மருத்துவ சிகிச்சையில் ஏமாறாதிருக்க கற்றுத் தரும் நூல்!

-சாவித்திரி கண்ணன்

‘இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்’ என்ற நூல் இந்த காலகட்டத்திற்கான ஒரு அவசியத் தேவை! கருணையற்ற கார்ப்பரேட் மருத்துவத்திடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் சகல வழிமுறைகளையும் எளிமையாக விளக்குகிறது! நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் வாசிக்க வேண்டிய நூலாகும்!

இன்றைக்கு நாம் சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று மருத்துவ தொழிலில் மனிதாபிமானமற்ற நிலைமையாகும். மருத்துவத்தை லாபம் கொழுக்கும் வணிகமாக பார்க்கும் மனநிலைக்கு நவீன சமூகம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. வணிகத்தில் கடை பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நெறிமுறைகளைக் கூட பின்பற்ற மறுத்து நோயாளிகளை ஏமாற்றியும், அறியாமைக்குள் ஆழ்த்தியும் தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வெளிப்படைத் தன்மையற்ற தன்மை, நோயாளிகளுக்கு எந்த தகவல்களையும் தெரிவிக்காமல் பூடகமாக சிகிச்சை அளிப்பது, இஷ்டப்படி பணம் வசூலிப்பது என்ற வகையில் நாளும், பொழுதும் மிகக் கசப்பான அனுபவங்களை நமக்கு தருகின்றன தனியார் மருத்துவமனைகள்.

இத்தகைய இக்கட்டான சூழ் நிலைமையில் நமக்கு வெளிச்சம் பாய்ச்சும் விளக்காக, ஏமாறாமல் சுதாரித்துக் கொண்டு சிகிச்சை பெற ஏதுவாக மிக விளக்கமாகவும், எளிமையாகவும் இந்த அரிய நூலை படைத்துள்ளார் மருத்துவர் முகமது காதர் மீரான். இவர் காந்தியவாதியான சுசிலா நாயர் சேவா கிராமத்தில் நிர்மாணித்த கிராமப்புற மருத்துவ கல்லூரியில் பயின்றவர்! ‘காந்திய அறநெறிக் கோட்பாடுகளுடன் மருத்துவ தொழில் இருக்க வேண்டும்’ என்ற இவரது ஆவல் இவரது எண்ணங்களிலும், எழுத்துக்களிலும் இயல்பாக வெளிப்படுகின்றது.

இப்புத்தகம் முன்னதாக இவர் எழுதிய Patients’ Rights in India என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஆகும்.

ஒவ்வொரு நோயாளிக்கும் சட்ட ரீதியாக இருக்கும் உரிமைகள் என்ன? அதைப் பெறும் வழிமுறைகள் என்ன? என்பதை பல நடைமுறை நிகழ்வுகளை மேற்கோள் காட்டி,  அதற்குரிய நீதிமன்ற தீர்ப்புகளையும்  மேற்கோள் காட்டி, அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார் இளம் மருத்துவர் முகமது காதர் மீரான்.

மருத்துவர் முகமது காதர் மீரான்

இந்த நூலில் இவர் எழுதியவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் தலைப்பு வாரியாக பதிவிட்டாலே போதும் என்று தோன்றுகிறது.

# ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்கு வழங்கப்படவுள்ள சிகிச்சை என்ன என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. அதை தெரிவிக்க வேண்டிய கடமை மருத்துவருக்கு உண்டு. சிகிச்சையின் முடிவில் மருத்துவமனையானது நோயாளிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு விபரங்களையும் – அதாவது மருத்துவ பதிவு மற்றும் மருத்துவ அறிக்கைகளை – அவருக்கு தர வேண்டும்.

# சிச்சைக்கான கட்டணங்கள் விஷயத்தில் மருத்துவமனைகள் பூடகமாக இருக்க கூடாது, அதை தெளிவாக சொல்ல வேண்டும். எழுத்து பூர்வமாகத் தந்துவிட வேண்டும்.

# நோயாளி விரும்பும் பட்சத்தில் இரண்டாவது ஆலோசனைக்கு அவர் வேறு மருத்துவரை நாடவும் கண்டிப்பாக உரிமை உண்டு.

# எல்லா நோயாளிகளுக்கும் பாகுபாடற்ற சிகிச்சையை ஒரு மருத்துவமனை உறுதிபடுத்த வேண்டும்.

# ‘பாதுகாப்பான மற்றும் தரமான சிகிச்சைக்கான உரிமை’ எந்த ஒரு நோயாளிக்கும் மறுக்க கூடாது. நோயாளி விரும்பும் பட்சத்தில் மாற்று சிகிச்சை முறையை நாடுவதற்கான எல்லா உரிமைகளும் அவருக்கு உண்டு.

# ‘எந்த இடத்தில் மருந்து, மாத்திரைகளை வாங்கலாம்’ என தீர்மானிக்கும் உரிமை நோயாளிக்கு உண்டு. ‘இந்த இடத்தில் மட்டுமே வாங்க வேண்டும்’ என கட்டாயப்படுத்தக் கூடாது.

# சிகிச்சை தொடர்பாக திருப்தி கிடைக்காத பட்சத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் உரிமை நோயாளிக்கு நிச்சயமாக உண்டு.

# புகார் தெரிவிப்பதற்கும், மேல் முறையீடு செய்வதற்கும் நோயாளிக்கு உரிமை உள்ளது.

# ‘மருத்துவ சிகிச்சையின் போது மருத்துவரின் கவனக் குறைவால் மரணம் ஏற்பட்டது’ என சந்தேகம் எழுந்தால் செய்ய வேண்டியவை என்ன?

# அரசு காப்பீடு திட்டத்தின் மூலமாக பயன்பெறும் உரிமை இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. இதில் தனியார் மருத்துவமனைகள் ஏகப்பட்ட தகிடு தத்தங்கள் செய்கிறார்கள். ஆக, இங்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

அரசின் காப்பீடு திட்டத்தின் பெரும் பகுதி பணம் தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றன. இதனால், அரசாங்க மருத்துவ கட்டமைப்பு கடுமையான பாதிப்புக்கு ஆளாவதையும் சுட்டிக் காண்பிக்கிறார். ”அரசாங்கத்தின் நோக்கம் மக்களுக்கான ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடமையை கை கழுவி, தனியார் மருத்துவமனைக்கு நோயாளியை தள்ளுவதாக உள்ளது” என கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வளவையும் கூறும் ஆசிரியர் நோயாளிகளின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். மருத்துவரோடு இணக்கமாக இருக்க வேண்டியதையும் வலியுறுத்துகிறார்.

இறுதியாக நோயாளிகளின் உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தின் தேவை குறித்தும் எழுதியுள்ளார். அத்தகைய இயக்கம் ஒவ்வொரு பகுதியிலும் தேவைப்படுகிறது என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளார்.

இவரது Patients’ Rights in India என்ற ஆங்கில புத்தகம் Livelaw, Newsclick உள்ளிட்ட பல தேசிய செய்தி தளங்களில் வெளியாகி முக்கிய கவனம் பெற்றது. இதன் தமிழ் பதிப்பை எளிய தமிழில், சிவிலியன் வாய்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளமை உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. நூலின் விலை சற்று அதிகமாக தெரிந்தாலும், அரிய தகவல்களுக்காக அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.முடிந்தால் இந்த நூலை அனைத்து மக்களுக்குமான மலிவு பதிப்பாகக் கூட கொண்டு வரலாம்.

இந்நூலின் அணிந்துரையில் நீதியரசர். அரிபரந்தாமன்  இந்த நூலின் அவசியம் மற்றும் தேவை குறித்து சிறப்பாக எழுதி ஆசிரியரை மனமார வாழ்த்தியுள்ளார். முன்னுரையை மூத்த வழக்கறிஞரான முனைவர் அழகுமணி  எழுதியுள்ளார்.

இந்த நூல் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய நூலாகும். இன்றைய கருணையில்லா கார்ப்பரேட் மருத்துவத்தை எதிர்கொள்வதற்கான துணிவையும், தெளிவையும் ஒருசேரத் தருகிறது.

நூல் விமர்சனம்; சாவித்திரி கண்ணன்

நூல்; இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்

ஆசிரியர்; மருத்துவர் முகமது காதர் மீரான்

வெளியீடு; சிவிலியன் வாய்ஸ் பப்ளிசர்ஸ்

166, தம்பு செட்டி தெரு, சென்னை -600001

விலை;  ரூ 290

கைபேசி; 9500933864

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time