அடி பணியாத மனோபாவம், அடிமைச் சிறுமதியாளர்களிடம் இருந்து விலகி நிற்கும் தனித்துவம், திராவிட கொள்கைகளில் உறுதிப்பாடு போன்ற இயல்புகளுடைய பி.டி.ஆர். தியாகராஜனுக்கும் திமுக தலைமைக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றாலும், அது இந்த அளவுக்கு மோசமாக போகுமா என்பது அதிர்ச்சியளிக்கிறது.
பி.டி.ஆர் ஒரு செயல்வீரர், ‘சொல்லுக்கும், செயலுக்கும் அதிக இடைவெளி கூடாது’ என செயல்படுபவர். மேலை நாட்டுக் கல்வி கற்றவர் மட்டுமல்ல, அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் வகித்தவர். அந்த வகையில் சுதந்திரமான சிந்தனை கொண்டவர். அடிமை அரசியலை அறியாதவர், விரும்பாதவர்! ஆனால், இன்றுள்ள கட்சித் தலைமைகள் சுயசிந்தனையாளனை விரும்புவதில்லை. இந்தச் சூழலில் பி.டி.ஆரின் செயல்பாடுகள், பேச்சுகள் தற்போதைய கட்சித் தலைமைக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை தந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் மதுரையில் ஒரு நிகழ்வில் பேசிய பி.டி.ஆர்.தியாகராஜன், ”அரசியலுக்கு பலர் பல காரணத்திற்காக வருகிறார்கள். சிலர் சுயநலத்திற்கு, சிலர் பொதுநலத்திற்கு கொள்கைக்காக, இலக்காக, சில விளைவுக்காக வருவார்கள். ஆனால் அடிப்படையில் திராவிட தத்துவத்தோடு, ஒரு சமுதாயத்தை எந்த வழியில் நடத்தினால் அவர்களுக்கு கல்வி, பொருளாதார பங்கு கிடைக்குமோ அந்த வகையில் அரசாங்கத்தை இயக்க முடியும் என அரசியலுக்கு வந்தவன் நான். தத்துவம் பேசுபவனுக்கும், சட்ட திட்டங்களை உருவாக்குபவனுக்கும் இணைப்பு இல்லாமல் போகிறது” என்று பேசியுள்ளார்!
இந்தப் பேச்சு ஆழ்ந்த பொருள் பொதிந்தது. புரிய வேண்டியவர்களுக்கு நன்கு புரியும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மதவாத சக்திகளுக்கு உடனடியாக ஒரு முக்கிய செக் வைத்தார் பி.டி.ஆர். பிரபல கார்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் கோவில் அடிமை நிறுத்து என்ற பெயரில் அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் தர வேண்டும் எனப் பேசி வந்ததற்கு திமுக தரப்பில் யாரும் சரியாக எதிர்வினை ஆற்றாத நிலையில் பி.டி.ஆர். மிகுந்த அறச் சீற்றத்துடன் ஜக்கியை எச்சரித்தார்.
”கோவில்கள் தனியார் சூறையாடல்களில் இருந்தும், சனாதன சக்திகளீடம் இருந்தும் மீட்கப்பட்டு அரசுத் துறை நிர்வாகத்திற்கு வந்ததன் பின்னணியில் ஒரு நீண்ட நெடிய போராட்ட வரலாறே இருக்கிறது! அதை மீண்டும் அந்த தீய சக்திகளிடம் தூக்கி கொடுக்கவா ஆட்சிக்கு வந்தோம்..?” என்ற தொனியில் அவர் பேசிய பேச்சுக்கள் தான் ஜக்கியை வாயடைக்க வைத்தது. ஆனால், அவ்வாறு அப்போது அவர் பேசியதற்கு இந்துத்துவ சக்திகள் பெரும் அதிருப்தி அடைந்தன! அதைத் தொடர்ந்து திமுக தலைமை இனி ஜக்கி தொடர்பாக எதையும் பேசக் கூடாது என பி.டி.ஆருக்கு கடும் எச்சரிக்கை தந்ததது. அதைத் தொடர்ந்து பி.டிஆர். தன்னை வலிந்து கட்டுப்படுத்திக் கொண்டு ஜக்கி விவகாரத்தில் இனி நான் பேச மாட்டேன் எனச் சொல்லி அமைதி காத்தார்.
பிறகு, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தொடர்பில் தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையில் மாநில அரசுகளுக்கான பங்கை மத்திய அரசு அபகரிக்கிறது’ என சிறப்பாக அம்பலப்படுத்தினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நிதி நிலைமை எப்படி மோசமாக நிர்வாகிக்கப்பட்டது என்பன போன்ற பல விஷயங்களை பி.டி.ஆர் பேசி வந்த போது, அவருக்கு திமுக உடன்பிறப்புகள் மத்தியில் ஒரு தனிபெரும் செல்வாக்கு உருவானது! அதையும் கட்சித் தலைமை விரும்பவில்லை. நிர்மலா சீதாராமனுக்கு பி.டி.ஆர் ஒரு முறை சூடாக பதில் தந்த போது கட்சித் தலைமை அதை விரும்பவில்லை என அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”முதலமைச்சரை விட முதன்மையானவராக இவர் தன்னை முன்னிலைபடுத்த முயற்சிக்கிறார்” என அவரது உள்கட்சி எதிரிகள் ஸ்டாலினிடம் பற்ற வைத்தார்கள்! அது நன்றாகவே வேலை செய்தது.
அதைத் தொடர்ந்து புதிதாக கட்சியில் சேர்ந்த மக்கள் நீதி மையத்தின் மகேந்திரனுக்கு பி.டி.ஆர் திறம்பட நிர்வகித்து வந்த திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது! அதில் மகேந்திரனுக்கு வலைத்தள பொறுப்பு தரப்பட்டு, பி.டி.ஆர் இனி புள்ளி விபரங்கள் சேகரித்துக் கொடுத்தால் போதுமானது என சொல்லப்பட்டது. இது குறித்து பிடிஆரிடம் கலந்து பேசாமலே முடிவு எடுக்கப்பட்டது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்கியது!
இது ஒருபுறமிருக்க தலைமைச் செயலகத்தில் பி.டி.ஆரின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு நாளும் அவ நம்பிக்கை செய்திகளை பரப்பி வருகிறார்கள்! ”பி.டி.ஆர் பைல்களை பார்ப்பதில் அதிக காலதாமதம் செய்கிறார். முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் முரண்டு பிடிக்கிறார். முதல்வருக்கு கட்டுப்பட மறுக்கிறார்’’ என பல அவதூறுகள் பரப்படுகின்றன.
மதுரையில் அண்ணாமலை ஆதரவாளர்களால் பி.டி.ஆரை தாக்கும் முயற்சிகள் நடந்த போது, அங்கிருந்த காவல்துறை அந்த வன்முறையாளர்களை களத்திலேயே கைது செய்யவில்லை. அவர்களை கைது செய்ய வற்புறுத்தி மதுரை திமுகவினர் சாலையிலும், ரயில்வே டிராக்கிலும் போராட்டம் நடத்தி சுமார் 100 பேர் கைதாயினர். அதன் பிறகே பாஜகவினர் ஆறு பேர் கைதாயினர். அதாவது, ‘கலவரம் செய்தது பாஜகவினர். ஆனால் பெரும் எண்ணிக்கையில் கைதானது திமுகவினர்’ என்ற கசப்பான அனுபவத்தை மதுரை உடன்பிறப்புகள் தங்கள் சொந்த ஆட்சியில் அனுபவிக்க நேர்ந்தது. ஸ்டாலின் இரண்டு நாட்கள் கழித்தே பி.டி.ஆர் தாக்கப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்தார்.
இந்த தயக்கத்திற்கும், தாமதத்திற்கும் பின்னணியில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த சந்தர்ப்பத்தில் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் மீண்டும் சேர முன்வந்த மருத்துவர் சரவணன் பி.டி.ஆரை பார்த்து பேசி நாட்கள் பல கடந்தும், இன்னும் திமுகவில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை விடக் கொடுமை அவரை சேர்த்துக் கொள்ள ஒரு பெரும் தொகை அவரிடம் கேட்கப்பட்டது. இது பி.டி.ஆருக்கு பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியது.
பி.டி.ஆர் தன் பதவி காலத்தில் உருப்படியாக பல விஷயங்களை செய்ய நினைக்கிறார். உதாரணத்திற்கு அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக மதுரையில் முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மதுரையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் பற்றி முயற்சித்து வருகிறார். இதற்கெல்லாம் தலைமை எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரியவில்லை.
கடைசியாக பி.டி.ஆருக்கு தற்போது அதிக மனஉளைச்சல் ஏற்படுத்தி உள்ள ஒரு முக்கிய விவகாரத்தைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
தமிழக நிதித் துறைக்கு உதவிகரமாக செயல்படுவதற்கு என உள்ளது தான் பேரவை நிதிக்குழு. இந்த நிதிக்குழு மூன்று பிரிவுகளைக் கொண்டது. மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்கு குழு, பொதுத் துறை நிறுவனங்களின் குழு என்ற மூன்று குழுக்களை உள்ளடக்கியது. இது கடந்த ஆட்சியில் பல குளறுபடிகளை செய்துவிட்டது. ஆகவே, அதை சரியாக நிர்வகிக்க ‘சிறப்பு நிதிச் செயலகம்‘ என ஒன்றை ஏற்படுத்த பி.டி.ஆர் விரும்பினார். அதை நிர்வகிக்க இந்திய நாடாளுமன்ற செயலகத்தில் மூத்த இயக்குனராக இருந்த தமிழரான எம்.எல்.கே.ராஜாவை அடையாளம் கண்டு, அவரை அங்கிருந்து விடுவித்து தமிழகம் அழைத்து வந்தார். இது நடந்து ஒன்பது மாதங்கள் கடந்தும் பி.டி.ஆரின் செயல்திட்டம் நிறைவேறியபாடில்லை. அதற்கான முறையான அலுவலகம் தரவில்லை. அழைத்து வரப்பட்ட அதிகாரியை ஒன்பது மாதங்கள் மூலையில் உட்கார வைத்து, ஒன்றுமே செய்ய முடியாமல் முடக்கிவிட்டனர். இது குறித்து சில முறை பி.டி.ஆர் முதல்வரிடம் நேர்பட பேசியும் எதுவும் நடக்கவில்லை. அந்த அதிகாரி மீண்டும் மத்திய பணிக்கே திரும்பும் நிலையை உருவாக்கி, பி.டி.ஆர் திட்டத்தை முற்றாக முடக்கிவிட்டனர்! இது ஒரு சின்ன சாம்பிள் தான். இப்படிப் பல வகைகளிலும் அவருக்கு முட்டுக்கட்டை தரப்படுவதாக தெரிகிறது!
எல்லாவற்றுக்கும் சிகரமாக தற்போது பாஜக அண்ணாமலைக்கும், பி.டி.ஆருக்கும் கடுமையான மோதல் நடந்து கொண்டுள்ளது! இதன் பின்னணியில் தமிழக உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிடசன் தேவாசிர்வாதம் உள்ளார் என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல். பாஸ்போர்ட் மோசடி விவகாரத்தில் டேவிட்சன் தேவாசிர்வாதத்தை உண்டு, இல்லை என கிழித்து வந்தார் அண்ணாமலை. இந்தச் சூழலில் அண்ணாமலையிடம் பேசி ஒரு சுமூகமான நட்பை உருவாக்கி அவர் வாயை அடைத்தார் டேவிட்சன் தேவாசீர்வாதம்.
இந்தச் சூழலில் அண்ணாமலையே ஒரு குற்றச்சாட்டின் பேரில் கைதாகும் நிலை உருவானது. பெரம்பலூர் சிறுவாச்சூரில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரியசாமி மலை அடிவாரத்தில் பெரியசாமி, செங்கமலையார் கோவில்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து வெறுப்பு மற்றும் வன்ம பிரச்சாரம் செய்து மீண்டும் சீரமைப்பதாகச் சொல்லி பல லட்சங்களில் நிதி திரட்டி மோசடி செய்த கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்ட போது, அதில் அண்ணாமலைக்கு இருக்கும் தொடர்பு அம்பலமானது !
இதைத் தொடர்ந்து தன்னை தற்காத்துக் கொள்ள பதட்டமடைந்த அண்ணாமலை கார்த்திக் கோபிநாத் வழக்கை நீர்த்து போகச் செய்யவும், அவரை விடுவிக்கவும் டேவிட்சன்னுக்கு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது! அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மீதான தாக்குதல்களை அண்ணாமலை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார். அதற்கு அண்ணாமலையும் செவிசாய்த்தார். கடந்த இரண்டு மாதங்களில் டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கும், அண்ணாமலைக்குமான நட்பு மிக இறுக்கமாகி உள்ளது!
Also read
தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் நாளொன்றுக்கு மூன்று முறை முதல்வரிடம் பேசுமளவுக்கு மிக நெருக்கமான உறவையும், நம்பிக்கையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தினசரி அண்ணாமலையுடனும் பேசி நட்பு பாராட்டி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலையால் அதி மோசமாக தாக்கப்பட்டு வருவதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியும் நடக்குமா..? என்று ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகள் இன்னும் திமுக ஆட்சியில் நாம் பார்க்க உள்ளோம் என்பதை மட்டும் தற்போது சொல்லி வைக்கிறோம்.
அஜிதகேச கம்பளன்
அறம் இணைய இதழ்
வேதனையான விஷியம்.
பிடி.ஆர் க்கு நடக்கும் நிகழ்வுகள்.
அண்ணா, எம்.ஜி.ஆர்.கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் அமைச்சரவையில் முதல்வர்களை மெத்த அதிகம் படித்த பலர் இருந்தனர்.
அவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்காமல் திறமையை பயன்படுத்தி கொண்டனர்.
இது அவர்களின் தலமை பண்பு க்கான திறன்.
ஆனால் இன்று நடப்பது என்ன.???
சொன்னால் உடனே அனைவருக்கும் கோவம் தான் வருகிறது.
தலமைதத்துவம் இல்லாமலே தலமை பதவியை பல கோடி செலவு செய்து அடைந்த பலனை இன்று தமிழகம் கண்டு வருகிறது.
பதவிக்கு தகுந்த தகுதியையும் வளர்த்து கொள்வது இல்லை.
தகுதிக்கு தகுந்த பதவியிலும் உட்காரவது இல்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் பிரச்சனை.
சுயமாக மக்கள் சிந்திக்க வேண்டும்.
வேதனையான விஷியம்.
பிடி.ஆர் க்கு நடக்கும் நிகழ்வுகள்.
அண்ணா, எம்.ஜி.ஆர்.கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் அமைச்சரவையில் முதல்வர்களை மெத்த அதிகம் படித்த பலர் இருந்தனர்.
அவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்காமல் திறமையை பயன்படுத்தி கொண்டனர்.
இது அவர்களின் தலமை பண்பு க்கான திறன்.
ஆனால் இன்று நடப்பது என்ன.???
சொன்னால் உடனே அனைவருக்கும் கோவம் தான் வருகிறது.
தலமைதத்துவம் இல்லாமலே தலமை பதவியை பல கோடி செலவு செய்து அடைந்த பலனை இன்று தமிழகம் கண்டு வருகிறது.
பதவிக்கு தகுந்த தகுதியையும் வளர்த்து கொள்வது இல்லை.
தகுதிக்கு தகுந்த பதவியிலும் உட்காரவது இல்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் பிரச்சனை.
சுயமாக தலமைகள் சிந்திக்க வேண்டும்.
// ஆனால், அவ்வாறு அப்போது அவர் பேசியதற்கு இந்துத்துவ சக்திகள் பெரும் அதிருப்தி அடைந்தன! அதைத் தொடர்ந்து திமுக தலைமை இனி ஜக்கி தொடர்பாக எதையும் பேசக் கூடாது என பி.டி.ஆருக்கு கடும் எச்சரிக்கை தந்ததது. அதைத் தொடர்ந்து பி.டிஆர். தன்னை வலிந்து கட்டுப்படுத்திக் கொண்டு ஜக்கி விவகாரத்தில் இனி நான் பேச மாட்டேன் எனச் சொல்லி அமைதி காத்தார்.// திராவிடத்திற்கு எனது தத்துவம்? பணம் பதவி மட்டுமே அவர்களுக்கு தேவை…கொள்கை என்பது கொள்ளையடிப்பது மட்டுமே.
இந்த கட்டுரை தான் உங்க கைதுக்கு பிரதான முதன்மை காரணம்….. சும்மா பயமுறுத்த உள்ளே தூக்கி போட்டு தட்டி வைக்க தான் இந்த கைது..என்ன தான் இருந்தாலும் ஸ்டாலின் தான் no 1 என்று கட்டுரையை முடித்து இருந்தால் அவர்கள் மனம் குளிர்ந்து இருப்பர்கள்
பலவாறு இணயதளம் மூலம் முதல்வர் அவர்களுக்கு எடுத்து உரைத்தோம் அவருக்கு என்னநெருக்கடியோ தெரியவில்லை. இந்த மாற்றம்.PT.R எதிரிகளாலும், நண்பர்களாலும். தாக்கப்படுகிறார். இது புரிகிறது | உடன்பிறப்பே! நாடு நலம்பெற நல் அறிஞர்கள். கழகத்திற்கு தேவை ஆட்சியும் நாடும் மே.ன்மையுறும், ஆட்சிக்கு சோதனை வந்தால் இப்போது இருக்கிற காக்கை கூட்டம் பறந்துவிடும். இரண்டு ஆண்டு ஆட்சி
சந்திரசேகரால் கலைக்கப்படது.ெ சென்னையில் pindrop silence ஒரு இடத்தில் கூட போராட்டம் இல்லை TR பாலு மட்டும் மவுண்ட் ரோட்டில் மறியல் செய்தார். அன்று அறிவாலயம் வந்தவர்கள் மொத்தமே 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். பாபநாசம் கணபதி Ex MLA.. பின்நாளில் மயிலாப்பூர் MLA வாகயிருந்தார். பேராசிரியார்| தளபதி இவர்கள் மட்டுமே வந்தனர். நானும் மயிலாடுதுறை முத்துசன்முகம் இருவரும் தளபதியை சந்தித்து என்ன தளபதி சென்னையில் ஒன்றுமே நடக்கலையே’ என்றோம் இங்க இருக்கிறவன் எல்லாம் வியாபாரி கட்சிகாரன் ஏது ?என்றார் அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. PTR திமு.த.வின் ,தளபதியின் சொத்து. 5% ஒட்டு வங்கி அதை உணர்ந்து அவரை அவருடைய பாணியில் பணியாற்ற விடுங்கள்.