சமூக பேரழிவைத் தரும் ஆன் லைன் ரம்மியில் சமரசமா..?

-ம.வி.ராஜதுரை

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் அடிக்கடி நடக்கும்  இளைஞர்களின் தற்கொலைகள், குடும்பங்கள் நிலை குலைந்து நடுத் தெருவுக்கு வந்து நிற்கும் அவலம்.. என  பல கொடூர விளைவுகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. தமிழக அரசு இந்த சூதாட்டத்தை தடை செய்யுமா? அல்லது தடுமாறுமா..?

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

ஆயினும்  இது, திறமைக்கான விளையாட்டு என்ற போர்வையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி பெற்று பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் ரம்மி நடத்தும் அந்நிய நாட்டு  நிறுவனங்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட  ரம்மி சூதாட்ட செயலிகள் தற்போது  செயல்பாட்டில் உள்ள போதிலும், நான்கைந்து செயலிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவர் ரம்மி விளையாட செயலிக்குள் நுழைந்ததும் அவருக்கு ஒரு ஊக்கத்தொகை  கிடைக்கிறது. இந்த போனஸ் என்பது மீனுக்கு தூண்டிலில் வைக்கப்படும் புழு போன்றது.

பையில் இருக்கும் பணத்தை எடுக்காமலே இந்த போனசை வைத்து முதலில் விளையாட வைக்கிறார்கள். முதல் விளையாட்டில் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியின் மூலம் கிடைக்கும் பணத்தை  வங்கிக் கணக்கிலும் மாற்றிக் கொள்ள முடியும்.  பத்தாயிரம் ரூபாய்  திடீர் என தன் வங்கி கணக்குக்கு வந்தால் எப்படி இருக்கும்.?

இந்த பத்தாயிரம் , பத்து லட்சமாக பத்து கோடியாக ஆனால் எப்படி இருக்கும்.?

இப்படி கனவு காண வைப்பார்கள். அடுத்ததாக சிறிய வெற்றி,  சிறிய தோல்வி, இப்படி போகும் விளையாட்டு. கடைசியில் தோல்வி மயம் தான். கையில் இருக்கும் பணத்தை மட்டும் அல்ல, கடன் வாங்க வைத்தும் உறிஞ்சி விடுவார்கள்!

இழந்த பணத்தை மீட்டே ஆக  வேண்டும் என்ற வெறித்தனம் ஏற்படும்.  பொய் சொல்லி உறவினர்களிடம் நண்பர்களிடமும் பெரிய தொகைகளை கடன்  வாங்குவார்கள். அனைத்தும் காலியாகும். ஒரு கட்டத்தில்  இருபது லட்சம் முப்பது லட்சம் என்று சக்தியை மீறிய கடன் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முடிவை நாடுவார்கள்.

புதுவை விஜயகுமார், விழுப்புரம் பச்சையப்பன்,உள்பட ஏராளமானோர் இப்படி பலியாகி விட்டனர்.

இந்த விளையாட்டில் ஏமாந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் சென்னையில் பணியாற்றி கொண்டிருந்த  போலீஸ்காரர் வேலுச்சாமி. சூதுக்கு ஆட்பட்டு கையறுந்த நிலையில் உள்ள  காவலர்களே நூற்றுக்கணக்கில் இருப்பர். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது.கடலில் மிதக்கும்  பெரிய ஐஸ் கட்டி போல வெளியில் தெரியும் பாதிப்பு கொஞ்சமே.,!

தமிழகத்தில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி!

“சூதாடிகள் ஒன்றைப் பெற்று நூறை இழந்து விடுவார்கள். நன்மையைப் பெற்று வாழ்வதற்குப் பிறகு ஒரு வழியும் இல்லாமல் போய்விடும்”  என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எச்சரித்தார்.

“ஒன்றெய்தி நூறிழக்கும்  சூதர்க்கும் உண்டாங்கோல் 

நன்றெய்தி வாழ்வதோர்  ஆறு”(குறள் 932).

வள்ளுவர் முதலாக ஆன்றோர் பலர் எச்சரித்தும், விட்டில் பூச்சிகளாய் சூதுக்கு பலியாவது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு வந்த பிறகு நிலைமை ரொம்ப மோசம்.!

இந்த விளையாட்டு குறித்து சைபர் கிரைம்  அதிகாரியிடம் கேட்டபோது, ” எதிர்முனையில் விளையாடுவது மனிதர்களே அல்ல,  ரோபோட்டுக்கள் தான். எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் வெற்றி பெற முடியாத அளவுக்கு அந்த ரோபோட்டுகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன” என்றார்.

கண்ணுக்குத் தெரிந்து ஆன்லைன் ரம்மி என்னும் அரக்கன் அப்பாவி மக்களின் வாழ்க்கையை சூறையாடிக் கொண்டிருக்கும் போது, உடனடியாக தடுத்து நிறுத்தாமல் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இவ்வளவு தூரம் காலம் தாழ்த்துவது ஏன்? என்ற ஆதங்கம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.

அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகவில்லை. மேலும், இப் பிரச்சினையில் மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு வலுவான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

பிரபல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. ”இவர்கள் விளம்பரங்களில் நடிப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த சூதாட்டப் படுகுழியில் விழுந்து அழிகிறார்கள்” என பல வழக்குகள் கோர்டில் நடக்கின்றன! தங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு இந்தப் பேரழிவை ஏற்படுத்தலாமா..? என சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் மனசாட்சியைத் தொட்டு சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில்  கடந்த ஜூன் 10 ஆம் தேதி குழுவை அமைத்த முதல் அமைச்சர் ஸ்டாலின்,

இந்த விளையாட்டால் சமூக பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், சூதாட்ட விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் உள்ளிட்ட விவரங்களை உரிய ஆதாரங்களுடன்  தரும்படியும் அதோடு இந்த சூதாட்டத்தை தடுப்பதற்கான சட்ட ஆலோசனைகளையும் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

நீதியரசர் சந்துரு தம் விரிவான அறிக்கையை  ஜீன்  27ஆம் தேதி அரசிடம் வழங்கினார். அந்த அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்தியுள்ள கொடூர பாதிப்புகளையும், அவற்றை தடுப்பதற்கான  சட்ட ஆலோசனைகளும் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த அறிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இது தவிர, [email protected] என்ற இணையதளத்தின் வாயிலாக  பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரின் கருத்துக்களையும் தமிழக அரசு கேட்டுப் பெற்றுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இவ்வளவு முன்னேற்பாடுகளுக்குப் பிறகு முதலமைச்சரின் மு .க. ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது  என்ன முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இக் கூட்டத்தை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படிப்பட்ட நடவடிக்கை எதுவும் இல்லை.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.  கடந்த 18ஆம் தேதி முதலமைச்சர் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோதும் அதே விமர்சனத்தையும் கேள்வியையும் தான் முன்வைத்தார்.

“சூதாட்டம் பொதுமக்களை பாழ் படுத்துவது,அது  தடுக்க வேண்டியது என்று உலகில் யாரை கேட்டாலும் சொல்வார்கள்.  அதற்கு எதுக்கு  கருத்து கேட்பு, இவ்வளவு காலதாமதம்.? இது செயல்படாத அரசு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்” என்று சொல்லி நகைத்தார்‌.

மத்தியில் உள்ள அரசாங்கம் இதில் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி போட்டு வருமானம் பார்க்கவே வழி வகை செய்துள்ளது. ”இதை மத்திய அரசே தடுத்துவிட்டால் மிகவும் நல்லது” என பல மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசுக்கு கடிதங்ககள் எழுதியும் பயனில்லை. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டு வந்தன. ஆனால், அந்த சட்டத்தை நீதிமன்றம் சென்று செல்லாமல் ஆக்கிவிட்டன ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்!

ஆன போதிலும், இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா மேகாலயா போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் இதை தடை செய்துள்ளன. மீறி விளையாடுபவர்களுக்கு பெரும் அபராதமும், தண்டனையும் தருகின்றன! இதன் மூலம் அங்குள்ள இளைஞர்கள் கணிசமான அளவில் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் கேரளாவில் அடுத்தடுத்து என 20 தற்கொலைகள் நடந்துவிட்ட நிலையில்  ஆன்லைன் சூதாட்டத் தடுப்பு சட்டத்தை மீண்டும் விரைவில் கொண்டு வர உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது. நீதிமன்றங்களும் இதில் மக்கள் மீது கருணை காட்ட வேண்டும்.

நமது அறம் இதழில் இது குறித்து சென்ற ஆண்டே ஒரு விரிவான கட்டுரை வெளியிட்டோம்.

சூதுகவ்வும் ஆன்லைன் விளையாட்டுகளும், சூனியக்கார அரசுகளும்!

தமிழக அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும். ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு  ஏற்ப எதிர்வினை ஆற்றவேண்டும். சூதாட்ட அரக்கனின் கோரப்பிடியில் இருந்து  மக்களை விரைந்து விடுவிக்கும் வகையில் நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும். இதில் தயக்கமோ, தடுமாற்றமோ கூடாது. குடும்பங்களை சின்னா பின்னமாக்கும்”ஆன்லைன் ரம்மி” அரக்கனிடம் இருந்து மக்களை உடனே காப்பாற்றுங்கள் தமிழக முதல்வரே!

கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time