அஞ்சா அறப் பயணத்தின் மூன்றாமாண்டு தொடக்கம்!

-செழியன் ஜானகிராமன்

அறம் மூன்றாம் ஆண்டு தொடக்கமும், நூல் வெளியீடும் இனிதே நிறைவேறியது! சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காந்தியவாதிகள் வாசகர்கள் என அன்பர்கள் கலந்து கொண்டனர். அதில் அறத்தின் சமூக தேவை குறித்த பேச்சுக்கள் முக்கியத்துவம் பெற்றன! 

2020 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அறம் இணைய இதழ் தொடங்கப்பட்டது. சமகால மக்கள் பிரச்சனைகளை அலசி, பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசி அந்த பிரச்சனையை எப்படி அணுக வேண்டும், அதன் உண்மைத் தன்மை என்ன என்று ஒவ்வொரு கட்டுரையும் பேசும். தினமும் அறத்தில் கட்டுரை இப்படித்தான் வலையேற்றப்படும். சமரசம் இல்லாமல், கட்சி பாகுபாடுகள் இல்லாமல், தவறு எங்கு உள்ளதோ எதிர்த்து கேள்வி கேட்கும் இதழாக அறம் செயல்படுகிறது. அப்படிப் பல கட்டுரைகள் அரசியல் மட்டத்தில் அதிர்வுகளை உருவாக்கி, மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

சான்றாக, சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தேர்வு விவகாரத்தை சொல்லலாம். தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு மையத்தை தொலைதூரத்தில் அமைத்து இருந்தது வாரியம். சென்னையில் இருப்பவருக்கு திருநெல்வேலியில் மையம் இருந்தது, வேலூரில் இருப்பவருக்கு தேனியில் இருந்தது…என தாறுமாறாக நிணயித்து இருந்தார்கள்! இதனால் ஏர்படும் சிரமங்கள்,பிரச்சினைகள் குறித்து உருக்கமாக  ஒரு கட்டுரை அறம் இதழில் வந்தது. அது அரசின் உடனடி கவனத்துக்கு சென்று அதிரடியாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு அருகாமை மையங்களில் பிறகு தேர்வு நடந்தது. இது போல பல பிரச்சினைகளை அறம் கவனப்படுத்தி சரி செய்யப்பட்டு உள்ளது.

இப்படி செயல்பட்டு வரும் அறம் இணைய இதழுக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 3 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதற்கான விழா 3-9-2022 அன்று வினோபா அரங்கில் நடைபெற்றது மற்றும் ‘அறம்’ ஆசிரியர் சாவித்திரி கண்ணன் எழுதிய கட்டுரைகள் தொகுத்து “அடிமை சமூகமும் அழிவு அரசியலும்” என்று புத்தகம் ‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் முத்தையா  அவர்களால் வெளியிடப்பட்டது. அதை காந்தி கல்வி நிலையத்தின் முனைவர் பிரேமா அண்ணாமலை பெற்றுக் கொண்டார்!

முன்னிலை மரிய பெல்சின்,  ஒருங்கிணைப்பு  காந்தி கல்வி நிலையத்தின் சு.சரவணன், நூல் குறித்த உரை பீட்டர் துரைராஜ், திரவிய முருகன், வரவேற்புரை ஜா.செழியன். வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உரை நிகழ்த்தினார் சாவித்திரி கண்ணன்.

நிகழ்வின் தொடக்கமாக அறம் இதழைப் பின்தொடர்ந்து வருபவர்களை அழைத்து அறத்தைக் குறித்துச் சிறு உரை நிகழ்த்தப்பட்டது. வழக்கறிஞர் அமர்நாத் அறத்தின் தேவை குறித்துப் பேசினார். இன்றைய செய்திகள் மக்களை எப்படிச் சென்று சேர்கிறது அதில் எந்த அளவு பிரச்சனையைப் பேசப்பட்டுள்ளது குறித்தும், செய்திகள் வந்து கொட்டும் தகவல் உலகத்தில் அறம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் குறித்து உரை நிகழ்த்தினார். தரமான செய்திகள், மக்கள் பிரச்சனைகள் எழுத அறம் உங்களுக்காகத் திறந்தே இருக்கும் எழுதலாம்” என்று சாவித்திரி கண்ணன் குறிப்பிட்டார்.

வளர் தொழில் ஆசிரியர்  ஜெயகிருஷ்ணன் ஒரு இதழின் சமூக பயன்பாடு குறித்தும், எப்படி பொருளாதார ரீதியாக ஒரு இதழ் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் பேசினார்.

தயாளன் அவர்கள் பல செய்திகளை ஒப்பிட்டு, அறத்தில் வெளிவரும் கட்டுரைகளைக் குறித்துப் பேசினார், அதற்குப் பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிட்டார். சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக சாவித்திரி கண்ணன் எதிர்வினை ஆற்றுவது பற்றியும் குறிப்பிட்டார். ஒரு பத்திரிகையாளர் இந்த வாரம் பேசியதை அவரே மாற்றி அடுத்த வாரம் பேசுகிறார். இடையில் பெட்டி மாறி இருக்கும்.சமீப காலமாக இதை அதிகம் பார்க்கலாம். ஆனால் சாவித்திரி கண்ணன் கொடுத்த பேட்டி, எழுத்து பார்த்தீர்கள் என்றால் ஒன்று கூட மாற்றம் இருக்காது, உண்மையின் பக்கம் அவர் குரல் இருக்கும்.

கள்ளக்குறிச்சி விஷயத்தில் தொடக்கத்திலிருந்து குற்றவாளிகளை எதிர்த்து எழுதி வருவது சாவித்திரி கண்ணன் தான். அனைவரும் இறப்பைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர் மட்டும்தான் மாணவி இறப்பு மட்டும் இல்லாமல் அதனால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பொதுமக்களைக் கைது செய்வது குறித்து மிகக் கவலையுடன் பேசினார். எந்த பத்திரிக்கையும் அதைக் குறித்துப் பேசவில்லை, இன்று நமக்கு முன்பு குறிஞ்சி மலர் போன்று இருப்பது அறம் இதழ் மட்டும்தான்  இருக்கிறது” என்று தயாளன் குறிப்பிட்டார்.

மருத்துவர் உமர் பாருக் சாவித்திரி கண்ணன்

சென்னை பத்திரிகையாளர் மன்ற பொதுச் செயலாளர் மணிமாறன் பேசும்போது சாவித்திரி கண்ணன் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால் அதிகாரத்தைக் குறித்து கேள்வி கேட்பவர்! இப்படி கேள்வி கேட்பதால் நமக்கு வரும் முதல் அறிவுரையே ஏன் அவர்களைப் பகைத்துக் கொள்கிறீர்கள் பிறகு எதுவுமே செய்ய முடியாது என்றுதான் இருக்கும். இன்று இருக்கும் பத்திரிகை செயல்பாடுகளே ஆட்சியில் இருப்பவர்களுக்கு வால் பிடிக்கும் ஜர்னலிசம் தான்  எனக்குத் தெரிந்து அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்பது அறம் இதழ்தான்  என்பதைக் குறிப்பிடுவேன். சாவித்திரி கண்ணன் அறம் இதழ் எந்தவித விளம்பர வெளியீடும் இல்லாமல் வரும் இதழ் ஆகும். நானும் ஆரம்பத்தில் சொன்னேன் விளம்பரங்கள் போடுங்கள் என்று ஆனால் தெளிவாகச் சொன்னார் விளம்பரம் வாங்குவது இல்லை, வாசகர்களால் இவை நடைபெற வேண்டும் என்று.

வழக்கறிஞர் திருஞான சம்பந்தன் அறம் இணைய இதழை முழுமையாகப் படிக்கவில்லை என்றாலும், பல கட்டுரைகளை படித்து உள்ளேன். அதைத் தவிர்த்து சாவித்திரி கண்ணனின் பல முகங்களை நாம் அறிவேன். தமிழருவி மணியன் நடத்திய இதழில் இயற்கை மருத்துவம் குறித்து எழுதி வந்தார். அதைப் படித்து அவரை அவரின் வீட்டில் சந்தித்து அதைக் குறித்து உரையாடினேன். அறம் சார்ந்து அவர் ஆற்றி வரும் பங்கு என்னைப் பிரமிக்க வைத்தது. ராஜீவ் காந்தி கொலையில் கைதானவர்களுடன் எந்த அளவு சாவித்திரி கண்ணன் சம்பந்தப்பட்டு இருந்தார்.  அதில் எவ்வாறு உண்மைய்டனும்,  வெளிப் படைத் தன்மையுடனும் அவர் நடந்து கொண்டார்  என்பதைத் தெரிந்த பிறகு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. நாங்கள் அழைத்த நிகழ்விர்கு வந்து சிறப்பாக பேசினார். அந்த வகையில் ஒரு குருவாகச் சாவித்திரி கண்ணன் எங்களுக்கு விளங்குகிறார்.

காந்தி கல்வி நிலையத்தைச் சேர்ந்த முனைவர் பிரேமா அண்ணாமலை பேசும்போது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கா என்றால், பலருக்கு இல்லை என்று சொல்லலாம். ஆனால் சாவித்திரி கண்ணன் அப்படி இல்லை. என்ன பேசுகிறாரோ, எழுதுகிறாரோ செயலிலும் அப்படியே இருப்பவர் சாவித்திரி கண்ணன். அவர் துணைவியார் அற்புதமானவர். அவருக்குப் பக்கபலமாகஉள்ளார். சாவித்திரி கண்ணன் ஏழை குழந்தைகளுக்கான ஒரு மாலை நேர பாடசாலை பாரதியார் பெயரில் நடத்தினார். எங்களோடு தொடர்ந்து 22 ஆண்டுகள் பயணித்து வருகிறார்! என்றார்.

வழக்கறிஞர் சிவா பேசுகையில், ”அறம் இதழ் ஒரு இயக்கமாக மாற வேண்டும். ஆரியம் எழுதுகிறாரா, திராவிடம் எழுதுகிறாரா என்று பார்த்தால் நியாயம் எழுதுகிறார். மக்களின் பிரச்சனைகளை எழுதுகிறார். இவர் பத்திரிகையாளர் மட்டுமல்ல, களச் செயற்பாட்டாளர். காந்தியவாதி சசிபெருமாளின் 31 நாட்கள் உண்ணாவிரத்ததை பல சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து நடத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட்டார். அதனால் அறம் இணையத் தளம் இன்னும் விரிவு படுத்த வேண்டிய தளம். மறுபடியும் குறிப்பிடுகிறேன் இவை ஒரு இயக்கமாக மாற வேண்டும்.  அப்படி இயக்கமாக மாறினால் நாங்கள் எல்லோரும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம். இன்றைய பத்திரிகைகள் கையாளும் டமால், டுமீல் என்று தலைப்பு இல்லாமல் அறம் இதழில் வரும் தலைப்புகள் சிறப்பாக உள்ளது. இதனால் அறம் தழைக்கும் என்பது நிஜம்’’ என்றார்.

பீட்டர் துரைராஜ், ச.க, ஜாபர் அலி, பிரேமா, மரியபெல்சின்

கட்டுமான தொழில் ஆசிரியர் சிந்து பாஸ்கர் உரையில், பத்திரிகை உலகில் நல்லவர்கள் உள்ளார்களா என்று யாராவது கேட்டால் சாவித்திரி கண்ணனைச் சொல்லலாம். இன்று இருக்கும் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று அரசியல்வாதிகள் வசம் இருக்கிறது அல்லது பணக்காரர்கள் வசம் இருக்கிறது. இது இரண்டும் இல்லாததால் இவரால் தைரியமாக எழுத முடிகிறது. யாரும் எழுத முடியாத அளவு இவரால் தைரியமாக எழுத முடிகிறது. திருப்பதி என்று பெயர் வைத்து இருப்பவன் சாமி சிலையைத் திருடுவான் ஆனால் அறம் என்று பெயர் வைத்து அதற்கு ஏற்ப செயல்படுபவர் சாவித்திரி கண்ணன் மட்டும் தான்’’ என்றார்.

தமிழர் எழுச்சி குரல் ஆசிரியர் அ.பத்மநாபன் பேசும்பொழுது அவ்வப்பொழுது நானும் சாவித்திரி கண்ணனும் பேசிக் கொள்வோம். பேச்சில் அறம் படித்தீர்களா என்று கேட்பார். இல்லை என்றால் உடனே படியுங்கள் என்று சொல்வார். அதைக் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். இவரின் ஓர் விஷயம் பிடித்துப்போனது கிரிக்கட் சூதாட்டம் பற்றிச் சிறு வெளியீடு கொண்டுவந்தார். அதைப் பலர் படித்து கிரிக்கட்டை விட்டுவிட்டு நம்மூர் விளையாட்டு விளையாடத் தொடங்கியதைப் பார்த்து உள்ளேன். மிகச் சிறப்பான பணி சாவித்திரி கண்ணன் செய்தது.

பத்திரிகையாளர் மரிய பெல்சின் பேச்சில் அறம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால், பொருளாதாரம் தேவை அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நான் அனுபவத்தில் உணர்ந்ததை அறத்தில். இயற்கை உணவு, பாரம்பரிய மருத்துவம் குறித்து எழுதி வருகிறேன் என்று குறிப்பிட்டார்.

சாவித்திரி கண்ணன் அறத்தின் தேவை குறித்தும், கூட இருந்து செயல்படுபவர்களை குறித்து உரையாற்றினார்.

நூல் வெளியீடு மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

நூலைக் குறித்து பீட்டர் துரைராஜ் உரை நிகழ்த்தினார். புத்தகத்தின் முழு சாராம்சத்தையும் உள்வாங்கி கல்வியில் ஏற்படும் அழுத்தங்கள், வேளாண்மையில் உள்ள பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் கோடிட்டுக் காண்பித்தார். அடிமை சமூகமும் அழிவு அரசியலும் நூலில் மொத்தம் 44 கட்டுரைகள் உள்ளது. 10 வருடம் கழித்து ஒருவர் இந்த புத்தகத்தைப் படித்தால், இந்த காலகட்டத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் குறுக்கு வெட்டு தோற்றமாகப் பார்த்துவிட முடியும். அந்த வகையில் இவை ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அடிப்படையில் சாவித்திரி கண்ணன் ஒரு காந்தியவாதி, பெரியாரை நேசிக்கிறார். குமரப்பாவை வழிபடுகிறார். இந்த கட்டுரைகளை இந்த மூவரின்  பார்வையில் தான் எழுதி உள்ளார்.

பிறகு திரவிய முருகன் பேச வந்தார் நேற்று சாவித்திரி கண்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தபோது நிகழ்வு குறித்துச் சொன்னார். உடனே புத்தகத்தைக் கொடுத்துப் படித்து நாளை பேசுங்கள் என்று குறிப்பிட்டார்.  தடுப்பூசி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி கூடாது என்ற கட்டுரைகளைப் பல தரவுகள் கொண்டு இவர் எழுதியது மிக முக்கியமானது. இவரின் சொல்லில் அறம்  இருக்கிறது, பேச்சில் அறம் இருக்கிறது, எழுத்தில் அறம் இருக்கிறது. இந்த அறம் இணைய இதழ் தொடர்ந்து இயங்க வேண்டும்.

நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொடுத்தவர் காந்தி கல்வி நிலையத்தின் சு.சரவணன். ஒவ்வொருவரை பற்றி அறிமுகம் அவர்கள் பேசிய பிறகு அதைக் குறித்துச் சிறு விளக்கம் என்று அருமையாக ஒருங்கிணைத்துக் கொடுத்தார்.

வாசகர்களின் கேள்விக்கு பதில் கொடுக்க தொடங்கினார் சாவித்திரி கண்ணன். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சுவையான சாமை கேசரி, ஏலக்காய் டீ, சுக்கு காபி பரிமாறப்பட்டது.

தொகுப்பு; செழியன் ஜானகிராமன் 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time