கோவை சதாசிவம் கவிஞர், சூழலியல் செயல்பாட்டாளர். இதுவரை சூழலியல் குறித்து 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு தாவரம், ஒரு பூச்சி, ஒரு விலங்கு கண்டால் போதும் இவர் கனிந்துருகும் வார்த்தைகளில் கவிதை அன்புத் தேனாய் சொட்டும். முற்போக்குப் பாசறையில் கலைஞானம் மிக்கவர். தற்போது இப்படிக்கு மரம் என்று ஒரு கட்டுரை நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி அவர் நமக்கு அளித்த பேட்டி இது கவிதையாகவும், சிற்றருவி, பேரருவியாக கொட்டுகிறது. பூச்சி, புழுக்களின் ரீங்காரத்தையும் தாங்கி வருகிறது.
1990களிலேயே பின்னல் நகரம் என்றொரு கவிதைத் தொகுப்பை எழுதியவர் நீங்கள். அதில் திருப்பூர் சாயக்கழிவுகள் எப்படியெல்லாம் மண்ணை நாசமாக்கப் போகிறது, ஒரத்துப்பாளையம் அணை எப்படியெல்லாம் விவசாயத்தை பாழ்படுத்தப்போகிறது என்பது குறித்து தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியவர். அதன் பிறகு முழுக்க, முழுக்க சூழலியல் கவிஞராகவே ஆகிப் போனது எப்படி?
எண்பதுகளிலேயே நான் அதிலிருந்து மாறுபட்டேன். கோவைதான் எனக்கு பிறந்த இடம், பிழைப்புக்காக அப்பவே திருப்பூர் வந்து விட்டேன். எண்பத்தைந்து எண்பத்தி ஆறு வாக்கில் திருப்பூர் என்பது சின்ன கிராமம். ஒரு தாலுக்கா அளவிற்குக் கூட தகுதியில்லாத சிறு கிராமம் அது. அதில் திருப்பூரினுடையே பனியன் தொழில் ஏற்றுமதித் தொழிலா மாற, மாற ஒரு தொழில் வளர்ச்சி என்ன பண்ணும்ங்கிறதை நான் கொஞ்சம் உள்ளடக்கமாப் பார்த்தேன். காதல் கவிதையெல்லாம் விட்டு விலகி அதை கொஞ்சம் தீவிரமாகவே சிந்தித்தேன்.
ஏற்கனவே படைப்பு மனம் என்று ஒன்று சொன்னேன் அல்லவா? அது எதை ரசிக்கும். பட்டாம்பூச்சியை ரசிக்கும். பறவைகள் தலைக்கு மேல பறந்து போறதை பார்த்து வியக்கும். இப்படி இயற்கையை ரசிக்கிற மனம்தான் படைப்பு மனம். இயற்கையை எழுதுகிற மனம்தான் படைப்பு மனம்.
ஊரெல்லாம் நகர மயம் ஆகுது. கூடவே, அது தொழில் மயமாகுது. நகரமயம், தொழில் மயம்ங்கிறது நிறைய பேர் வளர்ச்சின்னு சொல்லுவாங்க. உண்மையில் அது இந்த ஊருக்கு கிடைத்த வன்முறை என்று என் படைப்பு மனம் சிந்திக்க ஆரம்பித்தது. அது இயற்கையின்பால் நடக்கும் வன்முறைதான் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.
1989 இல் அந்த பின்னல்நகரம் என்ற புத்தகம் இந்த நகரமயமாதல் குறித்துத்தான் பேசியது. ஒரு கிராமம் நகரமயம் ஆகும்போது இயற்கையான விஷயங்கள் என்னென்ன ஆகும்; அதே சமயம் ஒரு ஊர் தொழில்மயம் ஆகும்போது அதன் கழிவுகள் எல்லாம் என்ன செய்யும் என்பதையே அது ஆராய்ந்தது. 1990 ஆம் ஆண்டிற்கு முன்பு குப்பை என்பது செல்வமாகவே எனக்குத் தோன்றியது.
அதற்குப் பின்பு குப்பை ஒரு பிரச்சனையே அல்ல. அது ஒரு செல்வம். அது உரமாகவே மாறும் என்பதில் மாற்றுக் கருத்து வரலை. ஆனால் நகரமயமாகித் தொழில் மயமாகிற இடங்களில் மூன்று பிரச்சனைகள் வந்தது. கழிவு வந்துச்சு. அடுத்தது திடக்கழிவும் வந்தது. அதற்கும் மேலே ரசாயனமும் குவிந்தது. கழிவையே சந்திக்க முடியாத கிராமம் திடக்கழிவை சந்திக்கிறது; ரசாயனத்தை எதிர்கொள்கிறது. அதுவும் ரசாயனத் திடக்கழிவு என்ன செய்யும். முதலில் இந்தக் கழிவுகள் எங்கே தண்ணீரில் கலக்கிறது. அதனால் அந்த நீரைச் சார்ந்திருக்கிற மண் கெடுகிறது. காற்று கெடுதுன்னு பேசின முதல் புத்தகமா அது இருந்தது. அதை ஒரு சின்ன கவிதை சொன்ன உங்களுக்குப் புரியும்.
‘சாயம் குடித்து, சாயம் குடித்து
நச்சுச் சாம்பலாய் மடிந்து போகிறது எம் மண்.!’
என்று நான் எழுதியிருப்பேன். நிறைய பேர் மண் எல்லாம் அப்படி நலிஞ்சு போகாதுன்னு நினைச்சாங்க. இந்த இயற்கை ஒரு செ.மீ அளவுக்கு மண்ணை மேலெழும்ப வைக்க வேண்டுமானால் 500 வருடம் முதல் 1000 வருடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த பூமியில் எந்த ஒரு மனிதனும் மண்ணை உருவாக்க முடியாது; உற்பத்தி செய்ய முடியாது.
இந்த மண்ணை அடுக்கடுக்காக நஞ்சாக்குகிற போது நமக்கு வருகிற வலிதான் இந்த மண்ணை நாம் இழந்து விட்டோம் என்றால், திரும்பப் பெற முடியாது. மண் கெடுகிற போது அது வாழத் தகுதியற்ற நகரமாக மாறி விடும் என்பதைத்தான் அந்த நூலில் சொன்னேன். பின்பு வாழ்க்கைப் போராட்டமே பெரிய விஷயமானது. ஒன்று நான் விரும்பாத தொழில்.
அதனூடே என் படைப்பு மனம் எல்லாமே இயற்கை சார்ந்தே இருந்தது. நான் வாசிக்கிற புத்தகங்களும் அப்படியேதான் அமைந்தது. உயிர்ப் புதையல் என்ற எனது அடுத்த புத்தகம்தான் முழுமையான சூழலியல் சார்ந்த எனது முதல் புத்தகமாக அமைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிற நதிகளைப் பற்றிய புத்தகம்.
மேற்குத் தொடர்ச்சி மலை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும். அது அப்படி பாதுகாக்கப்பட்டால்தான் நம் சமவெளிப்பகுதிகளில் நீர் கிடைக்கும் என்பதையெல்லாம் சொன்ன புத்தகம். அது முதலே என் பயணம் அதை முன் வைத்து தொடர்ந்தது.
உயிர்ப்புதையலுக்கும், முந்தைய பின்னல் நகரத்திற்குமான கால இடைவெளி எவ்வளவு இருந்தது?
சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்துத் தான் உயிர்ப்புதையல் வந்தது. எனக்கு உள்ளபடியே பெரிய படிப்பறிவே இல்லை. ஐந்தாம் வகுப்புதான் படித்தேன். உங்க எழுத்துல ஒரு நேர்த்தி வருதுய்யா என்று ஒரு வாசகர் சொல்றார்ன்னா அது என் உழைப்பிலிருந்து வருது. மேலும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு வருகிற புத்தகம். அதோடு அது சார்ந்து போகிற இடங்களிலெல்லாம் சேகரம் செய்த விஷயங்கள்தான் அந்தப் புத்தகத்திற்கான நேர்த்தி கிடைக்குது. நல்ல மொழி கைக்கு வருது. அடிப்படையிலேயே கவிஞனாகப் போனதால் உரைநடை என்பதும் அழகான கவித்துவத்தோடு வரும் வாய்ப்பும் எனக்கு அங்கிருந்துதான் கிடைத்தது.
உயிர்ப்புதையல் எழுதி முடித்து விட்டு அடுத்தது பூச்சிகளின் தேசம்ன்னு ஒரு புத்தகம் எழுதினேன். பூச்சிகளின் மீது அதற்கு முன்பு மக்கள் வைத்திருந்தது அருவெறுப்பான ஒரு எண்ணம்தான். பட்டாம்பூச்சிகளைப் போல யாரும் கரப்பான் பூச்சிகளை நேசிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு நாம் ஏன் பூச்சிகளை நேசிக்க வேண்டும் என்று அதை எழுதி முடிக்கிற போது அவ்வளவு காரணங்கள் எனக்கே ஏற்பட்டது.
சமூகம், அதில் மக்களிடமிருந்தே- அந்த வாழ்க்கையிலிருந்தே பூச்சிகளைப் பற்றிய பதிவுகளை செய்தேன். அவர்கள் பட்டாம்பூச்சிகளைப் போல கரப்பான் பூச்சிகளையும் நேசிக்கத் தொடங்கினார்கள்.
அது புத்தகத்தை படித்து மட்டும் ஏற்படவில்லை. அவர்களுக்குள் இருந்த எண்ணமே அதுதான். இப்படி என்னுடைய ஒவ்வொரு புத்தகமும் சூழலியல் பற்றி அதிக நுட்பமாக விரிந்தது. வாழ்விலிருந்து அறத்தைப் பேசுவதால் அதிக வாசகப்பரப்புக்குப் போயிருக்கிற ஒரு சூழல் புத்தகங்கள் தான் எனது புத்தகங்கள் என்று நான் தைரியமாக சொல்லிக் கொள்வேன்.
ஊர்ப்புறத்துப் பறவைகள் என்று ஒரு புத்தகம். நீங்க எங்கேயும் வெளியே போகவே வேண்டாம். உங்க வீட்டு வாசப்படியில் உட்கார்ந்து பார்க்கிற பறவைகள் என்ன செய்கிறது என்ற புத்தகம். நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் நடைசெல்கிற வீதியில் ஒரு இருபத்தைந்து பறவைகளைப் பார்த்து விட்டீர்கள் என்றாலே நீங்கள் நல்ல இடத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியான பொருளோடு அந்தப்புத்தகம் எழுதப்பட்டது பேசப்பட்டது.
இந்தப்புத்தகம் படித்த விவசாயிகள் பலர் மனம் திருந்தியிருக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் அதுவரை ஏர்கன் என்ற வகை துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார்கள். அதில் அங்கே வருகிற குயில்களை, குருவிகளை, இது போன்ற நிறைய பறவைகளை இதில் சுட்டு விரட்டுவதற்கு, கொன்று சாப்பிடுவதற்கு பயன்படுத்தி வந்தார்கள். புத்தகம் படித்த பிறகு அந்த ஏர்கன்னையே கைவிட்டு விட்டார்கள் என்பது எனக்குக் கிடைத்த நல்ல சேதி.
ஒரு புத்தகம் என்பது எப்படியானதொரு மனித மனதை மடைமாற்றும் வேலையைச் செய்கிறது. இதற்கு ஊர்ப்புறத்துப் பறவைகளே வழிகாட்டியாக அமைந்தது. இப்படி நான் எழுதின அத்தனை புத்தகங்களும் இயற்கையோடு அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டே சென்றது.
இப்போது எழுதியிருக்கிற புத்தகம் இப்படிக்கு மரம். ஏன் அப்படி எழுதினேன். இந்த மனித சமூகம் மட்டுமல்லாமல் எல்லா ஜீவராசிகளும் பருவங்களை பின் தொடருகிறவைகளாகவே உள்ளன.
பருவம் என்பது நான்கு என்பது உங்களுக்குத் தெரியும். மூணு மாசம் வெயில், மூணு மாசம் குளிர், மூணுமாசம் மழையா இருக்கும். இப்படி நம் வாழ்க்கையில் ஓராண்டு சந்தித்திடுவோம். அதுதான் ஆடிப்பட்டம் தேடி விதைங்கிறோம். பருவம் பார்த்து பயிர்செய் என்கிறோம். இப்படி பருவத்தை பின்தொடருகிற சமூகம் என்பது உயிர்களை தொடரும் சமூகமாகவே இருந்திருக்கிறது.
அண்மை காலங்களில் இந்தப் பருவங்கள் திசை மாறி விட்டது. என்னது பருவங்கள் எப்பவாவது திசை மாறுமான்னு கேட்பீங்க. இல்லைங்க, அது கால நிலை மாற்றம்ன்னாங்க. காலம் எப்படிங்க மாறும்ன்னு கேட்டீங்க. இல்லீங்க இது கால நிலை பிறழ்வுன்னாங்க.
இது மக்களுக்குப் புரியலை. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே தெரியலைன்னு மக்கள் கேட்கிறாங்கன்னாங்க. அப்ப நம்ம இந்தப் பூமி சூடாயிருச்சுன்னு சொன்னோம். வெயில் அடிச்சா பூமி சூடாகத்தான் செய்யும்ன்னு சிரிச்சாங்க. இப்பவும் மக்கள் அதை நம்பலை. இப்ப சூடாவதற்கான இயல்புன்னு ஒண்ணு இல்லாமப் போயிடுச்சு.
இந்தப் பூமி எப்படி சூடாச்சுன்னா இந்தப்புகைகள், வாகனப்புகைகள், தொழிற்சாலைப் புகைகள் மூலம் எல்லாம் தேவைக்கு அதிகமான கரியமிலவாயுவை ஏற்றினோம். உலகம் பெரிசா விரிவடைந்து விட்டது. இந்தக் கரியமில வாயுவை கழிச்சுக்கட்டற அளவுக்கு நம்மகிட்ட தாவரப்பரப்பு இல்லை.
அதனால பூமி சூடாயிருச்சு. கரியமில வாயு பூமியின் மேற்பரப்பில் அதிகமானதன் பலனாக சூரிய வெளிச்சம் வடிகட்டித் தருவதற்குப் பதிலாக நேரடியாக சூரிய ஒளி நமக்கு வெப்பத்தைத் தருவதால் பருவங்கள் பூரா மாறிடுச்சுன்னு சொன்னோம். அப்படியான்னு மக்கள் இப்ப கேட்க ஆரம்பிக்கிறார்கள்.
நிறைய பேச்சுகள். ஆய்வுகள் எல்லாம் வந்துடுச்சு, ஏராளமான மாநாடுகள், கருத்தரங்கங்கள் எல்லாம் போட்டு பேசறாங்க. நீங்க பாருங்க போன ஏப்ரல் மாசம் தொடங்கின மழை ஜூன் மாசம் வரை மழை வந்துட்டே இருந்தது.
இதேபோல ஐரோப்பா, கனடா எல்லாம் பார்த்தீங்கன்னா கதையே வேற. ஸ்பெயின் எல்லாம் எடுத்துட்டீங்கன்னா வெயிலே பார்க்காதவன் இருப்பான். அங்கெல்லாம் சூரியக்குளியல், சூரிய நமஸ்காரம் எல்லாம் பெரிசா இருக்கும். அப்படி வெயிலே இல்லாத தேசத்தில் பார்த்தீங்கன்னா போன மாசம் 40 டிகிரி செல்சியஸ் வெயில் அடிச்சு ஆயிரத்தி இருநூறு பேர் செத்துட்டாங்கன்னு செய்தியில் பார்த்தேன்.
அப்படீன்னா ஒரு பக்கம் கடுமையான வெயில் அடிக்குது. இன்னொரு பக்கம் கடுமையான மழை பெய்கிறது.
இந்த பருவநிலை மாற்றம் எல்லாத்தையும் மாற்றிடுச்சு. இப்ப ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொல்ல முடியவில்லை. சரி எல்லாப்பருவமும் பேசிட்டோம். நம்ம பேசாத ஒரு பக்கம் இருக்கு. அது தாவரங்களைப் பற்றி நம்ம பேசவில்லை. அதுகுறித்து ஆய்வுகளுக்குள்ளும் பெரிசா நம்ம போகவும் இல்லை. இந்த தாவரத்திற்கும், கால நிலை மாற்றத்திற்கும் என்ன தொடர்பு இருந்திட முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். யோசிக்கணும். அப்படி யோசிச்சாத்தான் தாவரங்கள் எப்படியெல்லாம் தன்னை மாற்றிகிட்டு இருக்குன்னும் தெரிஞ்சுக்க முடியும்.
இப்ப எல்லாத் தாவரங்களையும் சொல்ல விட்டாலும் குறிப்பிட்ட தாவரங்கள். சில நூற்றுக்கணக்கான தாவரங்கள். இதற்கு பூக்கும் தாவரங்கள் என்று பெயர் வைத்துள்ளோம். இதெல்லாம் இளவேனில் காலம்ன்னு ஒண்ணு வரும். கோடை காலம். இப்ப வரவேண்டிய கோடை நமக்கு வரவேயில்லை. கோடை வெயில் வரவே இல்லை. ஆனா ஊடகங்கள் என்ன எழுதினாங்க. பரவாயில்லை. கொடூரமாக வழக்கமாக அடிக்கும் கத்திரி வெயில் இந்த முறை இல்லை. நகரம் குளு, குளுன்னு இருந்தது என்று எழுதினார்கள். பேசினார்கள்.
இந்தப்பூமிக்கு ஒரு ரசாயனக்கழிவைக் கொடுத்து விட்டு, அதை எல்லாம் மறுசுழற்சி செய்து விடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதே அறிவியலின் சாக்காடுதானே தவிர வேறில்லை. நூறு சதம் அதில் .உண்மையிருக்காது. நூறு சதவீதம் நெகிழியை பூமியெங்கும் போட்டு விட்டு, அதை சுத்தம் செய்து விடலாம்ன்னு பேசறது எப்படி அபத்தமோ, அதுபோலத்தான் இதுவும்.
12 சதவீதம் மறுசுழற்சி பண்ணும்போது வெளிப்படும் கழிவுகளிலேயே நமக்கு ஏராளமான தீங்கு இருக்கு. ஒரு கழிவைக் கீழே போட்டு விட்டு, அதை சுத்திகரிக்கிற போது ஏற்படுகிற சூழல் சீர்கேட்டை நாம் சரியாப் பார்க்கலை; இன்னும் சரியா பேசலைன்னு அர்த்தம். பருவநிலை மாற்றம்ன்னு சொன்னோம். அதை இப்பத்தான் ஒத்துக்கறீங்க.
அதுவும் எப்ப ஒப்புக்கிறீங்க? கடல்மட்டம் உயர்ந்தபிறகு. பனிப்பாறைகள் உடைந்து பாலம் பாலமாய் வெடித்து நீர் பெருக்கெடுக்கிற போது உங்களுக்குத் தெரிகிறது. ஆமாம் இந்தப் பூமி வெப்பமடைந்து விட்டதுன்னு சொல்றீங்க. ஒப்புக்கறீங்க. உரிய நேரத்தில் மழை வர்றதில்லை. உரிய நேரத்தில் குளிர் அடிக்கறதில்லை. குறித்த நேரத்தில் வெயில் அடிக்கறதில்லை.
கோடை காலத்தில் வெயிலை நம் உடம்பு வாங்கணும். அது இயற்கை நமக்குக் கொடுக்கிற மிகப்பெரிய கொடை. அந்த வெயிலில்தான் உங்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும். விட்டமின் பி என்பது கிடைக்கும். வெயில் உடலில் உள்வாங்குகிற போதுதான் உடல் மட்டுமல்ல, உள்ளமும் முழுக்கக் கனிகிறது.
இப்படியொரு அழகான வெப்பத்தை இந்த ஆண்டு நாம் உணர முடியாமல் போனது நாம் நோய் எதிர்ப்பு ஆற்றலை இழந்திருக்கிறோம் என்று பொருள். இதை புரிஞ்சிட்டீங்கன்னா இயற்கை நீங்க சுலபமா புரிஞ்சுட்டீங்கன்னு அர்த்தம். நம்ம வாழ்க்கையிலிருந்தே இயற்கையை புரிஞ்சுக்க முடியும். இதையெல்லாம் பேசிட்டு தாவரங்களை மறந்துட்டோம்.
தாவரங்கள் என்றால் உணவு வலை என்று அர்த்தம். தாவரங்கள் போனால் உயிர்கள் வாழ முடியாது. எல்லா உயிர்களுக்கும் சாப்பாடே தாவரங்கள்தான். இதில் நூறு பூக்கும் தாவரங்களை ஆய்வுக்கு எடுத்திருக்காங்க. அந்தத் தாவரங்கள் இளவேனில் காலத்திற்கு முன்பகுதியில் பூக்கத் தொடங்கும். இளவேனில் காலத்தில் பார்த்தால் பட்டாம்பூச்சிகள் வலசை வரத் தொடங்கும். மகரந்த சேர்க்கை நடத்தும் காலம்தான் பட்டாம்பூச்சிகள் படையெடுக்கும் இளவேனில் காலம்.
பண்டைய கவிதைகளில் எல்லாம் பட்டாம்பூச்சிகள் இடம் பிடிக்க இந்தக் காலமே காரணம். இந்த காலத்தில் தாவரங்களும் இனப்பெருக்கம் செய்யும், பட்டாம்பூச்சிகளும் இனப் பெருக்கம் செய்து கொள்ளும். பட்டாம்பூச்சிகள் ஒவ்வொரு இலைகளிலும் தன் முட்டைகளை இட்டு அடுக்கி வைத்து விட்டுச் சென்று விடுகிறது. கொஞ்ச நாட்களில் அவை எல்லாமே கம்பளிப்புழுக்களாக ஊறும்.
அப்போ பார்த்தீங்கன்னா பூச்சி உண்ணும் பறவைகள் நிறைய வரும். அவை இந்தப் பூச்சிகளை உண்டு தன் குஞ்சுகளுக்கும் ஊட்டி இனப்பெருக்கம் செய்யலாம். ஒரே ஒரு பருவம்தான். இரண்டு மாதம்தான் இருக்கு. இதில் ஒண்ணு பிற்பகுதிக்கான இளவேனிற்காலம். இன்னொன்று முற்பகுதிக்கான இளவேனில் காலம்.
இந்த காலங்களில் தாவரங்கள் தான் பூத்து முடித்து தனக்கான இனப்பெருக்கத்தை செய்து முடித்துக் கொள்கிறது. பட்டாம்பூச்சிகளும் பறந்து தனக்கான இனப்பெருக்கம் செய்து பூமியில் தான் வாழ்வதற்கான தகவமைப்பை தக்க வைத்துக் கொள்கிறது. பறவைகள் தனக்கானதை செய்து கொள்கிறது. இப்படி மூன்றும் செய்யும்போது மிகப்பெரிய உணவு உற்பத்தி நடக்கிறது என்று அர்த்தம். இந்த உணவு உற்பத்தி நடக்கும்போது எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைத்து விடுவது என்றும் அர்த்தம்.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது? இந்தப் பட்டாம்பூச்சிகள் வருவதற்குள்ளேயே பல செடிகளில், கொடிகளில் மரங்களில் எல்லாம் பூக்கள் பூத்து முடிந்து விடுகிறது. பட்டாம்பூச்சி வந்து பார்க்கும்போது பூக்கள் இல்லை. இதனால் பட்டாம்பூச்சி ஏமாந்து விடுகிறது.
Also read
அதனால் மகரந்த சேர்க்கை செய்யப்படாமலே பூக்கள் எல்லாம் மலட்டுப் பூக்களாக மடிந்து விடுகிறது. இதை அண்மை கால ஆய்வுகள் என்னென்ன செடிகள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்து வருகிறது. இதனால் பறவைகளும், பட்டாம்பூச்சிகளின் இனவிருத்தி கூட மிகவும் குறைந்து போகிறது. இது ஒரு இயற்கைப் பேரழிவு.
வேனிற் காலத்தில் நிலவும் குளிரை நம்பி பட்டாம்பூச்சி, பறவைகள் எல்லாமே ஏமாந்து விடுகிறது. பருவநிலை மாற்றம். இதனால் உணவு உற்பத்தியும் பாதிக்கிறது. இது ஆய்வின் தொடக்கம்தான்.
இப்படிக்கு மரம் நூல் எதைப் பற்றி பேசுகிறது?
நம்ம இங்கே இந்த இயற்கையை சேதப்படுத்தி விட்டு எங்கே ஓடுகிறோம். இதைப் பற்றி மரங்களே 23 கடிதங்கள் மூலமாகப் பேசுகிற மாதிரி இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிது. இந்த செய்தியை கடத்துவதற்கான புத்தகமாக இதை வடிவமைத்திருக்கிறேன்.
நேர் காணல்; கா.சு.வேலாயுதன்
சிறப்பான கட்டுரை