திமுகவின் உள்குத்து அரசியலில் அண்ணாமலை அறுவடை!

சாவித்திரி கண்ணன்

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக ஊடகங்களில் இரண்டு பிரேத அறிக்கைகளை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கபடும் என்கிறாரே நீதிபதி சதீஸ்குமார்?

ஜனநாயகத்தை காப்பதற்காகத் தான் நீதிமன்றம்! அழிப்பதற்காகவல்ல!

மடியில் கனமிருப்பவர்கள் பதற்றப்படவே செய்வர்! நீதிபதி ஏன் பதறுகிறார்.

க.செபாஷ்டின், வேலூர்.

‘செந்தில் பாலாஜியை இன்னும் வலுவாக தாக்கி பேசுங்கள்’ என திமுக அமைச்சர்கள் சிலரே தன்னிடம் ஏர்போர்டில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளாரே..?

நான் விசாரித்த வகையில் இது உண்மை தான்! ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அதிகாரமட்டத்தில் நிலவும் குழப்பத்தின் அறிகுறி இது. உள்குத்து அரசியலுக்கு அண்ணாமலையின் தயவை நாடுகிறார்கள் திமுக அமைச்சர்கள் என்றால்…, நிலைமை மோசம் தான்!

எஸ், ராஜலட்சுமி, மதுரவாயில்

ஆட்சிக்கு வந்ததில் மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளதே திமுக தலைமை?

தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்வது என்றால், இது தான்!

பல்லாண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் தொடர்ந்து கட்சியில் பயணித்தவர்களை உதாசீனப்படுத்தி, அடுத்த கட்சியில் இருந்து வருபவர்களுக்கு ஆலவட்டம் எடுக்கும் முட்டாள்த் தனத்தை என்னென்பது…? இதன் விளைவாக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை அள்ளிச் சென்று கொண்டிருக்கிறது கோவையிலும், திருப்பூரிலும் பாஜக.

தலைமையின் போதாமையால் திமுக எம்.பிக்களில் ஒரு சிலரும் பாஜக பக்கம் சாய்வதாக தெரிய வந்துள்ளது.

ஆலம், திருச்சி

அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனையை தடை செய்யக் கோரிய ஸ்டாலின் தற்போது அந்த விற்பனை நடப்பதை அறியமாட்டாரா?

நடைபெறும்  விற்பனை, மற்றும் லாபங்களை அவர் நன்கு அறிந்து கொண்டார் என்பது தான் தற்போதைய பிரச்சினை.

க.அப்துல்கலாம், ஹைதராபாத்.

நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக ஆதிநாதன் கமிஷன் அமைத்துள்ளாரே ஸ்டாலின்?

எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கும் உறுதிப்பாடோ, தெளிவோ தன்னிடம் இல்லை என்பதை தொடர்ந்து நிருபித்து வருகிறார் ஸ்டாலின். தூத்துகுடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை விவகாரம் தொடங்கி சாஸ்த்திரா பல்கலைக் கழக நில ஆக்கிரமிப்பு வரை இது தான் நிலைமை.

ஆர்.ரமேஷ், பெங்களூர்

அதிமுக அலுவலகத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் யார் குற்றவாளி..?

பூட்டப்பட்ட அலுவலகத்தை பட்டப் பகலில் படை நடத்தி வந்து கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, உள்ளே உள்ள ஆவணங்களை எல்லாம் எடுத்துச் செல்லும் வரை பாதுகாப்பு தந்த திமுக அரசின் காவல்துறை! சண்டையிட்ட இரு கோஷ்டியையும் சமமாக பாவித்து விரட்டி அடித்து கட்டிடத்தை காப்பாற்றத் தவறிய திமுக அரசின் காவல்துறையே முதல் குற்றவாளி.

கோமதிநாயகம், கோவை

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளை கட்டப் போகிறதாமே ஆந்திர அரசு? அதற்கான டெண்டர் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதே..?

கொசஸ்தலை ஆற்றின் 75 சதவிகிதம் தமிழகத்தில் தான் ஓடுகிறது. தமிழக ஆட்சியாளர்களின் தயவில்லாமல் இந்த தைரியம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்திருக்குமா..? தெரியவில்லை. போர்க்கால அடிப்படையில் இந்த திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல், பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு விட்டுவிட்டார் ஸ்டாலின். இதனால், எதிர்காலத்தில் வட தமிழகமே பாலைவனமாகும்.

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசு உறுதிபாட்டைக் காட்டுமா?

துணை வேந்தர்களை நியமிக்க தங்களுக்கு அதிகாரம் தர வேண்டும் என ஆளுனரிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் வரை தீர்வில்லை! எலியாக இருக்கும் வரை அந்த ஜீவனை இரையாக மட்டுமே நினைக்கும் பூனை!

எல். ஞானசேகரன், ஈரோடு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை எதிர்த்த வழக்கில் ‘அரசு வெளியிட்ட விதிகள் செல்லும்’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளை ‘ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும்’ என்றும் கூறுகிறது! தீர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லையே?

‘ஆகம விதிப்படியே அர்ச்சகரை நியமிக்க வேண்டும்’ என்றால், ‘அந்தந்த குலம்,கோத்திரத்தில் வந்தவர்களே அதுதற்கான கோயில்களுக்கு அர்ச்சகராக முடியும்’ என்பதை உயர்நீதி மன்றம் முழுமையாக அங்கீகரித்துள்ளது. அதே சமயம் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதையும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது’ நீதிமன்றம்!

அதாவது, ‘இந்த சாப்பாட்டை இன்னின்ன குல,கோத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே சாப்பிட உரிமை படைத்தவர். ஆனால், பசியோடு காத்திருக்கும் தகுதியானவருக்கு தரலாம் என்பதை நாங்கள் தடுக்கவில்லை’ என நீதிமன்றம் கூறியுள்ளது!

‘சாப்பிட உரிமை இல்லாத இடத்தில் காத்திருப்பது வேஸ்ட்’ என புரிந்து கொண்டு நீங்களாக விலகிச் செல்வது உத்தமம் என்று இந்த சமய அற நிலையத் துறையின்  கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்றுக் காத்திருப்பவர்களுக்கு சூசகமாக உணர்த்தப்பட்டு உள்ளது.

சி.சஞ்சய்குமார், அம்பத்தூர், சென்னை

எம்.ஜி.ஆர் நல்ல தலைவரா சார்?

எம்.ஜி.ஆர் திரைத் துறையில் இருந்த போது வசூல் மன்னன்  என பெயரெடுத்தவர்! ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சிக்காரர்களை வசூல் மன்னர்களாக்கி அழகு பார்த்தவர்.

பெரியாரின் தமிழ் மொழி எதிர்ப்பு நியாயமா சார்?

எதிர்காலத்தில் ஆங்கில மொழியே அதிகார மொழியாக இருக்கும் என கணித்த பெரியார், தமிழர்களை அதிகாரப்படுத்தும் நோக்கில் பேசியவற்றை அவரது தமிழ் துவேஷமாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை.

தயாளன், தாம்பரம்

FMCG புராடக்ட்ஸ் விலைகள் ஏறிக் கொண்டே போவது ஏன்?

பாஸ்ட் மூவிங்க் கன்ஸ்யூமர் குட்ஸ் (FMCG) என்பதால்! மக்கள் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகிவிட்டனர். ஆகவே, தைரியமாக விலை ஏற்றிக் கொண்டே செல்கின்றனர்.

மு.தங்கதுரை, தண்டையார்பேட்டை

‘திருக்குறளை முதன்முதல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அதுவே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அது காலனி ஆதிக்க மனோபாவத்துடன் இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற் கொள்ளப்பட்டுள்ளது” என்கிறாரே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி?

ஐயோ பாவம்! ஆர்.என்.ரவியின் பேச்சு அவருக்கு திருக்குறளும் தெரியவில்லை, ஜி.யூ.போப் யார் என்பதும் தெரியவில்லை. ஆன்மீகம் என்றால் என்ன என்பதும் புரியவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர் கூட இருக்கும் இந்துத்துவ வெறியர்கள் நாளும்,பொழுதும் அவரை இஷ்டத்திற்கு உசுப்பிவிட்டு அவரை  சதா சர்வ காலமும் வெறுப்பை உமிழும் ஒரு மன நோயாளியாக்கி விட்டனர் என்பது மட்டும் தெரிகிறது!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time