உண்மைகளை ஒத்துக் கொள்வார்களா கோழைகள்!

-ச.அருணாசலம்

ஒட்டுக் கேட்டு, உளவு பார்த்ததை ஊத்தி மூட திட்டமிடுகிறார்கள் போலும்! எத்தனையெத்தனை தடங்கல்கள்! தயக்கங்கள்! விசாரணை என்ற பெயரில் காலத்தை விரயமாக்கிவிட்டு, அதிகார பலத்தால் உண்மையை அஸ்தமிக்க செய்ய ஒன்றிய பாஜக அரசு ஓரங்க நாடகம் நடத்தி வருகிறதா…?

ஜனவரி 2022ல் நியூ யார்க் டைம்ஸ்  NEW YORK TIMES  பத்திரிக்கையில் ஒரு ஆணித்தரமான செய்தி வந்தது.

“இந்தியா 2017ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போட்டது, அதில் பெகாசஸ் உளவு சாதனத்தை பல நூறு கோடி டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு இந்திய அரசு ஒத்துக்கொண்டது.” என்பதே அந்த செய்தி. இச் செய்தியை இன்று வரை இந்திய அரசு மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புரிய வேண்டியவர்களுக்கு இது புரிந்தால் சரி!

இஸ்ரேலின் உளவு நிறுவனமான என் எஸ் ஓ. NSO வின் பெகாசஸ் என்ற உளவு சாதனத்தின் மூலம்   பத்திரிக்கையாளர்கள, அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை தொலைபேசி மூலம் ஒட்டுக்கேட்டு வேவு பார்த்த மோடி அரசின் செயல் பெரும் கண்டனத்துக்குள்ளாகியதை யாரும் மறந்திருக்க முடியாது.  .

இதைப்போன்ற வேவு பார்க்கும் செயல்கள் பெகாசஸ் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளதும், பெகாசஸ் என்ற உளவு மென் சாதனத்தை அதன் தாயாரிப்பு நிறுவனமான NSO  தனியாருக்கு விறபதில்லை என்பதும் , இதை பயன்படுத்தியது அரசுகளே என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2021ம் ஆண்டு இவ்விவகாரம் அம்பலத்திற்கு வந்தவுடன் Global Media Investigation -உலகளாவிய ஊடக விசாரணை – உலகெங்கிலும் நடத்தப்பட்டது, இந்த விசாரணையில் இந்திய டிஜிட்டல் ஊடகமான ” தி வயர் ” The Wire” என்ற ஆங்கில ஊடகமும் பெரும் பங்கெடுத்தது. அவ்விசாரணையின் முடிவில் பெகாசஸ் உளவு மென்பொருள், பத்து நாடுகளைச் சார்ந்த மனித உரிமை போராளிகள், அரசியல் தலைவர்கள் எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள், உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் அரசியல் விமர்சகர்கள் ஆகியோரது தொலைபேசிகளில் இருந்து கண்டறியப்பட்டது.

இந்த பத்து நாடுகளில்  ஒன்று இந்தியா! ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசிகளுக்கு சொந்தக்காரர்களில் தி வயர் பத்திரிக்கை ஆசிரியர்களான  சித்தார்த் வரதராஜன், எம் கே. வேணு, இந்து என் ராம்,ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்,மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிசேக் பானர்ஜி, தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சிபிஐ தலைமை இயக்குனர் வர்மா ஆகியோரும் உள்ளனர்.

இந்த அத்து மீறல் குறித்து பெரும்  கண்டனத்துக்குள்ளான அனைத்து நாட்டு அரசுகளும் -இந்தியாவை தவிர- சுய விசாரணைக்கு முன் வந்தன, விசாரணை நடத்தின, பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்ததை ஒத்துக் கொண்டு அதைக் களைய முற்பட்டன, இஸ்ரேல் நாட்டின் செயலை கண்டித்தன.

ஆனால் இந்திய அரசு-ஆளுகின்ற மோடி அரசு- முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மழுப்பத்தொடங்கியது. முதலில் பாராளுமன்றத்தில் உண்மையற்ற வாத்த்தை முன்வைத்தது, நழுவியது, திசை திருப்ப எத்தனித்தது.  ஆனால் உச்ச நீதி மன்றத்தின் முன்னால் வழக்கு வந்த போது -இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் நாட்டிடமிருந்து வாங்கியதா? எப்பொழுது வாங்கியது? அதை அரசியல் சட்டத்தை மீறி இந்திய குடிமக்களை

வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர மறுத்தது.

அவ்வாறு பதிலளித்தால் அது  தேச  பாதுகாப்பிற்கு ஊறாக விளையும் என்ற “போலி” வாத்த்தை முன்வைத்தது மோடி அரசு. இதை ஏற்க மறுத்த உச்ச நீதி மன்றம் – குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை உள்ளதால் , மனுதாரர்கள் அளித்துள்ள அறிக்கையில் சிட்டசன் லேப் அளித்த தடயவியல் அறிக்கையும் மேலும்பல நிபுணர்களின் கணிப்புகளும் மறுதலிக்க முடியா வண்ணம் ஆணித்தரமாக இருப்பதால் முழு விசாரணைக்கு உத்தரவிட்டதோடு ஒன்றிய அரசின் ஒத்துழையாத செயல்பாட்டை கண்டித்தது!

முன்னாள் நீதிபதி ஆர் என். ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பாரதூர விசாரணைக்கு  உச்ச நீதி மன்றம் கடந்த அக்டோபரில் (அக்டோபர் 2021) உத்தரவிட்டது!

இந்தியாவின் சாபக்கேடா அல்லது இந்தியர்களின் குணக்கேடா தெரியவில்லை, நமக்கு ஆரம்பம் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது, ஆனால் அதன் தொடர்ச்சியும் எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் நேர்த்தியும் நமக்கு கை வராமல் போவது ஏன்?

விசாரணை ஆரம்பித்தது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் . விசாரணை ஆய்வறிக்கை சீலிடப்பட்ட உறைகளில் உச்சநீதி மன்றத்திடம் கடந்த மே மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரவீந்திரன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் இரண்டு முடிவுகள் அறியப்படுகின்றன. ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட் 29 தொலைபேசிகளில் ஐந்து தொலைபேசிகளில் தீம்பொருள் (Malware) இருப்பதை இந்த குழு உறுதி செய்கிறது.

அடுத்து அந்த தீம்பொருள் பெகாசஸ் தீம்பொருள்தானா என்பதை இக்குழுவால் தீர்மானிக்க முடியவில்லையாம். இது குறித்தான கூடுதல் விசாரணைக்கு மத்திய பா.ஜ.க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, சிலர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான தகவல்கள் இருப்பதால் அதை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்களாம்!  எனவே, ஆய்வறிக்கையில் எந்தப் பகுதியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமாம்!

இது ஒன்றிற்கொன்று முரணான  தகவல் அல்லவா? ஏன் அவர்களால் அதை தீர்மானமாக கண்டு பிடிக்க இயலவில்லை? இக் குழு என்ன மாதிரி தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டது?

அவற்றை – அந்த ஆய்வு முறையை methodology பொதுவெளியில் வெளியிட இக்குழு தயாரா? ஏன் உச்ச நீதி மன்றம் இக்குழுவின் முழு அறிக்கையையும் வெளியிட தயங்குவது ஏன்?

சிட்டிசன் லேப் நிறுவனமும் , ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் செக்யூரிட்டி லேப் ஆகிய இரண்டு புகழ் பெற்ற நிறுவனங்களும் உபயோகித்த ஆய்வு முறையை பொதுவெளியில் வெளியிட்டு அனைத்து விமர்சனங்களையும் எதிர் கொண்டு முறியடிக்கும் பொழுது இந்திய ஆய்வுக்குழு மட்டும் விதி விலக்காக தனது ஆய்வு முறையை பொதுவெளியில் பார்வைக்கு வைக்க முன்வரவில்லை? அப்படி வெளிப்படையாக  முன்வந்தால் அப்பொழுது இந்திய குழுவும் மற்ற லேப்புகளும் கடைப்பிடித்த ஆய்வு முறைகள் ஒரேமாதிரியானதா அல்லவா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இயலும் .

எந்த ஆய்வு முறை குறைபாடுடன் உள்ளது என்று தெரிய வரும்.

மேற்கு நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஸ்பெய்ன் நாடுகளும் அவர்களது பாதுகாப்பு அமைப்புகளும் பெகாசஸ் தீம்பொருள் தொலைபேசியில் இருப்பதை உறுதிப்படுத்தும்பொழுது இந்திய குழுவிற்கு மட்டும் அது தீர்மானிக்க ஏன் முடியவில்லை?

ஆய்வு முறைகளை பொது வெளியில் கொண்டுவருவதன் மூலம் பெகாசஸ் தீம்பொருள் இருக்கிறது அல்லது இல்லை என்ற தீர்மானமான முடிவுக்கு வர இயலும் இல்லையா?

அடுத்து உச்ச நீதி மன்றம் வரவிருக்கும் விசாரணையில் பத்து அல்லது பதினோரு முக்கிய அரசு ஆட்சியாளர்களை சத்திய பிரமாண பத்திரங்கள் மூலம் நீதி மன்ற கேள்விகளுக்கு- இந்திய அரசு பெகாசஸ் தீம்பொருளை வாங்கியதா இல்லையா, உங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதா?

இந்திய குடிமக்களை அரசியல் சட்டத்திற்கு முரணாக பெகாசஸ் தீம்பொருள் மூலம் வேவு பார்த்து உங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதா? – போன்ற நேரிடையான கேள்விகளுக்கு அஃப்பிடவிட் அன்டர் ஓத்  மூலம் -பிரமாண பத்திரம் மூலம் – பதிலளிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டால் புதிருக்கான விடை விரைவில் கிடைத்துவிடும் என்பதை பாதிப்படைந்த வயர் ஆசிரியர் வரதராஜன் குறிப்பிடுகிறார் , இது ஒரு நியாயமான வேண்டுகோளாகவே நமக்கும் தெரிகிறது.

அவ்வாறு விசாரிக்கப்பட வேண்டியவர்கள்:

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத் ஷா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல்

முன்னாள் உள்துறை செயலர்கள்-  ராஜீவ் மெஹ்ரி, அஜய் குமார் பல்லா

கேபினட் செயலாளர்கள் – பி. கே. சின்ஹா, ராஜீவ் கௌபா

R&AW அமைப்பை சார்ந்த சமந்த் கோயல், அனில் தஸ்மனா

I B அமைப்பை சார்ந்த தபன் தேகா, அரவிந்த் குமார், ராஜீவ் ஜெய்ன்

இறுதியாக அவர் இதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டார் என தெரிந்தாலும் கடமை கருதி கேள்வி கேட்கப்பட வேண்டியவரில் முதன்மையானவர் திரு. மோடி அவர்கள் தான்!

திரு.அமீத் ஷா 2019 தேர்தல் வெற்றிக்குப் பின்தான் உள்துறை அமைச்சரானார் என்றாலும், அன்றும் இன்றும் மோடியின் நிழலாக செயல்படும் காரணத்தினால் அமீத் ஷா அனைத்தும் அறிந்தவர் என்றும் , அதே காரணத்தினால் தான் ராஜ்நாத் சிங் -2017ல் உள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் – இதில் சம்பந்தப்படாதவர் என்றும், விவரமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதிகாரிகளை பொறுத்தளவில் அன்றிருந்தவர்களும் இன்று அந்த பொறுப்பில் இருப்பவர்களுமே மேற்கூறிய பட்டியலில் உள்ளனர்.

அஜித் தோவல் அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசின் முக்கிய மூன்றாவது புள்ளியாக திகழ்கிறர் என்றும் இந்த பன்னிரவருக்குத்தெரியாமல் இந்தியாவில் எந்த ராஜாங்க விவகாரமும் நடக்காது என்றும் அந்த வட்டாரங்கள் கூறுவதை மறுப்பதற்கில்லை.

இவர்கள் பதில் அளிப்பார்களா என்பதைவிட இவர்கள் கேள்வி கேட்கப்படுவார்களா? என்பது பெரிய கேள்விக்குறி.

சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் தொடரவேண்டும் என்றால் உச்ச நீதி மன்றம் மேற்கூறிய வகையில் இந்த கேள்விகளை கேட்டால் உண்மையை உலகிற்கு கொண்டுவரலாம் !

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time