பாதயாத்திரைகளும், அதன் பலா பலன்களும்!

-சாவித்திரி கண்ணன்

வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தி பாதயாத்திரைகளுக்கு உண்டு என்பது வரலாறு! காந்தி நடத்திய தண்டி யாத்திரை ,சுதந்திரத்திற்கு பிறகு ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரின் 4,000 கீமீ பாதயாத்திரை, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியின் பாதயாத்திரை… என இது வரையிலான பாதயாத்திரைகள் ஏற்படுத்திய விளைவுகள் என்ன?

ராகுல் காந்தி குறிப்பிட்டது போல நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது! மனிதாபிமானமற்ற ஆட்சியாளர்களின் கையில் அதிகாரம் சிக்கியுள்ளது! சிறு, குறுந்தொழில்கள் நசிந்து வருகிறது! குறிப்பிட்ட சில பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கவே பாஜக அரசு தன் ஆட்சியின் லட்சியமாகக் கொண்டுள்ளது. மேலும் மக்களை பிளவுபடுத்தும் அரசியலை செய்து வருகிறது. மேலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைக் கொண்டு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்துகிறது. ஆகவே, இந்த அபாயகரமான ஆட்சியை எதிர்த்து மக்களை ஒன்றுபடுத்த இந்த யாத்திரை அவசியமான ஒன்று தான்!

பாதயாத்திரை என்றால் தமிழர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து செருப்பில்லாமல் நடக்கும் பாதயாத்திரைகள் தாம்! அந்த பக்தி பாதயாத்திரை மனதிற்கு ஒரு ஆன்ம பலம் தருவதை பல லட்சம் மக்கள் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளனர்.

விடுதலை போராட்ட காலத்தில் வெள்ளையனைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில் காந்தி நடத்திய 24 நாட்கள் தண்டி யாத்திரை பிரிட்டிஷ் பேரரசை எதிர்க்கும் மனவலிமையை சாதாரண மக்களிடமும் ஏற்படுத்தியது. வெறும் உப்புக்காக ஒரு போராட்டமா? என தப்புக் கணக்கு போட்டனர் பலர்! ”சோத்துல உப்பு போட்டு சாப்பிடறியா இல்லையா? உனக்கு ரோஷம் இல்லையா?” என்ற சொல்லாடல்கள் உண்டு. ஆம்,வெள்ளையனை எதிர்த்து மக்களுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது இந்த போராட்டத்தில் தான்!

சுதந்திர போராட்டத்தை வெகுஜன இயக்கமாக மாற்றியதில் உப்பு சத்தியாகிரகத்திற்கு பெரும் பங்கு உண்டு. மேலும் இது ஏதோ ஒப்புக்காக நடத்தப்பட்ட நடை பயணமும் இல்லை. இதில் கலந்து கொள்பவர்களை காந்தி மிக கவனமாகத் தேர்வு செய்தார். சர்வபரித் தியாகத்திற்கும் தயாராக இருந்தவர்களுக்கே அண்ணல் அனுமதி கொடுத்தார்!

சுதந்திரத்திற்கு பிறகு முதன்முதலாக தேசம் தழுவிய அளவில் பாதயாத்திரை செய்தவர் சந்திரசேகர் தான். இவர் ஒரு சோசலிஸ்ட்டாக வாழ்க்கையை தொடங்கியவர். பிறகு காங்கிரசில் சேர்ந்தவர் எமர்ஜென்சியின் போது காங்கிரசில் இருந்து விலகி மொரார்ஜி தேசாய் போன்றவர்களுடன் இணைந்து ஜனதா கட்சி கண்டார். 1983 ல் சந்திரசேகர் கன்னியாகுமரி தொடங்கி டெல்லி வரை நடத்திய 4,000 கீமீ பாதயாத்திரை மிகவும் முக்கியத்துவமானது.

ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் பாதயாத்திரை

அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஜனதா கட்சி வலுவாக இருந்தது! சந்திரசேகருக்கு பெரிய வரவேற்பும் தமிழகத்தில் கிடைத்தது. நாள்தோறும் 25 கிமீ என ஆறு மாதங்கள் நடந்தார் சந்திரசேகர்! பல இடங்களில் மக்களிடையே பேசினார். கேரளாவில் அவருக்கு அப்போது மார்க்சிஸ்ட் கட்சி மகத்தான வரவேற்பும் ஏற்பாடுகளும் செய்து தந்தது. கர்நாடகத்தில் ஜனதாவின் இராமகிருஷ்ண ஹெக்டே தான் ஆட்சியில் இருந்தார். இந்த நடை பயணம் அவரை நாடறிந்த ஒரு தேசிய தலைவராக்கியது.

இந்து உணர்வை வெறியாக மடைமாற்ற ராமஜென்ம பூமி பிரச்சினைக்காக அத்வானி நடத்திய ரத யாத்திரைகள் இந்தியாவில் ரத்த ஆறுகளை ஓடவிட்டது என்பது வரலாறு!

தமிழகத்தை பொறுத்த அளவில் சுயமரியாதை இயக்கம், முஸ்லீம் லீக் போன்ற அமைப்புகள் இணைந்து தமிழர் பெரும் படை என்ற பெயரில் திருச்சியில் இருந்து சென்னை வரை 1938 ல் நடத்திய பாத யாத்திரை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது! இது இந்தி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் பட்டிதொட்டியங்கும் ஒருசேர உருவாக்கிய வண்ணம் சுமார் 234 ஊர்களைக் கடந்து சென்னை வந்தடைந்தது! தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கு வலுவான அடித்தளமிட்டது இந்த பாதயாத்திரை! இந்த பாதயாத்திரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் மூவலூர் ராமாமிர்தம், பெரியார், மறைமலை அடிகள் போன்றோர்!

கருணாநிதியின் திருச்செந்தூர் பாதயாத்திரை

அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலில் அறநிலையத் துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு கருணாநிதி நடத்திய மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரையிலான 200 கீ.மீ பாதயாத்திரை அந்தக் காலத்தில் கொலைக் குற்றத்தை மறைக்க முயன்ற எம்.ஜி.ஆருக்கு பெரும் தலைவலியானது! அந்த தலைவலிக்கு காரணமானவர் ஆர்.எம்.வீரப்பன். ஆகவே, எம்.ஜி.ஆருக்கு தன் மேல் இருந்த கோபத்தை மட்டுப்படுத்தி, அவரை மனம் குளிர்விக்க அச் சமயத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் ஜெயலலிதாவின் காவேரி தந்த கலைச் செல்வி நடன நிகழ்ச்சியை நடத்தினார் ஆர்.எம்.வீரப்பன்! இந்த நிகழ்வு நெடுநாட்கள் பிரிந்திருந்த ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும் ஒன்று சேர்த்ததோடு, தமிழக அரசியலுக்குள் ஜெயலலிதா நுழையவும் காரணமாயிற்று.

தமிழக அரசியலில் நடை பயணம் என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் வைகோ தான்! காவிரி பிரச்சினை தொடங்கி மது ஒழிப்பு வரை ஏகப்பட்ட நடை பயணங்களை நடத்தியவர் வைகோ தான்! இந்த நடை பயணங்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அவர் கட்சியை தொண்டர்களிடம் உயிர்ப்பாக வைக்க உதவியது.

பாதயாத்திரைகளால் அதிகார மாற்றங்களை நிகழ்த்தி காட்டிய மாநிலம் என்றால், அது ஆந்திரா தான்! 2003 ல் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜசேகர ரெட்டி நடத்திய 1,500 கீ.மீ.பாதயாத்திரை ஆந்திராவில் காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டியதோடு, அவரை மாபெரும் மக்கள் தலைவராக்கி அரியணையில் அமர்த்தியது! அதே யுக்தியை 2013 ல் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி, 17,00 கீ.மீ பாத யாத்திரை செய்து அடுத்த ஆண்டே இழந்த அதிகாரத்தை பிடித்தார்.

அப்பா வெற்றி கண்ட அதே பாதயாத்திரை உக்தியை அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு கடைபிடித்து ‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ என்ற பெயரில் சுமார் 15 மாதங்கள் 3,700 கீமீ தூரம் நடையாய் நடந்து 2018 ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். இதே காலகட்டத்தில் தான் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் பாதயாத்திரை செய்து 2018 தேர்தலில் ஆட்சியை பிடித்தார்.

சரி, மீண்டும் ராகுல் நடை பயணத்திற்கு வருவோம். இந்த நடை பயணத்தில் தமிழகத்தின் நிறைய மக்கள் அமைப்புகள் தானாக முன் வந்து கலந்து கொண்டுள்ளன. விவசாய அமைப்புகள், எட்டு வழிச் சாலை எதிர்ப்பாளர்கள் தொடங்கி நீட் எதிர்ப்பாளர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ராகுலோடு பயணத்தில் கலந்து கொண்டனர் என்பது கவனத்திற்கு உரியது!

மக்களோடு ஒன்றிணைய, அவர்கள் பிரச்சினையை புரிந்து கொள்ள, மக்களுக்கு நெருக்கமாக செயல்பட பாதயாத்திரைகள் பெரிதும் உதவும். அதே சமயம் கட்சி கட்டமைப்பு வலுவாக இருந்தால் தான் இதன் பலன் தேர்தலில் பிரதிபலிக்கும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time