பிரபல இயக்குனர் ஆஸ்கார் பர்ஹாடியின் ஈரானியப் படம் ‘A Hero’. மனசாட்சிக்கு பதில் சொல்ல கடமைப்பட்ட ஒரு எளிய மனிதனின் தவிப்புகளை அழகாக படம் பிடித்துள்ளது! கடன் பிரச்சினை, சிறை அனுபவம், மனைவியை காப்பாற்ற முடியாமை, சமுக வலைதளங்களின் வீரியம்… எனப் பல விஷயங்கள் சுவைபட அலசப்பட்டுள்ளன.
ஈரான் – பிரஞ்சு கூட்டில் பெர்சிய மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது., சிறையில் இருந்து, விடுமுறையில் வந்த ஒருவன் சந்தித்த நிகழ்வை மையமாக வைத்து விறுவிறுப்பாக செல்கிறது. இதற்கு ‘ஹாலிவுட் பிரஸ் அசோஷேசியனின்’ வெளி நாட்டு மொழி படங்களுக்கான ‘பெஸ்ட் மோஷன் பிக்சர்ச் அவார்டு’ கிடைத்துள்ளது. மேலும், அநேக விருதுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ரகீமை கடன் கொடுத்தவர் சிறைக்கு அனுப்புகிறார். சிறையிலிருந்த அவன், இரண்டு நாட்கள் விடுமுறையில் வருகிறான். அவன் மனைவி, கடன் தொல்லையால் அவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள். எனவே, தன் சகோதரி வீட்டிற்குச் செல்கிறான். அங்கு தான் அவனுடைய மகனும் இருக்கிறான்.
அவனுடைய காதலி, பேருந்து நிலையத்தில் கண்டெடுத்த ஒரு கைப்பையில், தங்க நாணயங்கள் உள்ளன. அதை வைத்து கடனை அடைக்கலாம் என நினைக்கிறான். இவன் சென்றபோது, இவனுக்கு கடன் கொடுத்தவர் கடையில் இல்லை. அந்த நாணயங்களை வைத்து கடனை முழுமையாக அடைக்க முடியாது. பாதி பணத்தை வாங்கிக் கொண்டு ரகீமை வெளியில் விட அனுமதிக்க கடன் கொடுத்தவர் தயாராக இல்லை. தன் மனைவியை வைத்து, வாழத் தெரியாதவனை எப்படி நம்புவது என்று அவர் நினைக்கிறார். 38 வயதான அவன் மனைவிக்கு வேறொரு திருமணம் செய்விக்க, அவளது உறவினர்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில், அந்த நாணயங்களை பெரு முயற்சி செய்து, அதற்குச் சொந்தமான பெண்மணியிடம் ரகீம் திருப்பித் தந்து விடுகிறான். கடன் தொல்லையில் சிக்கியிருப்பவன் செய்த இந்த நல்ல செயலை அனைவரும் பாராட்டுகின்றனர். இவனை சிறையில் சந்தித்து நேர்காணல் எடுத்து தொலைக்காட்சியில் வெளியிடுகின்றனர். அனைவரின் நன் மதிப்பிற்கும் உரியவனாகிறான். ஒரு அரசு சாரா நிறுவனம் நிதி திரட்டி, இவனை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி செய்கிறது.
உள்ளூர் நகராட்சி இவனுக்கு வேலை தருவதாக முதலில் அறிவிக்கிறது. இதற்கிடையில் அந்தச் சிறையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கொலையை மறைக்கத் தான், ரகீமிற்கு சிறை அதிகாரிகள் ஒத்துழைப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்தி உருவாகிறது. எனவே, ”யாரிடம் நகையைத் திருப்பித் தந்தீர்களோ, அவர் வந்து சொன்னால்தான், வேலை தர முடியும்” எனறு நகராட்சி அதிகாரி கூறுகிறார். ”நாணயங்களை உடனே ஏன் திருப்பித் தரவில்லை” என்ற கேள்வி வருகிறது.
நூல் கண்டு ஒன்றிலிருந்து, தொடர்ச்சியாக வரும் நூல் போல சம்பவங்கள் விரிவடைகின்றன. இதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. அஸ்கார் பர்ஹாடி கதையை நன்றாக சொல்லி இருக்கிறார்.
ரகீமின் மகன் ஸ்லவேஷூக்கு திக்குவாய். அவனுக்கு தன் தந்தை ஒரு நாயகனாக தென்படுகிறான். பள்ளி ஆசிரியர்களும், சக மாணவர்களும் அவனைப் பாராட்டுகின்றனர். அவனை பாராட்டு விழாவில் பேசச் சொல்கிறார்கள். திக்குவாய் உள்ள மகனை பேச வைத்து, அனுதாபம் தேடுகிறாய் என்று, கடன் கொடுத்தவர் ரகீமை குற்றம் சாட்டுகிறார்.
சிறை அதிகாரியின் பெயரும் இதில் சம்மந்தப்பட்டு விட்டதால், உண்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு இருக்கிறது. நாணயங்களின் சொந்தக்காரியோ, தன் கணவனுக்குத் தெரியாமல் அதை வாங்கி வைத்து இருக்கிறாள். எனவே அவள் தவறான முகவரி கொடுத்து விடுகிறாள். நகைக்கு சொந்தக்காரி யார் என்று வெளியில் தெரியாத நிலையில், அவனை அனைவரும் பொய்யன் என்று கூறி விடுகின்றனர்.
இப்படி சிக்கல் மேல் , சிக்கலாக வருகிறது. இறுதியில் ரகீம், மீண்டும் சிறை செல்ல துணிகிறான்.
இது எழுப்பும் கேள்விகள் மிகச் சாதாரணமானவை:
# அவனுக்கு கிடைத்த தங்க நாணயங்கள், கடனை முழுதும் அடைக்க ஈடாக இருந்திருந்தால் அன்றே அவன் சிறையில் இருந்து விடுபட்டிருப்பான். அவனுக்கு பாராட்டு கிடைத்து இருக்காது.
# கணவனுக்கு தெரியாமல் தங்க நாணயங்களை வாங்கிய பெண்ணுக்கு தன் பெயரை வெளியில் சொல்ல முடியாது. கணவனின் கடன் தொல்லையால் பிரிந்து, பெற்றோரோடு வாழும் மனைவிக்கு, நடந்தது அனைத்தும் தெரியும் என்றாலும் வெளியில் சொல்ல முடியாது. ஏனெனில், யாருக்கும் தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
# தொலைபேசியில் பேசும் போது நடந்த உரையாடலை அறிந்த அதிகாரிதான், இந்த செய்தி தொலைக்காட்சியில் வெளிவரக் காரணமாக இருந்தவர். அவர்தான் சூழலைப் புரிந்துகொண்டு, எல்லாரும் நம்புகிற ஒரு பொய்யை சொல்லச் சொல்கிறார். அது பொய் என்று தெரிய வந்ததும் உண்மையை விளக்க அவர் முயற்சிக்கிறார்.
கதை சரளமாக நகர்கிறது. ரகீமுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். ”நீ எளிமையாகவும் இல்லை, புத்திசாலியாகவும் இல்லை, அதானால்தான் கஷ்டப்படுகிறாய்” என இவனைப் பற்றி சரியாகச் சொல்கிறார் சிறை அதிகாரி.
சென்ற ஆண்டே வந்துவிட்ட இந்தப் படம் இந்த ஆண்டு, இந்தியாவில் வெளி வந்துள்ளது. எளிய மனிதர்கள் எதிர் கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை கலாபூர்வமாக நுட்பமாக வெளிப் படுத்துவதில் இயக்குனர் ஆஸ்கார் பர்ஹாடி மீண்டும் முத்திரை பதித்துள்ளார் என பல ஊடகங்கள் பாராட்டி உள்ளன!
திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply