எய்ம்ஸ் போன்று சித்தாவிற்கு AIIS எப்போது?

-விஜய் விக்கிரமன்

எட்டு AIIMS கள் உள்ளன! ஆயூர்வேதாவிற்கும் இரண்டு அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ளன! ஆனால், சித்த மருத்துவத்திற்கு மட்டும் ‘எய்ம்ஸ்’ போன்றதொரு அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனத்தின் தேவை இருந்தும், நடைமுறைக்கு வராமல் தள்ளிப் போவதன் காரணம் என்ன ?

இரு வாரங்களுக்கு முன் (செப்டம்பர்-7) டெல்லி சென்றிருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் சித்த மருத்துவம் சார்ந்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார் .

ஊடகங்களிலும்,  மக்களிடமும் அது போதுமான கவனம் பெறாமல் போனதாகவே தெரிகிறது!

ஒன்றிய சுகாதாரத்துறை  அமைச்சர் மற்றும் ஆயுஸ் அமைச்சர்களை சந்தித்து சித்த மருத்துவம் தொடர்பாக மா. சுப்பிரமணியம் முன்வைத்த  மிக முக்கிய கோரிக்கையானது  “தமிழகத்திற்கு” எய்ம்ஸ்” போன்ற சித்த மருத்துவமனை வேண்டும் “என்பது.

எய்ம்ஸ் போன்ற சித்த மருத்துவமனை என்பது, All India Institute of  medical science [AIIMS], All India Institute of Ayurveda [AIIA], போன்று, All India Institute of Siddha [ AIIS]  வை குறிக்கும்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் 1952 ல் டெல்லியில் முதல் AIIMS   மருத்துவமனை முறை துவங்கப்பட்டது,  இதன் நோக்கம் மருத்துவ கல்வியிலும்,  உயராய்வு மருத்துவர் படிப்புகளிலும்,  மருத்துவ ஆராய்ச்சிகளிலும்  இந்தியா தன்னிறைவு அடைவதே .

அதன்பின் இந்தியா முழுமைக்கும் 8 AIIMS   மருத்துவமனைகள்   பெரிய அளவில் நிதி ஒதுக்கி அமைக்கப்பட்டன! மதுரையில் ஒன்று விரைவில் அமைய உள்ளது .

ஒன்றிய ஆயுஸ் அமைச்சகத்தால் AIIMS   மருத்துவ நிறுவனம்  போல,  ஆயுர்வேதத்திற்கு  All India Institute of Ayurveda[ AIIA ] அமைய  ஒன்றிய பாஜக அரசால்   500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி 2017  துவக்கப்பட்டது. அதன்படி பல பணிகள் நடந்துள்ளன!

அப்போது அனைத்து இந்திய முறை மருத்துவத்திற்கும் இதேபோல் மருத்துவமனை நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

AIIA   மருத்துவமனையானது ஆயுர்வேதத்தில் 22 துறைகளைக் கொண்ட PG\ Phd \ MS   போன்ற உயர் படிப்புகளையும்,  மருத்துவ ஆய்வுகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 250  கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதன் மூலம்  ஹரியானா, உத்தரப் பிரதேச மக்களுக்கும் சிறப்பான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது .

அகில இந்திய ஆயூர்வேத கல்வி நிறுவன மாதிரி கட்டிடத்தை பார்வையிடும் மோடி!

தற்பொழுது இரண்டாவது AIIA  ஆயுர்வேத மருத்துவமனை கோவாவில் விரைவில் அமைய உள்ளது.கோவா போன்ற சிறிய மாநிலம் தொடர்ந்து ஒன்றிய ஆயுஸ் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து  அதில் வெற்றி பெற்றுள்ளது.

இதேபோன்று சித்த மருத்துவத்திற்கும் AIIS [  all India Institute of Siddha ]  அமைப்பதற்கு ஒன்றிய  ஆயுஸ் அமைச்சகத்திடம்  திட்டம் உள்ளது.

இதனைக் கேட்டு பெற தமிழக  அரசும், தமிழக MP  எம்பிக்களும்  தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

All India Institute of Siddha[ AIIS ]  தமிழகத்தில் அமையும் பட்சத்தில் மிக சிறப்பான சித்த மருத்துவ சேவையை தமிழக மக்கள் பெற முடியும்.  அதுமட்டுமன்றி சித்தமருத்துவ உயர் படிப்புகள்,  சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும்  உலக தரத்துடன் மேற்கொள்ளப்படும்.,

*  புற்றுநோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு

* தோல் நோய்களுக்கான சித்த ருத்துவஆய்வு

* சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு

* பல புதிய வைரஸ் காய்ச்சலுக்கான சித்த மருத்துவ ஆய்வு

* பெண்கள் மற்றும் குழந்தை பேரின்மை காண சித்த மருத்துவ ஆய்வு

* வர்ம மருத்துவம் மற்றும் ஒடிவு & முறிவுக்கான சித்த மருத்துவ ஆய்வு

* சிறுநீரக நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு

* வளரிளம் குழந்தைகளுக்கான சித்த மருத்துவ  ஆய்வு

*  முதியோர் நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு.

போன்ற பல சித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றிற்கு உலகத் தரத்திலான சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும்  இந்த AIIS  மருத்துவமனையால் முடியும்.

*  இதன் மூலம் உலகத்  தமிழர்கள் தீராத பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவம் வேண்டி தமிழகம்  வருவார்கள்! அதன்மூலம் தமிழகத்தின் மருத்துவச் சுற்றுலா அதிகரிக்கும்.

AIIS [ All India Institute of Siddha]   தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் அமையும் பட்சத்தில் அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் சிறப்பாக பயன்படும்.

ஏற்கனவே, திருச்சி தஞ்சை இடையே அமையவேண்டிய AIIMS  மருத்துவமனையானது மதுரைக்கு மாற்றப்பட்டது.

அப்போது AIIMS  மருத்துவமனை கட்ட  கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் வசம் உள்ளது அதனைAIIS  சித்த மருத்துவமனை கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கினாலே போதுமானது. மற்ற அனைத்து செலவுகளையும் ஒன்றிய அரசே  ஏற்றுக்கொள்கிறது.

டெல்லியில் உள்ள AIIA  ஆயுர்வேத மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 250  கோடிக்கு மேல் ஒன்றிய அரசு  ஒதுக்கி மருத்துவ செலவு செய்கிறது என்பதனையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு செய்ய வேண்டியன;

* தமிழக அரசு ஒன்றிய சுகாதார ஆயுஸ் அமைச்சகத்திடம் AIIS [  All India Institute of Siddha ]   திட்டத்தினை  கேட்டுப் பெற வேண்டும்.

*  ஆண்டுக்கு 2000  கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படும் ஆயுஸ் அமைச்சகத்திடம் இருந்து தமிழகத்தின் உரிய பங்கினை  தமிழக அரசு  இத்திட்டத்தின் மூலம் பெறுவதற்கு முயல வேண்டும்.

*  அதற்கான முயற்சியை தமிழக MP  கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

*   தமிழகத்தின் மையப்பகுதியில்  தஞ்சை திருச்சி இடையே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை AIIS  அமைய  தமிழக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.

*  அதற்கு தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும் ,  தமிழக மக்களின் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து தொடர்ந்து  ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

# தமிழகம் மற்றும் புதுவையின் நாற்பது எம்.பிக்களும் ஒன்றிய அரசுக்கு நெருக்குதல் தந்து தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கல்வி நிறுவனம் உருவாக வழி சமைக்க வேண்டும்.

கட்டுரையாளர்; விஜய் விக்கிரமன்

சித்த மருத்துவர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time