பறிக்கப்படும் விளை நிலங்கள்! பதற்றத்தில் மக்கள்!

- சாவித்திரி கண்ணன்

பரந்தூர் விமான நிலையத்திற்கு 13 கிராமங்களில் மொத்தமாக 4,747 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதில் அரசு நிலங்களை தவிர்த்து, சுமார் 3,247 ஏக்கர் நிலங்கள் மக்களின் விவசாயப் பயன்பாட்டில் இருப்பவை! கண்ணீர்விட்டுக் கதறும் மக்களை கால்தூசுக்கு சமமாக ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்!

பெரும்பான்மை நிலங்கள் நெல் நன்கு விளையும் நன்செய் நிலங்களாகும்! இவை எளிய மக்களின்  வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவையாகும்! இங்கு பெரும்பாலான மக்கள் ஏரி பாசனத்தில் விவசாயம் செய்பவர்களாகும்! இவை தவிர ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளையும் இந்த திட்டம் விழுங்கவுள்ளது.

வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், மேல் பொடவூர், மனப்புரம், எடையார் பாக்கம், குணாகரப்பாக்கம், ஓ.ஏ.மண்டலம், ஏகமாபுரம், அக்கம்மாபுரம் சிங்கிலிபாடி, நாகப்பட்டு  ஆகிய வளமான கிராமங்களை, அதன் வளமையான பாசன நிலப்பரப்பை, ஐந்து நீர் நிலைகளை விழுங்கவுள்ளது இந்த திட்டம்!

இந்த திட்டத்திற்காக நிலங்களை வழங்க மறுத்து மக்கள் உணர்ச்சிகரமாகப் போராடி வருகின்றனர். தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தும், கருப்புக் கொடியுடன் ஊர்வலம், தர்ணா போன்றவையும் நடத்தி வருகின்றனர். பெண்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டு கதறுகின்றனர்.

தமிழக முதல் அமைச்சரும், மாநிலத்தின் மற்ற அமைச்சர்களும் அமையவுள்ள விமான நிலையத்தைக் குறித்து பெருமை பொங்க பேசுகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பயணத்தில் மற்றொரு மைல்கல். மேலும், இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது! இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமான நிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப் பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது’’ என ஸ்டாலின் கூறியுள்ளார்.

தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். தற்போது இதற்கு மேலும் 31 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இது ஆண்டுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவ்வளவு பெரிய ஒரு விமான நிலையம் இருக்கும் போது, அதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாக புதிய விமான நிலையம் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை, (CREDAI) வரவேற்பு தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

“சர்வதேச நகரங்களின் மாதிரிகள் போல் நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழில்கள் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விமான நிலையத்தின் லொகேஷன் உலகளாவிய லாஜிஸ்டிக் மேப்பில் இடம்பெறும். இதனால் ரியல் எஸ்டேட் தொழில், வீடு, வணிக வளாகம் போன்றவைகள் அப்பகுதிகளில் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளது. ஆக, ரியல் எஸ்டேட்காரர்களின் காட்டில் இனி அடைமழை தான்! விவசாய நிலங்கள் எக்கேடு கெட்டால் என்ன?

ஏகனாபுரத்தின் கிராம சபை கூட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து அதற்கென தீர்மான புத்தகத்தில் கையொப்பமிட்டு எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்த கிராம சபையின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது ஜனநாயகத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றாகும்! விவசாயப் பயன்பாடற்ற வேறு இடத்தை அரசுகள் ஏன் முயற்சிப்பதில்லை?

விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களை சந்திப்பதற்கான ஒரு கருத்து கேட்பு கூட்டத்திற்கு அமைச்சர்கள் வருவதாக அறிவிக்கப்பட்டது. அங்கே குறிப்பிட்ட நேரத்திற்கு மக்கள் வந்து நீண்ட நேரம் காத்திருந்தனர். பலர் விரக்தியில் புறப்பட்டு சென்ற பின்பு மிகக் காலதாமதமாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, த.மோ.அன்பரசன் ஆகியோர் வந்தனர்.

‘நீங்கள் தருகிறீர்களா? இல்லையா? என்பதல்ல, நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறோம்’ என்ற தன்மையில் அவர்களின் அணுகுமுறை இருந்தது. ஒன்றிய அரசுக்கு ஓடி, ஓடிச் சேவகம் செய்வதே தங்கள் பிறவிப் பயனாக கருதும் ஆட்சியாளர்கள் நமக்கு வாய்த்திருப்பது காலத்தின் கோலமாகும்!

அமைச்சர் எ.வா.வேலு பேசும் போது, ”கையகப்படுத்தும். நிலத்திற்கான சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும். உதாரணத்திற்கு 100 ரூபாய் மதிப்பு என்றால், மூன்றரை மடங்கு விலை கூடுதலாக 350 ரூபாய் வழங்கப்படும். 13 கிராமத்தில், 1005 வீடுகள் அப்புறப்படுத்த உள்ளோம். கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும், பணமும் வழங்க உள்ளோம். விமானநிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் விரும்பக் கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும்’’ என பொத்தாம் பொதுவாக வாய்மொழியாக சொன்னார்கள்!

புலம் பெயரும் மக்களுக்கு தரப்படும் வாக்குறுதிகள் இந்தியாவில் காற்றோடு கரையக் கூடியவை என்பதே நமது கடந்தகால அனுபவமாகும்! பொறுத்து இருந்து பார்ப்போம்! எளிய மக்கள் அவர்கள் போக்கில் இயல்பாக வாழ்வதற்கு தோதாகவா நாடு இருக்கிறது? வசதி படைத்தவர்கள் மேன்மேலும் வளம் பெறவே ஆட்சிகள் நடக்கின்றன! இந்திய விமான நிலையங்களை எல்லாம் அதானி குழுமம் வளைத்து போட்டு வருகிறது. நாளை இந்த விமான நிலையம் அதானி வசம் போகாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time