மக்களால் உருவாக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம்!

-வெ.கிருபாந்நதினி

ஈர நிலங்கள் என்பவை நமக்கு இயற்கை தந்த கொடையாகும்.  நகர விரிவாக்கங்களின் பெயரால் அவற்றை அழிய விடாமல் பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் ராம்சார் அங்கீகாரமாகும்! அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 14 ராம்சார் நிலங்களில் மிக வித்தியாசமானது வடுவூர் பறவைகள் சரணாலயம்!

உலகில் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 1971-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஐ.நா. அமைப்பின் ஏற்பாட்டில் உலக நாடுகள் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு தான் ராம்சார் உடன்பாடு ஆகும்.தற்போது உலகெங்கிலும் 2,400 க்கும் மேற்பட்ட ராம்சார் தளங்கள் 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு மேல் உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள ஈர நிலங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்கும் நோக்கில் ராம்சார் அங்கீகாரம் தரப்படுகிறது. ஈரநிலப் பாதுகாப்புக்காக பன்னாட்டுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், உலகளாவிய ஈரநிலம் தொடர்பான பிரச்சினைகளை அலசுவதற்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமும், ஈரநிலங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான வசதியை இச்சாசனம் ஒப்பந்தத் தரப்பினருக்கு வழங்குகிறது.

ராம்சார் ஈரநிலங்கள் இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை 52 ஆகவும், தமிழ்நாட்டில் இரண்டு மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்தியாவில் 75 ஆக அதிகரித்துள்ளது. இதே போல தமிழகத்தில் சென்னை பள்ளிக் கரணை சதுப்பு நிலம், கடலூர் பிச்சாவரம் சதுப்பு நிலம், செங்கல்பட்டு கரிக்கில் பறவைகள் சரணாலயம் போன்ற 14  ஆக அதிகரித்து உள்ளன. இதில் வடுவூர் பறவைகள் சரணாலயம் தனித்துவமானது. மக்களுக்காக மக்களால் உருவாக்கியது.

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி தாலுக்காவில் மற்றொரு டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது வடுவூர் என்ற கிராமம். வடுவூர் அக்ராஹாரம், வடுவூர் வடபதி மற்றும் வடுவூர் தென்பதி ஆகிய மூன்று கிராமங்களையும் சேர்த்து வடுவூர் என்று அழைக்கின்றனர்.

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடுவூர்அக்ராஹாரம் பஞ்சாயத்தில் ஆயிரத்துக்கும் குறைவான வீடுகளே உள்ளன. வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக குளங்களையும், பசுமையான நெல் பயிர்களையும் கண்களுக்கு குளிர்ச்சியாக காணலாம்.பெரும்பாலான மக்கள் விவசாயமே செய்கின்றனர். விவசாயத்திலும் நெல் அதிகமாக பயிரிடுகின்றனர்.

நெல்லிற்கு அடுத்தபடியாக உளுந்து மற்றும் பச்சைப்பயிறு சாகுபடி செய்கின்றனர். நிலக்கடலை, கரும்பு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவையும் விவசாயம் செய்கின்றனர்.  சில பெண்கள் நூறு நாள் வேலைக்குச் செல்கின்றனர்.

ஏரிகளை வெட்டி ஆற்று நீரே சேமிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நீர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடகு மாவட்டத்தில் ஆறாக ஆரம்பித்து தமிழிநாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகில் வங்காள விரிகுடா கடலில் களக்கிறது. இதன் மொத்த நீளம் 800 கிலோ மீட்டர். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள மேட்டூர் அணையில் சேகரிக்கும் நீர் ஆறுகளாக பிரிந்து செல்கிறது. அதில் ஒரு ஆறு வடுவூரில் உள்ள ஏரியையும் நிரப்பிவிட்டு செல்கிறது.

இப்படி சேமிக்கும் நீர் மீன் வளர்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கும் மக்கள் பயன்படுத்துகின்றர். இதனால் பல விதமான நுண்ணுயிர்கள், தாவரங்கள், தட்டான்கள், பட்டாம்பூச்சிகள், தவளைகள், பாம்புகள், நீர் நாய் என பல உயிர்கள் வாழ்கின்றன. அதில் முக்கியமாக நீர் பறவைகள்.

அதிலும் வடுவூரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொல்வில் உள்ள கோடியக்கரைக்கு ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டு பறவைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வலசை வரும் பறவைகள் ஓய்வெடுக்க இந்த வடுவூர் ஏரியில் உள்ள பல்லுயிரினச் சமநிலையை பயன்படுகின்றன.  இந்த கிட்டத்தட்ட128.10 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.

காலப் போக்கில் வெளி நாடுகளிலிருந்து பறவைகள் இந்த ஏரியை பயன் படுத்த தொடங்கியதை அறிந்த மக்கள் அவர்களின் விவசாயம் மற்றும் அவர்களின் சில செயல்பாடுகளை மாற்றிக் கொண்டதுடன் மேலும் சுற்றளவை அதிகரிக்க அவர்களின் விவசாய நிலங்களை தானமாக வழங்கினர். வடுவூர் மக்களிடம் விசாரித்த பொழுது ‘தென்னை மரம், மீன் பிடித்தல் மற்றும் விவசாயம் ஆகிய வருமானம் தரக்கூடிய செயல்களை விட்டு, பறவை சரணாளயத்தை பாதுகாத்து வருகிறோம்’ என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் பறவைகள் விவசாய நிலங்களில் பயிர்களை உண்பதால் மிகுந்த பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால் வேதனையடைந்தாலும் சிறிது நாட்களில் புரிந்து கொண்டதால் மேலும் கிட்டத்தட்ட 150 குன்றுகளை அமைத்துள்ளனர். பின்பு பறவை இனங்களின்  எண்ணிக்கை அதிகரித்து ஏரி முழுவதும் பறவைகளாக காட்சியளித்தமையால் 1999 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கபட்டது.

ராம்சார் அங்கீகாரம் பெற நிபந்தனைகள் (Criteria)

அறிய வகை  உயிரினங்கள் இருக்க வேண்டும்.

அழிந்துவரும், அல்லதுஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்கள் இருக்க வேண்டும்

குறிப்பிட்ட உயிர் புவியியல் பகுதியில் பல்லுயிரினங்களை சமநிலைபடுத்தம் தாவர மற்றும் விலங்கு இனங்கள் இருத்தல் வேண்டும்.

ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் முக்கியமான வாழ்க்கை சுழற்சிக்கு அடைக்களம் தரும் தாவரமற்றும்விலங்குகள் இருத்தல் வேண்டும்.

ஒருசதுப்புநிலம்தொடர்ந்து 20,000க்கு அதிகமான நீர்ப்பறவைகளை ஆதரிக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவேண்டும்.

ஒரு இனத்தின் மொத்த எண்ணிக்கையில் 1% நீர்ப் பறவை இனம் ஈரநிலத்தைச் சார்ந்து இருத்தல் வேண்டும்.

ஆகிய ஆறு நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் முக்கியத்தவம் வாய்ந்த்தை உறுதிப்படுத்த ராம்சார் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆகவே, இது போன்ற பகுதிகள் இருந்தால் யாருமே கூட அரசுக்கு தெரியப்படுத்தி ராம்சார் அங்கீகாரம் பெற்று அந்த இடத்தை பாதுகாக்கலாம். இயற்கை நன்றாக இருந்தால் தான் மனித குலமும் நன்றாக இருக்க முடியும்.

மேலே கூறியுள்ள நிபந்தனைகளுக்கு தகுந்தவாறு குறிப்பிடத்தக்க நீர்பறவைகளான செண்டு வாத்து, நீளவால் தாழைக் கோழி, இராக்கொக்கு, நத்தைக் கொத்தி நாரை ஆகியவையும் அழியும் நிலையில் உள்ள அறிவால் மூக்கன், சுடலைக் குயில் ஆகியவையும் வடுவூர் பறவைகள் சரணாலயத்தை சார்ந்து உள்ளன.  இவை அனைத்தும் ராம்சார் திட்டத்துக்குள் அடங்குவதால் தற்போது வடுவூர் பறவைகள் சரணாலயத்துக்கு ‘ராம்சார்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது மக்களுக்கான அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.

 தமிழ்நாட்டில் ராம்சார் அங்கீகாரம் உடைய ஈரநிலங்கள்.

கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம்

#  கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

#  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

#  வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

#  பள்ளிக்கரணை சதுப்புநிலம்

#  பிச்சாவரம்

#  மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா

#  உதயமார்த்தண்டபுரம் பறவைகள் சரணாலயம்

#  கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

#  சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்

#  காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்

#  சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்

#  வேம்பனூர் சதுப்பு நிலம்

#  வடுவூர் பறவைகள் சரணாலயம்

தமிழ் நாடு திட்டக் குழு நிதியுதவியுடன் கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் மூத்த விஞ்ஞானி முனைவர் பாபு அவர்களின் வழிநடத்தலில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

கட்டுரையாளர்;  முனைவர் வெ.கிருபாந்நதினி
மூத்த ஆராய்ச்சியாளர் (Senior reseacher)
பறவியியல் துறை (Division of Ornithology)
சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் (SACON)
தற்போது வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time