பிறகும் பி.டி.ஆரையும். தமிழக அரசையும் தான் அண்ணாமலை வசைபாடிக் கொண்டிருந்தார். இதில் இரண்டு நாள் கழித்துத் தான் ஸ்டாலின் கண்டன அறிக்கையே தந்தார்.

ஆகஸ்ட் 13 ந்தேதி திருவாரூர்  கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்றதில். பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வறையில் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, பாஸ்கர் என கூறியவருக்கும், அதில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்துள்ளதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் பெயர் திவாகரன் என்பதும், அவரை  திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவர் பா.ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கர் (48) என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட திவாகரன், மாவட்ட பாஜகவின் ரமேஷ், பாஸ்கர்  ஆகியோரின் கைது விவகாரமும் வெறும் பெயரளவுக்கே நடந்துள்ளது.

ஆகஸ்ட் 13 ந்தேதி  பொள்ளாச்சி – கோவை சாலையின் வழி யாக கேராளாவை  நோக்கி இரண்டு டிப்பர் லாரிகள் சென்றுக் கொண்டிருந்ததன. அங்கே பாரதிய ஜனதா கட்சி யினர் அந்த இரண்டு டிப்பர் லாரிகளை கற்களை  வீசி, அச்சுறுத்தி மடக்கினர். லாரியின் கண்ணாடி சேதமானதால் செய்வதறியாது அதிர்ந்து நிற்கிறார், லாரி ஓட்டுனரான ஜோபி. தொடர்ந்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தமிழக அரசிடம் அனுமதி பெற்று உரிய ரசீதுடன் கேரளாவிற்கு கற்களை ஏற்றிச் செல்வதாக ஓட்டுனர் ஆதாரங்களை காட்டுகிறார்.  போலீசார் பாஜகவினரை விசாரிக்கின்றனர். ஆனால், தமிழகத்தின் கனிம வளங்களை கொள்ளையடித்து செல்வதாக  பொய் சொல்லி ரகளையில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். நியாயப்படி போலீசார் பாஜகவினரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சமாதானம் பேசுகின்றனர். தமிழகத்தின் எல்லையோரங்களில் பாஜக, அதிமுகவைச் சார்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக என லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வருவாய் துறையும், காவல் துறையும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் வளாதிருக்கின்றனர். காரணம், அவர்கள் பாஜகவினராயிற்றே!

ஆகஸ்ட் 14 ந்தேதி கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது. கோவில் கோபுரத்தின் உச்சயில் யாரும் இது வரை இவ்வாறு செய்ததில்லை. ஆனால், தங்கள் தேசபக்த அரசியலுக்கு கோவிலையும் ஒரு பகடை காயாக்க விரும்பிய பாகஜவினர் தான் இவ்வாறு செய்ததோடு, அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருந்தனர். இதுவே மற்றவர்கள் செய்திருந்தால் இந்து கடவுளான சிவனை அவமரியாதை செய்துவிட்டதாகச் சொல்லி ரகளையில் ஈடுபட்டு இருப்பார்கள். கோயில் தரப்பில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் இது வரை வழக்கு கூட பதிவாகவில்லை. கோவில் கோபுரத்தின் மீது ஏற்றப்பட்ட தேசியக் கொடியை இறக்கி வைக்கவும் அச்சப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல முக்கிய பத்திரிகைகள் இந்த செயலை செய்தது பாஜகவினர் என எழுதுவதைக் கூட தவிர்த்து யாரோ சிலர் என எழுதி உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த அளவில் திமுகவின் தற்போதைய ஆட்சி காலம் ஒரு பொற்காலமாக போய் விட்டது, பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்களுக்கு! காரணம், தொடை நடுங்கி அரசு! அவர்கள் அடித்து முன்னேறவும், இவர்கள் அடி வாங்கி பின் செல்லவும் வசதியாக உள்ளது போலும்.

கள்ளக் குறிச்சி விவகாரத்தில் ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் பள்ளியின் உரிமையாளரைக் கூட தண்டிக்க முடியாத – நடந்த உண்மையைக் கூட வெளிப்படுத்த துணிவில்லாத – பூசி மெழுகி மூடி மறைக்க துடிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது! ஏனென்றால், அவரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர். இப்படி தண்டிக்கப்படவே மட்டோம் என்றால், குற்றம் புரியும் கொடியவர்களுக்கு துளிர் விட்டுப் போகாதா? மேன்மேலும் அராஜகங்கள் அரங்கேறுமே! மக்களுக்கு ஆட்சியாளர்களால் பாதுகாப்பு தர முடியாவிட்டால், வேறு யார் தருவர்?

இயல்பிலேயே திமுகவினர் தைரியசாலிகள் தாம்! ஆனால், தலைமையோ கோழைத்தனத்தின் உச்சமாக உள்ளது!

அடடா, ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு எல்லாம் தற்போதைய தமிழகம் ஒரு வேட்டைக்காடு தான்! தாங்கள் என்ன தவறு, குற்றங்கள் செய்தாலும், அதை தாங்கிப் பிடித்து காப்பாற்ற ஒரு இளிச்சவாய் அரசாங்கம் வாய்த்துவிட்டது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time