ஒரே நாடு..ஒரே கட்சி..! – அழித்தொழிக்கப்படும் எதிர் கட்சிகள்!

-ரியாஸ்

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பது ‘எதிர்கட்சிகள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏக்களை விலை பேசி, ஆட்சியை கவிழ்த்து  அதிகாரத்திற்கு வருகிறது பாஜக! அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை பாஜகவிற்கு அடியாள் வேலை செய்கிறதா..?

ஆகஸ்ட் 17 அன்று இமாச்சல பிரதேசத்தை சார்ந்த லக்வின்தர் ரானா மற்றும் காஜல் என்ற இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர். மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவராக சில நாட்களுக்கு முன்தான் காஜல் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு தானே என்று நினைத்ததாலோ என்னவோ நாளிதழ்கள் பத்தாவது பக்கத்தில் இந்த செய்தியை பதிவு செய்திருந்தன.

‘இவர்கள் இருவரும் பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்’ என்று கூறி பிரச்சனை பெரியளவில் இல்லை என்று சமாளிக்க முயன்றார் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்.

இம்மாத தொடக்கத்தில் ஹரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் பிஷ்னோய் பா.ஜ.க.விற்கு தாவினார். 2014 – ற்கு பிறகு இது போன்ற செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டும் வாசித்தும் வருகிறோம். 2014 முதல் 2021 வரை கட்சி தாவிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35 சதவிகிதம் பேர் பா.ஜ.க.விற்கு சென்றுள்ளனர் என்று அசோசியேசன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் தெரிவிக்கிறது. 12 சதவிகிதத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். பா.ஜ.க.விற்கு சென்றவர்களில் அதிகமானவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றவர்கள் என்பதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஹரியானாவில் காங்கிரஸின் குல்தீப் பிஸ்னோய் பாஜகவில்!

2014 -ல் ஆட்சியில் அமர்ந்த பிறகு ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என்று இலக்கை நிர்ணயித்தார் அப்போதைய பா.ஜ.க. தேசிய தலைவரும் தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா. சொன்னதோடு நிறுத்தாமல் அதனை விரைவாக நிறைவேற்றவும் தொடங்கினார். தங்களின் பிரதிநிதிகளான ஆளுநர்களை துணைக்கு வைத்துக் கொண்டு காங்கிரஸ் மாநில அரசுகளை கவிழ்க்க தொடங்கினர்.

2016 -ல் உத்தர்காண்டில் காங்கிரஸ் கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு கூட அனுமதி வழங்காமல் ஹரிஷ் ராவத் ஆட்சியை கலைத்தார் ஆளுநர். ஆனால் ஆளுநரின் இந்த ஆட்சி ரத்து உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டது உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம். அருணாச பிரதேசத்திலும் இதே போன்ற உத்தரவை நீதிமன்றம் வழங்கியதை தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்தனர்.

2017- ல் கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும் மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. இதற்கு அம்மாநிலங்களின் ஆளுநர்கள் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கினர். அனைத்து குறுக்கு வழிகளை பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் ஆட்சியை அமைக்கும் திருட்டுத்தனத்தை பா.ஜ.க. கற்றுக் கொண்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கவிழ்த்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான அடுத்த கட்டத்தை செயல்படுத்தினர். கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் (கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது) எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும், ஆசை காட்டியும் தங்கள் பக்கம் இழுத்து, ஜனநாயகத்தை படுகொலை செய்து, தங்களின் ஆட்சியை அமைத்தனர். சமீபத்தில் மகாராஷ்டிராவிலும் இதே வழிமுறையை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து வெட்கமின்றி அரியணையில் அமர்ந்துள்ளனர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அரசு துறைகள் இதற்காக தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. 2019- ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.விற்கு சென்ற மகாராஷ்டிராவின் ஹர்ஷ்வர்தன் பட்டேல், ‘பா.ஜ.க.வில் இணைந்த பிறகு விசாரணைகள் இல்லாததால் நாம் நிம்மதியாக உறங்குகிறேன்’ என்று கூறினார்.

ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை காங்கிரஸ் கட்சி சுதாகரித்துக் கொண்டு தடுத்து நிறுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும் தொகையுடன் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கே இத்தொகை வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சிக்கிமில் பாஜகவில் சேர்ந்த டெமாக்ரடிக் ஃப்ரண்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்

2019- ல் சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய பா.ஜ.க. டெபாசிட்டையும் இழந்தது. ஆனால் சில மாதங்களிலேயே எதிர்கட்சியான சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்-ன் 13 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். அக்கட்சியின் தலைவரும் 25 வருடங்கள் முதல் அமைச்சருமாக இருந்த பவன் சாம்லிங் தற்போது தனி ஒருவனாக எதிர்கட்சியில் உள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் பா.ஜ.க. அங்கிருந்து சில உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதற்கு முன்னர் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஒன்றிய அரசு எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை கவிழ்த்து வந்தது. ஆனால் அதற்கு தற்போது தேவையில்லை. குறுமதி கொண்ட பா.ஜ.க. குறுக்கு வழிகளை பயன்படுத்தி ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. 2014- ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த போது ‘இனி நாட்டில் தேர்தல்கள் நடக்காது’ என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் ‘தேர்தலும் நடக்கும், ஆட்சிகளும் அமையும். ஆனால் அவை நாங்கள் விரும்பிய விதத்திலேயே இருக்கும்’ என்று செயல்படும் பா.ஜ.க. சர்வாதிகாரத்தை புதிய முறையில் அமல்படுத்தி வருகிறது.

பா.ஜ.க.வின் இந்த எதேச்சதிகார போக்கை கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள் இதனை ‘சாணக்கியத்தனம்’ என்றும் அமித் ஷாவை ‘நவீன சாணக்கியன்’ என்று புகழ்ந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தனது உறுப்பினர்களை ஏன் பாதுகாக்வில்லை என்று காங்கிரஸ் கட்சியை குற்றமும் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சி மீது குற்றம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், திருடன் திருட்டை திறமையாக செய்கிறான் என்பதற்காக அவனை புகழவா முடியும்?

இத்தகைய திருட்டு வழிமுறைகளை பின்பற்றுவதில் பா.ஜ.க.வினருக்கு எவ்வித வெட்கமும் இருப்பதில்லை. ‘தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார்’ என்று வெளிப்டையாகவே பேசி வருகின்றனர் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்கள்.

தேசியளவில் செயல்படும் காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் தொண்டர்களும் ஒரு சித்தாந்தமும் இருக்கிறது. அதனால் தான் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் அதனை முதலில் குறி வைத்தது. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் அடைந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏறத்தாழ 52 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தற்போது அறுபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டது. சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது தொடர் கதையாகிவிட்டது. சிலர் உள்ளே இருந்தே கட்சியை அரித்து வருகின்றனர்.

 

காங்கிரஸை முடித்து விட்டு தற்போது மாநில கட்சிகளின் பக்கம் கவனத்தை குவித்துள்ளது பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அதுதான் நடைபெற்றது. ஒரே சித்தாந்தத்தை கொண்ட கட்சியாக இருந்தாலும், சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து விட்டது பா.ஜ.க. இனி, இரண்டையும் தடம் தெரியாமல் ஆக்குவது பெரிய வேலையல்ல.

இதே வழிமுறையை பீகாரில் பின்பற்ற முனைந்த போது ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் விழிப்படைந்து விட்டார். தமிழ்நாட்டில் கூட்டணி வைத்த நான்கே வருடங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அதிமுக.

கூட்டணியில் உள்ளவர்களையே பதம் பார்ப்பவர்கள் எதிரணியில் உள்ளவர்களை விட்டு வைப்பார்களா? ஒவ்வொரு மாநில கட்சியையும் சிதைக்கும் வேலையில் தற்போது பா.ஜ.க. இறங்கியுள்ளது. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல், ஒரே பென்ஷன் திட்டம், ஒரே ரேஷன் கார்டு என அனைத்திலும் பன்முகத்தன்மையை விரும்பாத பா.ஜ.க. அரசியல் தளத்திலும் அதையே செய்ய விரும்புகிறது. ‘எதிர்கட்சிகள் இல்லாத இந்தியா’ என்ற தங்களின் இலக்கை அடைந்து பா.ஜ.க.வை மட்டும் ஒரே கட்சியாக நிறுத்துவதே இவர்களின் நோக்கம்.

2009 முதல் சீனாவிற்கு பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள். சீனாவில் உள்ள சீன கம்யூனிச கட்சி எப்படி ‘ஒரே கட்சி’ என்ற இலக்கை அடைந்தது என்பதை படிப்பதே இவர்களின் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர்.

இப்போது எதிர்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?

சித்தாந்த அடிப்படையில் உருவாகாத கட்சிகள் நீண்ட நாட்கள் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வை எதிர்த்து நிற்பார்கள் என்பதை நம்புவதற்கில்லை. இந்துத்துவ எதிர்ப்பு சித்தாந்தத்தை உறுதியாகக் கொண்டவர்களால் மட்டுமே பா.ஜ.க.வை எதிர்த்து நிற்க முடியும். அவர்களும் தங்களை நோக்கி ஏவல்படைகள் ஏவப்படும் போது அதனை எதிர்த்து நிற்க வேண்டுமே அல்லாது பணிந்து செல்வது அழகல்ல. பணிந்து சென்றாலும் பா.ஜ.க.விற்கு அடிமை சேவகம்தான் செய்ய வேண்டியிருக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே.

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள், மக்கள் இயக்கமாக மாற வேண்டியது இப்போது அவசியமான வரலாற்று கடமையாகும்.

‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக் கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய், அவர்களுடன் திட்டமிடு, அவர்களுக்கு தெரிந்தவற்றில் இருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்’

என்றார் அறிஞர் அண்ணா. இதையே இக் கட்சிகள் தற்போது செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்; ரியாஸ்

பத்திரிகையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time