‘ஏழரைப் பங்காளி வகையறா’ மதுரை இஸ்மாயில்புரத்தை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை நேர்கோட்டில் சொல்லும் யதார்த்தமான நாவல் இது. எஸ். அர்ஷியா எழுதிய இந்த நாவல் எளிய மனிதர்களின் உண்மைக் கதையாகும் .வாழத் தெரியாதவன் குடும்பம் படும் பாட்டை பேசுகிறது!
‘ஒரு சமூகத்தின் வாழ்வியலை, மூன்று தலைமுறை ஊடாக, பேசுகிறது. இது வளமான இலக்கிய நாவல்’ என்று கூறுகிறார் பேரா.எஸ்.தோதாத்ரி். தன் முன்னோர்களின் வாழ்வியலை இழையாகக் கொண்டு ஏழரைப் பங்காளி என்ற வம்சத்தின் பெயரையே நாவலாக்கி உள்ளார், அர்ஷியா.
15 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயில் என்பவர் ஹைதர் அலி இராணுவத்தில், மதுரை படையெடுப்பின்போது காயம்பட்டு சிகிச்சை எடுத்தவர் இங்கேயே தங்கி இருக்கலாம்; அல்லது மன்னன் அவரை அந்தப் பகுதி தாசில்தாராக, நியமனம் செய்திருக்கலாம். எப்படியோ ‘கக்கரா புக்கரா’ என்று பேசி, மதுரைவாசி ஆகிவிட்டார். தனியாக இருந்த இஸ்மாயிலுக்கு, ஊரே ஒன்று சேர்ந்து, ஆதரவு இல்லாத பிள்ளை சாதி பெண்ணை கட்டி வைத்தது. மனைவி வந்த பிறகு நிலம், நீச்சு, தோப்பு, துறவுன்னு கூடிக்கிட்டே போச்சு. இஸ்மாயிலை, (மதுரை மீனாட்சி அம்மன்) கோவிலின் ஆலோசனைக் குழுவில் ஏக மனசோட சேத்துக்கிட்டாங்க. சையத் இஸ்மாயில்தான், ஏழரைப் பங்காளி வகையறாவின் தலைக் குடும்பம்.
அவருக்கு ஏழு பசங்க, ஒரு பொண்ணு. சாகும்போது தன்னுடைய சொத்துக்களை இரண்டு பங்காக பிரித்தார். ஒரு பங்கை தன் மகளுக்கு கொடுத்தார். மற்ற பங்கை ஏழாகப் பிரித்து, தன்னுடைய ஏழு மகன்களுக்கும் கொடுத்தார். அதனால்தான் அந்த குடும்பம், ஏழரைப் பங்காளி வகையறா ஆனது. அந்தக் குடும்பத்தின் தொடர்ச்சியாக, சமகாலத்தில் இருக்கும் மூன்று தலைமுறைகளைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது.
இஸ்லாமிய சமூகம் ஒரு மூடுண்ட சமூகம். அந்த சமூகத்திலிருந்து ஒருவர் எழுதிய நேரடியான நாவல். எனவே இதன் நம்பகத்தன்மையும், விவரணைகளும் சிறப்பாக உள்ளன. ஒரு நாவலுக்குரிய அனைத்து கூறுகளும் இதில் உள்ளன. திருமணம், சாவு, பிள்ளைப்பேறு, வர்க்க முரண் என ஒரு சமூகத்திற்கு உரிய அனைத்து அம்சங்களும் அவர்கள் வார்த்தைகளில் பேசப்படுகின்றன. அர்ஷியா, வாசகனின் கையைப் பிடித்து கதைக்குள் இழுத்துச் செல்கிறார். வாசகசாலை, பாட்டாளி படிப்பு வட்டம் போன்ற அமைப்புகள் இந்த நாவல் குறித்து பேசியிருக்கின்றன.
இதற்கு சிறப்பானதொரு முன்னுரையை ஆய்வாளரான தி.சு.நடராசன் எழுதியுள்ளார். ‘ஏழரைப் பங்காளி வகையறா நாவலை நீங்கள் இஸ்மாயில்புரம் என்று கூட அழைக்கலாம். வாழத் தெரியாதவனின் வாழ்ந்து முடிந்து போன கதை என்று கூடச் சரியாக நீங்கள் புனைவு செய்யலாம். எப்படியானால் என்ன? இது, மனிதர்களின் உண்மைக் கதை! ஒரு பாரம்பரியம், தள்ளாடித் தவித்து வீழ்ந்துபோனது பற்றிய கதை’ என்கிறார் தி.சு.நடராசன். இந்த நாவல் தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது.
இந்த நாவலின் பெரும்பகுதி தாவூதைப் பற்றிப் பேசுகிறது. இயலாமை, சோம்பேறித்தனம் முடிவெடுக்க முடியாத வெகுளித்தனம் என அனைத்தும் சேர்ந்து, தாவூதை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடுகின்றன. இவனைக் கட்டிக் கொண்ட ஆபில் பீ படாதபாடு படுகிறாள்.
இவனுடைய பங்காளியான குத்தூஸ் தான் முதலில் தாவீதை அம்சவல்லி பிரியாணிக்கடைக்கு கூட்டிச் செல்கிறான். யானை மேலே மாப்பிள்ளையாக வைத்து, ஊர்வலம் நடத்தி திருமணத்தை நடத்துகிறான். இவனது சொத்துக்களை அபகரிக்கிறான். வீட்டில் இருந்த பாத்திரங்களை விலைக்குப் போடும் போது, தாவூதின் மகன், பள்ளியில் மத்தியான சோறு வாங்க பயன்படும் தட்டைக் கூட போடவேண்டிய நிலை வந்து விடுகிறது.
இந்த நாவலில் பள்ளிக்கு வராத உசேன் குறித்து, அவனது நண்பன் பாண்டி கவலைப்படுகிறான். மத்தியான சோறு வாங்க, தன் சொந்தக்காரங்க கறிக்கடையில் இருந்து இலை வாங்கிக்கொடுத்து அவனது சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்கிறான். இப்படி மனிதர்கள் உணர்வின்றியும், உணர்வுப்பூர்வமாகவும் மனிதத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். இந்து முஸ்லிம் முரண் என்பது எங்கும் தென்படவில்லை. தாவூதின் மனைவி ஆபில் பீ, ஏர்வாடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, படும் இன்னல்களை, தண்ணீர் எடுத்து குடும்பத்தை காப்பதை, பாய் முடைவதை இரத்தமும் சதையுமாக காட்டுகிறார் ஆசிரியர்.
பாண்டியின் அம்மா கமலா, தன் கணவன் சிறை சென்றதால் கதீஜாவாக மாறி வாழ்க்கை நடத்துகிறாள். சந்தனக் கூடு பார்க்கச் சென்ற குல்சும், கான்பாளையத்துல, சுங்கிடி யாவாராஞ் செஞ்சுக்கிட்டு இருந்த குடும்பத்து ராம்குமாரை, மேல் திருப்பதிக்கு போய், சித்ராவாக மாறி திருமணம் செய்து கொள்கிறாள்.
Also read
ஆபில் பீவியின் அப்பா, போலீஸ் உத்தியோகம் பார்த்த மக்தூம் சாயபு, ஊருணியில் திருடனை பிடிக்கப் போய், கோதை நாச்சியாரை சோடா பாக்டரியில் பார்த்ததெல்லாம் கிளைக் கதை. வருஷந் தவறாம பிள்ளை பெத்துக்கும் ஆபில் பீ, பிள்ளை இல்லாத தன் சகோதரன் சலாருதீனுக்கு ஒரு பிள்ளையை கொடுத்தால் தான் என்ன ? இதனால் ஆபில் பீ குடும்பத்திற்கும் அவன் பொண்டாட்டி தூத்துக்குடிகாரிக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது.
பங்காளி தோட்டத்தை திருட்டுத்தனமாக எழுதி வாங்கிய குத்தூஸ் பள்ளிவாசலையும், இதர பொதுச் சொத்துகளையும் ஒழுங்காக நிர்வகிப்பானா ? அதற்குள் எழும் முரண்களை கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர். ஜனநாயகத்திற்கான குரல்கள் எங்கும் ஒலிப்பது இயல்புதானே ! ஒரு கட்டத்தில், பள்ளி வாசலையும், அறக்கட்டளை மூலம் வாழ்விடங்களும் கட்டிய தாவீது குடும்பம் வாழ இடமின்றி தவிக்கிறது.
‘பொய்கைக் கரைப்பட்டி’, ‘அப்பாஸ் பாய் தோப்பு’, ‘கரும்பலகை’ போன்ற நாவல்களையும் எழுதியுள்ள எஸ். அர்ஷியாவின் அகால மரணம், இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.
நியு செஞ்சுரி புத்தக நிலையம் / 378 பக்கம்/ ரூ.200.
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply