காஷ்மீர்: இப்படியும் அழிக்கலாம் ஜனநாயகத்தை!

-ரியாஸ்

பூர்வீக காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு காஷ்மீரமே மெல்ல,மெல்ல களவாடப்பட்டு வருகிறது. சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும் காஷ்மீரிகளை அதிகாரமற்றவர்களாக்கி, அங்கே இந்துத்துவ த்தை கட்டமைக்கிறது பாஜக அரசு!

‘காஷ்மீரில் பா.ஜ.க.விற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்’ என்ற நோக்கத்தில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் வியாபாரம், வேலை, கல்வி நிமித்தமாக ஜம்மு காஷ்மீரில் தங்கியிருக்கும் ஏறத்தாழ 20 முதல் 25 இலட்சம் வெளிமாநிலங்களை சார்ந்த மக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ‘அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு நாங்கள் எந்த நிலைக்கும் செல்வோம்’ என்பதை இதன் மூலம் பா.ஜ.க. வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது.

ஜம்மு  காஷ்மீரின் மக்கள்தொகை சமன்பாட்டை சீர்குலைத்து அதன் மூலம் இந்து மக்களின் வாக்குகளை பெற்று தனது ஆட்சியை அங்கு அமைக்கலாம் என்ற கனவிலேயே ஜனநாயகத்தை சீர்குலைக்கும் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. மக்கள் தொகை சமன்பாட்டை மாற்றியமைக்கும் இந்த திட்டம்  பாஸ்தீனத்தில் சியோனிசவாதிகள் நடைமுறைபடுத்திய, நடைமுறைபடுத்தி வரும் திட்டம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசனம் வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதன் மூலம் அங்கு ஏற்கெனவே இருந்த பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. சிறப்பு அந்தஸ்து என்பது ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டது அல்ல. ஏனைய பல மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்துகளை அரசியல் சாசனத்தின் வழியாக அனுபவித்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது ஷரத்தை முற்றிலுமாக நீக்காமல் அதன் மூன்றாவது உட்பிரிவை நீக்கி சிறப்பு அந்தஸ்தை நீக்கினர். ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் ஒரு பிரிவை தவிர்த்து அந்த ஷரத்தின் ஏனைய உட்பிரிவுகள் அனைத்தும் செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் 370வது ஷரத்து அரசியல் சாசனத்தில் இன்னும் இருக்கிறது, எந்த அதிகாரமும் இல்லாமல்.

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் நிலங்களை வாங்குவதை தடை செய்வது, மாநிலத்தின் நிரந்தர குடியுரிமையாளர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மாநில சட்டமன்றத்திற்கு வழங்குவது உள்ளிட்ட சில அதிகாரங்களை கொண்டிருந்த அரசியல் சாசனத்தின் 35A ஷரத்தையும் சேர்த்தே நீக்கினர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துகளை நீக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் மூன்று முக்கிய செயல்திட்டங்களில் ஒன்று. இதற்காக ஆர்.எஸ்.எஸ்.ன் பல்வேறு கூட்டங்களில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் மற்றொரு முக்கிய செயல்திட்டம் பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது. அந்த கோயிலுக்கான கட்டுமானத்தை மறுவருடம் ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டுமே.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துகளை நீக்கினால் அங்கு போராட்டங்கள் முடிவுக்கு வரும், அங்கு தேனாறும் பாலாறும் ஓடும், ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று பல்லவி பாடியது பா.ஜ.க. ஆனால் மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இதில் எதுவுமே சாத்தியமாகவில்லை என்பதையே அங்குள்ள நிலவரம் உணர்த்துகிறது. மிக முக்கியமாக, அங்கு ஜனநாயகம் புதைகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும், தேர்தலும் விரைவாக நடத்தப்படும் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஜூலை 19, 2018 அன்று தனது ஆதரவை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து அங்கு மாநில சட்டமன்ற கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து துணை நிலை ஆளுநரின் கைக்கு அதிகாரம் மாற்றப்பட்டது.

கிரிஷ் சந்திர மர்மு

ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் குஜராத்தை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிஷ் சந்திர மர்மு. இவர் குஜராத் உள்துறை செயலாளராக பணியாற்றிய போது, குஜராத் இனப்படுகொலைகளுக்கு துணை போனவர் என்பதை குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் நானாவதி கமிஷனில் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ வெறியும், இஸ்லாமிய வெறுப்பும் ஒருங்கே கொண்டவர். ஆகஸ்ட் 2020இல் மனோஜ் சின்ஹா இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். நான்கு வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளனர் காஷ்மீர் மக்கள்.

தேர்தலை நடத்துவதற்கு முன் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்யத் தொடங்கியது பா.ஜ.க. அங்குள்ள மாநில கட்சிகளின் செல்வாக்கை குறைக்கும் வகையில் அப்னி பார்ட்டி போன்ற புதிய கட்சிகளை உருவாக்கியது. தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள குலாம் நபி ஆசாத் தொடங்கவுள்ள புதிய கட்சியும் பா.ஜ.க.விற்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீரில் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ப குடியிருப்பு சட்டங்களில் (domicile laws) ஒன்றிய அரசு திருத்தங்களை கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீரில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு மட்டுமே மாநில அரசு பணிகளில் விண்ணப்பிக்கும் உரிமை இருந்தது. இதில் மே 20, 2020 அன்று திருத்தங்களை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு. அதன் படி, ஜம்மு காஷ்மீரில் 15 வருடங்கள் தங்கியுள்ள ஒருவர் அல்லது ஏழு வருடங்கள் அங்கு படித்து பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதியவர் அல்லது புலம்பெயர்ந்தவராக பதிவு செய்து கொண்டவர் ஆகியோர் குடியிருப்பு சான்றிதழை (domicile certificate) பெறலாம்.

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் பத்து வருடங்கள் பணியாற்றிய ஒன்றிய அரசின் ஊழியர்களும் இந்த சலுகையை பெறலாம். அவர்கள் மட்டுமன்றி, அவர்களின் குழந்தைகளும் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம். மேற்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும் காஷ்மீரி அல்லாதவர்களை திருமணம் செய்த பெண்களின் பிள்ளைகளுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2020இன் இறுதியில் நடத்தப்பட்ட மாவட்ட வளர்ச்சி மன்றங்களுக்கான தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்டவர்களின் கூட்டணியான குப்கார் கூட்டணி 13 மாவட்டங்களில் அதிகாரத்தை கைப்பற்றியது. பா.ஜ.க. ஆறு மாவட்டங்களில் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றியது. பிரச்சாரம் செய்வதற்கு எதிர்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையின் மிரட்டல்கள் என அனைத்தையும் கடந்து எதிர்கட்சிகள் இந்த வெற்றியை பெற்றன. இது சாதாரண தேர்தல்தான் என்றாலும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் மக்கள் பங்கெடுத்த முதல் தேர்தல் இது என்பது கவனிக்கத்தக்கது.

2026 வரை இந்தியாவில் எங்கும் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்படக்கூடாது என்ற நிலையில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தொகுதி மறுசீரமைப்பு குழுவில் முதன்மை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் கே.கே. சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் புதிதாக ஏழு சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்த இக்குழு, ஜம்மு பகுதிக்கு ஆறு தொகுதிகளையும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு தொகுதியை மட்டும் பரிந்துரை செய்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கின் படி, காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை 68 இலட்சமாகவும் ஜம்முவின் மக்கள் தொகை 53 இலட்சமாகவும் உள்ள நிலையில் இந்த புதிய பரிந்துரை அநீதியானது என்று பா.ஜ.க.வை தவிர அனைவரும் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜம்மு பகுதிக்கு 37 சட்டமன்ற தொகுதிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு 46 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த எண்ணிக்கை முறையே 43 மற்றும் 47 என்று அதிகரிக்கும். நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதே ஐந்தாக தொடர்ந்தாலும் தொகுதிகளின் எல்லைகள் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளன. தனது பிரித்தாளும் திட்டத்தை பயன்படுத்தி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொகுதிகள் எண்ணிக்கையை பா.ஜ.க. குறைத்து வருகிறது என்பதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த பா.ஜ.க. அதனையே தனது பிரதான ஆயுதமாக பயன்படுத்தி மக்களை தன்வயப்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வின் மத துவேசத்திற்கு நாங்கள் பலியாகவில்லை, அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை என்பதை நிரூபிக்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது. ஜம்முவின் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இக் கடமை இருக்கிறது.

கட்டுரையாளர்; ரியாஸ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time