வெற்றிலையில் இத்தனை பலன்களா…? வாவ்…!

-எம்.மரிய பெல்சின்

ஒன்றா, இரண்டா எத்தனையோ மருத்துவ பலன்கள் வெற்றிலையில் உள்ளன! இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, பித்தம்,கபம் தொடங்கி ஆண்மை வீரியம் வரை எக்கச்சக்க நோய்களுக்கு தீர்வு தரும்! மங்கள நிகழ்ச்சிகளில் இதுவே  மணி மகுடம்!

மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளுள் ஒன்று வெற்றிலை. மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் இந்த வெற்றிலையைச் சாப்பிடச் சொன்னாலே பலர் முகம் சுளிக்கிறார்கள். புகையிலை சேர்த்துப் போட்டு வெற்றிலையின் மீதான பெயரை கெடுத்து விட்டது இந்தச் சமூகம்.

அதனாலேயே நம்மில் பலர் வெற்றிலையா? என்று தலைதெறிக்க ஓடுகிறார்கள். ஆனால், நமது முன்னோர் குறிப்பாக பாட்டிகளின் இடுப்பில் வைத்திருக்கும் சுருக்குப்பையில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பையும் சேர்த்து வைத்திருப்பார்கள். வெற்றிலையின் மருத்துவ குணம் அறிந்து அதை அவ்வப்போது சாப்பிட்டு நலம் பெற்றனர். ஆனால், வெற்றிலையுடன் என்னென்ன பொருள்களை எல்லாமோ சேர்த்து பீடாவாக்கி அதன் மருத்துவ குணத்தையே குன்றச் செய்துவிட்டார்கள்.

வெற்றிலைக்கு தாம்பூலம், மெல்லிலை, வெள்ளிலை, மெல்லடகு, தாம்பூலவல்லி, திரையல், நாகவல்லி என வேறு பெயர்கள் உண்டு. வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இது ஒருவகை கொடிவகைப் பயிராகும். வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உண்ட உணவு செரிமானமாவதுடன் உடல் கழிவுகள் வெளியேறும்; மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்; கபம் வெளியேறும். இன்னும் பல உடல் பிரச்சினைகள் சரியாகும். வாத, பித்தக் கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்ளும்.

இன்றைய சூழலில் வெற்றிலை பற்றி அதிகமாக பேச வேண்டியுள்ளது. வெற்றிலையை போதை வஸ்து என்று நினைக்கிறார்கள். வெற்றிலை என்றதும் சிலர் அது தெய்வத்துக்கு எதிரானது என்றும், வேறு சில தவறான கண்ணோட்டத்துடனே பார்க்கிறார்கள். முற்காலங்களில் வெற்றிலை இல்லாமல் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. திருமணம், சடங்கு, கோவில் திருவிழா என எல்லா சுப நிகழ்வுகளிலும் வெற்றிலை இடம் பெறும். இன்றைக்கும் கூட சிலர் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போது வெற்றிலை, பாக்கு, பழம் சேர்த்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதே போல் தாம்பூலம் தரித்தல் என்னும் பழக்கம் இடம் பெற்றிருந்தது.

முற்காலத்தில் மூன்று வேளையும் வெற்றிலை சாப்பிட்டிருக்கிறார்கள். காலையில் வெற்றிலை போடும் போது பாக்கு அதிகம் சேர்த்துச் சாப்பிட்டால் மதியம் வெயில் அதிகரிக்கும்போது ஏற்படும் பித்தத்தைத் தடுக்கும். மதிய உணவுக்குப் பிறகு சுண்ணாம்பு அதிகம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் உணவில் உள்ள வாதத்தை – வாயுவை கட்டுப்படுத்தும்.  இரவில் வெற்றிலை அதிகம் சேர்த்துச் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். இப்படித்தான் தாம்பூலம் தரித்தல் முறை பின்பற்றப்பட்டது.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டால் அது வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அப்படியொரு நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக வாய்வுக் கோளாறினால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை சாப்பிடுவதன் மூலம் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். இன்றைக்கு நாம் உண்ணக்கூடிய பொருந்தாத சில உணவுகளால் வாய்வுக் கோளாறு ஏற்பட்டு சிலர் மிகவும் அவதிப்படுவதைக் காண முடிகிறது. சிலருக்கு வாய்வுக் கோளாறு வீரியமடைந்து இதயக் கோளாறு போலவே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது தலை கிறுகிறுப்பு, மயக்கம், இதயப்பகுதியில் வலி என பல அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க வேறு சில எளிய மருத்துவங்கள் இருந்தாலும்கூட வெற்றிலை போடுவது நல்ல தீர்வைத் தரும்.

விருந்து நிகழ்வுகளின் போது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்திருப்பார்கள். உணவு உண்டு முடித்ததும் வெற்றிலை சாப்பிடுவது வழக்கம். இன்றைக்கும் கிராமங்களில் இதை காண முடியும். இறைச்சி உணவுகளை உண்பவர்கள் வெற்றிலை சாப்பிட்டால் உண்ட உணவு செரிமானமாகும். இன்றைக்கு இறைச்சி உணவின் நுகர்வு அதிகரித்து வருவதால் வெற்றிலை உண்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. வெற்றிலை பாக்கு இல்லாவிட்டாலும் வெற்றிலையுடன் மிளகு சேர்த்து சாப்பிடலாம். பூச்சிக்கடி, காணாக்கடி, விஷக்கடி, தோலில் அலர்ஜி, அரிப்பு மற்றும் தோல் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட இரண்டு வெற்றிலையுடன் 5 மிளகு, சிறிது கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டால் நலம் பெறலாம்.

வெற்றிலை பயன்படுத்தும் போது அதன் காம்பினை நீக்கி பயன்படுத்துவது நல்லது. இஞ்சியின் தோலினை புற விஷம் என்றும், கடுக்காயின் விதையை அக விஷம் என்பார்கள். அதைப் போல வெற்றிலையில் அதன் காம்புப் பகுதியைச் சொல்லலாம். மேலும் வெற்றிலை மெல்பவர்கள் எடுத்தவுடன் அதன் சாற்றை விழுங்கக்கூடாது. நன்றாகக் கடித்து கூழாக்கியதும் முதல் இரண்டு உமிழ்நீரினை துப்பிவிட வேண்டும். அதன் பிறகே அதன் சாற்றை விழுங்க வேண்டும்.

முதல் நீர் நஞ்சு என்றும், இரண்டாவது பித்த சூட்டினை அதிகரிக்கும் என்றும், மூன்றாவது அமுதம் என்றும், நான்காவது இனிக்கும் என்றும் கூறுவர்.

வெற்றிலையை இப்படி உணவுக்குப் பிறகு சாப்பிடுவதைத் தவிர ரசமாகவும், பஜ்ஜியாகவும், சட்னியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். வெற்றிலைக் குழம்பும்கூட செய்து சாப்பிடுகிறார்கள். தலைவலி வரும்போது வெற்றிலைச் சாற்றுடன் கற்பூரம் சேர்த்துக் குழைத்து நெற்றியில் தடவினால் வலி நீங்கும். அதே போல் 100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெற்றிலை சேர்த்துக் காய்ச்சி படை, சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்கள் வெற்றிலையை தணலில் (தீயில்) வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் சுரக்கும்.

இரைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்படுபவர்கள் முற்றிய வெற்றிலைச் சாறு இரண்டு அவுன்ஸ் எடுத்து அதனுடன் மூன்று மிளகு அதே அளவு சுக்குப் பொடி, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆண்மைக் குறை உள்ளவர்கள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் ஜாதிக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இரண்டு வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்ப்பதுடன் ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்திரி தலா ஒரு அரிசி எடை, கஸ்தூரி ஒரு கடுகு அளவு, ஏலக்காய் ஒன்று, லவங்கம் ஒன்று, பாதாம்பருப்பு மற்றும் முந்திரி தலா அரை பருப்பு, உலர் திராட்சை 4, குல்கந்து கால் டீஸ்பூன் சேர்த்து இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் ஊறும். அத்துடன் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற்று தாம்பத்திய உறவில் நீடித்திருக்க உதவும்.

வெற்றிலை போடும் போது துளசி வேரினை ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக்கொண்டாலும் ஆண்மைக்குறை நீங்கும். ஏலக்காய், கிராம்பு சேர்த்துச் சாப்பிடுவதன்மூலம் வாயில் கிருமிகள் சேராமல் பார்த்துக் கொள்ளும். இன்றைக்கு சிலர் வெற்றிலை போடுவதை கொஞ்சம் எளிமைப் படுத்தியிருக்கிறார்கள். வெற்றிலையுடன் கடலை மிட்டாய் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். இப்படிச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ… ஏதோ ஒரு வகையில் மக்கள்  வெற்றிலையை சாப்பிட்டால் பலன்கள் கிடைக்கும். அல்சர், வயிற்றுப் புண் உள்ளவர்கள் வெற்றிலை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதை சரி செய்துவிட்டு தாராளமாக வெற்றிலை சாப்பிடலாம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time