இன்னும் எத்தனை தீர்ப்புகள் வருமோ..?

-சாவித்திரி கண்ணன்

இன்னும் எத்தனை முறை தான் ஒ.பி.எஸுக்காக நீதிபதிகள் தலையை பிய்த்துக் கொள்வார்களோ…!  டெல்லி ஆண்டவனுக்கே வெளிச்சம்! நியாயப்படி பார்த்தால், இது நீதிமன்றம் விசாரிக்க தகுந்த விஷயமல்ல. ஆனால், பாஜக தலைமை விரும்பும் வரை நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

சட்டரீதியான அலைக்கழிப்பை ஏற்படுத்தி, அதிமுகவை சாய்க்கும் வரை மேல் முறையீடுகள் தொடரலாம்!

உண்மையில் கிராமத்து மரத்தடி பஞ்சாயத்திற்கு போயிருந்தால் அரை மணி நேர விசாரணையில் தெளிவாக தீர்ப்பு சொல்ல முடிந்த ஒரு எளிமையான வழக்கு தான் இது!

ஒரு கட்சியில் இரண்டு பெரிய மனிதர்கள் இடையே பிரச்சினை! ஒருவர் கட்சியின் சுமார் 95 சதவிகித ஆதரவை பெற்றுள்ளார். மற்றவர் ஐந்து சதவிகித ஆதரவு மட்டுமே கொண்டுள்ளார். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்து தீர்ப்பை எளிதாக தந்து விடுவார்கள்!

முதன்முதலாக நடத்தப்பட்ட பொதுக் குழு என்பது அவரும் சேர்ந்தே எடுத்த முடிவு தான்! ஒற்றைத் தலைமைக்கான விவாதம் மேலெழுந்தவுடன் ஒ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடுகிறார். நீதிமன்றம், ”கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது” என்று கூறி பொதுக் குழுவை தடுத்து நிறுத்த மறுத்துவிடுகிறது. ஆனால், இரவோடு, இரவாக மீண்டும் மேள்முறையீடு செய்து இரு நீதிபதிகளை விடிய, விடிய விசாரிக்க வைத்து ”ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது” என ஒரு விசித்திரமான தீர்ப்பை பெறுகிறார்!

பெரும் செலவில் இரண்டாயிரத்து சொச்சம் பேர் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்ட பொதுக் குழு அதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கலைந்து போகிறது.

அடுத்த பொதுக் குழு கூடி முடிவெடுக்க தீர்மானிக்கிறார்கள்! அதையும் தடுக்க நீதிமன்றம் போகிறார்!

அப்போது நீதிபதி, ”கட்சிக்குள் பேசி முடிவெடுக்க வேண்டியதை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள்” என்கிறார். ”கட்சிக்குள் செல்வாக்கில்லாத நிலையில் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தாதீர்கள்” என்கிறார். பொதுக் குழுவிற்கு அனுமதி தருகிறார்.

ஆனாலும், ஒ.பி.எஸ் உச்ச நீதிமன்றம் செல்கிறார். அவர்களோ, ”உயர் நீதிமன்றத்திலேயே தீர்வு காணலாம். அங்கே செல்லுங்கள்” என்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் ”நீதிபதியையே மாற்ற வேண்டும்”என்கிறார் ஒ.பி.எஸ். இதனால், அவமானப்பட்ட நீதிபதி கொதித்துப் போகிறார்! ”உங்கள் கீழ்த்தரமான நோக்கத்தை மீண்டும், மீண்டும் செயல்படுத்துகிறீர்கள்’’ என்கிறார்.

ஆனால், தலைமை நீதிபதியோ வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுகிறார். அந்த நீதிபதியோ, ”இரண்டு பொதுக் குழுவுமே செல்லாது”என தீர்ப்பளிக்கிறார். அதாவது இரண்டு முறையும் நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பொதுக் குழுவை ‘செல்லாது’ என்கிறார்! இதைவிட அபத்தமான தீர்ப்பு ஏதாவது இருக்க முடியுமா? ‘ஒருவருக்கொருவர் பகையாக உள்ள இருவரையும் சேர்ந்து செயல்பட வேண்டும்’ என கட்டளை இடுகிறார்.

இந்த தீர்ப்பு தந்த அதிர்ச்சியில் ஒரு எம்.எல்.ஏ ஒ.பி.எஸ் பக்கம் தாவுகிறார். ”இன்னும் 25 பேர் வர உள்ளார்கள்” என ஒ.பி.எஸ் தரப்பு சொல்லியது! அதாவது, கட்சியில் மிக பலவீனமான ஒபி.எஸை பலப்படுத்திக் கொள்ள அந்த தீர்ப்பு சிறிது உதவியது!

மீண்டும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது நியாயப்படி தீர்ப்பு தந்துள்ளது என்றாலும், ‘உச்ச நீதிமன்றத்திற்கு போய் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என சில விஷயங்களில் தீர்ப்பு சொல்லாமல் விட்டு விட்டது. இனி உச்ச நீதிமன்றம் என்ன சொல்லுமோ..!

இப்படி மாதக் கணக்கில் ஒரு கட்சியை செயல்படவிடாமல் நீதிமன்றங்கள் வழியே நிர்மூலமாக்கும் உத்தி தற்போது கையாளப்படுகிறது. ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு எடப்பாடியின் அதிமுக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கிடையில் பாஜகவும், திமுகவும் ஆள் தூக்கும் படலத்தை நடத்தும்.

பாஜகவை பகைத்துக் கொண்டால் எடப்பாடி அணியினர் மீது சிபிஐ விசாரணை, வருமான வரி ரெய்டு உள்ளிட்ட பல அஸ்திரங்களை பொழியும் பாஜக அரசு. அவ்வளவு யோக்கியமான அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவை சகாக்களையே விட்டு வைக்காமல் நோண்டி நொங்கெடுக்கும் பாஜக அரசுக்கு, எடப்பாடியின் ஊழல் சகாக்களை ஒடுக்க எவ்வளவு நேரம் ஆகும்.

ஒ.பி.எஸ் ஒரு மாபெரும் அதிர்ஷ்டக்காரர். அவர் ஒரு செல்வாக்கில்லாத மனிதர் என்றாலும், அவரை தூக்கி சுமக்க பாஜக தலைமை ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் திமுக தலைமையும் ஒ.பி.எஸுக்கு ஆதரவாக உள்ளது. போதாக்குறைக்கு சசிகலாவும், தினகரனும் ஆதரவு தருகிறார்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றங்களும் அவர் வழக்கை எத்தனை முறை வேண்டுமானாலும் சலிப்பில்லாமல் எடுத்து விசாரித்து மாறி, மாறித் தீர்ப்பு சொல்லி சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!

உண்மையிலேயே பலசாலியான ஒருவனை பலவீனப்படுத்துவதும், ஒன்னுமில்லாத நோஞ்சானை பலசாலியாக சித்தரிப்பதும் அதிகார மையங்களுக்கு கைவந்த கலையாகும். மன உறுதியோடு எவ்வளவு காலம் எடப்பாடி பழனிச்சாமி போராடப் போகிறார் என்பதற்கு காலம் தான் விடை சொல்லும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time