வணக்கம் நண்பர்களே,
அறம் சிறு தீப்பொறி தான்! படிப்போர் சிந்தையிலும் அந்த தீப்பொறி பற்றிக் கொள்வதால் அதன் அளவுக்கு அநீதிகளை சுட்டெரிக்கவே செய்கிறது. அதனால், கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் அரங்கில் அதிர்வுகளையும், சமூக தளத்தில் சலசலப்புகளையும் தன் போக்கில் ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது.
வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நமது அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் அடிமைத் தனமும், பாசாங்குத் தனமும் மேலோங்கி இருக்கிறது!
இந்த சமூகம் தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டது. அதுவே, அரசியலிலும் பிரதிபலிக்கிறது. அதைத் தான் அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும் என்ற இந்த நூலில் விவரித்து உள்ளேன். அறத்தில் வெளியான தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்! அன்புத் தம்பி செழியன் பட்டாம் பூச்சி வெளியீடாக இதை கொண்டு வந்துள்ளார். என்னுடைய பிற நூல்களும் அரங்கில் கிடைக்கும்.
”இவ்வளவு துணிச்சலாக எழுதிக் கொண்டு இருக்கிறீர்களே! உங்களுக்கு என்ன பாதுகாப்பு? எப்படி எழுத முடிகிறது….?” என நண்பர்களும், வாசகர்களும் அடிக்கடி கேட்கின்றனர்.
அதிகாரத்திற்கு அஞ்சுவதால் மட்டும் உருவாவதல்ல, அடிமைத்தனம். நியாயமற்ற ஆசைகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்படுவதே அடிமைத்தனம். ஆகவே, பேராசைகளை துறக்கும் தைரியம் பெற்றாலே போதுமானது! பேருண்மைகளுக்கு நெருக்கமாகி பெரும் தைரியம் பெற்று விடுகிறோம்.
உண்மையின் மீதான உறுதிப்பாடும், அறம் சார்ந்த விழுமியங்களும் அரசியல், சமூகத் தளத்தில் வலுப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்து கொண்டிருப்பதே அறம் இதழ். இந்தப் பயணத்தை புரிந்து கொண்டு அறத்தை பின் தொடரும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் பலமே அறத்தின் பலமாகிறது. இதன் சமூக அவசியம் கருதி, எந்த எதிர்பார்ப்புமின்றி, உதவி வரும் வாசக நண்பர்கள் மிகச் சிலரின் பங்களிப்பே அறத்தை உயிர்ப்போடு வைத்துள்ளது.
முப்பத்தி ஏழு ஆண்டுகளாக ஊடகத் துறையில் இயங்கினாலும், கடந்த இரண்டாண்டுகளாக நான் அறத்தில் எழுதியவற்றால் ஏற்படும் அதிர்வையும், விளைவுகளையும் வேறெப்போதும் கண்டதில்லை. இன்னும் செல்ல வேண்டிய தூரமும், செய்ய வேண்டிய கடமைகளும் அதிகமுள்ளது!
வாருங்கள், மூன்றாம் ஆண்டில் தொடர்ந்து பயணிக்க, கலந்து உரையாடுவோம்.
இடம்; வினோபா அரங்கம் ( தக்கர் பாபா வித்யாலயா வளாகம்)
58, வெங்கட் நாராயணா சாலை
தியாகராயர் நகர், சென்னை
( தேவர் சிலையில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் வரும் வழி)
தொடர்புக்கு; 9043605144
நாள்; செப்டம்பர்- 3, சனிக்கிழமை
நேரம்; மாலை 5.30
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம்
Your enticle helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/en/register?ref=P9L9FQKY