சிவகுமாரின் 4 மணி நேரத் திருக்குறள் பேருரை!

- வீரபாண்டியன்

நூறு திருக்குறளை வாழ்வியல் தொடர்பான நிஜ சம்பவங்களுடன் கேட்போருக்கு சலிப்பு தோன்றா வண்ணம் சுவைபட ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சிவகுமார்! ஏதோ மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்கள் போல பெருந்திரள் மக்கள் லயித்துக் கேட்ட அன்றைய நிகழ்வு ஒரு சிறப்பான அனுபவமானது..!

நம் காலத்தில்,  தமிழகத்தில், முற்றிலும் வேறுபட்ட விதத்தில் திருக்குறளுக்கு ஓர் அரங்கேற்றம் நிகழ்ந்தது. “திருக்குறள் நூறு..!” என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் அவர்கள், தான் எழுதிய புத்தகத்தை அப்படியே மேடையில் வண்ண விளக்குகள் பளிச்சிட , மிகுந்த உயிரோட்டத்துடன் பச்சைத் தண்ணீர் கூட பருகாமல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுமார் நான்கு மணி நேரம் உரை  நிகழ்த்தினார்!

ஈரோடு சி.என்.கல்லூரியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தோழர். ஸ்டாலின் குணசேகரன் ஏற்பாட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்க.. சிலிர்க்க வைக்கும் சிவகுமாரின் திருக்குறள் பேரூரை நிகழ்ந்தது. மாலை 6:52க்கு தனது வாசிப்பை தொடங்கினார் திரு சிவகுமார்‌. இரவு 11 மணி வரையில் அந்தச் சொற்பொழிவு தொடர்ந்தது.

நம் உடம்பை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறோம் இப்படி ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்த முடியுமா ? வேறு எந்த புலவருக்கும், பேராசிரியருக்கும் இது வாய்க்குமா  நடக்கவே நடக்காது!

திருக்குறள் தோன்றி  இந்த 2000 ஆண்டு காலத்தில் எத்தனை லட்சக்கணக்கான பேராசிரியர்களும், புலவர்களும் அதற்கு விளக்கம் சொல்லியி ருப்பார்கள். கடல் மணலைக் கூட எண்ணிவிடலாம்; ஆனால் திருக்குறளுக்கு வியாக்கியானம் சொன்னப் புலவர்களின் எண்ணிக்கையை எண்ணி மாளாது. இத்தனைக்குப் பிறகும் இந்தத் திருக்குறள் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்ற கேள்வி நம் முன்னே தொக்கி  நிற்கிறது.

ஆன்றோர்களும், சான்றோர்களும் திருக்குறளை பண்டிதர் வீட்டுப் பரணியிலே தூங்குகிற சொத்தாக மாற்றிப் போட்டது தான் இது வரை நாம் கண்ட காட்சி.  திருக்குறளைப் பாமரர்களுக்கும் புரிகிற விதத்தில், நம் அன்றாட வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒரு சம்பவத்தைச் சொல்லி , அதற்கான குறள் ஒன்றை முத்தாய்ப்பாக வைத்து “குறள் நூறு…! என்று ஒரு நூலைச் செய்திருக்கிறார்  நடிகர்-  சகலகலா வல்லவன்-  சிவகுமார்.

ஓர் இலக்கியத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வரி வரியாக விளக்கம் சொல்லி அரும்பொருள் விளக்கமும் கூறி, பதவுரை- பொழிப்புரை வரை சொல்லி முடிக்கிற போது, அந்தப் பாட்டைப் படிக்கிற நிமிடம் வரைதான் அந்த வாசகன் அதனோடு வாழ்கிறான். பிறகு அந்தப் பாடல் அவனிடம் ஒட்டுவதில்லை; அவன் நெஞ்சைப் போய்த் தட்டுவதுமில்லை.!

அதே வேளையில் நமது சமூகத்தில் நிகழ்கிற சராசரி நிகழ்வுகளைச்  சொல்லி அதற்கேற்ற திருக்குறளை அங்கே பொருத்தி விடுகிறபோது “ஆஹா… இதற்கெல்லாம் வள்ளுவர் சொல்லி வைத்திருக்கிறாரா… என்ன மனிதரப்பா அவர்…? மகா முனிவராய் இருக்கிறாரே…! ‘’ என்ற பெருமித உணர்வு கேட்பவர் நெஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறது. பிறகு வாழ்நாளில் அவன் அந்தக் குறளை மறக்கவே மாட்டான்.

நெஞ்சில் போய்த் தங்காத எழுத்து என்ன எழுத்து…? பசுமரத்தாணி போல் பதிய வேண்டும் என்பார்கள். சராசரி வாசகனின் நெஞ்சத்தில் திருக்குறளைப் பசிய மரத்தில் பதிய வைக்கப்பட்ட ஆணியைப் போல, அடித்துப் பேசியிருக்கிறார்,  சிவகுமார்.

இத்தனை ஆண்டு காலம் நம்மைக் கடந்து போன பிறகும்,  நாம் எண்ணிப் பார்க்கிறோம்; வரலாற்றுத் தடயங்களில் தேடிப் பார்க்கிறோம். மகாராஜாக்கள்- குறுநில மன்னர்கள்- அவர்களின் கொலு மண்டபங்களில் இதே திருக்குறள் எத்தனை முறை வாசிக்கப்பட்டிருக்கும்…? ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கும்…? அக்குவேறு ஆணிவேராக அலசப் பட்டிருக்கும்…? அவ்வாறு நடந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் எவ்வளவு கூட்டம் கூடி இருக்கும்… பாமர மக்களுக்கும் அந்த நிகழ்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்காது.

சிவகுமார் பேசப்பேச, இவ்வளவு சம்பவங்களும், இத்தனை திருக்குறளும் இவரது மண்டைக்குள் எப்படி போய் குடி கொண்டன அவை வரிசை வரிசையாக எப்படி வந்து இவருடைய நினைவாற்றலுக்கு முன்னால் கைகட்டி நிற்கின்றன என்று நாம் வியந்து பார்த்துக் கொண்டிருந்தோம்!  ஈரோடு வட்டாரத்தில் இருக்கிற மக்கள் மட்டுமல்ல, தமிழகம் எங்கும் இருந்து அவரது அன்பர்கள் பேருந்து எடுத்துக் கொண்டும் கார்களிலும் வாகனங்களிலும் படையெடுத்து ஈரோட்டிற்கு வந்து விட்டனர் பார் சிறுத்தது படை பெருத்தது என்பார்கள் அந்த கண்கொள்ளாத காட்சியை ஆகஸ்ட் 14  ஆம் தேதியன்று ஈரோடு மாநகரம் கண்டது!

‘ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் சிவக்குமார்’ என்ற செவி வழி செய்தி பரபரவ மக்கள் கூட்டம் ஈரோட்டில் அலை பாய்ந்தது! ஒவ்வொரு குறளையும் அவர் வாசிக்க வாசிக்க கைதட்டல் விண்ணை பிளந்தது! சில குரல்களுக்கு மக்களின் கண்களில் கண்ணீர் கசிந்தது !

உச்..உச்.., என்று மக்கள் உச்சிக் கொட்டி உணர்ச்சி பெருக்கால் சிலிர்த்துப் போனார்கள்!

ஒவ்வொரு சம்பவமும் நமது அடி மனத்தை உருக்கும் நிகழ்ச்சிகள் ! உருக்கமாக சம்பவத்தை சொல்லி முடித்த பிறகு, அதற்கு நெருக்கமான திருக்குறளை அவர் சொல்லுகிற போது அடடா என்று வியப்பில் கைகளை மேல் நோக்கி தூக்கி ஆர்பரித்தார்கள் மக்கள் !

மகா சமுத்திரம் போன்ற மக்கள் கடலில் சிவகுமார் பேசுகையில் ஒரு மூலையில் தோன்றுகிற கைத்தட்டல் அலை அலையாக பரவி கூட்டத்தின் கடைசி வரிசை வரை போகிற இந்த அழகை பார்த்து பார்த்து நான் வியந்து உட்கார்ந்து இருந்தேன்!

இரவு 9 மணி ஆகிறது 10 மணி ஆகிறது!

மக்களை பசி, தாகம்  தொலைத்தெடுக்கும்,

ஊருக்கு போய் சேர வேண்டுமே என்கிற உந்துதல் பிறக்கும்,

கடைசி பஸ் போய்விட்டால் கால் நடையாகவே நடக்க வேண்டுமே என்கிற கவலை தொற்றிக் கொள்ளும்.

‘இரவு மணி பத்தானதும் மெல்ல மெல்ல கூட்டம் கலையத் தொடங்கலாம்’ என்கிற  கவலையோடு மக்கள் கூட்டத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு தலை கூட இருந்த இடத்தை விட்டு எழவில்லை. உற்சாகமாக அத்தனை பேரும் உட்கார்ந்து இருந்த காட்சி என்னை நெகிழ வைத்தது!

இலக்கியத்தின் பெயரால் இப்படி ஒரு கூட்டத்தை மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல மயக்கிப் போட முடியுமா…? அன்று அந்த மக்கள் கூட்டத்தைக் கட்டிப் போட்டார்  சிவக்குமார். உண்மையில் இது அதிசயத்திலும் அதிசயம். இவரது அபார ஞாபக சக்தி-தமிழ் உச்சரிப்பு- குரல் வளம்- தான் எடுத்துக் கொண்ட கருத்தை மக்களிடம் பதிய வைப்பதற்காக அவர் காட்டிய ஈடுபாடு- இடையிடையே வெளிப்பட்ட முகபாவம் – சோர்வடையாத உடற்கட்டமைப்பு… இவை அனைத்தும் கேட்டாரைக் கிறுகிறுக்க வைத்தன.

கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு நாத்திகவாதி, “ஆண்டவனே நீ எங்கேடா இருக்கிறாய்…?” என்று கத்தியதாகச் சொன்ன போதும் சரி…,

தன் வயிற்றில் இருந்த பிள்ளையை வெளியே தள்ளுவதற்காகக் கயிற்றிலே தொங்கிக் கொண்டே முக்கிய ஒரு தாயின் கதையைச் சொன்ன போதும் சரி…,

பொங்கியாத்தாளின் துயர வாழ்க்கையை விவரித்த போதும் சரி….,

நெல்சன் மண்டேலாவின் வாயிலே மூத்திரத்தைப் பெய்த சிறைக் காவலரின் கொடுமையைச் சொன்ன போதும் சரி….,

எம்ஜிஆர்- கண்ணதாசன்- கலைஞர்-காமராஜர்- ராஜாஜி- என்ற வரலாற்றுப் பெரியோர்களின் வரிசையை அடுக்கிய போதும் சரி…,

மக்கள் கூட்டம் உற்சாகத்தில் ஊறித் திளைத்தது.

இவர்களைப் பற்றிய சம்பவங்களைச் சொல்லி அதற்குப் பொருத்தமான குறள்களை இணைத்த போது, இவரது தொழில் நுட்பம் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மொத்தத்தில் அந்த நாள் ஈரோட்டு மக்களுக்கு ஓர் ஆனந்தத் திருநாள். கேட்க வந்த தமிழ் அன்பர்கள் உள்ளமெல்லாம் ஆனந்தப் பரவசத்தால் அலை மோதியது.

82 வயதில் ஒரு மனிதருக்கு இது சாத்தியமா…. செய்து காட்ட முடியுமா….? ஆனால்… செய்து காட்டினார் திரு சிவக்குமார். நினைக்க நினைக்க நெஞ்சு பூரித்தது..! இதயம் விம்மியது. இந்த நிகழ்ச்சி முடிந்த போது எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அதே கேள்விகளை நீங்களும் கேட்டுக் கொள்ளலாம். அந்தக் கேள்விகளை கவிதை வரிகளாக்கிப் பூச்சரம் போல் தொடுத்துப் பார்த்துக் கொண்டேன்‌ அந்தக் கவிதை வரிகள் இவைதான்….!

“பெற்றோர் செய் புண்ணியமோ…!

பெரியோரின் நல்வாழ்த்தோ…!

கற்றவர்கள் தவப்பயனோ…!

 காசினியின் முன்வினையோ…!

சொற்றமிழை நீ தொடுத்துச்

சொல்மாரியாய்ப் பொழிந்தாய்….!

நற்றவமே யாம் செய்தோம்…!

நாயகனாய் நீ கிடைக்க!

கட்டுரையாளர்; வீரபாண்டியன்

மூத்த பத்திரிகையாளர், கவிஞர், காட்சி ஊடக நெறியாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time