சூறையாடப்படும் தமிழக சுகாதாரத் துறை!

-சாவித்திரி கண்ணன்

மா.சுப்பிரமணியம் நல்லவர். ஆனால், அவர் கட்டுப்பாட்டில் தான் சுகாதாரத் துறை உள்ளதா..? என சந்தேகப்படும் அளவுக்கு ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது! வரலாறு காணாத மன உளைச்சலை சந்தித்துள்ள அரசு மருத்துவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவித்து உள்ளனர்.

ஏழை, எளிய மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவர்களுக்கான ஒரே புகலிடம் அரசு மருத்துவமனை தான்! ஆனால். அங்குள்ள அதிகாரிகளுக்கோ இது பணம் பார்க்கும் அமுத சுரபி!எதற்கெடுத்தாலும் காசு,பணம், துட்டு என மருத்துவத் துறை அதிகாரிகள் சுகாதாரத் துறையை சூறையாடி வருகிறார்கள்!  இதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. ‘ஆகா, இப்படி கலந்தாய்வு நடத்துகிறார்களே இனி எல்லாம் நேர்மையாக நடக்கும் போல’ என்று மருத்துவர்கள் மனம் மகிழ்ந்தார்கள்! கலந்தாய்வு நேர்மையாக நடைபெற்றதாக  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் அறிவித்தார்!

ஆனால், உண்மையில் அது நேர்மையாக நடக்கவில்லை. கலந்தாய்வு முடிந்த பிறகு மருத்துவர்கள் தாறுமாறாக தூக்கி அடிக்கப்பட்டு உள்ளனர்!

இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை நம்மிடம் கூறியதாவது! சார், நான் குழந்தைகளுக்கான ஸ்பெசலிஸ்ட்! ஆனால், என்னை தூக்கி காது, மூக்கு தொண்டை பிரிவில் போட்டால் எனக்கு மருத்துவம் பார்க்கத் தெரியாது! அந்த மாதிரி தான் இந்த கலந்தாய்வில் சம்பந்தா, சம்பந்தமில்லாமல் மருத்துவர்களை அவர்களுக்கு பரிச்சியமில்லாத இடங்களுக்கு இடமாறுதல் செய்துள்ளனர். எனில், இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தியதற்கான அர்த்தமே இல்லையே!

ஒரு குறிப்பிட்ட துறையில் அதற்கான சிறப்பு படிப்பு படித்துள்ள வல்லுனர்கள் இருப்பதுதான் நியாயம்.   அப்போது தான் அந்த சிறப்பு மருத்துவரின் சேவை மக்களுக்கு கிடைக்கும். மேலும், அந்த மருத்துவருக்கும் துறை அனுபவம் கிடைக்கும்.  ஆனால், சம்பந்தப்பட்ட துறைக்கான சிறப்பு மருத்துவர்கள் இருந்தும், அவர்களை நியமிக்காமல்  அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறு படிப்பு படித்த  டாக்டர்களை நியமிக்கிறார்கள். இது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை அரசே மீறுவதாக உள்ளது. மேலும், இதனால்  நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால், இந்த இடமாறுதல் கலந்தாய்வில், முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட 25 அரசு மருத்துவர்களை அழைத்துக் கொண்டு, அமைச்சரின் முன்பு கடந்த ஜுன்-22 அன்று ஆஜர்படுத்தி விபரமாக நடந்த முறைகேடுகளை தெரிவித்தோம். அமைச்சர் நாங்கள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனார். உடனே அவர் மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபுவுக்கு போன் செய்து, ”தவறு நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் பாதிக்கப்பட்டு உள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்குங்கள் . இவர்களை நான் தங்களிடத்தில் அனுப்பி வைக்கிறேன்” என தனது சிறப்பு உதவியாளர் வரதராஜனையும் எங்களோடு DME office க்கு அனுப்பி வைத்தார்.

பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் அமைச்சரிடம் முறையிட்ட போது!

அங்கு அமைச்சரின் உதவியாளர் தீவிர விசாரணை நடத்தியதில் 25 மருத்துவர்களுக்கு  அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து, ”இந்த தவறு உடனே சரி செய்யப்பட வேண்டும்” என அமைச்சர் கூறியதை அங்கு மீண்டும் நினைவுபடுத்தினார்.

அமைச்சரே நேரடியாக தலையிட்டதாலும், தவறுகள் நிச்சயமாகக் களையப்படும், தகுதியுள்ள சிறப்பு மருத்துவர்களை அவரருக்கு உரிய இடத்தில் அமர்த்துவோம் உறுதி அளித்ததாலும்,  நாங்கள் நிம்மதியாக திரும்பினோம்.  ஆனால், மேற்படி சம்பவம் நடந்து சுமார் இரண்டரை மாதங்கள் கடந்தும் எந்த மாற்றமும் இல்லை!

முந்தைய ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்த போது பணம் வாங்கிக் கொண்டு சீனியாரிட்டியை பொருட்படுத்தால் போஸ்டிங் போடும் வழக்கம் இருந்தது. அதற்காக இப்போது வரை நாங்கள் நீதிமன்றம் சென்றெல்லாம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இந்த முறைகேடான இடமாறுதல்களால் அரசு மருத்துவமனைகளில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு  தர்மபுரியில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான துறையில்  ஒருவர் கூட அதற்கான மருத்துவர் இல்லை. இருப்பவர்கள் 3 பேருமே அந்த துறைக்கான தகுதி பெற்றவர்கள் இல்லை. இந்தச் சூழலில் அங்கு உள்ள ஒரு காலியிடத்திற்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் உதயபாரதி வர விரும்பினார். ஆனால் காலியாக உள்ள அந்த இடத்தைக் கூட அவருக்குத் தர மறுத்து, அவரை வேலூருக்கு அனுப்பி விட்டார்கள். இதனால், தர்மபுரிக்கு வரும் அத்தனை தலைக்காயம்  மற்றும் விபத்து நோயாளிகளையும் சேலத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதில் நிறைய பேர் பாதி வழியிலேயே மரணித்து விடுகிறார்கள்.

இது ஒரு சின்ன சாம்பிள் தான்! இது தான் தமிழகம் முழுக்க பரவலாக நடந்து கொண்டுள்ளது! இப்படி மக்களுக்கும் பாதிப்பு, மருத்துவர்களுக்கும் பாதிப்பு தரும் முறைகேடுகள் ஏன் தொடர்கின்றன என்பது தான் புரியாத புதிராக உள்ளது” என்றார் டாக்டர் பெருமாள் பிள்ளை!

அமைச்சர் விஜயபாஸ்கர் காலத்தில் தான் சுகாதாரத்துறை ஊழல்மயமானது. அவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு தற்போது செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் உள்ளார். இவரிடமும் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு சென்று சந்தித்து முறையிட்டுவிட்டது. ஆனால், அவரோ தவறுகளைக் களையும் எந்த சிறு முயற்சியைக் கூட இது வரை செய்யவில்லை. இது குறித்து விசாரித்த போது அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறை முறைகேடுகளில் கோலோச்சிய உயர் அதிகாரிகளான நாராயணபாபு, மணிமேகலை, ஜெகன்நாதன் ஆகிய மூவர் கூட்டணியே மீண்டும் தொடர்கிறது!

இவர்களோடு செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் கைகோர்த்துக் கொண்டாரா? அல்லது இவர்களை மீறி எதுவும் செய்ய முடியாமல் திணறுகிறாரா? என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியனை பொறுத்த அளவில் அவர் கையறு நிலையில் தான் உள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஏற்கனவே தமிழகத்தின் அரசு மருத்துவர்கள் 12 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தரப்படாமல் உள்ளதற்காக மன உளைச்சலில் உள்ளனர். போதாக்குறைக்கு பதவி உயர்வு, இடமாறுதல் என அனைத்துக்கும் பணம் இருந்தால் தான் எதுவும் நடக்கும் என்ற சூழல் நிலவுவதால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.  மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு அந்தந்த துறைக்கான மருத்துவர்களை நியமிக்க மறுத்து அதிகார ஆட்டம் ஆடுவதும், தொடர்ந்து அரசு மருத்துவர்களை குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கி சுரண்டுவதும் உடனே முடிவுக்கு வர வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time