ஸ்டாலின் குடும்பமும், சமஸ்கிருத வழிபாடும்!

தமிழ்நாட்டில் கோவில் குட முழுக்குகளை சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்களும் சேர்ந்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பளித்தும் இன்று வரை திமுக அரசால் ஏனோ நடைமுறைப்படுத்த முடியவில்லை! தமிழக அரசு தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்துவதின் பின்னணி என்ன?

2020 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடந்த போது சமஸ்கிருதத்துடன் தமிழையும் சேர்த்து நடத்த தெய்வத் தமிழ் பேரவை, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் போன்ற அமைப்புகள் வலிமையாக வலியுறுத்தி ஒரளவு வெற்றியும் கிடைத்தது.

பிறகு, ‘கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவில் குடமுழுக்கு முழுவதுமாக சமஸ்கிருதத்தில் தான் நடத்த உள்ளது என்பதை அறிந்து இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் சித்தர் மூங்கில் அடியார் மதுரை உயர் நீதிமன்றத்தில் அதனை தமிழ் சைவ ஆகம முறைப்படி நடத்த வேண்டும்’ எனக் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்குப் பல ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன.தெய்வங்கள் உள்ளூர் மொழிகளைப் புரிந்து கொள்ளாது என்று யாராலும் கூற முடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏராளமான பக்தி இலக்கியங்களைத் தமிழில் படைத்துள்ளனர்.

இந்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு அந்த குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும். அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழு நடத்த ஏதுவாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், சித்தர்கள் ஆகியோர் இயற்றிய பழமையான துதிப்பாடல்களைக் கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களைக் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். இனி சமஸ்கிருதத்துடன் தமிழும் நடத்த வேண்டும்” என உத்திரவிட்டனர்.

மூங்கில் அடியார்

”இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகிவிட்டது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் வடபழனி உள்ளிட்ட ஏராளமான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. ஆனால். அவை யாவும் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடந்துள்ளன! நாங்கள் ஒவ்வொரு கோவில் குடமுழுக்கின் போதும் சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத் துறை அதிகாரியை நேரடியாகப் பார்த்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை காட்டி பேசினால், அதிகாரிகள் எல்லாம் சரி,சரி என்று சொல்லிவிட்டு சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்துகின்றனர். அதேசமயம் ஒரு ஓரத்தில் யாரேனும் ஒரே ஒரு ஓதுவாரை அழைத்து தமிழ் மந்திரங்கள் பாடச் சொல்லி விடுகின்றனர். அதாவது யாகசாலைக்குள் ஓதுவார் நுழைய முடியாது. புனித கலசங்களில் நீர் ஊற்ற முடியாது. ஏதோ தீண்டபடாதவராக ஒரு மூலையில் நின்று தமிழ் மந்திரம் ஓதிவிட்டு சென்றுவிடும் படியான ஒரு ஏற்பாட்டை செய்துவிடுகின்றனர்’’ என்றார் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் மூங்கில் அடியார்.

தமிழ் நாட்டில் சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில். 13 ஆம் நூற்றாண்டில் மாமன்னர் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. மூலவராக சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார் ஆகியோர் உள்ளனர். மேலும் சுவர்ணாம்பிகை, மரகத வல்லி பச்சை வல்லி அம்மனும் இருக்கின்றனர்.

சேலம் சுகனேஸ்வரர் கோவில் யாகசாலை

இங்கே செப்டம்பர் 7 ந்தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு 54 யாககுண்டங்கள் மற்றும் 700 கலசங்கள் கொண்ட பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு ஒன்றாம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. நாளை குட முழுக்கு நடைபெற உள்ளது! இவை முழுக்க,முழுக்க சமஸ்கிருதத்தில் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மூங்கில் அடியாரிடம் கேட்ட போது, ”இந்த சுகவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரியைப் பார்த்து நாங்கள் பேசினோம். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் சம முக்கியத்துவத்துடன் நடத்த வேண்டினோம். ஆனால், அவரோ யாகசாலையின் ஒரு மூலையில் ஒற்றை ஓதுவார் தமிழ் மந்திரம் உச்சசரிக்கும்படியான ஏற்பாட்டை தான் செய்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது’’ என்றார் மூங்கில் அடியார்!

இந்த கோவில் குடமுழுக்கு தொடர்பாக நாம் விசாரித்த வகையில் நடைபெற்று வரும் குடமுழுக்கிற்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 120 பிராமண அர்ச்சகர்கள் வந்து சமஸ்கிருதத்தில் நடத்தி கொடுப்பதாக தெரிய வந்தது.

பத்தாம் நூற்றாண்டில் கருவூர் சித்தர் என்ற மகா பெரிய சித்தர் ஒருவர் இருந்தார். ராஜராஜ சோழன் அவரை அரச குருவாக போற்றி வணங்கினார். என்றாலும் ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதத்தில் தான் அனைத்தும் நடந்தது. தமிழில் உரிய மந்திரங்களும் அதற்கானவர்களும் இருக்க தமிழில் நடத்த வேண்டியது தானே என்றார் கரூவூர் சித்தர். பற்பல வழிகளிலும் சித்தரின் அறிவுரையை ஏற்று செயல்படுத்த முடிந்த ராஜராஜ சோழனால், இந்த அறிவுரையை மாத்திரம் செயல்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அவனை பிராமணர்கள் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தனர்.

கருவூர் சித்தர்

சித்தர் கொஞ்ச கால அவகாசம் தந்தும் தமிழ் அர்ச்சனை நடைமுறைக்கு வராததால் சினம் கொண்ட சித்தர் அரச குலத்தவர் யாரும் இனி கோவிலுக்குள் வரக் கூடாது என சாபம் இட்டுவிட்டார். அங்கேயே அமர்ந்து சித்தர் சமாதி நிலையில் உயிர் துறந்தார். அவருக்கு அங்கு சிலையும், வழிபாடும் இன்றைக்கும் உள்ளது. அதன் பிறகு மனம் நொந்த மாமன்னன் ராஜராஜன் கோவில் கோபுரம் மீது ஏறி, கருவூராரின் சாமாதிக்கு நேராக குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது வரலாறு.

அதன் பிறகு சுமார் ஆயிரம் ஆண்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கே நடக்கவில்லை. 1997ல் முயற்சித்த போது ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் கருகி செத்தனர்! தஞ்சை கோவிலுக்குள் இன்று வரை நாட்டை ஆளும் யார் சென்றாலும் அவர்கள் ஆட்சி பறி போகும் அல்லது உயிர் பறிபோகும். அது தான் எம்.ஜி.ஆருக்கும் நடந்தது. இதனால் தான் 2020 ஆம் ஆண்டு தஞ்சை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நாங்களும்,தெயவத் தமிழ் பேரவை அமைப்பினரும் வற்புறுத்தி சமஸ்கிருதத்தில் மட்டுமின்றி சிறிதளவு தமிழிலும் மந்திரங்கள் ஓத வைக்க கடும் பிரயத்தனம் செய்தோம்” என்றார் மூங்கில் அடியார்.

சமஸ்கிருதத்துடன் தமிழில் குட முழுக்கு நடத்தலாம் என நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அதை நடத்துவதில் ஆர்வமோ, உறுதிப்பாடோ காட்டாமல் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருவது குறித்து திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் விளக்கமளிக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க நேற்று ( செப்டம்பர்-5) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கீழப் பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது! துர்கா ஸ்டாலின் குலதெய்வமாம் இந்த அம்மன். ஆகவே, சகலவித செலவுகளையும் தானே ஏற்று ,சமஸ்கிருத சடங்குகளுக்கு பெயர் பெற்ற பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளார் துர்கா! இந்த குடமுழுக்கும் முழுக்கவே சமஸ்கிருதத்தில் தான் நடந்துள்ளது!

‘ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி பல பிராமண அர்ச்சகர்களைக் கொண்டு  துர்கா ஸ்டாலின் பல வேள்விகளையும், சடங்குகளையும் பெரும் பொருட் செலவில் நடத்தி உள்ளார்! அதன் காரணமாகவே, தன் கணவர் முதலமைச்சர் ஆனதாக அவர் வலுவாக நம்புகிறார். ஆகவே, பிரமணர்கள் மனது சிறிதளவு கூட புண்படும்படியாக சமஸ்கிருத வழிபாட்டுக்கு தடையாக எதுவும் நடந்து விடக் கூடாது. அதை நீதிமன்றமே நிர்பந்தித்தாலும் கூட செயல்படுத்தக் கூடாது’ என முதல்வர் குடும்பம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிய வருகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time