வன்முறையால் வங்கத்தில் வாகை சூடுமா பாஜக?

-ச.அருணாசலம்

ஒருபுறம் அமலாக்கத் துறை  மற்றும் வருமான வரி அதிகாரிகளை ஆட்சியாளர்கள் மீது ஏவுவது! மறுபுறம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு சட்டம், ஒழுங்கு  கெட்டுவிட்டதாக அலறுவது என பாஜக பல்முனைத் தாக்குதலை மேற்கு வங்க திரிணமுள் அரசு மீது நடத்திக் கொண்டுள்ளது ஒன்றிய பாஜக!

ஊழலை எதிர்த்து ஊர்வலம் என்ற பெயரில், ஊதாரித்தனமாக பணத்தை அள்ளி இறைத்து கூட்டம் சேர்த்ததோடு, ‘மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம்’ என்ற கெத்தில் மேற்கு வங்க போலீசாரைப் பின்னி எடுத்து, வாகனங்களுக்கு தீ வைத்து ஓட, ஓட விரட்டியுள்ளனர் பாஜகவினர்.

”சுமார் இரண்டு லட்சம் பேரை திரட்டி படை நடத்தப் போகிறோம்” என மார்தட்டிக் கொண்ட பாஜகவினர், சுமார் ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்து, ஆட்களை அழைத்து வந்த போதும் கூட்டம் என்னவோ 20,000 த்தை கூட தாண்டவில்லை என ஊடகங்கள் எழுதியுள்ளன! ”நிறைய சினிமா நடிகர், நடிகைகள் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்” என பாஜகவினர் தெரிவித்து இருந்தனர். இதற்காக பாஜக பத்துகோடி செலவழித்தாக வெட்கமின்றி பீற்றிக் கொண்டனர்! ஆனால், போதுமான தொண்டர்களும், முக்கிய நடிகர், நடிகைகளும் வராமல் ஏன் ‘எஸ்கேப்’ ஆனார்கள்..? எனத் தெரியவில்லை!

பாஜவின் பேரணியானது மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டு ஓரிடத்தில் ஐக்கியமாகும்படி திட்டமிடப்பட்டு இருந்ததால், எல்லா பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெருத்த சிரமத்திற்கு உள்ளாயினர். மம்தா அரசு நினைத்திருந்தால் ”ஓரிடத்தில் இருந்து வருவதற்கு மட்டும் தான் அனுமதி” என சொல்லி இருக்கலாம். ஆனால், அனைத்து ஒத்துழைப்பும், அனுசரணையும் காவல்துறையால் காட்டப்பட்டது! ஆயினும், துரதிர்ஷ்டவசமாக கலவரம் வெடித்துவிட்டது.

செப்டம்பர் 13ந் தேதி அனைத்து டிவி சேனல்களும் மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் நடந்த பா ஜ க பேரணி பற்றியும், அதில் அரங்கேறிய வன்முறை பற்றியும் சலிக்கும்வரை ஒளிபரப்பு செய்தன.

‘நபண்ணா அபிஜான்’ என்றழைக்கப்பட்ட ஊழல் எதிப்பு பேரணி என்ற பொருள் கொண்ட பாஜகவின் பேரணி, மாநில அரசின் தலைமைச்செயலகத்தை நோக்கிய  பயணமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேற்கு வங்க அரசின் ஊழலுக்கும், ஊதாரிதனத்திற்கும் எதிராக நடைபெற்றது. இதில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது, காவலர் உட்பட பலர் தாக்கப்பட்டனர், படுகாயமடைந்தனர். வாகனங்கள்-குறிப்பாக காவல்துறை வாகனங்கள் – தீயிடப்பட்டன. கண்ணீர் புகை குண்டுகள் சுடப்பட்டன, தண்ணீர் வேகப்பீச்சும் நடந்தேறியது. பல போலீசாரின் மண்டை உடைந்தது.

பாரதிய ஜனதா கட்சியினர் ” அராஜகம், போலீஸ் அத்துமீறல், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் காட்டாட்சி நடைபெறுகிறது ” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர் . இது தேசீய ஊடகங்களில் -கோடி மீடியா – என்று கேலியாக அழைக்கப்படும் ஊடகங்களில்  இடைவிடாமல் நாள் முழுவதும் ஒளிபரப்பப் பட்டன.

திரிணாமுல் அரசுக்கு வேண்டிய ஊடகங்கள் ஒரு சில போலீஸ் உதவி கமிஷனர் ஆர்ப்பாட்டக்கார்ர்களால் தடியால் தாக்கப்படுவதையும்,  காவலர்வாகனங்கள் சங்கிகளால் தீயிட்டு கொளுத்தப்படுவதையும்  ஒளி பரப்பினர்.

“ஊழல் ,காட்டாட்சி, அரசு அராஜகம் ” என்று சங்கிகள் குரலை எழுப்பி உள்ளனர். பதிலுக்கு மம்தாவும் திரிணாமுல் கட்சியினரும் காவல்துறைக்கு பாராட்டும் – அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்ததற்காக வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். சங்கிகள் அடிப்படையில் வன்முறையாளர்களென்றும்  தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக ஊழலை சாக்காக வைத்து கலவரத்தையும் குழப்பத்தையும் தோற்றுவிக்க முயல்கிறது என்று திரிணமுள் கட்சியினர் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த மோதலிலும் – பரஸ்பர குற்றச்சாட்டுகளிலும் – பல உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன.

ஜனநாயக உரிமைகளை காலில் இட்டு மிதித்து “புல் டோசர்” ஆட்சி பல மாநிலங்களில்  நடத்தும் பாஜக கூச்சநாச்சமில்லாமல் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை குறை சொல்வது வேடிக்கையா அல்லது விபரீத அணுகுமுறையா?

ஊழலில் திளைத்து பழகிப்போன திரிணாமுல் கட்சியோ, ஒன்றுமே நடக்காதது போல் உத்தம வேஷம் போடுவதும், ”ஒன்றிய அரசின் பழி வாங்கும் செயலே” என்று பதுங்குவதும், புதிராக உள்ளது.

ஐந்நூறு நாட்களுக்கும் மேலாக ஏறத்தாழ 6,000 இளைஞர்கள் – மேற்கு வங்க பள்ளிகள் சர்வீஸ் கமிஷன் நடத்திய மாநில பணியெடுப்பு தேர்வில் முதல்நிலை பெற்றவர்கள் – தங்களுக்கு “வேலை வேண்டும் , நியாயம் வேண்டும்” என்று போராடினார்கள்.  ஆசிரியர் பணியிடங்களை பணத்திற்கு விற்பனை செய்கின்ற ம்மதா அரசின் ஊழலுக்கு எதிராக போராட்டமாகவும் இது பார்க்கப்பட்டது.

அதனால், மேற்கு வங்க அரசும், காவல்துறையும் , திரிணாமுல் கட்சியினரும் இந்த போராட்டத்தை முறியடிக்க “தலை கீழாக” நின்றபோதும் போராட்டம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதி மன்றம் (நீதியரசர் அபிஜித் கங்குலி) ஆசிரியர் பணியெடுப்பில் மேற்குவங்க அரசின் ஊழலை விசாரிக்க உத்தரவிட்டது கவனத்திற்கு உரியதாகும்.

இதை தொடர்ந்த விசாரணையில் பார்த்தா சாட்டர்ஜீ என்ற மிக மூத்த மேற்கு வங்க அமைச்சரும் மம்தாவின் வலது கரமாகவும்  இருந்தவரை சிபிஐ கைது செய்தனர்! அதை தொடர்ந்து அவரது கூட்டாளி அற்பித்தா சாட்டர்ஜி கட்டு கட்டான பணங்களுடன் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதும! இவை நாட்டையும், நல்லோரையும் உலுக்கியது.

திரிணாமுல் தலைமையோ மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தது. ‘ஒன்றிய அரசால் பழி வாங்கப்படும் பெண்சிங்கம் மம்தா’ என்ற பிம்பம் உடையத் தொடங்கியது.

எதிர்கட்சிகளை சின்னாபின்னமாக்குவதில் நாகரீகம், அரசியல் மாண்பு,ஜனநாயக உரிமை சட்டமுறை ஆகியவற்றை புறந்தள்ளி எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் மோடி அரசிற்கு, இது வேரில் பழுத்த பலாவாக காட்சியளித்ததில் வியப்பில்லை!

இது ம்மதாவை “வழிக்கு” கொண்டு வரவும், வாயடைக்க வைக்கவும் மோடிக்கு பெரிதும் உதவும், உதவுகிறது. இதில், ஊடகங்கள் தங்களது நடுநிலை மறந்து ஒன்றிய அரசின் சேவகர்களாக காவடியெடுப்பவர்களாக மாறி உள்ளதுதான் வேதனையானது.

பாஜகட்சியினர் ஆளும் மாநிலங்களில் நடக்கும் இமாலய ஊழல்களை ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமல்ல , அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர்களை கொச்சை படுத்துவதில் முன்னணியில் உள்ளன, ஊடகங்கள் .

ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பும் ஏனைய எதிர்கட்சிகள் செயலையும் இருட்டடிப்பு செய்கின்றன, இந்த விலைபோன ஊடகங்கள்!

உதாரணமாக, இதே மேற்கு வங்க அரசின் ஆசிரியர் பணியெடுப்பு ஊழலையும், ம்மதா கட்சினரின் அடாவடியையும் எதிர்த்து கடந்த செப்டம்பர் 1 (1/09/2022) அன்று மார்க்சிஸ்ட் கட்சிநடத்திய “சட்ட மறுப்பு ” போராட்டத்தையும் அதில் போலீஸ் அராஜகத்தால் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் படுகாயமடைந்ததையும் எந்த ஊடகமும் பெரிதுபடுத்தவில்லை. அது “கவனிக்கதக்க செய்தியாக” ஊடகங்களில் வரவில்லை, சமூக வலைதளங்களிலும் பேசப்படவில்லை.

இங்கு செய்திகளும் நடப்புகளும் இயல்பாக வெளிவருவதில்லை, அவை பல நோக்கங்களுக்காக -வணிக நோக்கங்கள், அரசியல் நோக்கங்கள்,- உருப்பெற்று உலாவரத் தொடங்குகின்றன.

இதில் ஊடக அறம் மட்டுமல்ல, சமூக அறமும் புறந்தள்ளப்படுகிறது. கருத்துருவாக்கங்களும், கட்டமைப்புகளும் இயல்பாக உருப்பெருவதில்லை, இயல்பாக வளர்வதில்லை!

அவை தீர்மானிக்கப்படுகின்றன ஆளுபவர்களால். ஆளுவோர் பெரிதும் சிறிதுமாக மோதும் பொழுது உண்மைகள் காலாவதி ஆகின்றன. ஆனால் இம்மோதலில் வெற்றி பெறுவதற்கும் சிறிதளாவாவது உண்மை தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

உண்மையுடன் நியாயம் இணைந்தால் தான் வெற்றி என்பது விதியாக இருக்கலாம், எவ்வளவு உண்மை என்பதை யார் தீர்மானிக்கின்றனர்?

மத வெறியின் பிடியில் இருந்து மக்களை மீட்க, ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை வேரறுக்க அரசியல் சாசனத்தையும் கூட்டாட்சி முறைகளையும் மீட்டெடுக்க முனைவோர் சொல்லிலும் செயலிலும் நியாயவான்களாக இருந்தால் மட்டுமே, மக்களின் நம்பிக்கையை பெற முடியும், வெற்றி பெற முடியும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time