சாவர்க்கரின் கருணை மனு!

எ.ஜி.நூராணி

சாவர்க்கரை வீர புருஷராக சித்தரித்தும், அவரை காந்திக்கு மாற்றாக தேசத் தந்தையாக்கவும் முயல்கிறது பாஜக! இவர் ‘வீர சவார்க்கரா?’ அல்லது ‘சோர சவார்க்கரா?’ என்பதை ‘பிரண்ட் லைன்’ ஆங்கில ஏட்டில் வெளியான இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது!

சாவர்க்கரைப் பொறுத்தமட்டில், வெளியாகியுள்ள  எல்லாத் தரவுகளும் அவரது  வஞ்சகத்தையும், விஷத்தையும், கொலை செய்வதற்கான அவரது போதையையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

1966ஆம் ஆண்டு சாவர்க்கர் இறந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் உடன் பிறந்தவரும், காந்தியைக் கொல்ல நடந்த சதியில் குற்றம் சாட்டப்பட்டவருமான கோபால் கோட்ஸே வெளியிட்ட ‘காந்தி ஹத்யா அணி மீ’ ( காந்தியைக் கொன்றவரும், நானும்) என்கிற நூலில், சாவர்க்கருக்கும் நாதுராமுக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். காந்தியைக் கொல்ல நிகழ்த்திய முயற்சியில் இருவரும் பெரும் வலியில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இவ்வழக்கில் அப்ரூவராக இருந்த பாட்ஜேவின் சாட்சி முற்றிலும் உண்மையானதாக இருந்த போதும், தனிப்பட்ட உறுதி மொழியே சட்டத்திற்குப் போதுமானதாக இருந்ததால், செசன்ஸ் நீதிபதியால் சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே எல் கபூர் காந்தியின் கொலை பற்றி வெளியிட்ட அறிக்கையில் இதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சாவர்க்கரும் அவருடைய கூட்டாளிகளும் செய்த சதி என்று இதை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராமச்சந்திர கஸாரும், அவரது செயலர் கஜானன் விஷ்ணு தம்லியும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவில்லை என்றாலும், சாவர்க்கரின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் நீதிபதி கபூரின் முன்னிலையில் இதனைத் தெரிவித்துள்ளனர். ஆனால், நீதிமன்ற சாட்சிகளாக இவை பதிவாகவில்லை.

ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசின் கல்வித்துறை 1975- ஆம் ஆண்டு ‘அந்தமான் தண்டனைகள்’ என்கிற தலைப்பில் ஒரு நூலை  வெளியிட்டது. சாதிப் பிரிவினைக்குப் பெயர்போன ஆர் சி மஜூம்தார் என்கிற வரலாற்று ஆசிரியர் இந்நூலை எழுதியிருந்தார். சாவர்க்கருக்கு ஆதரவாகவே இந்நூல் எழுதப்பட்டது எனினும், சங்கப்பரிவாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் சாவர்க்கரின் தொடர் மன்னிப்புகளை இந்நூல் முழுவதும் தோலுரித்துக் காட்டிற்று.

நாசிக் மாவட்ட ஆட்சியரான எ டி எம் ஜாக்சன் என்பவரைக் கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சாவர்க்கர் 1911- ஆம் ஆண்டு அந்தமானில் சிறை வைக்கப்பட்டார். இந்த ஒரு வழக்கில் மட்டும் தான் அவர் தண்டிக்கப்பட்டார். 1909 – ஆம் ஆண்டு கர்சன்- வைலி வழக்கு, 1931 – ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்னெஸ்ட் ஹட்ஸன் என்ற பாம்பாய் மாற்று ஆளுநரை கொல்ல செய்யப்பட்ட முயற்சி, ஜனவரி -30, 1948 – இல் நிகழ்ந்த காந்தி படுகொலை ஆகிய மூன்று வழக்குகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த ஒவ்வொரு வழக்கிலும் கொலைகாரர்களை சாவர்க்கரே தூண்டிவிட்டார்.

1911 முதல் 1950 வரை, நான்கு பத்தாண்டுகளில் சாவர்க்கர் கேட்ட மன்னிப்புகள் இங்கே பட்டியல் இடப்படுகின்றன. இந்த ‘சாதனைகளுக்காகத்தான்’ இவரது உருவப்படம், இவரது அரசியல் வாரிசுகளால் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கக் கூடும்.

#  1911- ஆம் ஆண்டு ஜூலை 4 – இல் சாவர்க்கர் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதத்திற்குள் தனது கருணை மனுவை சமர்ப்பித்தார்.

#  1913 – ஆம் ஆண்டு அக்டோபரில், வைசிராயின் செயற்குழுவில் உறுப்பினராக இருந்த சர் ரெஜினோல்ட் கிராடக் சிறைக்கு வருகை தந்தபோது, மற்ற கைதிகளோடு சாவர்க்கரையும் சந்தித்தார். 1913, நவம்பர் 23- இல் அவர் எழுதிய குறிப்பில், சாவர்க்கரின் கருணை மனு கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாவர்க்கர் தனது இரண்டாவது கருணை மனுவை நவம்பர் 14, 1913- இல் சமர்ப்பித்தார். அதில் ‘அரசு விரும்பும் எந்தப் பொறுப்பில் இருந்தும் தொண்டு செய்ய தாம் சித்தமாக இருப்பதாக’ அவர் குறிப்பிட்டிருந்தார்.

#  1920- ஆம் ஆண்டு, மார்ச் 22- இல் சாவர்க்கரின் ஆதரவாளரான ஜி எஸ் கோபர்டே என்பவர், இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் முன்பாக, பின்வரும் கேள்வியை வைத்தார்: ‘1915 மற்றும் 1918- ஆம் ஆண்டுகளில் சாவர்க்கரும் அவரது சகோதரரும் அரசுக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அரசுக்காகப் போரிடவும் சம்மதம் தெரிவித்திருந்தனர். அல்லவா?’ இக்கேள்விக்கு பதிலாக உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் பின்வருமாறு பதில் அளித்திருந்தார்: 1914- லும், 1918- லும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் போர்ட்பிளேயர் சூப்பிரென்டென்ட்  மூலமாக இரண்டு மனுக்களை அளித்திருந்தார். முதல் மனுவில், அனைத்து சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், அரசுக்கு ஆதரவாக எந்தப்பொறுப்பில் இருந்தும் போரிடத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

# எழுத்தாளரின் நூலிலிருந்து விடுபட்ட இத்தரவுகள், முதல் முறையாக மார்ச் 30, 1920- இல் வெளியிடப்பட்டிருக்கின்றன. ‘காலதாமதம் ஆவதற்கும் முன்பாக இறுதி வாய்ப்பாகக் கருதி’ அவர் கெஞ்சினார். வயிற்றுப்போக்கு நோயிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே சாவர்க்கர் நலமடைந்தார் என்பதை வின்சென்ட் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்வு அபாய கட்டத்தைத் தாண்டி இருந்தது. தன்னுடன் சிறையில் இருந்த சிறைவாசிகளான அரபிந்தகோஷின் உடன்பிறந்தவரான பாரின் மற்றும் மற்றவர்களது வழக்குகளைக் காரணம் காட்டி, சாவர்க்கர் தன்னைத்தானே சிறுமைப்படுத்திக்கொண்டார். போர்ட் பிளேயரில் இருந்தபோது தீவிரமான சதித்திட்டங்களை தீட்டியதாக அவர்கள் சந்தேகிக்கப்பட்டனர். ஆனால் சாவர்க்கர் விசுவாசியாக இருந்தார். அவர் கூறுகிறார்: ‘இதுவரை நான் புரட்சியை நம்பி வந்தேன்.

ஆனால், குரோபாட்ஸின் மற்றும் டால்ஸ்டாய் போன்றவர்கள் சார்ந்திருந்த அமைதியான, தத்துவம் சார்ந்த ஆட்சிமுறைக்கு நான் பங்களிக்கவில்லை. ஆனால், அரசமைப்பு சட்டத்துக்கு கீழ்ப்படிந்து, அதன் பக்கம் நிற்கும் எனது உறுதியான நோக்கத்தை, எனது மனுக்களில் (1914, 1918)  நான் அரசுக்குத் தெரிவித்திருந்தேன். அரசின் பக்கம் நிற்கும் எனது நம்பிக்கையை பொது வெளியில் நான் வெளிப்படையாகவே கூறியுள்ளேன்’. மேலும், அவர் ‘பிரிட்டிஷ் அரசின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு, அதன் சட்டப் பாதையை வலுப்படுத்தும் எனது நேர்மையான நோக்கத்தை நான் வெளிப்படுத்தினேன்’ என்றும் கூறியிருந்தார்.

சாவர்க்கர் இறுதியாக இப்படி குறிப்பிடுகிறார்: ‘நானும் எனது    உடன்பிறந்தவரும் அரசு குறிப்பிடும் நாள் வரை எவ்விதமான அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். நாங்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரே பகுதியில் தங்கியிருந்து, எங்களுடைய எல்லா நடத்தைகளையும், குறிப்பிடும் நாள் வரை, காவல்துறைக்கு தெரிவிப்போம் என உறுதிகூறுகிறேன்’

#  ஏப்ரல் 7, 1995 – ஆம் ஆண்டு, Frontline – இல் வெளியிடப்பட்ட, 1924 – ஆம் ஆண்டு சாவர்க்கர் கொடுத்த மன்னிப்பு உட்பட எல்லா மன்னிப்புகளிலும் அவற்றை தரம் தாழ்ந்தவையாகக் காட்டும் தன்மை பின்பற்றப்பட்டிருக்கிறது.

#   1948, பிப்ரவரி 22- இல், பம்பாய் காவல்துறை கமிஷனருக்கு கொடுத்த வாக்குறுதியில், காந்தி கொலையிலிருந்து திசை திருப்ப, பின்வருமாறு அவர் கூறினார்: ‘அரசுக்குத் தேவைப்படும் நாள் வரை, எல்லா அரசியல், சமூக, பொது நிகழ்வுகளில் இருந்தும் நான் விலகி இருக்கிறேன்’.

#  1950 – ஆம் ஆண்டு ஜூலை 13- இல், பம்பாய் உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி எம் சி சாக்ளா மற்றும் நீதிபதி பி பி கஜேந்திரசாட்கர்      ஆகியோருக்கு அளித்த வாக்குறுதியில் அவர் பின்வருமாறு கூறுகிறார்:

‘எவ்வித அரசியல் நடவடிக்கையிலும் கலந்துகொள்ளாது, பம்பாயில் உள்ள எனது வீட்டிலேயே ஓராண்டுக்கு இருப்பேன்’ என்று கூறியதோடு, இந்து மகாசபை தலைமைப் பதவியில் இருந்தும் விலகினார்.

1939 – ஆம் ஆண்டு அக்டோபர் 9- அன்று, சாவர்க்கருக்கும் வைசிராய் லார்ட் லின்லித்கௌவிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் குறிப்பை, மார்சியா கசோலரி, எகனாமிக் பொலிடிகல் வீக்லியில், 2000- ஆவது ஆண்டு ஜனவரி  22-ல் மீண்டும் வெளியிட்டார். அதில் சாவர்க்கர் குறிப்பிடுகிறார்: ‘காந்திக்கும் காங்கிரஸிற்கும் எதிராக நாமிருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’.

(நன்றி:  எ ஜி நூராணியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாள் Frontline – ல் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 17, 2022 தேதியிட்ட Frontline -ல் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. )

தமிழில்:  முனைவர். தயாநிதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time