அதிமுகவை ஒழிக்க ஒ.பி.எஸ்சே பாஜகவின் ஆயுதம்!

-சாவித்திரி கண்ணன்

அதிமுக பொதுக் குழு தொடர்பாக நீதிமன்றங்கள் எத்தனை முறை தான்  எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி நியாயம் பேசுவார்களோ..! இரண்டுங் கெட்டான் தலைமையில் அதிமுகவை கொண்டு நிறுத்துவதே பாஜகவின் நோக்கம்! அந்த நோக்கத்தை ஈடேற்றவே நீதித் துறையிலும் பெரும் நிர்பந்தம் செலுத்தப்பட்டதோ…?

சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டு அதை செல்லாமல் ஆக்கிய வழக்கில் இவ்வளவு மெனக்கிடல்கள் இல்லை. ஆனால், ”எங்க ஆளான ஒ.பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்க அனுமதிப்பதா?” என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் கமுக்கமாக காய் நகர்த்தி வருகிறது.

முதலில் ஒ.பி.எஸும், இ.பி.எஸும் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதமே ஒரு தில்லாலங்கடி முறையில் தான்! அதை ஏற்றுக் கொள்ளுமாம் நீதிமன்றம்!  அந்தப்படியே தற்போதும் தொடர வேண்டும் என அட்வைஸ் வேற தருவாங்களாம்!

ஒ.பி.எஸுடனான கருத்து மாறுபாடுக்குப் பிறகு அதிமுக இரண்டு பொதுக் குழுக்களை நடத்தி உள்ளது. இதை நடத்தவிடாதிருக்க ஒ.பி.எஸ் நீதிமன்றங்களை நாடினார். ஆயினும், ”பொதுக் குழுவை நடத்தலாம்” என்றே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன! அந்த வகையில் இரண்டு பொதுக் குழுக்களுமே நீதிமன்ற ஒப்புதலுக்கு பிறகே நடத்தப்பட்டவையாகும்!

அவற்றை சற்றே தற்போது நினைவு கூர்வோம்.

முதல் பொதுக் குழு கூட்டம் ஜீன் 23 ஆம் தேதி நடக்க முடிவெடுக்கப்பட்டது. அந்த பொதுக் குழுவில் இரட்டைத் தலைமையை நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமைக்கான ஒப்புதல் பெறப்படவுள்ளது என்ற தகவல்களும் வெளியானது. உடனே அந்த பொதுக் குழுவை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுகிறார் ஒ.பி.எஸ்.

இந்த வழக்கில் இருதரப்பிடமும் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ”கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம்  பொதுவாக தலையிடுவதில்லை. பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை” எனத் தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

ஆனால், இதை ஏற்க மறுத்து இரவோடு இரவாக உயர் நீதிமன்றத்தை நாடினார் ஒ.பி.எஸ்.   நள்ளிரவில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும், இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராயினர். நீதித் துறையில் லட்சக்கணக்கான வழக்குகள் வருடக் கணக்கில் தேங்கி கிடக்கும் சூழலில் இரவோடு இரவாக நீதிபதிகள் தூக்கத்தை தொலைத்து, அரக்கபரக்க இதை விசாரித்தனர். இது எந்த அளவுக்கு ஒ.பி.எஸுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும்!

இது தொடர்பான விசாரணை, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு நள்ளிரவு தொடங்கி, அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை விடிந்தால் பொதுக் குழு நடக்கவுள்ள நிலையில் – அதற்கு மாநிலம் முழுமையும் இருந்து பொதுக் குழு உறுப்பினர்கள் வந்து சேர்ந்து ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கியுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் அஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ”பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ள 23 தீர்மானங்களுக்கு ஒ.பி.எஸ் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,  இதைத் தவிர,  வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என உத்தரவாதம் தர வேண்டும்” என நிர்பந்தம் செய்தார்.

இந்த நிர்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒ.பன்னீர் செல்வத்தைக் காப்பாற்றும் விதமாக 23 தீர்மானங்கள் தவிர வேறு எதுவும் நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது, ‘பொதுக் குழுவை நடத்தலாம். அதற்கு தடை இல்லை. ஆனால், அது நடத்தப்படுவதற்கான நோக்கம் என்னவோ அதற்குத் தடை’ என்பதாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தது.

இதையடுத்து மிகப் பெரிய ஏற்பாடுகளுடன் கூட்டப்பட்ட பொதுக் குழுவானது அதன் நோக்கத்தை குறித்து விவாதித்து முடிவு எடுக்க முடியாமலே கலைந்தது. ஆனால், அதே சமயம் மீண்டும் ‘பொதுக் குழு ஜீலை 11 ஆம் தேதி கூடும்’ என பொதுக் குழுவிலேயே அறிவித்தனர்.

இந்தப் பொதுக்குழுவை நடத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஜூலை 6ஆம் தேதி விசாரித்தது உச்ச நீதிமன்றம். ”உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, நாங்கள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்து, ‘உயர் நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளுமாறு’ உத்தரவிட்டனர்.


ஜீலை 11 ஆம் தேதி பொதுக் குழுவிற்கான வழக்கு காலை 9.15க்கு பொதுக்குழு நடைபெற இருந்த நிலையில் 9 மணிக்கு இந்த தீர்ப்பை வழங்கியது உயர் நீதிமன்றம்.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ”ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக் குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என்றதோடு, ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும், பெரும்பான்மையானவரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி  உறுப்பினர்களின்  நம்பிக்கை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின் படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சியின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், உறுப்பினர்களின் நம்பிக்கை பெரும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை  விடுத்து, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார். எனவே, நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார்’’ என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.

தீர்ப்பு எப்படி இருக்குமோ என தவித்த வண்ணம் அரங்கில் கூடி இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தான் பொதுக் குழுவில் நிம்மதியாக பங்கெடுத்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றார் ஒ.பி.எஸ்! இதைத் தொடர்ந்து ஜூலை 30 ஆம் தேதி ‘’பொதுக்குழுவை நடத்தலாமா, கூடாதா என கடந்த ஜூலை 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றே கூறினோம், ஆனால் எங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்’’ என அதிருப்தி தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

அதாவது தான் முன்பு கூறியவற்றுக்கு தற்போது புது வியாக்கியானம் தந்த உச்ச நீதிமன்றம் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாட உத்திரவிட்டது.

அப்போது அந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பெஞ்சுக்கு மீண்டும் வரப் போகிறது என்றவுடன் பதற்றமடைந்த ஒ.பி.எஸ் வழக்கறிஞர் ”வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும். இவர் மீது நம்பிக்கை இல்லை” என்றனர். இது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை ஆழமாக காயப்படுத்தியது.

ஆகவே தன் வருத்ததை நீதிமன்றத்திலேயே அவர் பதிவு செய்தார்;

”இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல்  எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்று தெரிவித்தார். மனுதாரர் (ஓ.பி.எஸ்.) குறித்து  அந்த உத்தரவில்  நான் குறிப்பிட்ட  அந்தக்  கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாக  அதிருப்தியை  வெளிப்படுத்தியதோடு, ‘நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்” என்று தெரிவித்தார்.

ஆனால், தலைமை நீதிபதியோ தன் சக நீதிபதி அவமானப் படுத்தப்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஒ.பி.எஸ் வேண்டுகோளை ஏற்று வேறு நீதிபதிக்கு மாற்றினார். அவர் தான் நீதிபதி ஜெயச்சந்திரன். இவை எல்லாம், ‘ஒரு வழக்கை புற அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுயாதீனத்துடன் ஒரு நீதிபதி அணுகும் போது எத்தகையை விளைவுகளை அவர் எதிர் கொள்ள நேரிடும்’ என்பதற்கான உதாரணங்களாகும்.

அதாவது மத்திய ஆட்சியாளர்களுக்கு மிக விருப்பமான ஒரு அரசியல்வாதியின் விருப்பத்திற்கு மாறாக நேர்மையாக தீர்ப்பளிக்கும் ஒரு நீதிபதிக்கு நீதித்துறையிலேயே பாதுகாப்பும் இல்லை, தலைமையின் அரவணைப்பும் இல்லை. இப்படியான நிலையில் தான் தற்போது ஒ.பி.எஸுக்கு சாதகமாக வெளிவந்த இந்த தீர்ப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது கவலைக்குரியது. நிச்சயம் மாற்றப்பட வேண்டியது.

ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்த அளவில் அவர் பாஜகவின் செல்லப் பிள்ளை. பாஜகவின் பேச்சை தட்டாத, தவறியும் சுயமாக செயல்படாத தத்துப் பிள்ளை! ‘பன்னீர் இல்லாத அதிமுகவை கையாளுவது கொஞ்சம் கஷ்டம்! அதிமுக ஒற்றைத் தலைமைக்குச் சென்றால், அப்புறம் எடப்பாடிக்கு துளிர்விட்டுப் போயிடும். அடங்காமல் போகவும் வாய்ப்புள்ளது…’ என நினைக்கிறது பாஜக!

இரண்டு பொதுக் குழுக்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் நடந்துள்ளன. அதில் மிகப் பெரும்பான்மையான நிர்வாகிகள் ‘ஒற்றைத் தலைமை வேண்டும்’ எனக் கூடி முடிவு எடுத்தனர். இது ஒரு கட்சிக்கு உள்ள அடிப்படை உரிமை. தன் கட்சியைக் காட்டிலும் இன்னொரு கட்சித் தலைமைக்கான விசுவாசமே உயிர்மூச்சாக கொண்டுள்ள ஒரு நபரை எந்த கட்சி தான் ஏற்கும்..? மேலும், அதிமுகவிற்கு யார் தலைமை தாங்க வேண்டும் என பாஜக தலைமை தீர்மானிக்கவோ, நிர்பந்திக்கவோ முடியாது. தவறான நபர்களை ‘களை’எடுத்தால் மட்டுமே ஒரு கட்சி சிறப்பாக இயங்க முடியும்.

இதன் மூலம், ‘பெரும்பான்மை கட்சியினர் விருப்பத்தை விடவும், ஒரு தனி நபரின் விருப்பம் தான் முக்கியம்’ என ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு போக்கை ஒன்றிய அரசு நீதித்துறை மூலம் ஏற்படுத்த முனைந்துள்ளதை அதிமுகவினர் புரிந்து கொண்டு பாஜகவிற்கு எதிராக ஒன்றிணையாத வரை தீர்வு இல்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time