இன்னும் கமுக்கம் காட்டுவதேன் தமிழக முதல்வரே?

13 பேர்  கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்?

”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக  நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘பிரண்ட் லைன்’ இதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் தான் இதைத் துணிந்து அம்பலப்படுத்தி உள்ளார் என்பது கவனத்திற்கு உரியது. தமிழக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிக்கையை வெளியிடவில்லை.

சமரசமின்றி நேர்மையாக உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளார் நீதிபதி அருணா ஜெகதீசன். அவர் என்றென்றும் தமிழக மக்களின் நன்றிக்கு உரியவராக இருப்பார்!  ”தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுவதற்கு தாமதப்படுத்துவதானது மேலும் மேலும் குழப்பங்களையும், பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டு உள்ளது கவனத்திற்கு உரியதாகும்.

காற்றிலும், கழிவு தண்ணீர் வழியாக நீரிலும், நிலத்தடியிலும் விஷத்தை பரப்பி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வந்தது. தோல் அரிப்பு, சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து மக்களை வாட்டி எடுத்த காரணத்தால் தான் அதை மூட வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள்!

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, தண்ணீரை திருடி பயன்படுத்தியது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலை உருவாக்கப்பட்டது முதல் புற்று நோய் அதன் சுற்றுவட்டார மக்களை தாக்கி வருவதற்கான உதாரணம், தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம் தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் ஸ்லாக் கருப்பு கழிவுகள்,  ஜிப்சம் ஆகிய கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று படு நாசகரமான சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வந்ததால் தான் சுற்றுவட்டார கிமாம மக்கள் சமரசமின்றி உறுதியாக போராடினார்கள்!

இவ்வளவு படுமோசமான ஸ்டெர்லைட் அன்றைய அரசியல் தலைமையான ஜெயலிதாவால் வரவேற்கப்பட்டு காலூன்ற வைக்கப்பட்டது தான் என்பதும், அது கருணாநிதி ஆட்சியிலும் தடையின்றி வளர்ந்தது என்பதும் வரலாறாகும்!

இந்த கொடூர சம்பவத்திற்கு முன்பாக ஆலையை மூட வேண்டி தொடர்ந்து, இடையறாது நூறு நாட்கள் மக்கள் போராடினார்கள்! அப்படி அஹிம்சை வழியான போராட்டத்தின் நூறாவது நாள் கலெக்டர் அலுவலகத்தை சூழ்ந்து தர்ணா போடாட்டம் நடத்த மக்கள் அணி வகுத்து வந்தனர். மக்களை போராட அனுமதித்த பிறகு கைது செய்து வண்டியில் ஏற்றி, சிறைச்சாலையில் கூட அடைக்கலாம்.

ஆனால், யாரும் முற்றிலும் எதிர்பாராவிதமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் போலீசார் சுட்டு கொன்றுள்ளதாக நீதிபதி அரூணா ஜெகதீஸன் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆணையம் கிட்டதட்ட நான்கு ஆண்டு விசாரணைக்கு பிறகே உண்மையை வெளியிட்டு உள்ளது. கடந்த மே 18 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் இந்த அறிக்கை வழங்கப்பட்டும் இதை வெளியிடாமல் மூன்று மாதமாக காலம் தாழ்த்தி கமுக்கமாக இருந்துள்ளது இன்றைய திமுக அரசு. இந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை திமுக அரசுக்கு செயல்படுத்துவதில் ஏதேனும் தயக்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

”கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை” என்பதை ஆணையம் சுட்டிக் காட்டி உள்ளது. மாறாக கண்மூடித்தனமாக மக்களை தாக்கி உள்ளது.

அதிலும் தொலைதூரத்தில் இருந்து குறி பார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

கவல்துறை தாக்குதலுக்கு பயந்து தப்பியோடிய போராட்டக்காரர்களின் பின்னந்தலை வழியாக குண்டுகள் ஊடுருவி செல்லும் வகையில் சுட்டுள்ளனர். ஏனெனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுடப்பட்டு இறந்துள்ளனர்.

அதே சமயம் மக்களால் தூத்துக்குடி கலவரத்தில் எந்த போலீசுக்கும் படுகாயம் ஏற்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அப்போதைய காவல்துறை தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் அப்பட்டமான தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை! போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அப்போதைய ஐஜி நடவடிக்கை எடுக்கவில்லை.

எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாத போதிலும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் கண்களில் படாமல் போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்வதற்கு என்றே போலீஸ்காரர் சுடலைக்கண்ணு  பயன்படுத்தப் பட்டு உள்ளார். இவர் மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் இடங்களிலும் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். இப்படியாக 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

போலீஸ் அத்துமீறல் தொடர்பாக 2018ல் தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள்  உள்ளிட்ட 17 பேர் மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது!

மே 18 ஆம் தேதி முதல்வருக்கு அறிக்கையை தருகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்

எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கையாள்வதில் தூத்துகுடி ஆட்சியர் வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டியுள்ளார். மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு முதல் நாள் எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் ஆட்சியர் வீட்டில் இருந்து கொண்டே உதவி ஆட்சியரை சமாதானக் கூட்டத்துக்கு தலைமை தாங்க வைத்துள்ளார்.

அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ், பொறுப்புகளை தட்டிக்கழித்து அலட்சியத்துடன் கோவில்பட்டியில் இருந்துள்ளார். ஆட்சியர் வெங்கடேஷ் எவ்வித யோசனையுமின்றி முடிவுகளை எடுத்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை  செய்துள்ளது ஆணையம்.

”தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்” என்றார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ”நீங்க எல்லாம் முதல்வாராக  இருக்க தகுதியானவரா ?” என வினா எழுப்பியவர் தான் ஸ்டாலின். ஆனால், தற்போது இந்த அறிக்கை தரப்பட்டு மூன்று மாதங்களாகியும் இதை கமுக்கமாக மறைத்துள்ளீர்களே! இது தான் முதல்வருக்கான தகுதியா ஸ்டாலின் அவர்களே? இதை வெளியிடாமல் மறைக்க என்ன காரணம்..? ஒன்றிய அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற தயக்கமா?

பூவுலகின் நண்பர்கள் கூறியுள்ளபடி இது அதிகாரிகள், காவல்துறையினரை மட்டும் காரணம் சொல்லி கடக்கும் விஷயமல்ல, அன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டி.ஜி.பி.திரிபாதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகிய மூவருமே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், இதை செய்யும் ஆளுமை திமுக அரசுக்கு உண்டா..? என்பது தான் அனைவருக்குமான சந்தேகமாக உள்ளது. ஆனால், திமுகவுடன் தொண்டர்களும், கூட்டணி கட்சிகளும் இதை உரிமையோடு வலியுறுத்தி, இந்த அரசை செயல்பட வைக்க வேண்டும்.

”தூத்துக்குடி போராட்டத்தில் மக்கள் தான் குற்றவாளி. எதற்கெடுத்தாலும் போராடுவதா?” என்றெல்லாம் அன்று கேட்ட நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, ‘குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி’ அரசை வலியுறுத்த வேண்டும். அது தான் அன்றைய அவரது தவறான பேச்சுக்கு குறைந்தபட்ச பரிகாரமாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time