குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற ஐந்து மாதக் கர்பிணியை கற்பழித்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற 11 குற்றவாளிகளை 15 ஆண்டுகளில் விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு! ஆனால், தமிழக அரசுக்கோ ஏன் 20-30 ஆண்டு சிறைவாசிகளைக் கூட விடுதலை செய்ய முடிவதில்லையே ஏன்?
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறையில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர், அன்றைய மோடி தலைமையிலான குஜராத் ஆட்சியில்!
குஜராத் கலவரத்தின் போது பல அதிர்ச்சி தரும் ஈவு இரக்கமற்ற படு கொலைகள் அரங்கேறின. கலவரம் ஆரம்பித்தது முதல் மூன்று நாட்கள் கலவரக்காரர்கள் தங்கள் வன்முறையை நிகழ்த்த எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர். காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்களை பொருடபடுத்தாமல் கண்டும் காணாமல் விலகிச் சென்றது! இப்படியான பல மோசமான படுகொலை சம்பவங்களில் மிகவும் முக்கியமான ஒன்று குஜராத் தாக்கோ மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நடைபெற்ற கொடூர நிகழ்வாகும்.
கலவரக்காரர்கள் மனித வேட்டையாடுகிறார்கள் என்பதை அறிந்த பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 16 பேர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து தப்பிச் செல்கையில் சபர்வாத் என்ற இடத்தில் நள்ளிரவில் வன்முறைக் கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 19 வயது பில்கிஸ் பானு கதறக் கதறக் ஈவி இரக்கமில்லாமல் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவரது மூன்று வயது குழந்தை கலவரக்கார்களால் பாறையில் வீசி ஏறியப்பட்டு. தலை சிதைந்து இறந்து போனது. பில்கிஸ் குடும்பத்தின் மற்றும் உள்ள 14 பேர் வன்முறைக் கும்பலால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். மயங்கிய நிலையில் இருந்த பில்கிஸ்பானு இறந்துவிட்டதாகக் கருதி வன்முறை கும்பல் சென்று விட்டது.
நிகழ்வு நடந்த மறுநாள் பில்கிஸ்பானு அகமதாபாத் லிம்கேடா காவல் நிலையத்தில் கூட்டு பலாத்காரம் செய்தவர்களின் பெயர் மற்றும் விபரங்களை வழங்கி புகார் செய்தார். ஆனால், இந்த கொடூர சம்பவம் தொடர்பான யார் ஒருவர் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமல் பொத்தாம் பொதுவாக வழக்கு பதிந்தனர் போலீசார்.
இந்த கொடிய குற்றங்களை செய்தவர்களின் பேரிலான குற்றவியல் வழக்குகளை நியாயமான முறையில் விசாரணை செய்ய அன்றைய குஜராத்தின் மோடி அரசு அனுமதிக்கவில்லை.
கொடூர நிகழ்வு நடந்து சுமார் ஓராண்டுக்கு பிறகே சம்மரி அறிக்கையே தயார் செய்தனர். இந்த காலதாமதத்தையும், அறிக்கை முன்னுப் பின் முரணாக உள்ளது என்று காரணம் சொல்லியும் லிம்கோடா மாஜிஸ்ட்ரேட் 2003 ஆம் ஆண்டு, இந்த வழக்கையே நிராகரித்து முடித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் தீஸ்தா செதல்வாட்டின் உதவியுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டார். அதன் விளைவாக அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு மூத்த வழக்கறிஞரான ஹரிஸ் சால்வேயை ஆணையம் நியமித்தது. அப்போது மோடி ஆட்சி குஜராத்தில் நடந்து கொண்டிருந்தபடியால் ‘இந்த வழக்கு குஜராத்தில் நடந்தால் விசாரணையில் நியாயம் கிடைக்காது’ என உணர்ந்த பில்கிஸ்பானு ஜுலை, 2004 இல் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடினார்.

பில்கிஸ் பானுவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி, 2008-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி குற்றவாளிகள் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதில் ஒருவர் இறந்துவிட்டார்.
குற்றவாளிகள் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல் முறையீட்டை நிராகரித்து, அந்த தண்டனையை உறுதி செய்தது மும்பை உயர்நீதிமன்றம். பில்கிஸ்பானு வழக்கில் இந்த அளவுக்கேனும் நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் காரணமானவர் தீஸ்தா செதல்வாட். அப்படி எளியவர்களுக்காக போராடிய தீஸ்தாவை தற்போது சிறைக்குள் தள்ளிவிட்ட பாஜக அரசு, மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கொடூர குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது!

குற்றவியல் நடைமுறை சட்டம் வழங்கும் அதிகாரம், அரசமைப்புச் சட்டத்தின் கூறு 161 வழங்கும் அதிகாரம் ஆகியவைகளை பயன்படுத்தி, குஜராத் அரசு இவர்களை விடுதலை செய்துள்ளது. ‘இவர்கள் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதே போதும்’ என்ற காரணத்தைக் கூறி இவர்களை விடுதலை செய்துள்ளது குஜராத் மாநில அரசு. இந்த செய்தி இன்றைய நாளேடுகளில் வந்துள்ளது.
நமது கேள்வி இது தான்?
தமிழ்நாடு அரசு ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற எழுவரும் 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய உரிய தீர்மானம் இயற்றியும் , பேரறிவாளன் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முந்தைய கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், இப்போதைய கவர்னர் ஆர்.என்.ரவியும் பேரறிவாளனையோ, அவருடன் ஆயுள் தண்டணைக்குள்ளான மற்ற நளினி உட்பட 6 பேரையோ விடுவிக்க மறுத்து நீண்ட காலம் அழிச்சாட்டியம் செய்தது நினைவு கூறத்தக்கது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி உட்பட 6 தமிழர்கள் விடுதலை எப்போது என்பது தெரியவில்லை.
இதேபோல, கோவை குண்டு வெடிப்பு வழக்கு உட்பட பல வழக்குகளில் ஏராளமானோர் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக உள்ளனர்.
எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தும், மோடி அரசும் அதன் கவர்னர்களும் விடுதலைக்கு முட்டுக் கட்டையாய் உள்ள நிலையில், இஸ்லாமியத் தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசே இது வரை எந்த முயற்சியும் செய்யவில்லை. எனவே, இவர்கள் கேட்பாரின்றி சிறையிலேயே மாண்டு போக வேண்டியது தானா?
வீரப்பன் தொடர்பான பலர் , ஆயுள் சிறைவாசிகளாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர். இதில் வீரப்பன் அண்ணன் மாதையன் சமீபத்தில் தனது 74 வது வயதில் பலவித நோய்கள் வாட்டிய நிலையில் – முதியவர் என்றும் பாராமல் விடுதலை மறுக்கப்பட்டதில் – சிறையிலேயே உயிர் துறக்க நேரிட்டது.
‘பில்கிஸ்பானு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் இந்துத்துவா சனாதானிகள். அதனால் அவர்கள் 15 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே போதும்; விடுதலை நிச்சயம்’ என்பது தான் சட்டப்படியான ஆட்சியா?
Also read
இந்த வழக்கும், மகாத்மா காந்தியை படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இந்துத்துவா சனாதானிகளான கோட்சே குழுவினர் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதும் எதைச் சொல்கிறது என்றால், உயர்சாதி சனாதானிகளுக்கு ஒரு நீதி , சாதாரண எளியோர்களுக்கு வேறு நீதி என்பதைத் தான். உண்மையான சட்டப்படியான ஆட்சி நமது நாட்டில் சாத்தியமாவது எப்போது எனத் தெரியவில்லை.
கட்டுரையாளர்; அரி பரந்தாமன்
ஒய்வு பெற்ற நீதிபதி
கொடுமையிலும் கொடுமை 25 ஆண்டுகள் சிறையில் வைப்பது.
Last month I had a positive test on day 15, and today s day 17 and they re all still negative comparatif viagra en ligne levitra Continuous spike waves during non REM sleep epilepsy are commonly associated with neurocognitive impairment and sometimes with impairment of muscle activity and control