இந்தியா – சுரண்டுவோருக்கான சொர்க்க பூமியா?

-சாவித்திரி கண்ணன்

உணவை எடுத்துக் கொண்டு பறக்கிறார்கள்! பதட்டத்துடன் ஓடி டெலிவரி செய்கிறார்கள்! அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள்? இயற்கை உபாதைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள்? தினமும் 12 மணி நேரம் சாலையிலேயே வாழ்க்கை கழிகிறது! ஸ்விக்கி, ஓலோ, உபர், ஜொமட்டோ.. எல்லாமே உழைப்பு சுரண்டாலாக உள்ளது!

இப்படி ஓடி,ஓடி உழைப்பவர்கள் அடிமாட்டுச் சம்பளத்திற்காக உழைத்து, ஆறேழு வருடங்களில் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள்!

இந்திய ஒன்றிய அரசு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா சட்டங்களில் இருந்தும் விதிவிலக்கு அளித்திருக்கிறது, பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி, தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தையும் செல்லக்காசாக்கி நிறுவன சுரண்டல்களுக்கு வழிவகுக்கும் சட்டங்களை உருவாக்கி உள்ளது! இந்தப் பின்னணியில் தான் இது வரை ஒரளவு தாக்குபிடிக்கக் கூடிய சம்பளத்தையாவது தந்து கொண்டிருந்த ஸ்விக்கி நிறுவனம் தற்போது உள்ளதையும் பறித்துக் கொண்டு, “இஷ்டம் என்றால் வேலையை பாரு! கஷ்டம்னா ஓடு” என்கிறது!

ஏனென்றால், இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. வேலையில்லா திண்டாட்டம் அதிகம். ஆகவே, குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்ற தைரியம் தான் தொழிலாளர்களை வரைமுறையின்றி சுரண்டும் சுதந்திரத்தை ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுக்கு தருகிறது!

இத்தனைக்கும் உணவு சப்ளையின் இணைப்பு புள்ளியாகத் தான் அவர்கள் இயங்குகிறார்கள்.

ஸ்விக்கி உணவும் தயாரிக்கவில்லை! அதற்கு முதலீடும் செய்யவில்லை!

ஸ்விக்கி டெலிவரி செய்யவில்லை. டெலிவரி செய்வதற்கான வாகனத்திற்கோ, பெட்ரோலுக்கோ கூட அவர்கள் முதலீடு செய்வதில்லை! ஆனால், சொந்த வாகனம் வைத்துக் கொண்டு, பெட்ரோலுக்கும் முதலீடு செய்து கைப்பேசிக்கும் செலவு செய்து, டேட்டா காஸ்ட்டுக்கும் முதலீடு செய்து, கடும் உழைப்பையும் தரும் தொழிலாளி சுரண்டப்படுகிறார்.

ஸ்விக்கி போன்றவர்கள் உணவு தயாரிப்பாளருக்கும், நுகர்வோருக்குமான இணைப்பு பாலமாக செயல்படும் தொழில் நுட்பத்தை மட்டுமே கொண்டுள்ளனர். ஆனால், இதைக் கொண்டே பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கிறார்கள்! எப்படி என்றால், தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களைச் சுரண்டுவதன் மூலமாகத் தான்!

முன்பெல்லாம் “12 மணி நேரம் உழைத்தால் தான் இன்செண்டிவ்” என தூண்டில் போட்டு உழைப்பை பிழிந்து எடுத்தார்கள்! மிகக் கடினப்பட்டு அதை செய்து ஊழியர்கள் சம்பாதிக்க முன்வருகிறார்கள் என்றவுடன், “இனி 16 மணி நேரம் வேலை பாருங்கள், இது வரை பெற்ற சம்பளத்தை எதிர்பார்க்காதீர்கள், இனி குறைச்சலாகத் தான் தருவோம்”  என்கிறார்கள்! “அப்படி முடியாதவர்கள் வெளியேறலாம், குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்” என வெளித் தள்ளுகிறார்கள்!

இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறைக்கான தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? “இந்த நாட்டில் அரசும், அதன் அமைப்புகளும் இந்த சுரண்டலை தடுக்க முன்வரமாட்டார்கள்” என்ற தைரியம் தான் இந்த ஆப் வைத்துள்ள முதலாளிகளை ஆட்டம் போட வைக்கிறது.

இந்த மாதிரி ஆப்களை அரசு அமைப்புகளோ அல்லது தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளோ கூட நடத்தலாமே!

‘இந்த அளவுக்கான் சம்பளம், ஓய்வு, மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்’ என அரசங்கத்தால் ஏன் சொல்ல முடியவில்லை. இந்த நிலைமை தான் கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் ‘ஸ்விக்கி’ டெலிவரி ஊழியர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர். நான்கைந்து வருடத்தில் இவர்கள் நிரந்தர நோயாளிகளாக மாறக் கூடிய பணி சூழல் அவர்கள் மிது திணிக்கப்படுகிறது! 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் தோற்றுவிக்கப்பட்ட போது இருந்த 16 மணி நேர உழைப்பை தற்போதும் இந்த முதலாளிகள் கோருகிறார்கள் என்றால், இவர்கள் உழைப்பாளர்களை மனிதர்களாகவே நினைக்காத “பேராசைப் பேய்கள்” என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்விக்கி ஊழியர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்! இன்றைய முதல்வரோ, தொழிலாளர் துறை அமைச்சரோ அவர்களை அழைத்துப் பேசவில்லை. நாங்கள் எங்கள் பிரச்சினையை முதல்வரிடம் சொல்லி தீர்வு காண விரும்புகிறோம் என அவர்கள் போராட்டக்களத்தில் தெரிவித்தனர். இந்த நேரம் நமக்கு ஆகஸ்ட் 20, 2020 ஆம் ஆண்டு அன்றைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை தான் நினைவுக்கு வந்தது.

“இன்று என்னைச் சந்தித்த “ஸ்விக்கி” உணவு விநியோக ஊழியர்கள், “கரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும் – அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும்” கூறிய போது- அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன்.

ஊரடங்கு நேரத்திலும் ‘ஆன்லைன் ஆர்டர்’ மூலம் உணவை எடுத்துச் சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை ‘ஸ்விக்கி’ நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும், மிகுந்த கண்டனத்திற்குரியது.

என அன்று பேசிய ஸ்டாலின் இன்று அந்த அதிமுக ஆட்சியாளர்கள் போலவே தான் நடந்து கொள்கிறார். முதல்வரும், தொழிலாளர் அமைச்சரும் தொழிலாளர்களுக்கு உதவவோ, இந்த நிறுவன சுரண்டல்களை தடுக்கவோ திரானியின்றி உள்ளார்கள்!

ஓலோ, உபர் என வாகன ஆப் வைத்திருக்கும் முதலாளிகளும் இப்படித்தான் வாகன ஓட்டிகளை சுரண்டிக் கொழுக்கிறார்கள்! அரசாங்கம் என்பது எதற்கு இருக்கிறது என்றால், பன்னாட்டு நிறுவனங்கள் இங்குள்ள தொழிலாளர் உழைப்பை சுரண்டி எடுத்துச் செல்ல துணை போவதற்காகத் தான்! இந்தப் புரிதல் தான் நமக்கு கிடைக்கிறது.! நாம் விடுதலை பெற்றோமா? அல்லது மேலும் அதிகமாக அடிமைத் தளையில் நம்மை பிணைத்துக் கொண்டுள்ளோமா? என மறு பரீசிலனை செய்ய வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time