வெரிகோஸ் வெயினை விரைவில் தீர்க்கலாம்!

-எம்.மரியபெல்சின்

நின்று கொண்டே நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கும், கால்களை தொங்கவிட்டு நாற்காலியில் நெடு நேரம் பணியாற்றுபவர்களுக்கும் வரும் நோயே வெரிகோஸ் வெயின்!  நரம்புச் சுருள் நோய் என்று சொல்கிறார்கள். இதை வராமல் தவிர்ப்பது பற்றியும், வந்தால் குணமாக்குவது குறித்தும் பார்ப்போம்.

மணிக்கணக்கில் நின்றுகொண்டே வேலைபார்க்கும் டீ மாஸ்டர்களை பாதிக்கும் நோய் என்று மட்டுமே முதலில் சொல்லப்பட்டது! இந்த வெரிகோஸ் வெயின். டீ மாஸ்டரை மட்டுமல்ல, செக்யூரிட்டி, மளிகைக்கடைக்காரர், ஜவுளிக் கடை பணியாளர்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால் பணியாளர்கள், கண்டக்டர், ஆசிரியர்கள் மற்றும் மணிக் கணக்கில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்யும் ஐ.டி ஊழியர்கள் என பலரையும் பாதிக்கும் நோய் என்று அறியப்பட்டுள்ளது.

ஏன்… போக்குவரத்து போலீசாரில் பலருக்கும்கூட இந்த நோய் வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? கர்ப்ப காலத்தில் வயிற்றில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. ஆனாலும், ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உண்மையில் இந்த பாதிப்பு வருவதற்கான காரணங்கள் பல.

ரத்த ஓட்டம் சீராக நடைபெற பல்வேறு உறுப்புகளின் உதவிகள் தேவைப் படுகிறது. அந்த செயலாக்கத்தின் போது கெட்ட ரத்தம், நல்ல ரத்தம் என எல்லா ரத்தமும் இதயத்துக்கு சென்றே திரும்ப வேண்டும். அப்போது கால்களில் உள்ள கெட்ட ரத்தம் சில நேரங்களில் முன்னேறிச் செல்ல முடியாமல் கால்களிலேயே தங்கி விடுகின்றன. இப்படி கெட்ட ரத்தம் தேங்கும்போது நாளடைவில் புடைத்துக் கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும். இதைத் தான் வெரிகோஸ் வெயின் என்கிறார்கள்.

கறுப்பு நிறத்திலும் பச்சை நிறத்திலும் காணப்படும் இந்த கெட்ட ரத்தத்தால் பெரிய அளவில் வலி ஏற்படாது என்பதால் பலர் இதை கண்டு கொள்வதில்லை. ஆனால், சில நேரங்களில் குத்தலும் குடைச்சலும் இருக்கத்தான் செய்யும். பாதப் பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுப்பது போன்ற உணர்வு தெரியும்,. கணுக்காலிலும்,  பாதங்களிலும் அரிப்பெடுப்பதும் இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்! தொடைப்பகுதி மற்றும் கால் மூட்டுகளின் பின்புறம் நரம்புகளில் முடிச்சு விழுந்தது போலவும், புடைத்துக் கொண்டும் காணப்படும்.

 

நரம்பு சுருண்டிருக்கிறது… அவ்வளவுதானே? என்று இந்த பாதிப்பை அலட்சியப்படுத்தினால், அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். பாம்பு போன்று நரம்புகள் சுருண்டிருப்பதுடன் தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் தடித்து காணப்படும். சிலருக்கு பாதங்களில் வீக்கம் காணப்படுவதுடன் அரிப்புகளும் இருக்கும். சிலருக்கு வலியும், வீக்கமும் காணப்படும். இத்தகையோர் ஓய்வெடுக்கும் போது வலி குறையும். மேலும் குறிப்பாக இரவு நேரங்களில் வலி உணர்வு மிகவும் குறைந்து காணப்படும்.  வலி, வீக்கம், அரிப்பு இருக்கும்போது அந்த இடத்தைத் தேய்த்தால் புண்ணாகி கருமை நிறமாக மாறிவிடும். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் ரத்த ஓட்டம் குறைந்து கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.

வெரிகோஸ் வெயின் பிரச்சினை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் ரத்த நாளங்கள் அழுத்தப்பட்டு நரம்பு சுருண்டிருக்கும் இடத்தில் புடைத்துக் கொண்டு காணப்படும். பொதுவாகவே மலச்சிக்கல் என்பது எல்லோருக்குமே நல்லதல்ல. குறிப்பாக வெரிகோஸ் வெயின் பிரச்சினை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

வெரிகோஸ் நோய்க்கு தவிர்க்க வேண்டியவை

வெரிகோஸ்  வெயின் பிரச்சினை வராமலிருக்க மணிக்கணக்கில் நின்று கொண்டிருப்பது எப்படி தவறோ, அதேபோல் நீண்டநேரம் கால்களைத் தொங்கப் போட்டு நாற்காலியில் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் தவறே. ஆகவே, இந்தச் செயல்களைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக சாப்பிடும் போது கால்களை மடக்கி சம்மணமிட்டு சாப்பிடுவது சாலச் சிறந்தது. நாற்காலியில் அமர்ந்து உண்பதையும், நின்று கொண்டே சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.

தொடைகளையும், இடுப்பையும் இறுக்கும் ஆடைகளை அணியாமல் தவிர்க்க வேண்டும். தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். உடல்பருமன் உள்ளவர்கள் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடல் பருமனான  பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை தவிர்த்தல் நலம்.

ரத்த ஓட்டத்திற்கு கெடுதல் செய்யும் உணவுகளான ஊறுகாய், எண்ணெய் பலகாரங்கள், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த பரோட்டோ, பிரிட்ஜ் குளிர் நீர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பிரணாயாமம், யோகா போன்றவை மூலமும் ரத்த ஓட்டத்தை சீராக்கலாம்.

நரம்புச்சுருள் இருப்பவர்கள் கால்களை மடக்கி நீண்ட நேரம் உட்கார்வதை தவிர்க்க வேண்டும். கால்களை மடக்கும்போது அது ரத்த ஓட்டத்தை தடை செய்வதுடன் பிரச்சினையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பதிலாக ஓய்வெடுக்கும் நேரங்களில் கால்களை தலையணை அல்லது உயரமான இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது. இப்படி செய்தால் ரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும். இவை தவிர எளிய சிகிச்சைகளும்கூட பலனளிக்கும்.

நாட்டு மருந்துக்கடைகளில் கரியபோளம் அல்லது ரத்தபோளம் எனப்படும் கட்டியான ஒரு பொருள் கிடைக்கும். கற்றாழையை உடைத்தால் வடியக்கூடிய மஞ்சள் நிற திரவத்தை காய வைத்துக்கிடைப்பதே கரியபோளம். பிசின் வடிவத்தில் கிடைக்கும் இந்த கரியபோளத்தை உடைத்து ஒரு கரண்டியில் ஊற்றி சிறிது நீர் ஊற்றி சூடாக்கினால் இளகிவிடும். அதை பொறுக்கும் சூட்டில் வெரிகோஸ் வெயின் உள்ள இடத்தில் தடவி வந்தால் நாளடைவில் பலன் கிடைக்கும்.

சீதேவி செங்கழு நீர்

வெரிகோஸ் வெயின் பிரச்சினைக்கு எளிய தீர்வு தரக்கூடிய மூலிகை சீதேவி செங்கழுநீர். இந்த மூலிகையை அடையாளம் காண்பது எளிது. சீதேவி செங்கழுநீர் மூலிகையில் மூக்குத்தி வடிவத்தில் பூக்கள் பூக்கும். அதை வைத்து மிக எளிதாக அடையாளம் காணலாம். மிகச் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் இந்த மூலிகைக்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக வெரிகோஸ் வெயின் பிரச்சினை உள்ளவர்கள்  சீதேவி செங்கழுநீர் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் குணம் கிடைக்கும். செலவே இல்லாத இந்த வைத்தியத்தை செய்து பலன் பெறலாம். ஒரே நாளில் அல்லது ஒரே வாரத்தில் அதிசயம் நிகழும், பலன் கிடைக்கும் என்பது போன்ற விளம்பர மாயைகளில் சிக்கிக் கொள்ளாமல் இது போன்ற மிகச் சாதாரணமாக வளரக்கூடிய மூலிகைகளை தொடர்ந்து செய்து பார்த்து பலன் பெறுங்கள். இதை இவ்வளவு அழுத்தமாக சொல்வதற்குக் காரணம் நம்பிக்கையுடன் கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

இதுதவிர மூலிகைப் பற்று போடுவதன்மூலமும் நரம்புச்சுருள் நோயிலிருந்து விடுபடலாம்.கைப்பிடி கருந்துளசி இலைகள், 3 துண்டு வசம்பு, தேவையான அளவு கற்றாழை ஜெல் சேர்த்து அரைக்க வேண்டும். முன்னதாக வசம்பை லேசாக நசுக்கிக்கொள்வது நல்லது. கடைசியில்  ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் சேர்த்துக் கலந்து நரம்புச் சுருள் உள்ள இடங்களில் பூசி காய விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் வீக்கம், வலி குறைவதுடன் நரம்புச் சுருள் பிரச்சினையும் சரியாகும்.

மண் குளியல் செய்வதனாலும் நல்ல பலன் கிடைக்கும். புற்றுமண்ணை பிரச்சினை உள்ள இடத்தில் தடவி குணம் பெறலாம். மண்ணைப்பூசி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும். மூலிகை எண்ணெய் மசாஜ் செய்வதும்கூட பலன் தரும். இதுபோன்று எண்ணற்ற வழிகள் இருந்தபோதிலும் பலர் அறுவை சிகிச்சை செய்து அவதிப்படுகிறார்கள் என்பது வேதனை. நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time