யாருடைய ஆதாயத்திற்காக பேருந்து நிலையம்?

-கா.சு.வேலாயுதம்

கோவைக்கு ஒரு பிரம்மாண்டமான பேருந்து நிலையம் தேவை என்பது காலத்தின் கட்டாயம்! ஆனால், ‘அப்படி ஒரு பேருந்து நிலையம் வருவது முக்கியமல்ல, எங்கள் ரியல் எஸ்டேட் லாப வேட்டைப்படி தான் நாங்கள் முடிவெடுப்போம்’ என ஆளும் திமுக அரசு அரசு அதிகார முறைகேடு செய்கிறது என்பது உண்மையா?

ஊழல் மற்றும் முறைகேட்டில் தலைசிறந்தது அதிமுக அமைத்த பேருந்து நிலையமா? திமுக அமைக்கவிருக்கும் பேருந்து நிலையமா? என்று பட்டிமன்றமோ, வழக்காடு மன்றமோ வைத்தால் தீர்ப்பு சொல்வதில் பெரிய அளவில் நடுவருக்கே குழப்பம் வந்து விடும். அந்த அளவுக்கு கோவையில் கட்டப்பட்ட/ கட்டப்பட உள்ளதாக சொல்லப்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சர்ச்சைகளுக்குள் ஆழ்ந்து கிடக்கிறது.

‘அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு பாதி வேலை முடிந்த நிலையில் உள்ள வெள்ளலூர் பஸ்நிலையத்தை வேறு இடத்தில் (நீலம்பூர்) அமைந்தால் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்!’ என்று அறிவித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக ‘வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பான முடிவுகள் கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் தேவையின் அடிப்படையிலும்தான் செயல்படுத்தப்படும். அப்படி உருவாக்கப்படும் அரசின் நலத் திட்டங்களை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள்!’ என்று கோவையின் பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கோவையின் கலெக்டரும், கமிஷனரும் முறையே, ‘பஸ்நிலையம் இடம் மாறும் பேச்சுக்கே இடமில்லை!’ என்றும் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இதையொட்டி மீடியாக்களில் அரசியல் விவாதங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதிதாக மாற்றப்படும் இடத்தில் முதல்வரின் குடும்ப நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வாங்கிப் போட்டுள்ளனர். வெறும் லட்சங்களில் இருக்கும் இந்த நிலத்தின் மதிப்பு கோடிகளில் எகிறத்தான் இந்த ஏற்பாடு என்பதுதான் குற்றச்சாட்டுகளில் உலா வரும் மையப்புள்ளி.

கோவை மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிக்கதாக மாறி விட்டது. அதனால் ஆரம்ப காலத்தில் இருந்த உக்கடம் மற்றும் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையங்கள் போதாது என்று கிழக்கே சிங்காநல்லூரிலும், வடக்கே கவுண்டம்பாளையத்திலும் மேலும் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இப்போது பல்கிப் பெருகி வரும் வெளியூர் பேருந்துகள் மற்றும் அபரிமித வாகனங்களால் காந்திபுரத்தை மையமாகக் கொண்ட நகரப்பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இதை மாற்றியமைக்க சென்னை கோயம்பேட்டில் உள்ளது போல் ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமைக்க 2001 ஆம் ஆண்டு முதலே திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை கொடீசியா சர்வதேச தொழிற்கண்காட்சி வளாகம் அமைந்துள்ள பகுதியில் இந்த பேருந்து நிலையத்தை அமைக்க செல்வந்தர்கள் முயற்சி செய்தனர். 1997-ல் கொடீசியா அமைந்த நாள் முதலே தொழிலதிபர்கள் இங்கே நிலத்தை வாங்கிப் போட்டுக் கொண்டு நிலம் மதிப்பு ஏறும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் புள்ளிகளும் உள்ளனர்.

அதன் ஒரு முயற்சியாகவே  2009 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டை இங்கே நடத்த ஏற்பாடு செய்தனர். அதற்காக இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்த திமுக அரசு நூறு கோடி செலவழித்தது. அநேகமாக கோவையில் திமுக புள்ளிகளில் இங்கே ஏக்கர் கணக்கில் நிலம் இல்லாதவர்களே இல்லை எனலாம்.

இப்படியான சூழலில் 2011- இல் அதிமுக ஆட்சி வந்த பிறகு காட்சி மாறியது. வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி முதல்வராக பதவியேற்ற பின்னர் இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

சரியாக இன்றைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் இங்கே வெளியூர் பேருந்துகள் அத்தனையும் நிறுத்தும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவே அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் சுமார் 60 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் 30 ஏக்கருக்குள் வணிக வளாகக் கட்டிடங்கள், பஸ் நிறுத்துவதற்கான தடுப்புகள், பஸ் ஷெல்டர்கள் என பணி வேகமெடுத்தன. ஆட்சி மாற்றத்திற்கு பின்பு இந்தப் பணிகள் தொடர்ந்திருந்தால் தற்போது கோவைக்கு கோயம்பேடு போல பெரிய பேருந்து நிலையம் கிடைத்திருக்கும்.

இங்கே பேருந்து நிலையம் வருவதை எதிர்பார்த்து இதனைச் சுற்றியுள்ள நிலங்கள் பெரும் புள்ளிகளால் விலை பேசப்பட்டு வாங்கப்பட்டன. இதில் அதிகம் பேசப்பட்டது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அவர் தம் பினாமிகளின் பெயர்களும் தான்.

இந்த வெள்ளலூரில் 2000 ஆம் ஆண்டில் ஒரு குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் பெரிய அரசியலும் உள்ளது.

நகரமயமாதலின் விளைவாக கோவை பெரு நகர குப்பைகளைக் கொட்ட  தேர்வானதுதான் வெள்ளலூர் குப்பைக்கிடங்குப் பகுதி. இங்கே நாளொன்றுக்கு  கொட்டப்படும் குப்பை மற்றும் மருத்துவக்கழிவுகள் சுமார் ஆயிரம் டன் ஆகும்.. அதை அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர் விஷமிகள். இதனால் எழும் புகை, துர்நாற்றம் வெள்ளலூரை மட்டுமல்ல, அதன் சுற்றிலுமுள்ள ஊர்களை பாதித்தன. அதனால் தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதம் எல்லாம் நடந்து கொண்டே இருந்தன.

அதற்கெல்லாம் ஒரு விடிவாக இந்தக் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதியிலேயே 60 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமைய சுற்றுவட்டாரமே மகிழ்ச்சி பொங்கியது.

குப்பைக்கிடங்கு இருந்தால் என்ன, எதிர்காலத்தில் இதுதான் நகரத்தின் மையம் என்ற கனவில் ஆழ்ந்தனர். கிரவுண்ட் பத்து லட்சம் ரூபாய் கூட போகாத நிலங்கள் எல்லாம் ஒரு கோடி ஒன்றரைக் கோடி என்று விலை பேச ஆரம்பித்தனர்.

இந்த வெள்ளலூர் பகுதிக்கு வரவேண்டும் என்றால், சென்னை சேலம் பேருந்துகள் அவிநாசி சாலையில் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் வரவேண்டும். இப்போது வெள்ளலூரில் பஸ்நிலையம் வருவதால் இந்தப்பகுதிகள் எல்லாம் வளம் பெறும் என்று ரியல் எஸ்டேட்காரர்கள் நிறைய நிலங்களை வாங்கிப் போட ஆரம்பித்தனர். அதில் அதிமுக புள்ளிகளே மிகுதியாக இருந்தனர்.

ஆயினும் கடைகளோ, தொழிற்சாலைகளோ, வணிகமையங்களோ இந்த சாலையில் வரவில்லை. எனவே வாங்கிப் போட்ட நிலங்கள் எல்லாம் தரிசாகக்கிடக்க, இப்போது வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்றதும் இந்த நிலங்களுக்கு உயிரும் மதிப்பும் வந்து விட்டது. லட்சங்கள் கோடிகளாக, கோடிகள் பல கோடிகளாக மாற்றம் கண்டன.

இந்த நிலையில்தான் அதிமுக ஆட்சி அகன்று திமுக ஆட்சி வந்தது. அப்படி வந்தவுடன் திமுக அமைச்சர் முத்துசாமி இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டார்.

உடனடியாக இதன் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.

பாதியில் நிறுத்தப்பட்டு பாழடைந்து காணப்படும் வெள்ளலூர் பேருந்து நிலையம்

கிட்டத்தட்ட இன்றைக்கு ஒரு வருடத்திற்கு மேலாக இங்கே கட்டப்பட்ட கட்டிடங்கள் புல், புதர் முளைத்துக் கிடக்கிறது. பேருந்து நிலையப் பணிகள் நடப்பதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. ஒரு துரும்பைக் கூட ஒருத்தரும் அசைக்கவில்லை. கிட்டத்தட்ட ரூ.200 கோடி திட்டத்தில் ரூ.40 கோடி செலவழிக்கப்பட்ட நிலையில் பாழ்பட்டுக் கிடக்கிறது இந்த பேருந்து நிலையம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதே பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இதே எல்அண்ட்டி பைபாஸ் சாலையில் முதல்வரின் குடும்ப நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் 120 ஏக்கர் பரப்பில் 1,663 குடிருப்பு மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு விற்பனை ஜரூராகப் போய்க் கொண்டு உள்ளது. முதல்வர் மருமகன் சபரீசன்  திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த இடத்தில் பெரிதாக திட்டம் தீட்டி ஸ்மார்ட்சிட்டி பெயரில் கொள்ளை லாபம் பார்த்து வருகிறார். அதனால் தான் புதிய பேருந்து நிலைய அறிவிப்பை சற்று காலம் தாழ்த்துகிறார்கள் போலும்!

அதே சமயம் வெள்ளலூர் பேருந்து நிலைய இந்தக் கட்டிடப் பணிகளை அப்படியே விட்டு விட்டு அவிநாசி சாலையின் துவக்கத்தில் உள்ள நீலம்பூர் அருகே இதே எல்அண்ட்டி பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் முப்பது, நாற்பது ஏக்கரை விலைக்கு வாங்கி, அங்கே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்ட அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையரே முதலில் அறிவித்து பிறகு மறுத்தும் உள்ளனர். இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

“முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, விளை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களையும் வளைத்துப் போட்டு வருகிறது. தாங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலத்தின் மதிப்பை உயர்த்த, அரசின் அனைத்துத் துறைகளின் அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்துகின்றனர்,” என்று கூறியதோடு போராட்டம், உண்ணாவிரதம் என்று பொங்கின பிறகு, மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் ”பழைய இடத்திலேயே தான் பேருந்து நிலையம்’’ என்று அறிவித்துள்ளனர்.

என்றாலும், நீலம்பூர் பகுதியில்தான் நிச்சயம் கோவைக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் என்று உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆளும்கட்சியினர். ரூ.40 கோடியை ஓரிடத்தில் கொட்டி விட்டு வேறொரு இடத்தில் இதே திட்டத்தைக் கொண்டு போய் ரூ.200 கோடியை கொட்ட வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு நிதியை மத்திய அரசிடம் வாங்க முடியுமா? ஏற்கனவே இருந்த திட்டத்தை ஏன் கைவிடுகிறீர்கள் அதற்கு என்ன காரணம்? என எதற்கும் பதில் இல்லை!

ஆனால் இப்படி நீலம்பூருக்கு இந்த திட்டத்தை இடம் மாற்றுவதால் திமுக புள்ளிகளுக்கு நிறைய அனுகூலங்கள் இருக்கிறது என்பதே உண்மை.

ஏனென்றால், 2009 செம்மொழி மாநாடு நடந்ததற்கும், இப்போது பார்த்திருக்கும் நிலத்திற்குமான தூரம் ஐந்தாறு கிலோமீட்டர் தூரம்தான். இதே இடம் உள்ள பகுதியில்தான் 2007 ஆம் ஆண்டு வாக்கில் திமுக மண்டல மாநாட்டை நடத்தியது. அப்போதிருந்தே இங்கே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற பேச்சு இருந்ததால் அப்போதே இங்கே நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள் திமுக புள்ளிகள். தவிர செம்மொழி மாநாடு நடந்ததை ஒட்டி வாங்கிப் போடப்பட்ட நிலங்களும் இப்போது விலை எகிறும்.

அதையெல்லாம் தாண்டி ஜி ஸ்கொயர் நிறுவனம் இங்கே சமீபத்தில் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. இங்கு புதிய பேருந்து நிலைய திட்டமே இந்த ஜி ஸ்கோயர் லாபம் பார்ப்பதை உத்தேசித்து தான் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆக, வெள்ளலூரிலும் லாபம் பார்த்து, நீலம்பூரிலும் லாபம் பார்க்கப் போகிறது ஜிஸ்கொயர்!

இங்கே (நீலம்பூரில்) மட்டும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மாற்றப்பட்டால் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையம் பெயரால் அங்கே நிலங்களை வாங்கிப் போட்ட மக்களும்,அதிமுக புள்ளிகளும் பெரிய அளவு நஷ்டம் அடைவார்கள்!

”அதற்காகவே எடப்பாடி பழனிசாமி ஆகட்டும், அதிமுக புள்ளிகள் ஆகட்டும் பொங்கித் தீர்க்கின்றனர்! ஆனால், திமுக புள்ளிகளோ கமுக்கமாக காய் நகர்த்துகின்றனர்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்!

மக்களுக்கான தேவை, அவசியம், அவசரம் எல்லாம் இரண்டாம் பட்சம்! அரசியல்வாதிகள் தங்கள் சுயநலம் சார்ந்தே எந்த ஒரு நகர்வையும் மேற்கொள்கின்றனர் என்பதற்கு கோவை ஒருங்கிணைந்த பேருந்து நிலைய சர்ச்சையே சாட்சியாகும்!

கட்டுரையாளர்; கா.சு.வேலாயுதம்

மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time