வரம்பு மீறிப் பேசி வழக்கை திசை திருப்புகிறாரா நீதிபதி?

-சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது! ஜிப்மர் கொடுத்தது ஒரு மருத்துவ ஒபினியன் தானே! அதை பொதுவெளியில் வைக்க மறுத்து, தன்னிச்சையாக கருத்துரைப்பதா? இது விசாரணையின் போக்கை கடுமையாக பாதிக்குமே! நீதிமன்றத்தின் மாண்பையே கேள்விக்குள்ளாக்கி விட்டார் நீதிபதி!

‘ஆட்சியாளர்கள் தப்பு செய்தாலும், காவல்துறை தப்பு செய்தாலும் கூட கடைகோடி மனிதனின் கடைசி புகலிடமாக விளங்கி வருவது நீதித் துறை தான்! கோடானு கோடி மக்களின்  அந்த மகத்தான நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைந்து விடக் கூடாது’ என்பதே நம் ஆதங்கம்!

கள்ளக் குறிச்சி வழக்கில் ஆரம்பம் முதலே தப்பாட்டம் ஆடத் துவங்கி விட்டன அதிகார மையங்கள்!

ஜிப்மர் அறிக்கை என்னவோ அதை பொது வெளியில் வைத்துவிட்டு போக வேண்டியது தானே…! அதை மறைத்துவிட்டு, ரகசியப்படுத்திக் கொண்டு நீதிபதி கருத்து மழை பொழிவது ஏனோ..?

சிபிசிஐடி விசாரணை அறிக்கை இன்னும் வெளிவரவே இல்லை. அதற்குள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ‘நிரபராதி’ என உறுதிபடுத்த இவ்வளவு அவசரம் எதற்கு நீதிபதி அவர்களே!

”நன்றாக படிக்க வேண்டும்’ என மாணவிக்கு அறிவுரை கூறியதற்காக ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரும் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பொருத்தமற்றது”

என தன்னிச்சையாக எந்த விசாரணையும் நடக்கும் முன்பாகவே ஊகத்தின் அடிப்படையில் ஒரு நீதிபதி கூறலாமா?

” ஜிப்மர் மருத்துவ அறிக்கையின்படி, மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தலோ அல்லது கொலையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அவர் தற்கொலை தான் செய்துள்ளார்” என நீதிபதி எப்படி அறுதியிட்டு கூறுகிறார். காவல்துறை அறிக்கை இல்லாமல் நீதிபதி தன்னிச்சையாக எப்படி சொல்கிறார்..?

மருத்துவ அறிக்கை என்னவென்றே சொல்லாமல் தன்னிச்சையாக கருத்து சொல்வது எந்த வகையான நீதி பரிபாலனமாக இருக்க முடியும்?

”கல்விக் கற்றுத் தரும் ஆசிரியர்கள், மாணவர்களாலும், பெற்றோர்களாலும் மிரட்டப்படுவது வருந்ததக்கது” என இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்தை நீதிபதி சொல்கிறார்!

சம்பவம் நடைபெற்றது தனியார் பள்ளி! எந்த தனியார் பள்ளியிலும் பெற்றோர்கள் ஆசிரியர்களை மிரட்ட வாய்ப்பே இல்லை. மிரட்டினால் அடுத்த நிமிஷமே டி.சியை கிழித்து கொடுத்து விடுவார்கள்! மாணவர்களாகட்டும் ,பெற்றோர்களாகட்டும் எதிர்த்து பேசவே முடியாத ஒரு இடம் என்றால், அது தனியார் பள்ளிக் கூடம் தான்!

‘இப்போதும் கூட ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு என்பது நிர்வாகம் தான் தப்பித்துக் கொள்ள செய்த புனைவு தானே அன்றி, உண்மையல்ல’ என்பது தான் உண்மை! ‘பள்ளி நிர்வாக தரப்பில் தான் மாணவி கொல்லப்பட்டு இருக்கிறார். இதில் ஆசிரியர்களை சம்பந்தப்படுத்தி தப்பித்துக் கொள்ள பார்க்கிறது நிர்வாகம்! அதற்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் துணைபோகும் படியான கருத்தை சொல்லக் கூடாது’ என்பது தான் பொது மக்கள் எண்ணமாகும்.

பள்ளிக் கூட வளாகத்தில் அதுவும் பெண்கள் விடுதி உள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் இரவு நேர விருந்து நடத்தலாமா?, அதில் மது உள்ளிட்ட போதையூட்டும் பானங்கள் பரிமாறப்பட்டது தவறல்லவா? அதில் யார், யார் கலந்து கொண்டனர்? அது குறித்த முழு உண்மைகளையும் வெளிப்படுத்தாமல் மெளனம் சாதிப்பது ஏன்? பள்ளி உரிமையாளர் மாணவி இறந்ததை அடுத்து களத்தில் இருந்து பெற்றோர்களுக்கும், காவல்துறைக்கும் உண்மைகளை எடுத்துரைக்காமல் டெல்லி சென்றதன் காரணம் என்ன? அதன் காரணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்பந்தம் தந்தாரா?

ஆரம்ப கட்ட விசாரணை கூட துவங்குவதற்கு முன்பு பள்ளிக் கூடத்திற்கு நற்சான்றிதழ் வழங்கினாரே தமிழக டிஜிபி.கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அதற்கான எப்.ஐ.ஆர் போட்டு ஏன் வழக்கு பதியவில்லை? இந்த லட்சணத்தில் மாணவியின் தாயார் செல்வியை அழைத்து குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின்  பேசுவது எல்லாம் எவ்வளவு பொய்மை!

கள்ளக் குறிச்சி வழக்கில், ‘எது நடக்கக் கூடாது’ என ஒட்டுமொத்த தமிழக மக்களும் தவியாய் தவித்தார்களோ அவை ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.

‘அதிகார மையத்தில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ.. அந்தப்படியான அறிக்கையையும், தீர்ப்பையும் மருத்துவத் துறையிலும், நீதிமன்றத்திலும்  நிர்பந்தித்து பெற்றுக் கொள்வார்கள் போல இருக்கிறதே…’ என ஒட்டு மொத்த தமிழகமும் விக்கித்துப் பார்க்கிறது.

பில்கிஸ்பானு வழக்கிலாவது அவரை கற்பழித்து அவரது குடும்பத்தினரை கொன்றவர்களை 15 ஆண்டுகள் தண்டிக்க முடிந்தது. ‘அவர்கள் நிரபராதிகள்’ என தீர்ப்பு கிடைத்துவிடவில்லை.ஆனால், இங்கோ ஆரம்பகட்ட விசாரணை நடக்கும் முன்பே வழக்கை ஊத்தி மூடப் பார்க்கிறார்களே!

மக்களின் அறச் சீற்றத்தின் வீச்சைக் கண்டு பயந்து பள்ளி நிர்வாகிகளை கைது செய்தது தற்காலிக சமாதான ஏற்பாடாகத் தான் தெரிகிறது. இன்னும் சரியான முறையில் வழக்கு பதிவாகவில்லை. விசாரணை சரியான திசையில் கூட நகரவில்லை. பள்ளி நிர்வாகியின் மகனை விசாரிக்க கூட மறுத்து வருகிறார்கள்! மாறாக கலவரம் செய்ததாக அப்பாவி இளைஞர்கள் 360 பேருக்கும் மேல் கைது செய்து சிறையில் தள்ளி வாட்டுகின்றனர். அதிலும் கேட்க நாதியற்ற ஏழைகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், தலித்துகள் எனப் பார்த்து கைது செய்யும் காவல்துறையை முதன் முதலாக தமிழகம் கண்டது இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான் என்பது நினைத்து பார்க்க முடியாத பேரதிர்ச்சியாக உள்ளது.

உண்மையிலேயே இங்கு பாஜக ஆட்சி நடந்தால் கூட, இந்த அளவுக்கு அப்பாவிகள் கைது நடந்திருக்க வாய்ப்பில்லை. நாம் நம்புகிற திராவிட ஆட்சியாளர்களைக் கொண்டே இதை ஒன்றிய ஆட்சியாளர்கள் இதை சாதிக்கின்றனரே… என்பதை எண்ணும் போது இந்த அரசியல் பாதையின் விசித்திரத்தை என்னென்பது?

குஜராத்தையும், உத்திர பிரதேசத்தையும் மிஞ்சும் அளவுக்கு தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளர்கள் கொடூர கொலைகளுக்கு பேர் போன ஒரு பள்ளி நிர்வாகிகளுக்கு விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே நற்சான்றிதழ் தந்து நிரபராதி ஆக்கி விட்டனர்.

ஜிப்மர் அறிக்கைபடி நீதிபதி தெரிவித்த கருத்தில், மாணவிக்கு உடலில் காயம் ஏற்பட்டது மாடியில் இருந்து கீழே விழுந்த போது அவர் மரத்தில் மோதியதால் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுவே காயத்திற்கு காரணம் என்று தற்போது நீதிபதி தெரிவித்து உள்ளார். இது நீதிபதியின் தன்னிச்சையான விளக்கமா? உண்மையில் அறிக்கையில் இருப்பது தான் என்ன?

அவர் மரத்தில் மோதியதாக சொல்வதற்கான சி.சி.டி.வி கேமரா ஆதாரங்கள் இல்லை. எந்த இடத்தில் இருந்து அந்தப் பெண்னை சடலமாக தூக்கி வந்தார்களோ.. அந்தப் பகுதியில் மரமே இல்லையே! ஒரு ஊகத்தின் அடிப்படையில் நீதிமன்றம் பேசலாமா? அல்லது பள்ளி உரிமையாளர்கள் ஜோடித்து சொல்லியதை நியாயப்படுத்தவா நீங்கள் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டபடி ஒரு மருத்துவரை நியமிக்க மறுத்தீர்கள்? அப்போதே மக்கள் சந்தேகப்பட்டார்களே இந்த நீதிமன்றமானது அதிகார வர்க்கத்தின் சேவையாளராக மாறிவிட்டதோ,, என்று!

எவ்வளவு பெரிய கொலைகள் செய்தாலும் ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர் என்றால், அவரை ஒன்றுமே செய்ய முடியாது என்பதை எழுதப்படாத விதியாக்கியுள்ளனர் இன்றைய ஆட்சியாளர்கள்.

முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும், இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெளியான உண்மைகளை எல்லாம் மறைத்தும், திரித்தும் ஒரு அறிக்கை பெறுவதற்காகத் தானா மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் புதுச்சேரியின் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களிடம் அபிப்ராயம் கேட்டார்கள்?

அந்த அறிக்கையை முதலில் யாருக்கு தர வேண்டுமோ அந்த பெற்றோர்களுக்கே தராமல் ஏதோ ராணுவ ரசசியத்தைப் போல மறைத்து சீல் வைத்த கவரில் நீதிமன்றத்திற்கு தந்தது ஏன்? என்பது புரியவில்லை.

ஒரு வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் விஷயத்தில் சட்டப்படி 90 நாட்கள் வரை அவகாசம் எடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என சட்டத்தில் இருக்கும் போது, அவர்களை அவசர கதியில் நீதிமன்றம் ஜாமீனில் விடுவதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

சமூகத்தில் மிகப் பெரிய செல்வாக்குள்ள இவர்கள் சாட்சியங்களை கலைத்து விடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்தது போல அல்லவா இந்த நடவடிக்கை உள்ளது.

பிணைக்கான உத்தரவு புலன்விசாரணையை பாதிக்கக்கூடாது என்பது அடிப்படையான விதி.

புலன்விசாரணை அதிகாரி கீழ்நிலையில்- உயர்நீதிமன்றத்திற்கு கீழ் நிலையில்- உள்ளவர். எனவே பிணை வழங்க உயர்நீதி மன்றமோ உச்ச நீதி மன்றமோ முடிவு எடுக்கையில்,வழக்கின் பொருண்மைக்குள்( Merit) செல்லக்கூடாது.

புலன்விசாரணை அதிகாரி ஜிப்மர் அறிக்கையை புலனாய்வு செய்து குற்றம் பற்றி முடிவுக்கு வரவேண்டும். உயர்நீதி மன்றம் பிணை வழங்கிய வழக்கில் இப்படி தீர்ப்பு கூறினால், இதற்கு முரணாக கருதினாலும் புலனாய்வு அதிகாரி அதனடிப்படையில் செயல்பட்டு கொலை என குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வாரா? அவருக்கு அந்த துணிச்சல் தான் வருமா?

பிணை தரப்பட வேண்டும் என உயர்நீதி மன்ற நீதிபதி கருதினால், புலன் விசாரணையை பாதிக்காத வண்ணம் பிணை அளிக்க வேண்டும். குற்றம் சம்மந்தமான பொருண்மைக்குள் செல்லக்கூடாது.

90 நாட்களுக்குள் புலன் விசாரணை முடிந்து புற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் பிணை நிச்சயம். இதை Default Bail என்பர்.

கலவரம் சம்மந்தமான வழக்கில் கண்டபடி கைது செய்யப்பட்ட அப்பாவிகள் ஒருவருக்கும் இது வரை பிணை வழங்கப் படவில்லையே! மேலும், பல அமைப்புகள் – மக்கள் உரிமைக் கழகம்(PUCL) சிபிஎம்மின் மனிதம் போன்ற அமைப்புகள் – உண்மை அறியும் குழுவை அனுப்பி பொது விசாரணை நடத்தி , இது ஒரு கொலை என்று அறிக்கைகளை பொது வெளியில் வெளியிட்டுள்ளது கவனத்திற்கு உரியது.

இன்னும் விசாரணை போக வேண்டிய தூரம் அதிகம்! விசாரணை நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்கள் முன்னிலை படுத்தப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஒரு நேர்மையான நீதிமன்ற விசாரணை நடைபெறும் வாய்ப்பை மறுப்பதாக உள்ளது பிணை உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள்! இதைத் தான் ‘ஜுடிசியல் எக்சஸ்’ என்பார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time