நுரையீரலைப் பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன?

-எம்.மரிய பெல்சின்

மூச்சுத் திணறல், வறட்டு இருமல், சளித் தொல்லை போன்றவை சர்வ சாதரணமாக தற்போது எல்லோரையும் அலைக்கழிக்கின்றன! நுரையீரல் பலம் இழந்தால் கொரானாவும் தொற்ற வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கையான வழிமுறைகளில் நம் நுரையீரலை எப்படி பாதுகாப்பது எனப் பார்க்கலாம்.

மனிதன் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரும் சிறப்பாக செயல்பட உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் மற்றும் மனம் சரியாக, நன்றாகச் செயல்பட நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நுரையீரல் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால், உடற்பயிற்சி தேவைதான் என்றாலும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நாம் உட்கொள்ளும் பல்வேறு உணவுகள் நுரையீரலில் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்வதுடன் பாதிப்புகளை சரி செய்யவும் உதவுகின்றன. அது பற்றி பார்ப்போம்.

கொரோனாவுக்குப் பிறகு நோய் பற்றிய புரிதல் அதிகரித்திருக்கிறது. அதே வேளையில் நோய்களும் அதிகரித்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவை இன்னும் விரட்ட முடியவில்லை என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற விவாதத்துக்குள் நாம் போக விரும்பவில்லை என்றாலும், கொரோனா கால கட்டத்தில் நுரையீரலில் வந்த பாதிப்புகள் பல உயிர்களை பறித்தது உண்மை. நுரையீரலில் சளி அடைத்துக் கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் மற்றும் பல பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் மருத்துவ உலகம் திணறிக் கொண்டிருந்தது. அத்தகைய சூழலில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் அந்த பாதிப்புகளிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டது உண்மை!

நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படை தத்துவம் போதும். மழை மற்றும் குளிர்காலங்களில் தூதுவளை இலையை அரைத்து துவையல் செய்து சாப்பிடுவது, தூதுவளை ரசம் அருந்துவது நல்ல தீர்வைத் தரும். தொண்டையில் தொடங்கி நுரையீரல் வரையிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் தூதுவளை நல்லது. உடலில் சூட்டினை அதிகரிக்கும் என்பதால் சளி தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்போது அடிக்கடி தூதுவளை சேர்த்துக்கொள்ளலாம். வறட்டு இருமல், இரைப்பிருமல் இருப்பவர்கள் தூதுவளை இலையுடன் சிறிய வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய்யில் வதக்கி மூன்று நாட்கள் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். நீடித்த பிரச்சினைகளுக்கு 21 நாட்கள் சாப்பிடுவது நல்லது.

சுண்டைக்காய் வற்றலும் கூட நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது. கசப்புத் தன்மை நிறைந்திருப்பதால் நம்மில் பலர் இந்த சுண்டை வற்றலை விரும்பிச் சாப்பிடுவதில்லை. மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் சுண்டைக்காயின் மருத்துவ குணம் பற்றி அறிந்தவர்கள் அதை வெறுப்பதில்லை. சிலர் பச்சை சுண்டைக்காயை நசுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்த மோரில் ஊற வைத்து காய வைத்து நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிடுவார்கள். இது நுரையீரலில் சளி சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

வெறும் சுண்டைக்காயை சாப்பிட பிடிக்காதவர்கள் மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலையுடன் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி இட்லிக்கு இணை உணவாக சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் மதியம் மற்றும் இரவு உணவின்போதும் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டை வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்த்திருப்பதால் இட்லி பொடி செய்யும்போது உப்பு சேர்க்கத் தேவையில்லை.

நாயுருவி விதையை  நன்றாகக் காய வைத்துப் பொடியாக்கி தேன் அல்லது பசுநெய் சேர்த்துச் சாப்பிட்டால், நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு தரும். அதே போல் முருங்கை விதையும்கூட மிகச் சிறப்பாக வேலை செய்யும். காய்ந்த முருங்கை விதையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் எடுத்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். முருங்கை விதையை முதலில் சாப்பிடும்போது கசப்புத் தன்மையும் தொடர்ந்து துவர்ப்பு மற்றும் இனிப்புத் தன்மை வெளிப்படும். மாறுபட்ட இந்தச் சுவை காரணமாக பலர் இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், கொரோனா பாதித்த பலர் சளித் தொல்லைக்கு வேறு சில மருந்துகள் சாப்பிடும் போது முருங்கை விதையையும் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் தொடர்பான கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆரஞ்சுப்பழம் மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழத்தைப் போல அதன் தோலினை காய வைத்து தேநீர் செய்து குடிப்பதன் மூலம் பல்வேறு நோய் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சுத் தோலானது நுரையீரல் புற்று உள்ளிட்ட மற்ற புற்றுநோய்கள் வராமலும் தடுக்கும். ஆகவே, இனிமேல் ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்தி காய வைத்துப் பொடியாகவோ, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். காலை அல்லது மாலை வேளைகளில் வித்தியாசமான ஒரு தேநீர் தயாரித்து அருந்துங்கள். நோய்கள்… குறிப்பாக இன்றைக்கு எல்லோரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புற்றுநோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சுத் தோலை சிறிதளவுத் தண்ணீரில் கொதிக்க வைக்கும் போது, கூடவே ஓரிரு கிராம்பும், ஏலக்காயும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வெல்லம் அல்லது நல்ல நாட்டு சக்கரை சேர்த்து இளஞ் சூட்டில் அருந்தலாம்! இது நல்ல நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானமும் கூட!

ஆரஞ்சு மட்டுமல்ல, ஆப்பிள் பழத்தின் தோலும்கூட சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். குறிப்பாக நுரையீரல் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால், ஆப்பிள் பழத்தின் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. ஆனால், இன்றைக்கு ஆப்பிள் பழத்தின் மீது பூச்சி மருந்து தெளிக்கப்பட்டும், மெழுகு தடவியும் விற்பனைக்கு வருவதால்  எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. நோய்களுக்கு மருந்தாகும் இதுபோன்ற பழங்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவையா என்பதை உறுதிசெய்து பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

வெள்ளரிக்காய், கத்தரிக்காய் போன்றவற்றை தோலுடன் சேர்த்துச் சாப்பிடும்போது அவை நுரையீரலை பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன.

இஞ்சியை தோல் சீவி நசுக்கி நீர் விட்டு கொதிக்கவைத்து அதனுடன் ஏலக்காய், பசும்பால் சேர்த்து பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் நுரையீரலுக்கு வலுவூட்டும். பொதுவாக மழைக் காலங்களில் அவ்வப்போது இதை தயாரித்து அருந்துவது நல்லது. இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பு. காலையில் இந்தச் சுவைநீரை அருந்துவதைப்போல மாலை வேளையில் சுக்கு மல்லி தேநீர் அருந்தலாம்.

சுக்கு, மல்லி, மிளகு போன்றவற்றைப் பொடியாக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் நுரையீரலில் பாதிப்புகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். இதுபோன்று மிக மிக எளிதான உணவுகளையும், பானங்களையும் தயாரித்து நுரையீரலைப் பாதுகாக்கலாம். எளிய மூச்சுப் பயிற்சிகள் செய்வதும், ஆழ்ந்து மூச்சு இழுத்து சுவாசிப்பதும் நுரையீரல் வலுப் பெற உதவும். நோய் வரும் முன் பாதுகாக்கவும், வந்தபின் பாதிப்புகளிலிருந்து மீட்கவும் இவை உதவும்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிகையாளர், இயற்கை வழி உடல் நல ஆலோசகர்! உணவின் வழி நோய் தீர்ப்பவர்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time