அதிகாரத்தை கைப்பற்றவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

-சாவித்திரி கண்ணன்

அடேங்கப்பா..! எத்தனையெத்தனை குண்டுவைப்பு சம்பவங்கள்! இவை  யாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளன! இவற்றை இஸ்லாமியர்கள் செய்தனர் என நம்ப வைத்ததன் மூலம் தான் தற்போது பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்பதெல்லாம் பகீர் உண்மைகளாக அம்பலப்பட்டு உள்ளன!

இந்து மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி இளைஞர்களை ஈர்த்து அவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்து, அதன் மூலம் நாடெங்கும் பல குண்டு வெடிப்பு சம்பவங்களை இந்துத்துவ அமைப்புகள் நடத்தி உள்ளன! இதன் விளைவாகத் தான் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது என்பது தற்போது நிருபணமாகியுள்ளது

யஷ்வந்த் ஷிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ்சின் 25 ஆண்டு கால நிர்வாகி நீதிமன்றத்தில் தற்போது தந்துள்ள பிரமாண வாக்குமூலம் இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் பெரும் அதிர்வை உருவாக்கி உள்ளது!

2006 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிசத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தின் தொண்டர் ஹிமான்ஷு பான்சே உட்பட இருவர் வெடிகுண்டு வெடித்ததில் இறந்து போயினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையிலேயே யஷ் வந்த் ஷிண்டே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள் ளார். அதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியைத் தகர்க்க வெடி குண்டு தயார் செய்யும்போது, தவறுதலாக குண்டு வெடித்து, ஹிமான்ஷூ பான்சே  இறந்ததாக ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஷிண்டே ஆர்எஸ்எஸ்ஸில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பயிற்சி பெற்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பிரச்சாரக் ஆகவும், 1999ஆம் ஆண்டில் இருந்து மும்பை பஜ்ரங் தளத்தின் தலைவராக இருந்தவர் என்பது கவனத்திற்கு உரியது.. மாணவர் பிரிவான ஏபிவிபியின் கர்ஜனாவுக்காகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

யஷ்வந்த் ஷிண்டே கூறிவற்றில் இருந்து நமக்கு தெரிய வருபவை என்னவென்றால்.

2007 ல் நடந்த ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு

2007 ல் நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு

2008 மாலேகான் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு இருந்த தொடர்பை மேலும் உறுதிபடுத்தி உள்ளார் யஷ்வந்த் ஷிண்டே!

மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல இளைஞர்களை பயற்சி கொடுத்து ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபடுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் காஷ்மீரில் எத்தனையெத்தனை அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் அநியாயமாக கைதாகி தண்டிக்கப்பட்டு இருப்பர் என எண்ணும் போதே நெஞ்சு பதைபதைக்கிறது.

ஷிண்டேவின் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவை என்பது கவனத்திற்கு உரியது.

மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி யான எஸ்.எம்.முஷ்ரிப் முன்பு சொன்ன வாசகம் தான் தற்போது நினைவுக்கு வருகிறது. ”இந்தியாவில் நம்பர் ஒன் பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான்! 2015 ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது 13 பயங்கரவாத சம்பவங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்பதும், மற்ற இந்து இயக்கங்கள் மீது 17 வழக்குகள் பதிவாகி உள்ளன என்பதும் கவனத்திற்கு உரியதாகும்!”

ஆர்.எஸ்.எஸ் தந்த பயிற்சிக்குப் பிறகு, ஹிமான்ஷு மகாராஷ்டிராவின் மராத்வாடா  பகுதியில் மூன்று குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினார். அடுத்ததாக அவுரங்காபாத்தில் உள்ள முக்கிய மசூதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார், அந்த குண்டுவெடிப்புக்காக வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் அவர் 2006 இல்  நான்டெட்டில் உயிர் இழந்தார்” என்று யஷ்வந்த் ஷிண்டே விரிவாக கூறியுள்ளார்.

“நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாஜகவுக்கு அரசியல் பலன்  கிடைக்க வில்லை. அதன் விளைவாக, 2004 தேர்தலில், பாஜக வெற்றி பெறவில்லை. எனினும், மிலிந்த் பராண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு ரகசியமாக சதித் திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

மேலும் காவல்துறை மற்றும் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் இஸ்லாமியர்கள் மீது குற்றம் சாட்டினர். அது பாஜகவிற்கு 2014 மக்கள வைத் தேர்தலில் உதவியது” என்று பிரமாணப் பத்திரத்தில் விவரிக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “2014-ல் பாஜக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி நரேந்திர மோடி பிரதமரானார். இதன் விளைவாக பாஜக வின் பின்புலத்தில் செயல்பட்டு வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ்  ஆகிய அனைத்து அமைப்புகளும் திடீரென முக்கியத்துவம் பெற்றன’’ என்று குறிப்பிடுகிறார்.

இந்து மதம் மிகவும் உன்னதமான மதம் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, இந்து மதம் சாத்வீகமானது. பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொடூரமான குற்றங்களில் ஈடுபட தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, ஆர்எஸ்எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்ற சில இந்து அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன என அம்பலப்படுத்தி உள்ளார்!

வெடிகுண்டுகள் வைக்கும் நாசகார செயல்கள் குறித்து, ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உட்பட பலரிடம் மிலிந்த் பராண்டேவின் சூழ்ச்சிகளைப் பற்றி எச்சரிக்குமாறு பேசி இருக்கிறார் யஷ்வந்த் ஷிண்டே! ஆனால், அவர்கள் இவர் பேசுவதை கண்டு கொள்ளவில்லை எனவும் பிரமாணப் பத்திரத்தில் யஷ்வந்த் ஷிண்டே  குறிப்பிட்டுள்ளார். உண்மையில், இந்தத் தலைவர்களின் அலட்சியத்தைக் கண்ட  பிறகு, ஆர்எஸ்எஸ் மற்றும் வி.எச்.பியின் மூத்த தலைவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்ந்ததாகக் கூறுகிறார் யஷ்வந்த் ஷிண்டே! இதனால் கடந்த 13-14 ஆண்டுகளாக நான் செயல்பாடுகளற்ற ஒரு உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ்சில்  தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் இரவோடு இரவாக பாகிஸ்தான் கொடியை ஏற்றி, இஸ்லாமியர்கள் மீது பழி போட முயன்ற  இந்த காவித்தீவிரவாத கும்பல் மறுநாள் கையும் களவுமாக பிடிபட்டது ஞாபகம் வருகிறது.

ஹைதராபாத்திலுள்ள பகதூர்புரா மாவட்டத்திலுள்ள ஹனுமான் கோவிலுக்குள் பஜ்ரங்கதளத்தைச் சேர்ந்த இந்து தீவிரவாதி இளைஞர் மாட்டுக்கறியை வீசிவிட்டு தப்பியோடும் போது போலீசார் பிடித்தது நினைவுக்கு வருகிறது!

நெல்லையில் கோயில் தேருக்கு இந்து அமைப்பு ஒன்று தீவைத்து முஸ்லிம்கள் மீது பழிபோட்டது,

திண்டுக்கல்லில் தன்னுடைய வீட்டின் மீது தானே நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி, இஸ்லாமிய தீவிரவாதிகளால் தன்னு ஆபத்து எனக் கூறி கைதான பாஜக நிர்வாகி பிரவீன்குமார் உள்ளிட்ட பல சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது!

ஆக்கபூர்வமான அரசியலை முற்றிலும் தவிர்த்து, அழிவு அரசியலையே தந்திரோபாயமாகக் கொண்டு, அதிகாரத்தை அடைவது ஒன்றே நோக்கமாகக் கொண்டவை தான் பாஜக மற்றும் அதன் தோழமை இயக்கங்கள்!

இப்படியான ஒரு தற்கொலை பாதை கொண்ட அரசியல் தான் பாஜக அரசியல் என்ற புரிதல் அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டால் ஒழிய இதற்கு விமோசனமே இல்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time