கூட இருந்தே குழி பறித்த குலாம் நபி ஆசாத்!

-ச.அருணாசலம்

காங்கிரசில் 50 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்தும், கட்சிக்காக எந்த பங்களிப்பையும் செய்யாதவர்  குலாம் நபி ஆசாத்! தொண்டுள்ளம் கொண்டவருமில்லை. தொண்டர் படையைக் கண்டவரும் இல்லை! பாஜகவின் தூண்டுதலால் இன்று காங்கிரசை பலவீனப்படுத்த களம் கண்டுள்ளார்! வெற்றி பெறுவாரா?

காங்கிரஸ்காரர்களே  பொறாமைப்படும் அளவிற்கு பல்வேறு பதவிகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர் குலாம் நபி ஆசாத் ! தற்போது அவர் “காங்கிரஸ் மீள முடியாத பின்னடைவு கண்டுவிட்டது ” எனவே நான் விலகுகிறேன் . காங்கிரசின் இந்த வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே காரணம் என்ற கடித குண்டை வீசியுள்ளார்.

அனைத்து ஊடகங்களும் குலாம் நபி ஆசாத் விலகல் பற்றியும் காங்கிரசின் எதிர்காலம் இனி என்னாகும்..?  என்ற பாணியில்  விவாதங்களும், விமர்சனங்களும் வெளியிட்டு பேசி வருகின்றன.

காங்கிரசின் எதிர்காலம் இனி என்னாகும்? குலாம் நபி ஆசாத் இல்லாமல் நிலைகுலைந்து போய்விடுமா காங்கிரஸ் கட்சி?

இந்தியாவில் அரசியல் சாசனத்தின் வழிகாட்டலையும் , சட்டத்தின் ஆட்சிமுறையையும் உள்ளிருந்தவாறே உடைத்து வரும் பாரதிய ஜனதா அரசை எதிர்த்து, இந்திய மக்களை மத வெறியால் கூறு போட்டு அரசியல் ஆதாயம் அடையும் பாரதிய ஜனதா கட்சியினரின் அராஜகத்தை, ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து மக்களை திரட்ட சிதறுண்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பாரத ஒன்றிணைப்பு நடை பயணத்தை  காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள சமயத்தில் ‘நான் காங்கிரசு  கட்சியில் இருந்து விலகுகிறேன் ‘ என்று குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை தரலாம்.

இவர் எதிலிருந்து விலகுகிறார் ? காங்கிரஸ் எடுத்து வைக்கும் அரசியல் கருத்துக்களில் இருந்து விலகுகிறாரா?

அறிவிக்கப்பட்ட நடைபயணத்தின் நோக்கங்களில் இருந்து விலகுகிறாரா?

இந் நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயம் என்று முழங்கிய ஜெய்ப்பூர் கூட்டத்தில் இவரும் தானே இருந்தார்.

காங்கிரசை சீர்திருத்தப்போகிறேன் என்ற ஜி23 கூட்டத்தில் ஒருவர் தானே இவர் ? அந்த சீர்திருத்தங்களில் இருந்து இவர் விலகுகிறாரா?

இவர்கள் கேட்ட சீர்திருத்தங்களை செவி மடுத்துதான் சீர்திருத்தங்களும், ஜெய்ப்பூர் (சிந்தனை அலசலும்) மாநாடும் ,தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின் எதிலிருந்து விலகுகிறார் ? என்ன காரணம் கூறி விலகுகிறார்?

ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட பலரும்,  அவர்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாகவோ, அனுதாபிகளாகவோ இல்லாத போதும்  இன்று நாடு செல்கின்ற திசை கண்டு பொறுக்காமல் ஜனநாயக சக்திகள் பலம் பெற வேண்டும் , காங்கிரஸ் இயக்கம் புத்துயிர் பெற வேண்டும் என்று நினைக்கையில் கட்சியின் ஆலவிருட்சங்களில் ஒன்றாக தன்னை பாவித்துக் கொண்டிருக்கும் குலாம் நபி இன்று குறுக்கு சால் ஓட்டுவதால் யாருக்கு நன்மை?

1970களின் மத்தியில்  பலேசா பிளாக் (ஒன்றிய) காங்கிரஸ் கமிட்டி செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத்த ஆசாத் டெல்லியில் சஞ்சய் காந்தியை சந்தித்தது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சஞ்சய் காந்தியின் நட்பால் அவருக்கு ஜம்மு-காஷ்மீர் பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது. சஞ்சய் காந்தியின் கும்பலாக அறியப்பட்ட  கமல்நாத், ஜகதீஷ் டைட்லர், அம்பிகா சோனி ஆகியோருடன் குலாம் நபி ஆசாத்தும் ஒருவராக இருந்தார் . இந்த தொடர்பின் வழியாகவே 1980 ல் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவர் பதவியும் கிடைக்கப் பெற்றார்.

மக்கள் செல்வாக்கோ, தொண்டர்களின் ஆமோதிப்போ ஏதுமின்றி சஞ்சய் உடனான தனது நட்பின் செல்வாக்கால் பதவிகளை அடைந்தவர் 1977  ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார். ஆனால் -77ல் தோல்வியடைந்த ஆசாத்திற்கு 1980ல் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் பதவி இந்திரா காந்தியால் கிடைத்தது!

இந்திராவின் படுகொலைக்குப் பின் பிரதமரான ராஜீவ் காந்தி இவரை மத்திய அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் . 1980 தேர்தலில் இவருக்கு மகாராஷ்டிரத்தில் இருந்து வாஷிம் தொகுதியில் இருந்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தலைமை வாய்ப்பளித்து,1982ல் மத்திய இணை அமைச்சரானார்.

மீண்டும் 1985ல் நாடாளுமன்றத்திற்கு இவரை மகாராஷ்டிரத்திலிருந்து தேர்ந்தெடுத்து மத்திய அமைச்சராக்கினார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் படுகொலைக்குப்பின் பி.வி. நரசிம்ம ராவை முன்னிறுத்தியதில் இவரும் ஒருவர். இதனால் மீண்டும் அமைச்சரானார்.

ஆனால், 1995-96ல் ஆசாத் -நரசிம்மராவின் அமைச்சரவையின் இறுதி காலத்தில்- சீத்தாராம் கேசரி க்கு ஆதரவாக -நரசிம்ம ராவிற்கெதிராக- செயல்பட்டார். ஆனால் சோனியாவை காங்கிரஸ் தலைவராக்க முனைந்ததில் சீத்தாராம் கேசரியை அறைக்குள் பூட்டி வைத்து சோனியாவை தேர்வு செய்ததில் இவர் பங்கு அதிகம் . ஏனெனில், இவர் கேசரிக்கு வேண்டியவராக இருந்ததால் இவரை நம்பி கேசரி மோசம் போனார் . சோனியாவிற்கு விசுவாசம் காட்ட கேசரியை அறையில் பூட்டிய ஆசாத் அந்த கால தமிழ்பட வில்லன்களையும் மிஞ்சியவர். எல்லாம் பதவி சுகத்திற்காகத் தான்!

சோனியாவிற்கு நெருக்கமாக ஏன் காந்தி குடும்பத்திற்கே அதி தீவிர விசுவாசி நான் தான் என தன்னை முன்னிறுத்திக்கொண்டார் குலாம் நபி ஆசாத். அதனால் அவர் அடைந்த பலன்கள் ஒன்றா இரண்டா?

சோனியா காந்தி எதிர் கட்சிகளின் தலைவர்கள் வீட்டிற்கு நடையாய் நடத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுர்ஜித்தின்  பேருதவியால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து வாஜ்பாய் அரசை தோற்கடித்தார் . இதில் ஆசாத்தின் கைங்கர்யம் கடலில் கரைத்த பெருங்காயமன்றி வேறென்ன?

ஆயினும் 2004ல் மன் மோகன் சிங் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து அமைச்சரானார்! 2005ல் ஜம்மு- காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவராக்கப்பட்டார் 1977ல் அடைந்த தோல்விக்குப்பின் ஜம்மு காஷ்மீர் அரசியல் நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியிருந்த ஒருவருக்கு 2005ல் அப்பிரதேச கட்சித்தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தது சோனியாவின் தலைமை! இவரால், இவருக்கு அளிக்கப்பட்ட பதவிகளால் ஓரங்கட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரமுகர்கள் எத்தனை பேர்?

அப்பொழுதெல்லாம் கும்பல் ஆட்சி பற்றி  பேசாத ஆசாத் இன்று பேசுவதில் அர்த்தங்கள் ஆயிரம் உள்ளன.

இத்துடன் முடியவில்லை இவருடைய பதவி சுகங்கள். 2005-ல் காங்கிரஸ் பிடிபி கூட்டணி அமைச்சரவைக்கு தலைமை தாங்க இவரை காங்கிரஸ் தலைமை நியமித்தது. ஆம், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக இவரை அமர்த்தியது சோனியாவின் தலைமை!

இதைத் தொடர்ந்து இவர் காங்கிரஸ் கட்சியை கட்டி வளர்க்கவில்லை. கூட்டணியை பிடிபி கட்சியின் உறவை முறித்துக் கொள்ள வழி வகுத்தார். சர்ச்சை மிகுந்த வனத்துறை நிலங்களை அமர்நாத் யாத்திரை கமிட்டிக்கு 99 வருட குத்தகைக்கு-லீசிற்கு-விடும்முயற்சியில் ஆட்சியை பறி கொடுத்தார்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 2009ம் ஆண்டு மீண்டும் ராஜ்ய சபா தேர்தலுக்கு ஜம்மு காஷ்மீரில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சென்றார்.

2014ம் ஆண்டு மேலவை எதிர் கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.2015-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைமை இவரை தூக்கிப் பிடித்து மீண்டும் மேலவைக்கு அனுப்பியது.

2021ம் ஆண்டு இறுதியில் தனது பதவிக்காலம் முடிந்த நிலையில் , காங்கிரஸ் கட்சியின் வீச்சு குறைந்த நிலையில் குலாமை தூக்கிப் பிடிக்க காங்கிரசு கட்சிக்கு வழியில்லை, வலிவுமில்லை! ஆனால், இதுவரை எந்த வித கொள்கை சீற்றமும் இன்றி பதவி சுகம் அனுபவித்த நமது கதாநாயகனுக்கு இது கசந்தது, இவரது  ராஜ்ய சபா பிரிவு உபசார விழாவில் மோடியின் நீலிக் கண்ணீர் இனிக்கத் தொடங்கியது, மோடி அரசின் பத்ம பூஷன் விருது பரவச மூட்டியது.

தனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மூன்று யூனியன் பிரதேசங்களாக பா ஜ க அரசால் துண்டாடப்பட்டு சிறுமைப்படுத்தியதில் , அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்த விவகாரத்தில் இவர் சிங்கமாக சீறவில்லை, எலி போன்று முனங்கியதை மானமுள்ள எந்த காஷ்மீரி மகனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அரசியல் என்றால் மக்கள் சேவை என்ற காலம் மலைஏறிப் போய் பதவி சுகமே பிரதானமாக இருக்கும் இன்றைய சூழலில் குலாம் நபி தியாகியாக மாறாவிட்டாலும் மானமுள்ள நன்றியுள்ள மனிதனாக அவர் காங்கிரசில் நீடித்து இருக்க நியாயங்கள் நிறையவே இருந்தன.

ஆனால், பதவி மோகத்தால் எடுப்பார் கைப் பிள்ளையாக மாறி எழுதிக் கொடுத்த வசனங்களை கடிதமாக வடித்து காங்கிரஸ் கட்சியை காலை வாரிவிட முயற்சித்துள்ளார். இதுவரை அவர் சந்தித்த காந்திகளெல்லாம் எதிர்கேள்வி கேட்காத பொழுது, ராகுல் காந்தி “சிறு பிள்ளைத்தனமாக”  –காங்கிரசின் வளர்ச்சியில் குலாம் நபி ஆசாத்தின் பங்கு என்ன? பணிகள் என்ன என்று – கேள்வி கேட்டதால் ராகுல் வேண்டாதவராகி விட்டார்.

ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சி தலைவராக வந்து விட்டால் வளமையாக துதிபாடி பதவி சுகங்கள் அனுபவிக்க முடியாது என்பதாலும், காங்கிரஸ் கட்சியின் வீச்சு சுருங்கி வருவதும் இதற்கு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த குலாம் பதவி சுகத்திற்கு  எளிய வழி பாரதிய ஜனதாவின் அனுக்கிரகமே என முடிவெடுத்ததில் வியப்பில்லை.

பாஜகவை ஆதரிக்க முடியாமல் உள்ள சிறுபான்மையினர் வாக்கு வங்கியை காங்கிரசிடமிருந்து சிறிதளவாவது பிரித்தெடுத்து பாஜக வளர்ச்சிக்கு சேவை செய்யவே குலாம் நபி ஆசாத்தின் தனிக் கட்சி துணை போகும். இந்த தனிக் கட்சி நடத்துவதற்கான பொருளாதாரத்திற்கு பாஜக மறைமுகமாக பொறுப்பேற்கும்.

 

உண்மையான கொள்கைப் பற்றாளர்களையும், கட்சியின் ஆர்வலர்களையும் அரவணக்கத் தெரியாத காங்கிரஸ் கட்சி, ஜால்ராக்களுக்கு மட்டுமே பதவி கொடுத்து பழகிப் போன காங்கிரஸ் தலைமை இந்த தலைக்குனிவை எதிர் கொள்ளத் தான் வேண்டும்.

கொள்கை பற்றையும் நேர்மையான அரசியல் செயல்பாட்டையும் என்று காங்கிரஸ் கட்சி மதிக்க கற்றுக்கொள்கிறதோ, அன்றுதான் அக்கட்சி புத்துயிர் பெறும் என்பதில் ஐயமில்லை. அது வரை.

“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல் 

 உற்றுழி தீர்வார் உறவல்லர்- அக்குளத்தில் 

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு “

என்ற மூதுரையை காங்கிரஸ் கட்சி தலைமையும், தொண்டர்களும் மனதில் கொண்டால் எதிர்நோக்கும் மாற்றம் கிட்டும்.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time