ரத்த சோகையில் இருந்து மீளும் வழிகள்!

- எம்.மரிய பெல்சின்

ஒருவித சோர்வு, அடிக்கடி மூச்சு வாங்குவது, வேலைகளில் உற்சாகமின்மை, கண்விழியின் கீழ் வெளுத்து இருத்தல், நாக்கு வெளிறி இருப்பது, முகம் வீங்குவது, உடல் பருமனாதல், நெஞ்சு படபடப்பு.. ஆகியவை ரத்த சோகையின் அறிகுறிகள்! இன்றைக்கு பலரையும் பாதித்துள்ள ரத்த சோகையை எப்படி போக்குவது?

ரத்தசோகை… இது ஒரு குறைபாடுதான் என்றாலும் உண்டு இல்லையென்று ஆக்கிவிடும். எனவே, இது விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், வேறு வேறு பாதிப்புகள் வந்து நம்மை பாடாய்ப்படுத்திவிடும். தொடக்க நிலையிலேயே கவனிக்காவிட்டால் அடுத்து வரும் நாட்களில் நிறைய உடல் கோளாறுகளும், பொருள்செலவும், மன வருத்தங்களும் ஏற்படும். குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் இந்தக் குறைபாட்டை சரி செய்ய வேண்டியது அவசியம்.

இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் இந்த பாதிப்பு முகத்தை வெளுத்துப் போக செய்துவிடும். பாதிப்பு அதிகரிக்கும் போது உடல் முழுவதும் வெளுப்பதுடன் மூட்டுகளும் வெளுத்துக் காணப்படும். கருமை நிறத்துடன் இருப்பவர்கள் கூட வெள்ளைவெளேர் என்று காணப்படுவார்கள். போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது இந்த ரத்தசோகை. சிலருக்கு கன்னங்கள் உப்பிக் காணப்படுவதுடன் உடல் கனத்துக் காணப்படும். இதுவும், ஒரு போலியான தோற்றமே. குண்டாக இருப்பவர்கள் பலசாலிகள் என்று நினைக்காதீர்கள். அது காற்றடைத்த பலூனைப் போன்றது என்பதே உண்மை. இதுமாதிரி சூழலில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும்; வேறு சிலருக்கு அடிக்கடி பேதியாகும்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது அவற்றை சரிசெய்தாலே ரத்தசோகையில் இருந்து மீண்டுவிடலாம். இங்கே குறிப்பிட்டதுபோல மலச்சிக்கல் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். காலை உணவுக்கு முன்போ, பின்போ சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், கறுப்பு – சிவப்பு திராட்சைப் பழங்களை சாப்பிட வேண்டும்.

இடைப்பட்ட நேரங்களில்  காய்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் காலை உணவாக வடை, பூரி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடாமல் இட்லி, இடியாப்பம், புட்டு, பொங்கல் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. கூடியமட்டும் வேக வைத்த உணவுகளைத் தவிர்த்து, வெறும் பழ உணவாக இருப்பது மிகவும் நல்லது. சிலர் வெறும் பப்பாளிப் பழத்தை மட்டுமே காலை உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவும்கூட நல்லதோர் வழிமுறையே. மேலும் காலை உணவில் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து கொய்யா, பப்பாளி, சீத்தா போன்ற இலைகளை கசாயம் வைத்துக் குடிப்பது நல்லது.

சிலருக்கு அடிக்கடி பேதியானால் அதை சரிசெய்ய புதினா ஜூஸ் அருந்தலாம். கைப்பிடி அளவு புதினா இலைகளை எடுத்து அதனுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டி தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். இதை காலை வேளையில் இரண்டு, மூன்று தடவை அருந்தலாம். இரவில் புதினா இலைகளை எண்ணெய் விடாமல் வதக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து கசாயம் போன்று தயாரித்துக் குடிக்கலாம். இது வயிற்றுப்போக்கை நிறுத்தும். தேன், ஓமம் போன்றவற்றைச் சாப்பிடுவதும் நல்ல தீர்வைத் தரும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய நீர் அருந்த வேண்டும். சில நேரங்களில் உப்பு – சர்க்கரை கரைசல் அருந்துவதும் நல்லது.

மதிய உணவில் சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை தயிர் சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. தயிருக்குப் பதிலாக மோர் மிக நல்லது. வெங்காயச் சாம்பார், வெள்ளைப்பூண்டு குழம்பு, கீரைக் கடைசல் அல்லது கீரைக்கூட்டு, வாழைப்பூ, வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வது ரத்தசோகையைப் போக்க உதவும். தேங்காய்ப்பால் அருந்துவது நல்லது என்றாலும், எப்போதாவது தேங்காய்ச் சோறு சமைத்துச் சாப்பிடலாம். அவ்வப்போது தேங்காய்த் துண்டுகளை மென்று சாப்பிடலாம்.  தக்காளி ரசம், தக்காளி ஜூஸ் சாப்பிடுவதும் ரத்தசோகையை நீங்க உதவும். இதுபோன்று நாம் உண்ணும் உணவுகளை கொஞ்சம் மாற்றி வடிவமைத்துக்கொண்டால் போதும்.

புழுங்கலரிசி, பச்சரிசி, அவரைக்காய், முட்டை, சின்ன வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. உருளைக்கிழங்கை வேக வைத்து வெறும் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். பாதாம்பருப்பு, பிஸ்தா போன்றவையும் ரத்தசோகை பாதிப்பிலிருந்து மீள உதவும். ஆனால், நாள்கணக்கில் மாதக்கணக்கில் பாதாம், பிஸ்தா போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டாம். அவை சிலருக்கு தோல் நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சுவையாக இருக்கிறது என்பதற்காக ஒரேயடியாக பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரி சாப்பிடுவது சரியல்ல.

பெண்களை பெரிதும் பாதிக்கக்கூடியது ரத்தசோகை என்று கூறியிருந்தோம். குறிப்பாக பருவ வயது அடைந்த பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காரணம் மாதவிடாய் காலங்களில் சிலருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அதற்காக சிகிச்சைகள் எடுத்தும் தீர்வு காண முடியாத பல பெண்களுக்கு ரத்தசோகை அதிகம் பாதிக்கிறது. மாதவிடாய் கால ரத்தப்போக்கினை சரிசெய்யவும் நமது மருத்துவத்தில் தீர்வுகள் இருக்கின்றன. ரத்தசோகையைப் போக்குவதில் முருங்கைக்கீரைக்கு முக்கிய பங்கு உண்டு.

முருங்கைக்கீரையை பொரியலாக, கூட்டாக, சூப்பாக செய்து சாப்பிடலாம். பாலைவிட இரண்டு மடங்கு அதிகமாக புரதச் சத்தும், நான்கு மடங்கு அதிக அளவில் கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துகளும் முருங்கைக் கீரையில்  உள்ளன.  ஏழு ஆரஞ்சுப்பழத்தில் உள்ள  வைட்டமின் பி சத்தைவிட மூன்று வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தைவிட அதிகமாக முருங்கைக் கீரையில் உள்ளது. கடல்பாசியைவிட மூன்று மடங்கு அதிகம் இரும்புச் சத்தும், கேரட்டைவிட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்துகளும் நிறைந்துள்ளன.

முருங்கைக்கீரையில் வைட்டமின் சத்துகள் அதிகம் இருப்பதால் உடலை வளர்ப்பதில் இதன் பங்கு அதிகம். வெள்ளை கரிசலாங்கண்ணியைச் சாப்பிடுவதால் பல் சம்பந்தமான நோய்கள் நெருங்காது. அத்துடன் ரத்தசோகையை போக்கக் கூடியது.

ஆப்பிளின் தோலில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் போன்றவை இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இவை ரத்தசோகையைப் போக்குவதுடன், வருங்காலத்தில் ரத்தசோகை ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். ஆல்பகோடா பழத்தைச் சாப்பிடுவதால் அதிலுள்ள சில சத்துகள் ரத்தசோகையைப் போக்கும். அத்துடன் எலும்புகளை பலமாக்கவும் உதவும்.

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி சத்து, இரும்புச்சத்து இருப்பதால் அனீமியாவை விரட்டுவதுடன் உடல் சோர்வையும் போக்கும்.ரத்தசோகையால் ஏற்படும் கர்ப்பகால மரணங்களைத் தடுக்கவும், குறைப்பிரசவம் ஏற்படாமல் தடுக்கவும் ஆரஞ்சுப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட வேண்டியது அவசியம். ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கவும் ஆரஞ்சு உதவும். பழங்கள் சாப்பிடும்போது அவற்றுடன் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது.

இவை தவிர, நமது அன்றாட உணவில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது. சுண்டைக்காய் வற்றலுடன் சம அளவு கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை தனித்தனியாக வறுத்து பொடியாக்கி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதும் ரத்தசோகையை போக்கும். மதியம் மற்றும் இரவு வேளை உணவுகளிலும்கூட சுண்டைக்காய் பொடியை சேர்த்துக்கொள்வது நல்லது. இதுபோன்ற எளிய வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. ரத்தசோகையைப் போக்க வழிகள் தேடியும் கிடைக்காதவர்கள் இவற்றை பின்பற்றி  பலன்பெறலாம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time